– என்.கண்ணன்
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டம் கடந்த வாரம் வவுனியாவில் இடம்பெற்றபோது, ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்தியே கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன.
ஒரு பக்கத்தில் தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினரான அரியநேத்திரன், தமிழ் அரசு கட்சி அங்கம் வகிக்காத, தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுகின்ற நிலை.
இன்னொரு பக்கத்தில் ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்று தீர்மானிக்க வேண்டிய நிலை.
இந்த சூழலில் கட்சியின் அனுமதியின்றி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அரியநேத்திரனிடம், விளக்கம் கோருவதென்றும், அதனை வழங்கும் வரை ஒரு வாரகாலத்துக்கு அவரை கட்சியின் நிகழ்வுகளுக்கு அழைப்பதில்லை என்றும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.
கட்சி ஒன்றின் உறுப்பினர் என்ற வகையில் அவர் தமது முடிவை தெரியப்படுத்தியிருக்க வேண்டும். அவ்வாறு கட்சி எதிர்பார்ப்பதில் நியாயம் உள்ளது. இது எல்லா கட்சிகளுக்கும் பொருந்தும்.
அந்த வகையில் அவரிடம் விளக்கம் கோரப்பட்டது ஆச்சரியமல்ல. ஆனால் விளக்கமளிக்கும் வரை கட்சியின் நிகழ்வுகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டிருப்பது, அவரை கட்சியிலிருந்து இடைநிறுத்தி வைப்பதற்கு ஒப்பானது.
அரியநேத்திரன் இந்த தேர்தலில் களம் இறங்குவதை தமிழ் அரசு கட்சி விரும்பவில்லை என்பதே இதன் அர்த்தம்.
ஆனால் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு போட்டியிடப் போவது குறித்து அரியநேத்திரன் கூறியிருந்தார். வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னரும் அவரை சந்தித்து ஆசி பெற்றிருந்தார்.
இதுவே, மஹிந்த ராஜபக் ஷவின் கட்சியாக இருந்திருந்தால், அவரிடம் கூறிவிட்டு போய், வேட்பாளரானவரிடம் அவரது கட்சி விளக்கம் கோரியிருக்காது.
ஆனால், மாவை சேனாதிராஜா தமிழ் அரசு கட்சிக்குள் அந்த அளவுக்கு பலமானவராக இல்லை. தமிழ் அரசுக் கட்சியில் தமிழ் பொது வேட்பாளரை எதிர்க்கும் தரப்புகளே இந்த நிலையை உருவாக்கி இருக்கின்றன.
இது அரியநேத்திரன் மீதான தாக்குதல் அல்ல, அவருக்கு எதிரான நடவடிக்கையும் அல்ல. தமிழ் பொது வேட்பாளர் என்ற கருப்பொருளுக்கு எதிரான நடவடிக்கை.
தமிழ் பொது வேட்பாளர் தொடர்பாக, மூன்று முறை கூட்டங்களில் ஆராய்ந்தும், தமிழ் அரசுக் கட்சி இன்னமும் கூட அதுபற்றி எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை.
கடைசியாக நடந்த மத்திய குழு கூட்டத்திற்கு, பல நாட்கள் முன்னதாகவே பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தமிழ் அரசுக் கட்சி பொது வேட்பாளரை ஆதரிப்பதில்லை என முடிவெடுத்திருப்பதாகவும் கூறியிருந்தார்.
தமிழ் அரசுக் கட்சி எடுக்காத அந்த முடிவை- அறிவித்த சுமந்திரன் மீது, கட்சி எந்த நடவடிக்கையையும் எடுத்ததாக தெரியவில்லை.
ஆனால் கட்சியிடம் தனது முடிவை அறிவிக்காமல், வேட்பாளராக போட்டியிட இணங்கிய அரியநேத்திரனுக்கு எதிராக விளக்கம் கோரப்பட்டிருக்கிறது.
