இரசியாவை ஆக்கிரமித்த அந்நியப் படையினர் அழிவைச் சந்திப்பார்கள் என்பது வரலாறு உலகிற்கு உரத்துச் சொல்லும் செய்தியாகும்.

இருந்தும் 2024 ஓகஸ்ட் மாதம் 6-ம் நாள் உக்ரேனியப் படையினர் ஒரு மிகத்துணிச்சலான படை நகர்வு ஒன்றை இரசியாவின் கேர்ஸ்க் பிராந்தியத்தினுள் (Kursk Oblast) செய்தனர்.

2022-ம் ஆண்டு பெப்ரவரி தொடங்கப்பட்ட இரசிய உக்ரேனின் போரில் 2022இன் இலையுதிர் காலத்தின் பின்னர் இரண்டு தரப்பினரும் சமரணிகள் (battalions) மூலமாகவே படை நகர்வுகளை செய்து வருகின்றனர்.

ஒரு சமரணியில் சிற நூற்றுக் கணக்கான படையினர் மட்டும் இருப்பார்கள். ஆனால் உக்ரேன் கேர்ஸ்க் பிராந்தியத்தினுள் ஐந்திற்கும் மேற்பட்ட படைத்தொகுதிகளை (Brigades) கொண்டு இந்த அதிரடித் தாக்குதலைச் செய்துள்ளது. பொதுவாக ஒரு படைத்தொகுதியில் ஆயிரம் படையினர் இருப்பார்கள்.

இரசியக் கண்ணில் மண் தூவல்

உக்ரேன் கேர்ஸ்க் பிராந்தியத்தினுள் அனுப்பிய படையில் ஐந்து தரைப்படைத் தொகுதிகளும் ஒரு வான் தாக்குதல் தொகுதியும் கவச வண்டிகள் மற்றும் தாங்கிகள் அறுநூறும் பயன்படுத்தப்பட்டன.

ஆளிலிவிமானங்கள் கண்காணிப்புப் பிரிவுகள் என்பவற்றையும் சேர்த்தால் மொத்தம் பத்தாயிரம் உக்ரேனியப் படையினர் கேர்ஸ்க் பிராந்தியத்தில் களமிறங்கினர்.

புதிய போர் முறைமைகளில் இரகசியமாக எந்த ஒரு படைநகர்வையும் செய்ய முடியாது என்பது போரியலாளர்களின் கருத்தாகும்.

கண்காணிப்பு விமானங்கள், வேவுவிமானங்கள், உளவு விமானங்கள், ஆளிலிவிமானங்கள், ஆகியவை மட்டுமல்ல செய்மதிகள் போன்றவையும் தொடர்ச்சியாக போர்முனிகளை அவதானித்துக் கொண்டிருக்கக் கூடிய நிலையில் உக்ரேன் பத்தாயிரம் படையினர் தாங்கிகள் மற்றும் கவச வண்டிகளுடன் இரசியாவை அதிரவைக்கக் கூடியவகையில் நகர்த்தியமை உலகப் படைத்துறை ஆய்வாளர்களை வியக்க வைத்ததுடன் இரசியாவின் படைதுறையினர அதிர வைத்தது.

1.32 மில்லியன் படையினரைக் கொண்ட இரசியா 510,000 பேரை உக்ரேன் போரில் ஈடுபடுத்தியுள்ளது.

900,000 நிரந்தரப் படையினரைக் கொண்ட உக்ரேன் 500,000 படையினரை போர்முனைக்கு அனுப்பியுள்ளது. இரு நாடுக்ளுக்கும் இடையிலான 2295 கிமீ எல்லையில் எல்லையில் வலுக்குறைந்த புள்ளியைத் தெரிவு செய்வது இலகுவானது. ஆனால் எதிரியின் கண்காணிப்பைத் தவிர்த்து முன்னேறுவது மிகக் கடினமானது.

உக்ரேன் அனுப்பிய படைத்தொகுதிகள்

உக்ரேன் தனது ஊடறுப்பு போரை தொடங்கிய மூன்றாம் நாள் உக்ரேனின் 116வது இயந்திரமயமாக்கிய படைத்தொகுதி (Mechanized Brigade) வெளியிட்ட காணொலிப் பதிவில் உக்ரேனின் தங்கிகளும் கவச வண்டிகளும் தம் சொந்த நிலப்பரப்பில் பயணிப்பது போல் எதிர்ப்பின்றிப் பயணிப்பதாக சித்தரிக்கப்பட்டிருந்தது.

