நடிகரும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய், ஆகஸ்ட் 22ஆம் தேதி, வியாழன் அன்று சென்னை பனையூரில் அமைந்திருக்கும் அவரின் கட்சி அலுவலகத்தில் கட்சிக் கொடியையும் கட்சியின் பாடலையும் அறிமுகம் செய்து வைத்தார்.

நடிகர் விஜய் சென்னையின் நீலாங்கரையில் அமைந்திருக்கும் அவருடைய இல்லத்தில் இருந்து பனையூருக்குச் சென்றார். அவருடைய அம்மா ஷோபா, அப்பா சந்திரசேகர் ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

நூற்றுக்கணக்கான ரசிகர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் கட்சி அலுவலகத்தில் குவிந்திருந்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் நடிகர் விஜய்க்கு தங்களின் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
.
உறுதி மொழி ஏற்ற கட்சியினர்

தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்வில் கட்சிக் கொடியையும், கொடிப் பாடலையும் நடிகர் விஜய் துவங்கி வைத்தார். கொடியை அறிமுகம் செய்வதற்கு முன்பு அக்கட்சியினர் அனைவரும் உறுதிமொழியை ஏற்றனர்.

“நமது நாட்டின் விடுதலைக்காகவும், நமது மக்களின் உரிமைகளுக்காகவும், தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர்நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன்.

நமது அன்னைத் தமிழ் மொழியைக் காக்க உயிர்த் தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன்.

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் மீதும் இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து அனைவருடன் ஒற்றுமை, சகோதரத்துவம், மத நல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றைப் பேணிக் காக்கின்ற பொறுப்பு உள்ள தனிமனிதராகச் செயல்படுவேன்.”

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்தார் நடிகர் விஜய்

“மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூக நீதி பாதையில் பயணித்து என்றும் மக்கள் நல சேவகராகக் கடமையாற்றுவேன் என உறுதி அளிக்கிறேன்.

சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பேரில் உள்ள வேற்றுமைகளைக் கலைந்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவருக்கும் சமவாய்ப்பு, சம உரிமை கிடைக்கப் பாடுபடுவேன்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையைக் கடைபிடிப்பேன் என்று உளமாற உறுதி கூறுகின்றேன்” என்ற உறுதிமொழியை அவர் வாசிக்க அவரது கட்சித் தொண்டர்கள் அதை உறுதிமொழியாக ஏற்றுக்கொண்டனர்.

த.வெ.க. கட்சிக் கொடியின் முக்கிய அம்சங்கள் என்ன?

கட்சிக்கொடி சிவப்பு, மஞ்சள் என இரண்டு நிறங்களைக் கொண்டுள்ளது. நடுவில் உள்ள மஞ்சள் நிறப் பட்டையில் இரண்டு ஆண் யானைகள் இடம் பெற்றுள்ளன.

நடுவில் இடம் பெற்றிருக்கும் சிவப்பு நிற வட்டத்தில் வாகை மலரும் அதைச் சுற்றி நட்சத்திரங்களும் இடம் பெற்றுள்ளன. 28 நட்சத்திரங்களில் 5 நட்சத்திரங்கள் நீல நிறத்திலும், இதர நட்சத்திரங்கள் பச்சை நிறத்திலும் இருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் துவங்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் அக்கட்சியைப் பதிவு செய்தார்.

தமிழ்நாட்டில் 2026ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதை இலக்காகக் கொண்டு தமிழக அரசியலில் களம் இறங்கியுள்ளது விஜயின் கட்சி.

 

நடிகர் விஜய் என்ன பேசினார்?

கட்சியின் பெயர் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே தொண்டர்கள் காத்துக் கொண்டிருக்கும் ஒரு தேதியை, கட்சியின் மாநாட்டு தேதியை, விரைவில் அறிவிப்பதாக அறிவித்தார் நடிகர் விஜய்.

கூடிய விரைவில் நடைபெற இருக்கும் இந்த மாநாட்டில் கட்சியின் கொள்கைகள் மட்டுமின்றி கட்சிக் கொடிக்கான விளக்கம் என்ன என்பதையும் அறிவிக்க இருப்பதாகக் கூறினார்.

முறையான அனுமதியைப் பெற்று அந்த மாநாடு நடத்தப்படும் என்று தெரிவித்த விஜய், இந்தக் கொடியை அறிமுகம் செய்ததில் பெருமை அடைந்ததாகவும் கூறினார்.

கட்சி மாநாடு எப்போது?

“இன்று நம் அனைவருக்குமே ஒரு சந்தோஷமான நாள். நான் என்னுடைய அரசியல் பயணத்தைத் துவங்கி, அதன் தொடக்கப் புள்ளியாக நமது கட்சியின் பெயரைக் கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தேன்.

அன்றைய நாளில் இருந்தே ஒரு குறிப்பிட்ட நாளுக்காக நீங்கள் அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று எனக்கு நன்றாகத் தெரியும். நம் முதல் மாநில மாநாடு,” என்று தனது பேச்சைத் தொடங்கினார் நடிகர் விஜய்.

