மேற்கத்தியத் தொழில்நுட்பமும் நிதியும் ரஷ்யாவிற்குள் நூற்றுக்கணக்கான தொலைதூரத் தாக்குதல்களை நடத்த யுக்ரேனுக்கு உதவி வருகின்றன.
மோதல்கள் தீவிரமடையும் என்ற அச்சத்தால், மேற்கத்திய நாடுகளால் வழங்கப்பட்ட வெடிமருந்துகளைப் பயன்படுத்த யுக்ரேனுக்கு நேட்டோ நட்பு நாடுகள் இன்னும் அனுமதி வழங்க மறுத்துவருகின்றன. இருந்தபோதும் இவை உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றன.
யுக்ரேன், கடந்த சில மாதங்களாக ரஷ்யாவிற்குள் அதன் தொலைதூரத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது. வாரத்திற்குப் பல முறை மூலோபாய இலக்குகள் மீது ஒரே நேரத்தில் ஏராளமான ட்ரோன்களை ஏவி வருகிறது.
விமானப்படை தளங்கள், எண்ணெய் மற்றும் வெடிமருந்துக் கிடங்குகள் மற்றும் கட்டளை மையங்கள் உள்ளிட்டவை இந்தத் தாக்குதல்களின் இலக்குகளாகும்.
குறைந்த செலவில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் யுக்ரேன்
யுக்ரேனிய நிறுவனங்கள் இப்போது மாதத்திற்கு நூற்றுக்கணக்கான ஆயுதமேந்திய ஒருவழி தாக்குதல் ட்ரோன்களை உற்பத்தி செய்து வருகின்றன. மேற்கில் இதேபோன்ற ட்ரோனை உற்பத்தி செய்ய ஆகும் செலவில் ஒரு சிறு பகுதியை மட்டுமே யுக்ரேன் இதற்குச் செலவிடுகிறது.
ஒப்பீட்டளவில் சிறிய செலவில், ரஷ்யாவின் போர் பொருளாதாரத்தில் ஏற்கனவே பெரிய தாக்கத்தை இது உருவாக்கி வருவதாக ஒரு நிறுவனம் பிபிசியிடம் கூறியது.
இந்தப் பணிகளில் ஈடுபட்டுள்ள பலர் பிபிசிக்கு இந்த விவகாரத்தில் விளக்கமளித்துள்ளனர். அவற்றில் யுக்ரேனின் மிகப்பெரிய ஒருவழி தாக்குதல் ட்ரோன் உற்பத்தியாளர்களில் ஒருவரும், இந்த தாக்குதல்களை நடத்த யுக்ரேனுக்கான மென்பொருளை உருவாக்க உதவிய ஒரு பெரிய தரவு நிறுவனமும் அடங்கும்.
யுக்ரேனின் இந்த உத்தி ஏற்கனவே ரஷ்யாவுக்குப் பெரும் சங்கடங்களை உருவாக்கி வருவதாக பிரான்சிஸ்கோ செர்ரா-மார்டின்ஸ் கூறுகிறார். கூடுதல் முதலீடு செய்தால், அது போரின் போக்கை யுக்ரேனுக்குச் சாதகமாக மாற்றும், என்று அவர் நம்புகிறார்.
பதினெட்டு மாதங்களுக்கு முன்பு, அவர் இணைந்து நிறுவிய நிறுவனமான டெர்மினல் அடானமி உருவாகியே இருக்கவில்லை.
ஆனால், இப்போது ஒரு மாதத்திற்கு நூற்றுக்கும் மேற்பட்ட AQ400 ஸ்கைத் தொலை தூர ட்ரோன்களை உற்பத்தி செய்கிறது. இது 750 கி.மீ. (465 மைல்கள்) வரை பறக்கக்கூடிவையாகும். இந்த நிறுவனம் ஒரு மாதத்திற்கு நூற்றுக்கணக்கான குறுகிய தூர AQ100 பயோனெட் ட்ரோன்களையும் தயாரிக்கிறது, அவை சில நூறு கிலோமீட்டர்கள் பறக்கும்.
இந்த ட்ரோன்கள் மரத்தால் ஆனவை. இவை யுக்ரேனில் உள்ள முன்னாள் மரச்சாமான் தொழிற்சாலைகளில் உருவாக்கப்படுகின்றன.
