ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் யுக்ரேன் ஊடுருவி வரும் நிலையில், சீம் ஆற்றின் மீதுள்ள மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பாலத்தை தற்போது அழித்துள்ளது.
கிளஷ்கோவோ நகருக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்கை, உள்ளூர் மாவட்டத்தின் ஒரு பகுதியைத் துண்டித்துள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தனது துருப்புகளுக்கான விநியோகச் சங்கிலியாக இந்தப் பாலத்தை ரஷ்யா பயன்படுத்தியது. அப்பாலம் அழிக்கப்பட்டது, அவர்களின் முயற்சிகளுக்கு இடையூறு விளைவிக்கும்.
யுக்ரேனிய துருப்புகள் குர்ஸ்கில் தங்கள் நிலைகளை வலுப்படுத்தி வருவதாக யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலென்ஸ்கி கூறியுள்ளார்.
மேலும் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களை ஒரு பரிமாற்ற நிதி என்று அவர் அழைத்தார். அதனால், அப்பகுதிகள் மாஸ்கோவால் ஆக்கிரமிக்கப்பட்ட யுக்ரேனிய பகுதிகளுக்குப் பதிலாக மாற்றப்படலாம்.
ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் யுக்ரேனின் தீவிரத் தாக்குதல் மற்றும் யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கி மேற்கொண்ட துணிச்சலான நடவடிக்கையின் தாக்கத்தைக் குறைக்கும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது.
யுக்ரேனின் இந்தத் திடீர் படையெழுச்சி, இரு நாடுகளுக்கு இடையிலான போரின் அரசியல் மற்றும் ராணுவப் பரிணாமங்களை எப்படி மாற்றும் என்பதையும் அமெரிக்கா விநியோகித்த ஆயுதங்களை யுக்ரேன் எப்படிப் பயன்படுத்தலாம் என்பதில் அந்நாட்டின் மாறிவரும் நிலைப்பாட்டின் தாக்கங்கள் குறித்தும் அமெரிக்க அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
யுக்ரேனின் இந்த நடவடிக்கை ரஷ்யா மற்றும் மேற்கத்திய நாடுகளின் தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தத் தாக்குதல், யுக்ரேனுக்கான மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் தொடர்புடைய மிக ஆபத்தான சிக்கலை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.
ரஷ்யா-அமெரிக்க உறவுகளை பாதிக்காமல், ரஷ்ய தாக்குதலின் வெளிச்சத்தில், யுக்ரேனுக்கு அதிகாரம் அளிக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பலமுறை முயன்றார்.
இந்தப் போரை ரஷ்யா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு இடையிலான போராக ரஷ்ய அதிபர் புதின் சித்தரித்து வந்தார்.
ஆனால் பைடன் இந்தச் சித்தரிப்பை ஒடுக்கி, மோதலைக் குறைக்கும் வகையில், அமெரிக்க கொள்கைகளில் வரம்புகளை நிர்ணயித்துள்ளார்.
யுக்ரேன் தாக்குதல் குறித்து எழும் கேள்விகள்
ராணுவ ஆய்வாளர்களின் கருத்துப்படி, குர்ஸ்க் பிராந்தியத்தில் யுக்ரேனின் தாக்குதல், இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் இருந்து ரஷ்யாவுக்குள் நிகழ்ந்த மிகப்பெரிய வெளிநாட்டு ராணுவத் தாக்குதலாகும். இத்தாக்குதல், வெள்ளை மாளிகைக்குப் பல்வேறு முக்கியமான கேள்விகளை எழுப்பியுள்ளது. அவை,
• அமெரிக்கா மற்றும் நேட்டோ ஆயுதங்களை யுக்ரேன் எப்படிப் பயன்படுத்தலாம் என்பதற்காக வாஷிங்டன் நிர்ணயித்துள்ள கட்டுப்பாடுகளின் எல்லைகளை இத்தாக்குதல் விரிவுபடுத்துகிறதா?
• இந்தப் போரில் ரஷ்யா தனது மேற்கத்திய நட்பு நாடுகளுக்கு அமைத்துள்ள சிவப்புக் கோட்டைக் கடக்கும் அபாயம் உள்ளதா?
இல்லையென்றால், புதினின் கூற்றுகளை அம்பலப்படுத்த முடியும் என்று அதிபர் ஸெலென்ஸ்கி வாஷிங்டனுக்கு காட்டியுள்ளாரா?
அமெரிக்க அதிகாரிகள் கடந்த வாரத்தில் கூறிய கருத்துகளைப் பார்க்கும்போது, இந்தச் சூழல் குறித்த யோசனையை வழங்குகிறது.
யுக்ரேன் இத்தாக்குதல் குறித்து முன்கூட்டி எந்த எச்சரிக்கையையும் விடுக்கவில்லை என அமெரிக்க நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர் இதில், வாஷிங்டனுக்கு “எவ்விதத் தொடர்பும் இல்லை” எனக் கூறினார்.
குர்ஸ்க் பிராந்தியத்தில் யுக்ரேனின் தாக்குதல் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ரஷ்யாவிற்குள் நடந்த மிகப்பெரிய தாக்குதலாகும்.