இன்று கொடியை அறிமுகம் செய்திருப்பதைக் குறிப்பிட்ட அவர், “என் நெஞ்சில் குடியிருக்கும் என்னுடைய தோழர்களாகிய உங்கள் முன்பும், என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழ்நாட்டுக்கு முன்பும் இந்தக் கொடியை அறிமுகப்படுத்துவதை நான் மிகவும் பெருமையாக நினைக்கிறேன்.

இதுவரை நாம் நமக்காக உழைத்தோம். இனி வரும் காலங்களில் ஒரு கட்சியாக நம்மைத் தயார் செய்துகொண்டு, தமிழ்நாட்டிற்காகவும், தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்காகவும் நாம் அனைவரும் சேர்ந்து உழைப்போம்,” என்று கூறினார்.

மேலும், “ஒரு புயலுக்கு பின் அமைதி, ஆர்ப்பரிப்பு, ஆரவாரம் இருப்பதைப் போல் நம்முடைய கட்சிக் கொடிக்குப் பின்னும் ஒரு வரலாற்றுக் குறிப்பு இருக்கிறது.

அது என்ன என்பதை நீங்கள் அனைவரும் காத்திருக்கும் அந்த நாளில், கட்சியின் கொள்கைகள், செயல் திட்டம் மட்டுமின்றி கொடிக்குப் பின்னால் இருக்கும் விளக்கத்தையும் கூறுகிறோம்,” என்றும் தெரிவித்தார் நடிகர் விஜய்.

அதோடு, “நான் இதை வெறும் கட்சிக்கான கொடியாக மட்டும் பார்க்கவில்லை. தமிழகத்தின் வருங்கால தலைமுறையினரின் வெற்றிக்கான கொடியாகத்தான் பார்க்கிறேன்,” என்றும் விஜய் தெரிவித்தார்.

இதற்கு முன்பு நடைபெற்ற கட்சி விழாக்களில் உரையாடுவது போல் நீண்டநேரம் எடுத்துக் கொள்ளாமல் கட்சி மாநாடு குறித்த தகவலை மட்டும் தெரிவித்துவிட்டு அவர் வெளியேனார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் பின்னணி

நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி தனது அரசியல் பிரவேசத்தை பிப்ரவரி 2ஆம் தேதி அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார். நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிடவில்லை, யாருக்கும் ஆதரவு இல்லை என்று தெரிவித்திருந்த விஜய், 2026 சட்டமன்றத் தேர்தல்களில் களத்தில் இறங்கப் போவதாக தெரிவித்துள்ளார்.

‘ஊழல் மலிந்த அரசியல் கலாசாரம்’ மற்றும் ‘பிளவுவாத அரசியல் கலாசாரம்’ ஆகியவற்றை எதிர்த்துத் தனது அரசியல் அமையும் என்று தெரிவித்திருந்தார்.

அப்போது அவர் வெளியிட்ட அறிக்கையில்,”விஜய் மக்கள் இயக்கம் பல வருடங்களாக தன்னால் இயன்ற வரையில் பல்வேறு நிவாரண உதவிகளையும் மக்கள் நலத்திட்டங்களையும், சமூக சேவைகளையும்,செய்து வருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே.

இருப்பினும், முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவர ஒரு தன்னார்வ அமைப்பினால் மட்டும் இயலாத காரியம். அதற்கு அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது,” என்று தெரிவித்திருந்தார்.

நடிகர் விஜய் பற்றிய அரசியல் பிம்பம் எப்போது தொடங்கியது?

கடந்த 2006ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் டெல்லியில் வைத்து பொங்கல் சிறப்பு தபால்தலையை வெளியிட்டார்.

முதல் தபால் தலையைப் பெற்றுக்கொண்டவர் நடிகர் விஜய். தகவல் தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் போன்றோர் உடன் இருந்தனர். அரசு சார்ந்த நிகழ்ச்சியாக இது இருந்தாலும் அப்போதே விஜய் மீது அரசியல் வெளிச்சம் பாயத் தொடங்கியது.

கடந்த 2009ஆம் ஆண்டு தனது ரசிகர் மன்றத்தின் பெயரை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றினார். இயக்கத்திற்கென தனி கொடியும் அறிமுகப்படுத்தப்பட்டது. ரத்த தானம், அன்னதானம் போன்ற நலத்திட்ட உதவிகளையும் ரசிகர்கள் மூலம் தொடங்கினார். அப்போது மன்றம் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கையில் இருந்தது.

முன்னதாக பிபிசியிடம் பேசிய மூத்த செய்தியாளர் தராசு ஷ்யாம், நடிகர் விஜயின் அரசியல் பிம்பம் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடம் இருந்து வந்தது என கூறினார்.