முன்னாள் ஆஸ்திரேலிய ராணுவ ராயல் பொறியாளரான (Australian Army Royal Engineer) செர்ரா-மார்டின்ஸ், தனது யுக்ரேனிய இணை நிறுவனருடன் அமெரிக்க நிதியுதவியுடன் இந்த நிறுவனத்தை அமைத்தார். யுக்ரேனில் இப்போது ட்ரோன்களை அதிக அளவில் தயாரிக்கும் குறைந்தது மூன்று நிறுவனங்களில் இதுவும் ஒன்றாகும்.
அவர் தனது ட்ரோன்களை “அடிப்படையில், இது ஒரு பறக்கும் மரச்சாமான் – நாங்கள் அதை இகியா (IKEA- உலக அளவில் மரச்சாமான்கள் விற்கும் ஒரு நிறுவனம்) போல அசெம்பிள் செய்கிறோம்,” என்று விவரிக்கிறார்.
இவற்றின் உடற்பகுதியை உருவாக்கச் சுமார் ஒரு மணி நேரமும், அதனுள்ளே பொருத்த வேண்டிய எலக்ட்ரானிக்ஸ், மோட்டார் மற்றும் வெடிபொருட்கள் போன்றவற்றை வைக்க அதில் பாதி நேரமும் ஆகும், என்கிறார்.
இந்த நிறுவனத்தின் பயோனெட் ட்ரோன் சில ஆயிரம் டாலர்கள் செலவில் தயாரிக்கப்படுகிறது. அதே நேரம், அதைச் சுட்டு வீழ்த்தப் பயன்படுத்தப்படும் ரஷ்ய வான் பாதுகாப்பு ஏவுகணை 10 லட்சம் டாலருக்கும் அதிகமான செலவில் தயாரிக்கப்படுகிறது.
யுக்ரேனுக்கு உதவும் மேற்கத்திய நிறுவனங்கள்
மலிவான ட்ரோன்கள் மட்டுமே மாற்றத்தை இந்த ஏற்படுத்தவில்லை.
அமெரிக்காவின் பெரிய தரவுப் பகுப்பாய்வு நிறுவனமான பலான்டிர், யுக்ரேனின் போர் நடவடிக்கைகளுக்கு உதவிய முதல் மேற்கத்திய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாகும்.
யுக்ரேனின் பீரங்கித் தாக்குதல்களின் வேகத்தையும் துல்லியத்தையும் மேம்படுத்துவதற்கான மென்பொருளை இது வழங்கியது. இப்போது யுக்ரேனின் தொலைதூர ட்ரோன் தாக்குதல்களைத் திட்டமிடப் புதிய கருவிகளை வழங்கியுள்ளது.
பலான்டிரைச் சேர்ந்த பிரிட்டிஷ் பொறியாளர்கள், யுக்ரேனியப் பொறியாளர்களுடன் இணைந்து ஒரு இலக்கை அடைவதற்கான சிறந்த வழிகளை உருவாக்கி வரைபடமாக்குவதற்கான ஒரு திட்டத்தை வடிவமைத்துள்ளனர்.
பலான்டிர் எந்த ராணுவ நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. ஆனால் அதன் மென்பொருளை எவ்வாறு பயன்படுத்துவது என்று 1,000-க்கும் மேற்பட்ட யுக்ரேனியர்களுக்குப் பயிற்சி அளிக்க உதவியுள்ளது.
இது, எந்தக் கோட்பாட்டின் அடிப்படையில் செயல்படுகிறது என்று பிபிசிக்கு விளக்கப்பட்டுள்ளது.
பல தரவுகளைப் பயன்படுத்தி, ரஷ்யாவின் வான் பாதுகாப்பு, ரேடார் மற்றும் மின்னணு ஜாமர்களை வரைபடமாக்க முடிகிறது. இறுதியாக அதைப் பார்க்கும் போது, ஒரு நிலப்பரப்பு விளக்கப்படத்தைப் போலவே தெரிகிறது.