போரில் அமெரிக்க ஆயுதங்களைப் பயன்படுத்தலாமா என்பது குறித்து வெள்ளை மாளிகை, பாதுகாப்புத் துறை, வெளியுறவுத் துறை உறுதியாக எதையும் கூறவில்லை. ஆனால், அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகளை ஆயுதங்களுக்காக யுக்ரேன் சார்ந்திருக்கிறது என்பது உறுதி.
யுக்ரேன் ஆயுதப் படை அதிகாரிகள் பிரிவுக்கான முன்னாள் செய்தித் தொடர்பாளர் விளாடிஸ்லாவ் செலென்ஸ்னியோவ், படையெடுப்பில் தொடர்ந்து முன்னேறுவதற்கு அமெரிக்கா வழங்கிய HIMAR வகை ராக்கெட்டுகள் மிக முக்கியமானவை என வாய்ஸ் ஆஃப் அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் அமெரிக்க ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான ஒப்புதல் மறைமுகமாக வழங்கப்பட்டுள்ளது.
“நாங்கள் நிறுவிய கொள்கை எல்லைகளுக்கு உட்பட்டே ஆயுதப் பயன்பாடு இருந்ததாக நாங்கள் மதிப்பீடு செய்துள்ளோம்.
அந்தக் கொள்கைகளில் எந்த மாற்றமும் இல்லை. குறிப்பாக, அமெரிக்க ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான கொள்கையில் மாற்றம் இல்லை,” என அமெரிக்க பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் பேட்ரிக் ரைடர் இந்த வாரம் தெரிவித்துள்ளார்.
எல்லை கடந்த தாக்குதலில் இருந்து தற்காத்துக்கொள்ள, “ஆரம்பத்தில் இருந்தே” தங்கள் கொள்கைக்கு “ஏற்பவே” அந்நாட்டின் தாக்குதல் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமெரிக்க பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் சப்ரினா சிங் கூறுகையில், “ரஷ்யாவில் நீண்ட-தூர தாக்குதல்களை நாங்கள் ஆதரிக்கவில்லை என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.
இப்போது நடந்தவை பதிலடித் தாக்குதல்கள். அவற்றில் நான் எந்தக் குறிப்பிட்ட கட்டுப்பாட்டையும் நிர்ணயிக்கப் போவதில்லை” எனத் தெரிவித்தார்.
தாக்குதலுக்கு யுக்ரேன் அனுமதி வாங்கியதா?
யுக்ரேனுக்கு அதிகளவில் அமெரிக்கா ஆயுதங்களை வழங்கி வருவதால், யுக்ரேனை பொறுத்தவரை அமெரிக்காவுடனான உறவு மிகவும் முக்கியம்.
கடந்த மூன்று ஆண்டுகளில், அமெரிக்கா இலகுரக ஏவுகணைகள், பீரங்கி குண்டுகள் மற்றும் இதர ஆயுதங்கள் அடங்கிய 63வது ஆயுதத் தொகுப்பைக் கடந்த வாரம் வழங்கியது.
ஆனால், ரஷ்ய படையெடுப்பின் தொடக்கத்தில், HIMAR ராக்கெட்டுகள், நீண்ட தொலைவுக்குப் பாயக்கூடிய பேட்ரியாட் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் F-16 போர் விமானங்கள் உள்ளிட்ட மேம்பட்ட ஆயுதங்களை அனுப்ப அமெரிக்க அதிபர் பைடன் மறுத்தார். ஆனால் பின்னர் அவர் தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டார்.
ரஷ்ய பிரதேசத்தில் யுக்ரேனிய தாக்குதல்கள் பற்றிய வெள்ளை மாளிகையின் கொள்கைக்கும் இது பொருந்தும். பல மாதங்களாக, யுக்ரேன் மீதான தாக்குதல்களை ஆதரிக்கும் ரஷ்ய ராணுவ தளங்களைத் தாக்குவதற்கு அதிபர் ஸெலென்ஸ்கி அனுமதி கோரினார்.
மே மாதம் அதிபர் பைடன் இறுதியாக அமெரிக்க ஆயுதங்களைப் பயன்படுத்தி எல்லையைத் தாண்டி ரஷ்யாவிற்குள் தாக்குதல் நடத்த அனுமதி அளித்தார். வெள்ளை மாளிகை யுக்ரேனின் நடவடிக்கைகளை “பதிலடி தாக்குதல்” என்று விவரித்துள்ளது.
“எல்லையின் மறுபக்கத்தில் உள்ள ரஷ்ய ராணுவ தளங்கள் யுக்ரேனில் குறிப்பிட்ட இலக்குகளைத் தாக்கப் பயன்படுத்தப்படும்போது, எல்லைக்கு அருகில் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது” என ஜூன் மாதம் அதிபர் பைடன் கூறினார்.
“ரஷ்யாவிற்குள் 200 மைல் தொலைவில் தாக்குதல்களை நாங்கள் அனுமதிக்கவில்லை, மாஸ்கோ மற்றும் கிரெம்ளின் மீதான தாக்குதல்களை நாங்கள் அனுமதிக்கவில்லை” என்று அவர் கூறினார்.
