வியாழன் இரவு அன்று அமெரிக்காவில் நடைபெற்ற ஜனநாயகக் கட்சியின் மாநாட்டில் பங்கேற்ற கமலா ஹாரிஸ், அதிகாரப்பூர்வமாக அந்த கட்சியின் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, அந்த அறிவிப்பை அவர் ஏற்றுக் கொண்டார்.
அமெரிக்க வரலாற்றில் முதல் கருப்பின மற்றும் ஆசிய- அமெரிக்க பெண் அதிபர் வேட்பாளர் என்ற சாதனையை நிகழ்த்தியிருக்கும் கமலா ஹாரிஸ், 45 நிமிடம் மாநாட்டில் பேசினார்.
அவர் யார்? அமெரிக்க மக்களுக்காக அவர் என்ன செய்ய இருக்கிறார்? தற்போது நடைபெற்று வரும் காஸா – இஸ்ரேல் போர் குறித்த நிலைப்பாடு என்ன? என்பது குறித்தும், அவரின் குடும்பப் பின்னணி, அவர் தாயாரின் பங்களிப்பு குறித்தும் மாநாட்டில் குழுமியிருந்த மக்கள் முன் கமலா ஹாரிஸ் பேசினார்.
நடுத்தர குடும்பப் பின்னணியில் இருந்து வருகிறேன் – கமலா ஹாரிஸ்
பலருக்கும் கமலா ஹாரிஸ் யார் என்று தெரியும். ஆனால் அவரின் பின்புலம், அவர் கொண்டிருக்கும் நம்பிக்கை போன்றவை பற்றி அறிந்திருக்கவில்லை. முதன்முறையாக தன்னுடைய குடும்பப் பின்னணி குறித்து பேசி தன்னைப் பற்றிய ஒரு முழுமையான அறிமுகத்தை மக்கள் முன்பு ஏற்படுத்தினார்.
தன்னுடைய அம்மாவைப் பற்றி பேசிய அவர், எவ்வாறு 19 வயதில் அவர் அம்மா அமெரிக்காவுக்கு வந்தார் என்றும், அவருடைய பெற்றோர்கள் எவ்வாறு சந்தித்துக் கொண்டனர், எவ்வாறு விவாகரத்து பெற்றனர் என்றும் கூறினார்.
கலிஃபோர்னியாவில் உள்ள ஓக்லாந்தில், உழைக்கும் வர்க்க மக்கள் வாழும் பகுதியில் கழிந்த தன்னுடைய பால்ய காலத்தைக் குறித்தும் அவர் பேசினார்.
“நான் ஒரு நடுத்தர குடும்பப் பின்னணியில் இருந்து வருகிறேன். என்னுடைய அம்மா இவ்வளவுதான் செலவழிக்க வேண்டும் என்ற பட்ஜெட்டை நிர்ணயம் செய்திருப்பார். அதில்தான் நாங்கள் எங்கள் வாழ்க்கையை வாழ்ந்தோம். எங்களுக்கு அந்த சூழலில் கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் நாங்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று என்னுடைய அம்மா எதிர்பார்த்தார்,” என்று கூறினார்.
மேற்கொண்டு பேசிய அவர் ஏன் ஒரு வழக்கறிஞராக வர ஆசைப்பட்டார் என்பதையும் கூறினார்.
“என்னுடைய வாழ்நாள் முழுவதும் நான் ஒரே ஒரு வாதிக்காகதான் வாதாடியுள்ளேன். அது மக்கள்தான்,” என்று பேசினார்.
பாலத்தீன ஆதரவாளர்கள் பலரும் மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் பகுதிக்கு வெளியே பேரணி நடத்தி வருகின்ற சுழலில், தன்னுடைய உரையில் வெளியுறவுக் கொள்கை குறித்து பேசினார் கமலா ஹாரிஸ்.
தற்போது நடைபெற்று வரும் காஸா போர் குறித்து பேசிய அவர், “பைடனும், நானும் இது குறித்து தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டுக்கும் நபர்களை காப்பாற்றி, போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்று கூறினார்.