விளக்கப்படத்தில் உள்ள கோடுகள் இறுக்கமாக இருந்தால், அந்தப் பகுதியில் வான் பாதுகாப்பு அதிகமாக இருக்கும் என்று அர்த்தம். வணிகச் செயற்கைக்கோள் படங்கள் மற்றும் சமிக்ஞை புலனாய்வுகளைப் பயன்படுத்தி இந்த இடங்கள் ஏற்கனவே யுக்ரேனால் அடையாளம் காணப்பட்டுள்ளன.
தொலைதூர ட்ரோன் தாக்குதல்கள்
ரஷ்யாவின் மின்னணு போர் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளைத் தாண்டி தங்கள் இலக்கை அடைய இந்தத் திட்டம் யுக்ரேனுக்கு உதவுகிறது என்று பலான்டிரின் லூயிஸ் மோஸ்லி கூறுகிறார்.
“போர் நடைபெறும் இடம் முழுவதும் எப்படி இருக்கும் என்பதைப் புரிந்துகொள்வதும் காட்சிப்படுத்துவதும் இந்தப் பணிகளை மேம்படுத்துவதற்கு மிகவும் முக்கியமானது,” என்று அவர் கூறுகிறார்.
தொலைதூர ட்ரோன் தாக்குதல்களைச் செயல்படுத்துவது ரகசியமாகச் செயல்படும் யுக்ரேனின் புலனாய்வு அமைப்புகளால் ஒருங்கிணைக்கப்படுகிறது. ஆனால் சில விவரங்களைப் பற்றி பிபிசி-க்கு வேறு இடங்களிலிருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்த முறையில், எந்த ஒரு இடத்துக்கும் ஏராளமான ட்ரோன்களை ஏவ முடியும். ஒரு இலக்கை நோக்கி 60 ட்ரோன்களை வரை செலுத்தலாம்.
தாக்குதல்கள் பெரும்பாலும் இரவில் நடத்தப்படுகின்றன. பெரும்பாலான ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்படும். 10% மட்டுமே இலக்கை அடையலாம். சில ட்ரோன்கள் யுக்ரேனின் சொந்த வான் பாதுகாப்பு – நட்பு துப்பாக்கிச் சூடு மூலம் வழியில் சுட்டு வீழ்த்தப்படுகின்றன.
ரஷ்யாவின் மின்னணு நெருக்கத்தை (electronic jamming) எதிர்கொள்ள யுக்ரேன் சில வழிகளை உருவாக்க வேண்டியிருந்தது. டெர்மினல் அடானமியின் ஸ்கைத் ட்ரோன்கள், அதன் போக்கை தீர்மானிக்கக் காட்சி நிலைப்படுத்தலைப் பயன்படுத்துகிறது. செயற்கை நுண்ணறிவு மூலம் நிலப்பரப்பை ஆராய்கிறது. இதில் விமானி யாரும் இல்லை.
‘ரஷ்யாவும் பாதிப்புக்கு உள்ளாகக்கூடியது’
பலான்டிர் மென்பொருள் ஏற்கனவே சிறந்த பாதைகளை குறித்து வைத்திருக்கும். நிறைய ட்ரோன்களை பறக்கவிடுவது ரஷ்யாவின் வான் பாதுகாப்பைத் தளரவைப்பதற்கு முக்கியமானது என்று செர்ரா-மார்டின்ஸ் கூறுகிறார்.
அதேபோல், ட்ரோன்களைச் சுட்டு வீழ்த்த முயற்சிக்கும் ஏவுகணைகளை விட அல்லது அவை தாக்க முயற்சிக்கும் இலக்குகளை விட மலிவானதாக இருப்பதும் முக்கியம் என்கிறார்.
ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிடியூட்டின் பேராசிரியர் ஜஸ்டின் பிராங்க், யுக்ரேனின் தொலை தூர ட்ரோன் தாக்குதல்கள் ரஷ்யாவுக்குச் சங்கடங்களை உருவாக்குகின்றன என்று கூறுகிறார். ரஷ்யாவிடம் நிறைய வான் பாதுகாப்பு அமைப்புகள் இருந்தாலும், அவற்றால் எல்லாவற்றையும் பாதுகாக்க முடியவில்லை.