அதற்கு அடுத்த நாள் உக்ரேனின் 99வது இயந்திரமயமாக்கிய சமரணி (Mechanized Battalion) மிகவும் துரிதமாக தாம் நகர்வதாக ஒரு காணொலியை வெளியிட்டனர்.

உக்ரேனின் படைத்துறையிலேயே அதன் 99வது இயந்திரமயமாக்கிய சமரணிதான் மிகத் துரிதமாக நகரக்கூடியது.

உக்ரேன் இரசியாவின் இரசியாவின் கேர்ஸ்க் பிராந்தியத்தினுள் (Kursk Oblast) செய்த படைநகர்வை மிகவும் இரகசியமாகவே வைத்திருந்தது.

ஊடுருவிய உக்ரேனியர்கள் மீது தாக்குதல் நடத்தச் சென்ற இரசியாவின் Su-34 என்னும் நவீன போர் விமானம் ஒன்றை உக்ரேனியர்கள் சுட்டு வீழ்த்தினர்.

அவர்கள் தம்முடன் ஒரு சிறந்த விமான எதிர்ப்பு படைக்கலன்களையும் எடுத்துச் சென்றுள்ளனர்.

ஊடுருவிய உக்ரேனியர்கள் காப்பரண்களை அமைத்து தங்கள் நிலையை வலுப்படுத்துவதுடன் தமது நிலைகளை நெருங்கி இரசியப் படையினர் வர முடியாதவாறு கண்ணிவெடிகளையும் விதைத்துள்ளனர்.

உக்ரேனியர்கள் பல இரசியர்களைப் போர்க்கைதிகளாக கைப்பற்றியுள்ளனர். 28 கிராமங்களை உக்ரேனியர்கள் கைப்பற்றியதாக இரசியா சொல்கின்றது. 70 கிராமங்கள் என்கின்றனர் உக்ரேனியர்கள்.

உக்ரேனின் நோக்கங்கள் எவை?

ஆளணித் தட்டுப்பாடும் படைக்கலத் தட்டுப்பாடும் உக்ரேனை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கையில் உக்ரேன் ஆறாயிரம் அல்லது பத்தாயிரம் படையினரைக் களத்தில் இறக்கியமை அதனால் துணிச்சனால முடிவுகளை எடுக்க முடியும் என்பதைக் கட்டுகின்றது.

உக்ரேனுக்கும் இரசியாவிற்கும் இடையில் நடக்கும் சமச்சீரற்ற போரில் (Asymmetric Warfare) அது அவசியமான ஒன்றாகும். உக்ரேன் இரசியாவின் கேர்ஸ்க் பிராந்தியத்தினுள் ஊடறுப்புச் செய்தமையின்:

முதன்மை நோக்கம் இரசிய அதிபர் விளடிமீர் புட்டீனுக்கு மூக்கறுப்பது போல ஓர் அவமானத்தைக் கொடுப்பதாகும்.

இரண்டாவது நோக்கம் உக்ரேன் படையினரின் மீது நம்பிக்கை வைக்க மறுக்கும் ஜேர்மன் முதலான நாடுகளின் கருத்தை மாற்றுவதாகும்.

மூன்றாவது நோக்கம் இரசியப் படையினரை விரக்தியடையச் செய்வது. நான்காவது நோக்கம் உக்ரேனுக்கு கருங்கடலில் நுழைவு மறுப்பு முயற்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் இரசியாவின் கவனத்தை சிதறடித்தல்.

ஐந்தாவது நோக்கம் கேர்ஸ்க் பகுதியில்இரசியாவின் ஐரோப்பாவிற்கான எரிபொருள் விநியோக நிலையத்தை அழித்து இரசியாவிற்கு பொருளாதார இழப்பீட்டை ஏற்படுத்தல்.

ஆறாவது நோக்கம் இரசியாவின் ஒரு பகுதி நிலப்பரப்பை கைப்பற்றி வைத்திருப்பது எதிர்காலத்தில் இரசியாவுடனான பேச்சு வார்த்தையில் ஒரு பேரம் பேசும் வலுவை உருவாக்குதல்.