இது தொடர்பாக பிபிசி தமிழிடம் அவர் பேசுகையில், `விஜயின் அரசியல் என்பது அவரது அப்பாவிடம் இருந்தே தொடங்கிவிட்டது. திராவிட சித்தாந்தம் சார்ந்தவர் எஸ்.ஏ.சந்திரசேகர்.

விஜயகாந்துடன் சேர்ந்து எஸ்.ஏ.சி.யும் ஒன்றாக 90களிலேயே அரசியலுக்கு வந்திருக்க வேண்டியவர்கள். ஏனோ, எஸ்.ஏ.சி.யால் அரசியல் அடிகளை எடுத்துவைக்க முடியவில்லை` என்றார்.

அரசியல் கட்சிகளின் எதிர்வினை என்ன?

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி மற்றும் கட்சிப் பாடலை அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் இன்று வெளியிட்டதைத் தொடர்ந்து, அவரது அரசியல் பயணம் குறித்து பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஊடகங்களில் பேசி வருகின்றனர்.

இதுகுறித்துப் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஒருவர் தனிக்கட்சி தொடங்கினால், கொடி, மாநாடு போன்றவை இயல்பான ஒன்றுதான் எனவும் அவர் தனது தொண்டர்களுக்குத் தனது கட்சியின் கொள்கை குறித்துத் தெரிவிக்க வேண்டியது அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், “ஜனநாயக நாட்டில் மக்கள்தான் இறுதி எஜமானர்கள். அவர்கள்தான் அனைத்தையும் முடிவு செய்வார்கள். தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் விஜய் என்ன பேசப் போகிறார் என்பதைப் பொறுத்தே, ஒரு முடிவுக்கு வர முடியும்,” என்றும் கூறினார்.

ஜனநாயக நாட்டில் எல்லோருக்கும் உள்ள உரிமை, நடிகர் விஜய்க்கும் உள்ளதாகக் குறிப்பிட்ட திமுகவின் செய்தித்தொடர்புச் செயலர் பேராசிரியர் கான்ஸ்டன்டைன், அவரது வருகை திமுகவுக்கு சவாலாக இருக்குமா என்பதை முன்கூட்டியே கூற இயலாது என்றும் தெரிவித்தார்.

அதோடு, “அவரது கொள்கை, கோட்பாடுகள், கட்சியின் பலம் ஆகியவற்றைப் பொறுத்திருந்து பார்த்து முடிவு செய்ய வேண்டும். திமுகவுக்கு எதிராக அவரது கட்சி போனால் கூட எங்களை எதிர்ப்பவர்களுக்குத்தான் அது பாதிப்பை ஏற்படுத்தும். திமுகவுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. சமூக நீதி, சமத்துவம் என திராவிடக் கொள்கைகளை நடிகர் விஜய் பேசுவது பாராட்டப்பட வேண்டிய ஒன்று,” என்றும் கான்ஸ்டன்டைன் கூறினார்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, நாட்டைப் பிளவுபடுத்தும் சக்திகளுக்கு விஜய் இடம் கொடுத்துவிட மாட்டார் எனத் தான் நம்புவதாகத் தெரிவித்தார்.

அவரது வருகை 2026 தேர்தலின்போது தமிழ்நாட்டில் உள்ள கூட்டணிகளில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று கூறிய அவர், “நாட்டில் மதவாத சக்திகளுக்கு இடம் கொடுத்துவிடக் கூடாது என்பதில் முதல்வர் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார். அதில் சிறு கீறல் விழுவதற்குக்கூட வாய்ப்பில்லை,” என்றார்.

தமிழக உரிமைகளை முன்னிறுத்தி அக்கட்சியின் பாடல்களை வடிவமைத்துள்ளதாகக் கூறிய பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன், “தமிழகத்தில் உள்ள சில கட்சிகள், கடவுள்களை அவமதித்து வருவதைப் போல இல்லாமல் உண்மையான மதச்சார்பின்மையுடன் விஜய் செயல்பட வேண்டும்,” என்று வலியுறுத்தினார்.

“அண்ணா, எம்.ஜி.ஆர், என மறைந்த தலைவர்களின் பெயரை நடிகர் விஜய் நினைவூட்டுவதில் எந்தத் தவறும் இல்லை.

இதை தி.மு.க.வும் அ.தி.மு.க.,வும் எப்படி எடுத்துக் கொள்ளப் போகின்றன என்பது முக்கியம். அரசியலில் இதுபோன்ற போட்டியை நாங்கள் விரும்புகிறோம்,” என்று கரு.நாகராஜன் குறிப்பிட்டார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “தம்மை வளர்த்தெடுத்து, வாழ்வளித்த தமிழ்நாட்டு மக்களுக்குத் தன்னலமற்ற தொண்டாற்ற வேண்டும் என்ற புனித நோக்கத்தோடு, தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகப்படுத்தி, நேரடி அரசியல் களத்தில் தடம் பதிக்கத் தொடங்கும் விஜய், லட்சிய உறுதியுடன் தமிழக அரசியலில் வாகை சூட வாழ்த்துகள்,” என்று கூறியுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version