நீண்டதூர ஏவுகணைகளைப் பயன்படுத்த ஸெலென்ஸ்கி அனுமதி கேட்டபோது அதை அமெரிக்கா மறுத்துள்ளது.
சில வாரங்களுக்குப் பிறகு, ரஷ்ய படைகள் யுக்ரேனை தாக்கத் தயாராகும் எல்லையில் உள்ள எந்த இலக்குகளுக்கும் ரஷ்ய எல்லைக்குள் தாக்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்பட்டது.
அதிபர் ஸெலென்ஸ்கி சில ஐரோப்பிய கூட்டாளிகள் மற்றும் வாஷிங்டனில் ஜனநாயகக் கட்சியினர் சிலருடன் சேர்ந்து யுக்ரேனின் கைகளை மேலும் “அவிழ்த்துவிட” அமெரிக்காவை வலியுறுத்தினார்.
ரஷ்ய எல்லையில், ட்ரோன்கள் அல்லது ஏவுகணை ஏவுதளங்களை அழிப்பதற்காக ஆழமாக தாக்குவதற்கு அமெரிக்காவிடம் இருந்து பெறப்பட்ட ATCAMS அல்லது நீண்ட தூர ஏவுகணைகளைப் பயன்படுத்த ஸெலென்ஸ்கி குறிப்பாக அனுமதி கேட்டார். ஆனால், அதை அமெரிக்கா மறுத்துள்ளது.
ரஷ்யாவின் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், “கிடைக்கும் அனைத்து வழிகளையும்” பயன்படுத்துவோம் என்று முன்னர் அச்சுறுத்திய அதிபர் புதினின் எச்சரிக்கைகள்தான் இத்தகைய அனைத்து முடிவுகளுக்கும் காரணம்.
யுக்ரேன் போரின் மூலம் மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அவர் கருதிய நிலையில், அணு ஆயுதப் பயன்பாடு குறித்து அவர் விடுத்த எச்சரிக்கை இது.
யுக்ரேனுக்கு உள்ள கட்டுப்பாடுகள்
இறுதியாக, அதிபர் பைடனின் நிலைப்பாட்டைப் பின்வருமாறு சுருக்கமாகக் கூறலாம்: “எல்லை தாண்டிய தாக்குதல்கள் உட்பட, அமெரிக்க ஆயுதங்களைப் பயன்படுத்தி தன்னை எவ்வாறு தற்காத்துக் கொள்வது என்பதை யுக்ரேன் தீர்மானிக்க முடியும். ஆனால் நீண்டதூர ஏவுகணைகளைப் பயன்படுத்தாதது உட்பட மிகத் தெளிவான எல்லைகளுக்குள் அம்முடிவு இருக்க வேண்டும்.”
ஜூன் மாதம் அவர் பயன்படுத்திய வார்த்தைகள், யுக்ரேனின் கட்டுப்பாடுகள் “எல்லைப் பகுதிகளுக்கு” மட்டுமே என்று பரிந்துரைத்தது.
குர்ஸ்கில் நடந்த தாக்குதல் அமெரிக்காவின் இக்கட்டான நிலையை உண்மையிலேயே யாரும் அறியாத திசையில் கொண்டு செல்கிறது.
யுக்ரேனிய படையெடுப்பு என்பது 5,000 முதல் 12,000 துருப்புகளை உள்ளடக்கியதாகக் கூறப்படும் ஒரு எல்லை தாண்டிய தரைத் தாக்குதலாகும்.
சுமார் 1 லட்சத்து 32 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக ரஷ்யா கூறியுள்ளது.
இந்த வாரத்தின் நடுப்பகுதியில், 70க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் நகரங்கள் உட்பட 1,000 சதுர கிலோமீட்டர் ரஷ்ய நிலப்பரப்பை தமது படைகள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டதாகவும், நூற்றுக்கணக்கான போர்க் கைதிகளைக் கைப்பற்றியதாகவும் யுக்ரேன் கூறியது.
சுமார் 1 லட்சத்து 32 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போர்க்களத்தின் நிலைமை, போரின் எதிர்காலம் மற்றும் அது புதினின் கணிப்புகளை எவ்வாறு பாதிக்கிறது என்பதை மேலும் விரிவாகப் பேசுவதற்கு அமெரிக்க அதிகாரிகள் இன்னமும் தயங்குகின்றனர்.
அதிபர் பைடன் மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறார் அல்லது ஆயுதங்களைப் பயன்படுத்துவது குறித்த முடிவைத் தாமதப்படுத்துகிறார் என்று ஸெலன்ஸ்கி விரக்தியடைந்தால், அத்தகைய சூழ்நிலையில், அவர் பைடன் மற்றும் புதின் இருவரையும் கட்டாயப்படுத்த முடியும் என்று அவர் காட்ட முயல்கிறார்.
அவரது இந்த முயற்சி ஒரு துணிச்சலான சூதாட்டம்.