தமிழ் பொது வேட்பாளர் என்பது, தமிழ் அரசு கட்சியில் உள்ள சிலருக்கு கசப்பான விடயமாக உள்ளது. அதனால் தான் அவர்கள் அறியநேத்திரன் மீது காழ்ப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
அப்படியானால் இலங்கை தமிழ் அரசுக் கட்சி, வரப்போகும் ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிக்க போகிறது? – யாருக்கு வாக்களிக்குமாறு தனது ஆதரவாளர்களிடம் கேட்கப் போகிறது?
ஏனென்றால்? தமிழ் அரசுக் கட்சி தெரிந்தோ தெரியாமலோ தமிழ் பொது வேட்பாளரை எதிர்க்க வேண்டும் என்ற அவசரத்தில், சமஷ்டி தீர்வை தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்குகின்ற- அதனை சிங்கள மக்களிடம் எடுத்துக் கூறுகின்ற வேட்பாளருக்கு மட்டுமே, ஆதரவு வழங்குவது பற்றி ஆலோசிப்போம் என்று வாயை கொடுத்து விட்டது.
ஆனால், எந்த ஒரு பிரதான சிங்கள வேட்பாளரும் தமிழ் அரசுக் கட்சியின் இந்த நிபந்தனைக்கு இணங்கி வரப் போவதில்லை.
மஹிந்த ராஜபக் ஷ, கோட்டாபய ராஜபக்ஷ போன்ற அதிகம் ஜனவசியம் கொண்ட சிங்கள தலைவர்கள் கூட, இவ்வாறான ஒரு விடயத்தை தேர்தல் விஞ்ஞானத்தில் உள்ளடக்கமாட்டார்கள். சிங்கள மக்களுக்கு எடுத்துக் கூறமாட்டார்கள்.
ஏனென்றால் அவர்கள் தான் சமஷ்டியை பிரிவினை என்று சிங்கள மக்களுக்கு கூறி வைத்திருக்கிறார்கள். இவ்வாறான நிலையில், நாமலோ, சஜித்தோ, ரணிலோ அநுரவோ அதற்கு இணங்கப்போவதில்லை.
வேண்டுமானால் இவர்கள் இரகசிய உடன்பாடு வைத்துக் கொள்ள முன்வரலாம். அது பற்றி வெளியே பேசக்கூடாது என்று நிபந்தனை விதிக்கலாம். ஆட்சிக்கு வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்று சமாளிக்க முன் வரலாம்.
ஆயினும், ஒருபோதுமே அவர்கள் இதனை வெளிப்படையாக கூறமாட்டார்கள். அவ்வாறு கூறினால், சிங்கள மக்கள் தமக்கு வாக்களிக்கமாட்டார்கள் என்ற அச்சம் அவர்களுக்கு இருக்கிறது.
இதனால் தான், 2015 ஜனாதிபதி தேர்தலில், மைத்திரிபால சிறிசேனவுடன் இரா. சம்பந்தன் பகிரங்க உடன்படிக்கை எதையும் செய்யவில்லை. எங்களுக்குள் இதயங்களுக்கு இடையிலான உடன்படிக்கை இருக்கிறது என்று கூறியிருந்தார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க திரும்பத் திரும்ப வலியுறுத்திக் கூறியும், இரா. சம்பந்தன் அவரது பேச்சைக் கேட்காமல், கண்ணை மூடிக்கொண்டு போய், குழிக்குள் விழுந்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூட அண்மையில், பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருந்தால் சமஷ்டி பற்றி ஆலோசிக்கலாம் என்று கூறி இருக்கிறார். அவ்வாறான ஒரு நிலை வராது என்று அவருக்குத் தெரியும்.
அவரது கையில் இருப்பது ஒரே ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தான். அவருக்கு பின்னால் இப்போது 100 பேர் இருப்பதாக சொல்லப்பட்டாலும், அவர்கள் எல்லோருமே ரணில் விக்கிரமசிங்க கூறுகின்றபடி பாராளுமன்றத்தில் கை தூக்க கூடியவர்கள் அல்ல. அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது விரைவிலேயே தெரியவரும். அது அவருக்கும் தெரியும்
எனவே பாராளுமன்றத்தில், தான் அல்லது தனது கட்சி பலம் பெறும் என்று ரணில் விக்கிரமசிங்கவினால் கனவு காண முடியாது.