போர் நிறுத்தம் குறித்து பேசினாலும் கூட, இஸ்ரேல் தன்னை காத்துக் கொள்ளும் முழுத்திறனும் உள்ளது என்பதை உறுதி செய்த அவர் அக்டோபர் 7 ஆம் தேதி நடைபெற்ற தாக்குதல் குறித்தும் தன்னுடைய உரையில் குறிப்பிட்டார். மேலும் பாலத்தீனர்கள் தற்போது சந்தித்துக் கொண்டிருக்கும் சவால்கள் மன வேதனையை அளிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
இவரின் இந்த அறிவிப்பு, பைடனின் காஸா போர் குறித்த கொள்கைகளையே ஹாரிஸின் ஆட்சியும் பின் தொடரும் என்ற கருத்தை வெளிப்படையாக்கியுள்ளது.
கொள்கைகள் தொடர்பாக தன்னுடைய உரையில் பேசிய ஹாரிஸ் மக்களின் அன்றாட தேவைகளுக்கான செலவீனத்தை குறைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறினார். சுகாதார சேவை, வீட்டு வசதி மற்றும் உணவு என பல அன்றாட தேவைகளின் விலையை கட்டுப்படுத்த இருப்பதாக கூறினார்.
மேற்கொண்டு பேசிய அவர் பெண்களுக்கான கருக்கலைப்பு உரிமையை நிலை நாட்டுவது குறித்து தன்னுடைய கருத்தை வெளியிட்டார்.
“டொனால்ட் டிரம்ப் பதவிக்கு வரும் பட்சத்தில் தேசிய அளவில் கருக்கலைப்புக்கு தடை விதிக்கப்படும்,” என்று மாநாட்டில் குறிப்பிட்டார்.
டொனால்ட் டிரம்ப் அதிபராக இருந்த போது மூன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட அமர்வை நியமித்தார். 50 ஆண்டுகளாக பெண்களின் இந்த உரிமையை பாதுகாத்து வந்த ரோ Vs வேட் என்ற வழக்கின் தீர்ப்புக்கு எதிராக முடிவெடுத்து அந்த தீர்ப்பை செல்லாது என்று அறிவித்தனர்.
இதன் விளைவாக, தற்போது 22 மாகாணங்களில் கருக்கலைப்புக்கு தடை விதித்துள்ளன. அதில் 14 மாகாணங்களில் எந்த விதமான சூழலிலும் கருக்கலைப்புக்கு அனுமதி இல்லை. 10 மாகாணங்களில் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகிய பெண்களின் கருக்கலைப்புக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
” டொனால்ட் டிரம்பை மீண்டும் வெள்ளை மாளிகைக்குள் அனுமதித்தால் ஏற்படும் பின்விளைவுகள் மிகவும் தீவிரமாக இருக்கும் என்று மாநாட்டில் அவர் பேசினார்.
அமெரிக்க நாடாளுமன்றம் கூடும் கேப்பிடல் கட்டடத்தை 2021 ஜனவரி 6ம் தேதி அன்று டிரம்ப் ஆதரவாளர்கள் தாக்கியதை குறித்து பேசிய அவர், டொனால்ட் டிரம்ப் மீதான குற்றச்சாட்டுகள் குறித்தும் பட்டியலிட்டார்.
குடியரசுக் கட்சியினரால் அறிமுகம் செய்யப்பட்ட ஹெரிட்டேஜ் ஃபவுண்டேஷன் திட்டம் 2025 குறித்து விமர்சனம் செய்த கமலா ஹாரிஸ் இது அமெரிக்காவை பின்னோக்கி இழுத்து செல்லும் திட்டம் என்றும் குறிப்பிட்டார். ஏற்கனவே இந்த திட்டத்தை டொனால்ட் டிரம்ப் கைவிட்டிருந்த போதிலும், இது டிரம்பின் ஆலோசகர்களால் எழுதப்பட்டது என்றும் இது அமெரிக்காவின் வளர்ச்சிக்கு எதிரானது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
கமலா ஹாரிஸின் பரப்புரையில் எதிர்காலம் மற்றும் கடந்த காலத்தின் ஒப்பீடு ஒரு முக்கியமான அம்சமாக கருதப்படுகிறது. இது அவருடைய அதிபர் வேட்பாளர் ஏற்புரையிலும் இடம் பெற்றிருக்கிறது.
இந்த ஒரு அம்சம் அவருடைய குடியரசுக் கட்சியின் வேட்பாளரிடம் இருந்து மட்டுமல்ல, தற்போதைய அதிபர் ஜோ பைடனிடம் இருந்தும் கமலா ஹாரிஸை தனித்து காட்டுகிறது.