கடந்த வாரம் நாம் ஆராய்ந்த விடயத்தின் தொடரச்சியாகவே இக்கட்டுரை எழுதப்படுகிறது.

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கபப்டவிருக்கும் நிலையில், அரசாங்கம் அரசியலமைப்புத் திருத்தம் ஒன்றை கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளது.

ஜனாதிபதியினதோ அல்லது பாராளுமன்றத்தினதோ பதவிக் காலத்தை நீடிப்பதோடு மட்டுமே சம்பந்தப்பட்ட ஒரு விடயத்துக்காக அரசாங்கம் அரசியலமைப்பை திருத்த அவசரப்படுவது ஏன்?

ஜனாதிபதியினதோ அல்லது பாராளுமனறத்தினதோ பதவிக் காலத்தை நீடிக்க அரசாங்கம் முயல்கிறதா? அவ்வாறு எதையும் அவ்வரசியலமைப்புத் திருத்தத்தால் செய்ய முடியாது.

உத்தேச அரசியலமைப்புத் திருத்தத்துக்கான சட்டமூலம், அதாவது 22ஆவது அரசியலமைப்புத் திருத்த சட்டமூலம் கடந்த 18ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அவ்வாறான எந்தவொரு நோக்கம் இருப்பதாகவும் தெரியவில்லை.

அந்த அரசியலமைப்பு திருத்தம் செப்டெம்பர் அல்லது ஒக்டோபர் மாதம் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலை பாதிக்கலாம் என்று எதிர்க்கட்சிகள் அச்சம் தெரிவித்த நிலையில், ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் வரை அதனை வர்த்தமானியில் பிரசுரிக்க வேண்டாம் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷ கடந்த 18ஆம் திகதி தமது அமைச்சின் செயலாளரைப் பணித்தார்.

ஆனால், அதனை பிரசுரிக்குமாறு ஜனாதிபதி ரணில் அன்றே சம்பந்தப்பட்ட அதிகாரிகளைப் பணித்தார். அதன்படியே அது பிரசுரிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியினதும் பாராளுமன்றத்தினதும் பதவிக் காலம் 5 வருடங்களாக இருந்த போதிலும், அப்பதவிக் காலத்தை ஆறு வருடங்களுக்கு மேல் நீடிப்பதாக இருந்தால் அதற்கு சர்வஜன வாக்கெடுப்பொன்றின் மூலம் மக்களின் ஒப்புதலைப் பெறவேண்டும் என்று அரசியலமைப்பின் 83 (ஆ) உறுப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் ஆறு என்ற சொல்லுக்குப் பதிலாக ஐந்து என்ற சொல்லை குறிப்பிடுவதற்கே இந்த திருத்தம் கொண்டுவரப்படவிருக்கிறது.

அதில் என்ன முக்கியத்துவம் இருக்கிறது? தேர்தல்கள் ஆணைக்குழு ஜனாதிபதித் தேர்தலைப் பற்றிய அறிவித்தலை வெளியிட இருக்கும் நிலையில், அந்த அரசியலமைப்புத் திருத்தம் வர்த்தமானியில் வெளியிட அரசாங்கம் அவசரப்பட்டது ஏன்?

இதனிடையே இந்தத் திருத்தத்தை நியாயப்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க காலியில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றினார்.

19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலமே ஜனாதிபதியினதும் பாராளுமன்றத்தினதும் பதவிக் காலம் 6 வருடங்களிலிருந்து 5 வருடங்களாகக் குறைக்கப்பட்டது.

அந்தத் திருத்தத்தை வரைந்த முன்னாள் எம்.பி. ஜயம்பத்தி விக்ரமரத்ன அனுபவம் குறைந்தவர் என்பதால் அவர் 83 (ஆ) உறுப்புரையின் உள்ள ஆறு என்ற சொல்லையும் ஐந்து என்று மாற்றத் தவறியுள்ளார் என்றார்.

தற்போது பப்புவா நியூகீனியாவில் தங்கியிருக்கும் விக்ரமரத்ன அதனை மறுத்துக் கடந்த சனிக்கிழமை அறிக்கையொன்றை வெளியிட்டார்.

19ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தனி ஒருவரால் வரையப்பட்டதொன்றல்ல என்றும் அது ஐந்து பேர் கூட்டாகச் செய்த பணியென்றும் அந்த ஐந்து பேரின் பணிகளைப் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவின் தலைமையிலான அமைச்சரவை உபகுழுவொன்று மேற்பார்வை செய்தது என்றும் 83 (ஆ) உறுப்புரையில் செய்யப்பட வேண்டிய மேற்படி சொல் மாற்றம் கூட்டாக எடுக்கப்பட்ட முடிவொன்றாகும். வேண்டுமென்றே மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் அதில் தெரிவித்திருந்தார்.

அதற்கான காரணத்தையும் அவர் விளக்கியிருந்தார். சர்வஜன வாக்கெடுப்பு தேவைப்படும் எந்தவொரு மாற்றத்தையும் செய்வதில்லை என்ற பொதுவான உடன்பாடொன்றின் அடிப்படையிலேயே 19ஆவது திருத்தம் வரையப்பட்டது என்றும் 83ஆவது உறுப்புரையில் ஏதாவது மாற்றம் செய்வதாக இருந்தால் அதற்கு சர்வஜன வாக்கெடுப்பு மூலம் மக்களின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று அந்த உறுப்புரையிலேயே குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், அந்த உறுப்புரையில் அன்று கைவைக்கவில்லை என்றும் அவர் தமது அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார்.

உண்மை தான். அரசியலமைப்பில் 1,2,3,6,7,8,9,10 மற்றும் 11 ஆகிய உறுப்புரைகளிலும் ‘இந்த உறுப்புரையிலும்’ (அதாவது 83ஆவது உறுப்புரையிலும்) ஏதாவது மாற்றம் செய்வதாக இருந்தால் அதற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று 83ஆவது உறுப்புரையின் (அ) பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது 83 (ஆ) உறுப்புரையில் ஆறு என்ற சொல்லை ஐந்து என்று மாற்றவும் அன்று சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்தியிருக்க வேண்டும். எனினும், சர்வஜன வாக்கெடுப்பு தேவைப்படும் மாற்றங்களைச் செய்வதில்லை என்று முடிவு செய்யப்பட்டு இருந்தமையால் அது அன்று மாற்றாமல் கைவிடப்பட்டுள்ளது.

இப்போது அரசாங்கம் அந்த சொல் மாற்றத்தை மேற்கொள்ளப் போகிறது. அதற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையாகிறது. அன்று 19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் வரைவை மேற்பார்வை செய்த ரணிலுக்கு இது தெரியாதா? அவர் இந்த வரலாற்றை மறந்து விட்டாரா?

உத்தேச அரசியலமைப்பு திருத்தத்தினால் ஜனாதிபதித் தேர்தலுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்னாயக்க கூறியுள்ளார். சட்டப் படி பார்த்தால் அது உண்மை தான். ஆயினும் நடைமுறையில் அது ஜனாதிபதித் தேர்தலைப் பாதிக்கலாம் என்றே தெரிகிறது.

இத்திருத்தத்தைப் பற்றி சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதற்கு முன்னர் அதனை முதலில் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றிக்கொள்ள வேண்டும். அதாவது 150க்கு மேற்பட்ட எம்.பிக்கள் அதற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும்.

அவ்வாறானதோர் ஆதரவை ஜனாதிபதியால் திரட்ட முடியுமா? இதற்குப் போதியளவு எம்.பிக்கள் ஆதரவளிக்காவிட்டால் பாராளுமன்றத்தை உடனடியாக கலைத்துவிடுவதாக ஜனாதிபதி மிரட்டி வருவதாகப் பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட கூறியுள்ளார்.

தற்போதைய பாராளுமன்றத்துக்கு ஐந்து வருடங்கள் பூர்த்தியாவதற்கு முன்னர், ஜனாதிபதி அதனைக் கலைத்தால். முதன்முதலாக 2020இல் பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் தமது பாராளுமன்ற ஓய்வூதியத்தை இழப்பர். எனவே, எந்தக் கட்சியைச் சேர்ந்தாலும் அவ்வாறானவர்கள் அந்த மிரட்டலுக்கு அஞ்சி இந்தத் திருத்தத்துக்கு ஆதரவளிக்கலாம்.