தமிழ்க் கட்சிகள் கோரும் சமஷ்டியை நிராகரிப்பதாக இருந்தால் வலுவான காரணம் தேவை. அதனால் அவர் பாராளுமன்றத்திடம் அந்த பொறுப்பை சுமத்தியிருக்கிறார்.
பிரதான சிங்கள வேட்பாளர்கள் யாருமே சமஷ்டியை முன்வைக்காத நிலையில், தமிழ் அரசுக் கட்சி இனி என்ன முடிவை எடுக்கப் போகிறது?
தேர்தல் விஞ்ஞாபனங்களை பார்த்து விட்டு முடிவு எடுப்பதாக கூறியிருக்கிறார் சுமந்திரன். தேர்தல் விஞ்ஞானங்கள் எதுவுமே சமஷ்டி தீர்வை முன்னிறுத்துவதாக இருக்காது – இது சுமந்திரனுக்கு தெரியாத ஒன்று அல்ல.
அப்படியானால், ஏற்கனவே அறிவித்தபடி தமிழ்க் அரசு கட்சி பிரதான சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு வாக்களிக்குமாறு கேட்க முடியாது. அதற்கான அருகதையோ அல்லது தார்மீக உரிமை அவர்களுக்கு இல்லை.
இந்த நிலையில் தமிழ் அரசுக் கட்சி பொது வேட்பாளரை ஆதரிப்பதற்கு வாய்ப்புகள் மிக மிக குறைவு. ஏனென்றால் விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற வகையைச் சேர்ந்தவர்கள் அவர்கள்.
அப்படிப்பட்டவர்கள், பிற கட்சிகளினால் முன்னிறுத்தப்பட்டுள்ள தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்க அவர்களின் ஈகோ இடமளிக்காது.
ஆனால், அவர்கள் யாரையோ ஆதரிக்க வேண்டும். அது ஒரு நிர்ப்பந்தம். அதனால், ஏன் ஒரு இடதுசாரி வேட்பாளரை ஆதரிக்கக் கூடாது என்று ஒரு கலந்துரையாடலும் நடந்திருக்கிறது.
சமஷ்டியை வலியுறுத்தும் ஒரு இடதுசாரி வேட்பாளரை ஆதரித்தால் என்ன என்று ஆராய்ந்திருக்கிறார்கள். இதுவரை காலமும் பிரதான சிங்கள வேட்பாளர்களை ஆதரித்திருக்கிறீர்கள், உங்களுக்கு ஆதரவாக இருக்கும் எங்களுக்கு ஆதரவு வழங்கவில்லை என்று சிங்கள இடதுசாரிகள் பலர் வெளிப்படையாகவே கேட்டிருக்கிறார்கள்.
இது நியாயமான கேள்வி. விக்ரமபாகு கருணாரட்ண 2010 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட போது, அவருக்கு 7,055 வாக்குகள் தான் கிடைத்தன.
தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுத்த அவரை விட்டு விட்டு, போர்க்குற்றம்சாட்டப்பட்ட சரத் பொன்சேகாவுக்கு தமிழர்கள் வாக்களிக்கத் தூண்டப்பட்டனர்.
தமிழர்களுக்காக குரல் கொடுக்கும், ஐக்கிய சோசலிச கட்சியின் தலைவரான சிறிதுங்க ஜெயசூரிய 2005 தொடக்கம், 2019 வரையான எல்லா ஜனாதிபதி தேர்தல்களிலும் போட்டியிட்டிருக்கிறார்.
2005இல் அவருக்கு 35,405 வாக்குகள் கிடைத்தன. அதற்குப் பிறகு, 10 ஆயிரம் வாக்குகளைக் கூட அவரால் தாண்ட முடியவில்லை. இந்த தேர்தல்களில் தமிழர்கள், சரத் பொன்சேகா, மைத்திரிபால சிறிசேன, சஜித் பிரேமதாச போன்றவர்களையே ஆதரிக்குமாறு கேட்கப்பட்டனர்.
