நாகப்பட்டினம்: இந்தியா-இலங்கை இடையே நல்லுறவை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக கடந்த ஆண்டு (2023) அக்டோபர் மாதம் 14-ந்தேதி ‘செரியாபாணி’ என்ற பெயரில் பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது.

ஆனால், வடகிழக்கு பருவமழை காரணமாக அதே மாதம் 23-ந்தேதி கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு மீண்டும் ‘சிவகங்கை’ என்ற பெயரில் கப்பல் இயக்க முடிவு செய்யப்பட்டு, ஆகஸ்ட் 16 ஆம் தேதி பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது.

காலை 8 மணிக்கு நாகை துறைமுகத்தில் இருந்து புறப்படும் கப்பல் காங்கேசன் துறைக்கு மதியம் 12 மணிக்கும், மறுமார்க்கமாக அதேநாள், மதியம் 2 மணிக்கு காங்கேசன் துறையில் இருந்து புறப்பட்டு மாலை 6 மணிக்கு நாகை துறைமுகத்திற்கு கப்பல் வந்தடையும்.

இந்நிலையில், நாகை – இலங்கை இடையே மீண்டும் தொடங்கப்பட்ட பயணிகள் கப்பல் சேவைக்கு போதிய பயணிகள் வருகை இல்லாததால் செப்டம்பர் 15ம் தேதி வரையில், வாரத்திற்கு செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிறு ஆகிய 3 நாட்கள் மட்டும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிவகங்கை கப்பலில் 123 சாதாரண இருக்கைகள், 27 பிரீமியம் இருக்கைகள் என மொத்தம் 150 இருக்கைகள் உள்ளன. ஒருவழி பயணத்திற்கு பிரிமியம் இருக்கைக்கு ரூ.7 ஆயிரத்து 500 கட்டணமும், சாதா இருக்கைக்கு ஜி.எஸ்.டி.யுடன் ரூ.5 ஆயிரமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த கப்பலில் ஒரு நபர் 25 கிலோ எடை கொண்ட லக்கேஜ் வரை எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கப்பலில் சாம்பார் சாதம், தயிர் சாதம், நூடுல்ஸ் உள்ளிட்ட துரித உணவுகளை கட்டணத்துடன் பெற்றுக்கொள்ள உணவக வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version