அத்திருத்தம் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டால் அடுத்த கட்டமான சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும்.
அது எப்போது நடைபெறப் போகிறது?

சட்டமூலமொன்று வர்த்தமானியில் சமர்ப்பிக்கப்பட்டு ஒரு வாரத்துக்குப் பின்னரே அது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் அதனை அடுத்து பொது மக்கள் அது தொடர்பாக நீதிமன்றத்தில் மனுக்களைச் சமர்ப்பிக்க மேலும் இரு வாரங்கள் அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்ற விசாரணைக்கும் சில நாட்கள் தேவைப்படும் என்றும் எனவே, அடுத்த மாதம் (ஓகஸ்ட் மாதம்) இறுதியிலேயே இவ்வரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட முடியும் என்றும் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷ கடந்த திங்கட்கிழமை கூறினார்.

அதற்குப் பின்னரே சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அதன் பிரசார பணிகளுக்கும் சுமார் ஒரு மாத காலம் வழங்கப்படும். அதாவது செப்டெம்பர் மாத இறுதியிலேயே சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதாக இருந்தால் நடத்த முடியும். அதே நாட்களில் தான் ஜனாதிபதித் தேர்தலும் நடைபெறப் போகிறது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவித்தல் இவ்வாரம் வெளியிடப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் அர்.எம்.ஏ.எல். ரத்னாயக்க கூறியுள்ளார்.

அவர் அதனை அவ்வாறே செய்தால் அந்த அறிவித்தலிலிருந்து 63 நாட்களுக்குள் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.அதாவது அத்தேர்தல் செப்டெம்பர் மாதம் 27ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்பட வேண்டும்.

அத்தேர்தலும் சர்வஜன வாக்கெடுப்பும் ஒரே நாட்களில் நடைபெறும் நிலை ஏற்பட்டால் மக்கள் மனதில் பெரும் குழப்பம் ஏற்படலாம் அதுவே ஜனாதிபதியின் முயற்சியாகும் என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க கூறியுள்ளார்.

இந்த நிலையைத் தவிர்ப்பதற்கான ஒரே வழி சர்வஜன வாக்கெடுப்பை ஒத்திப் போடுவதாகும். ஏனெனில், சட்டப்படி ஜனாதிபதித் தேர்தலை ஒத்திப் போட முடியாது.

உத்தேச அரசியலமைப்புத் திருத்தம் இப்போதைக்கு எவ்வித பயனையும் அளிக்கப் போவதில்லை என்பது தெளிவாக இருப்பதால் அதற்கான சர்வஜன வாக்கெடுப்பை ஒத்திப் போடுவதால் எவ்வித நட்டமும் எவருக்கும் ஏற்படப் போவதில்லை.

இதனை விட்டுவிட்டு அதற்காக வீணாகச் செலவழிக்கப் போகும் சுமார் 1,000 கோடி ரூபாவை பாவித்துக் கடந்த வருடம் ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை இதற்கு சில மாதங்களுக்கு முன்னர் நடத்தியிருக்கலாம்.

இவ்வாறானதொரு குழப்ப நிலை ஏற்படலாம் என்பதை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு விளங்கவில்லையா?

அதனை அறிந்தும் இந்த அரசியலமைப்புத் திருத்தத்தை வர்த்தமானியில் வெளியிட அவசரப்பட்ட ஜனாதிபதி, சர்வஜன வாக்கெடுப்பை ஒத்திப் போட விரும்புவாரா? என்பதே அடுத்த கேள்வியாகும். அவர் எதற்காக இந்த விடயத்தில் உறுதியாக இருக்கிறார் என்பதை எதிர்வரும் வாரங்களில் தான் விளங்கிக்கொள்ள வேண்டும்.

-எம்.எஸ்.எம்.ஐயூப்-

Share.
Leave A Reply

Exit mobile version