தமிழர்களுக்காக குரல் கொடுத்த சிங்கள இடதுசாரிகள் ஜனாதிபதி தேர்தல்களில் போட்டியிட்டாலும் அவர்களுக்கு தமிழர்களின் வாக்குகள் கிடைத்ததில்லை.
இது பற்றி இதுவரை காலமும் தமிழ் அரசுக் கட்சியோ, அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்போ கவனத்தில் கொள்ளவுமில்லை.
இப்போது தமிழ் பொது வேட்பாளர் நிறுத்தப்படுகின்ற நிலையில், தமிழ் அரசுக் கட்சி ஏன் இந்த யோசனையை ஆராய ஆராய வேண்டும்?
இதுவரை காலமும் பிரதான சிங்கள வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் அரசுக் கட்சி, இந்த முறை ஏன் அதனை செய்ய முடியாமல், இடதுசாரி வேட்பாளர்களை ஆதரிக்கலாமா என்று பரிசீலிக்கிறது?
இதுவரையில் தமிழர்கள் பிரதான சிங்கள வேட்பாளர்களை ஆதரித்தார்கள். இந்த முறை ஒரு மாற்றாக பொது வேட்பாளரை நிறுத்தியிருக்கிறார்கள்.
அதற்கு இணங்கி வராத- அதனை எதிர்க்கின்ற தமிழ் அரசுக் கட்சி, பிரதான சிங்கள வேட்பாளர்களுக்கு மாற்றாக, இடதுசாரிகளை ஏன் இழுத்து வரமுனைகிறது?
தனக்கு மூக்கு போனாலும், எதிரிக்கு சகுனப் பிள்ளையாக அமைந்து விட வேண்டும் என்ற தொனியிலேயே தமிழ் அரசுக் கட்சி சிந்திக்கிறது.
சிறிதுங்க ஜெயசூரிய போன்ற இடதுசாரி வேட்பாளர்கள் சமஷ்டி தீர்வு முறையை வலியுறுத்தும் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடத் தயங்கமாட்டார்கள்.
ஏனென்றால், அவர்கள் இந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறும் இலக்குடன் போட்டியிடவில்லை. அரியநேத்திரனைப் போலவே ஒரு கொள்கைக்காக போட்டியிடுகிறார்கள்.
எனவே அவர்கள் சமஷ்டி தீர்வை தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்குவதை பற்றி கவலைப்பட மாட்டார்கள். அதனால் வாக்குகள் கிடைக்காமல் போகும் என்றும் சிந்திக்கமாட்டார்கள்.
ஆனால் தமிழ் அரசுக் கட்சியோ, தமிழ் மக்களின் வாக்குகள் பொது வேட்பாளருக்கு செல்லக் கூடாது என்று பார்க்கிறது. அதனை எப்படி திசை திருப்பலாம் என்றே யோசிக்கிறது.
வெற்றி பெறக் கூடிய வேட்பாளருடன் தான், தீர்வு குறித்து பேரம் பேச வேண்டும் என்றெல்லாம், கடந்த காலங்களில் பாடம் எடுத்து விட்டு, இப்போது வெற்றிபெற முடியாத இடதுசாரி வேட்பாளரை ஆதரிக்கலாமா என்று, தமிழ் அரசு கட்சி ஆலோசிக்கிறது.
வெற்றிபெறக் கூடிய வாய்ப்பு பிரதான நான்கு வேட்பாளர்களுக்கு மாத்திரமே உள்ளது. அவர்களை தவிர்த்து, வேறு வேட்பாளர்களுடன் பேரம் பேசுவதில், அர்த்தம் இல்லை.
தமிழ் அரசுக் கட்சி, பொது வேட்பாளர் என்ற திட்டத்தை எதிர்க்க போய், மோசமான ஒரு கட்டத்துக்குள் நகர்ந்து கொண்டிருக்கிறது.
அந்தக் பொது வேட்பாளரை ஆதரிப்பதை தவிர்த்து, வேறு எந்த முடிவை எடுத்தாலும், மூக்குடைபடும் நிலையே ஏற்படும்.
– என்.கண்ணன்-