யுக்ரேனின் தொலை தூர தாக்குதல்கள் சாதாரண ரஷ்யர்களுக்கு ‘அரசால் அவர்களை முழுமையாக பாதுகாக்க முடியாது என்பதையும், ரஷ்யாவும் பாதிப்புக்கு உள்ளாகக்கூடியது’ என்பதையும் காட்டுகிறது என்று பேராசிரியர் பிராங்க் கூறுகிறார்.
ரஷ்யாவுக்குள் 1,000 கி.மீ (620 மைல்) தூரத்திற்கு யுக்ரேன் ட்ரோன்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவை மாஸ்கோவில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன.
ஆனால் கவனம் ராணுவ தளங்கள் மீது செலுத்தப்பட்டுள்ளது.
பேராசிரியர் ஜஸ்டின் பிராங்க் கூறுகையில், ரஷ்ய விமானத் தளங்களை குறிவைப்பது மட்டுமே ரஷ்யாவின் கிளைட் குண்டுகளுக்கு யுக்ரேன் பதிலளிக்கக்கூடிய ஒரே சிறந்த வழியாகும்.
இது ரஷ்யாவை தனது விமானங்களை இன்னும் தொலைவில் உள்ள தளங்களுக்கு நகர்த்தவும், தனது தாக்குதல்களின் இடைவெளியை அதிகரிக்கவும் கட்டாயப்படுத்தியுள்ளது.
யுக்ரேனிய ட்ரோன்கள் அதன் மரினோவ்கா விமான தளத்தில் உள்ள ஹேங்கர்களை எவ்வாறு வெற்றிகரமாக சேதப்படுத்தியுள்ளன என்பதை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன.
அடுத்து என்ன நடக்கும்?
மேற்கத்தியத் தயாரிப்பான தொலை தூர ஆயுதங்களின் உதவியுடன் இன்னும் அதிகமாகச் செயல்பயல்பட முடியும் என்று யுக்ரேன் உறுதியாக நம்புகிறது. ஆனால் இதுவரை, நேட்டோ நட்பு நாடுகள் யுக்ரேனின் வேண்டுகோள்களை நிராகரித்து வந்துள்ளன.
குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஜெர்மனியில், இது மேற்கு நாடுகளை மேலும் மோதலில் ஈடுபடுத்தும் என்ற அச்சம் நீடிக்கிறது. எனினும் மேற்கத்திய நிறுவனங்கள் யுக்ரேனுக்கு உதவுவதை இது நிறுத்தவில்லை.
யுக்ரேன் இன்னும் பெரும்பாலும் அதன் உள்நாட்டு முயற்சிகளையே நம்ப வேண்டியுள்ளது. போரை ரஷ்யாவுக்குள் நடத்துவது போரை வெல்வதற்கு ஒரு திறவுகோல் என்று நம்புகிறது.
பிரான்சிஸ்கோ செர்ரா-மார்டின்ஸ் மேற்கத்திய உற்பத்தியாளர்கள் ஒரு தீவிரமான போரை எதிர்கொள்ள இன்னும் தயாராக இல்லை என்கிறார். மிகக் குறைவான தொலை தூர ஆயுதங்களை அதிகச் செலவில் உற்பத்தி செய்கிறார்கள் என்கிறார். யுக்ரேனுக்கு இப்போது உண்மையில் தேவைப்படுவது ‘போதுமான நல்ல அமைப்புகள்’ என்று அவர் கூறுகிறார்.
பிரிட்டனில் தயாரிக்கப்பட்ட ஸ்டோர்ம் ஷேடோ ஏவுகணையை விட குறைந்தது 10 மடங்கு மலிவான புதிய கப்பல் ஏவுகணையை ஏற்கனவே உருவாக்கி வரும் ஒரு யுக்ரேனிய நிறுவனத்துடன் பிபிசி பேசியுள்ளது.
மேற்கத்திய நாடுகளின் சந்தேகங்கள் ஒருபுறம் இருந்தாலும், ரஷ்யா மீதான தாக்குதலை அதிகரிக்க யுக்ரேன் திட்டமிட்டுள்ளது. செர்ரா-மார்டின்ஸ், “இப்போது நீங்கள் பார்ப்பது ஆண்டின் இறுதிக்குள் நீங்கள் பார்க்கப்போவதை ஒப்பிடும்போது ஒன்றுமேயில்லை,” என்கிறார்.