ஐரோப்பாவிற்கான எரிபொருள் விநியோகம்

உக்ரேன் கைப்பற்றிய நிலப்பரப்பில் இரசியாவின் பெரிய எரிவாயு விநியோக நிலையத்தைக் கொண்ட Sudzha நகரும் அடங்கும். உக்ரேனியர்களால் அங்கிருந்து எரிவாயும் விநியோகிக்கப்படுவதைத் தடுக்க முடியும்.

Gas Connect Austria என்ற நிறுவனம் தங்களுக்கு குழாய்கள் மூலமாக கிடைக்கும் எரிவாயுவில் தடங்கல் இல்லை என்றது. இரசியாவின் எரிவாயு உற்பத்தி நிறுவனமான Gazprom தாங்கள் இப்போதும் எரிவாயுவை விநியோகிக்கின்றோம் என்கின்றது.

கனடா இரசியாவில் படைக்கலன் பாவிக்க அனுமதி
உக்ரேனுக்கு பன்னிரண்டு Leopard-2A4 போர்த்தாங்கிகளையும் பா கவச வண்டிகளையும் நூற்றுக் கணக்கான ரோந்து வண்டிகளையும் கனடா வழங்கியுள்ளது.

Kirsk மாகாணத்தை உக்ரேன் ஊடுருவிய பின்னர் (2024-08-15) கனடா தனது படைக்கலன்களை உக்ரேனியப் படையினர் இரசிய நிலப்பரப்புகளிலும் பாவிக்கலாம் என்ற அனுமதியை வழங்கியுள்ளது.

Kirsk ஊடுருவலுக்கு முன்னர் பிரித்தானியா, பிரான்ஸ், அமெரிக்கா, ஜேர்மனி ஆகிய நாடுகள் தமது படைக்கலன்களை இரசியாவின் நிலப்பரப்பிலும் பாவிக்கலாம் என்ற அனுமதியை வழங்கியிருந்தன.

இரசியாவின் எதிர்வினை

இரசியாவினுள் ஊடுருவிய உக்ரேனிய படையினர் நான்கு நாட்கள் கழித்து தங்ளுடைய இருப்பை வலுப்படுத்துவதிலும் காப்பரண்களை அமைப்பதிலும் அதிகம் ஈடுபட்டனர்.

மேலதிக படையினரையும் படைக்கலன்களையும் கைப்பற்றப்பட்ட பகுதிகளுக்கு உக்ரேன் அனுப்புவதாகவும் செய்திகள் வருகின்றன.

அவர்களின் நிலைகளை நெருங்கி இரசியப் படையினர் செல்ல முடியாதவாறு பதில் தாக்குதல்களைச் செய்தனர்.

தனியாக ஒரு வான் எதிர்ப்பு படையணியும் இணைந்து சென்றுள்ளது. இரசியாவால் பேரழிவு விளைவிக்கும் படைக்கலன்களைப் பாவித்து சில மணித்தியாலங்களுக்கும் அவர்களை சாம்பலாக்க முடியும்.

ஆனால் அதன் பின்னர் உக்ரேனுக்கு ஆதரவு வழங்கும் நாடுகள் உக்ரேனுக்கும் பேரழிவு விளைவிக்கக் கூடிய படைக்கலன்களை இரகசியமாகவோ பகிரங்கமாகவோ வழங்கினால் போர் ஆளணி இழப்பு மிக்க ஒரு போராக மாறும்.

இரசியா தனது சிறப்பு படையணிகளை ஆளணி இழப்பைக் கருத்தில் கொள்ளாது கேர்ஸ்க் பிராந்தியத்திற்கு அனுப்பி உக்ரேனியர்களை விரட்டும் முயற்ச்சியில் ஈடுபடும்.

ஒரு வாரத்திற்கும் மேலாக இரசியா உக்ரேனியர்களை விரட்ட முடியாமல் இருக்கின்றனர். உக்ரேனின் ஊடுருவலின் வேகம் கொடுத்த ஆச்சரியத்திலும் பார்க்க இரசியாவின் பதிலடி மெதுவாக இருப்பது அதிக ஆச்சரியத்தைத் தருகின்றது.

அணுக்குண்டு பாவிக்கப்படுமா?

உக்ரேன் கைப்பற்றிய பகுதியைச் சுற்றிவர உள்ள பகுதியில் உள்ள மக்களை இரசிய அரசு வெளியேறச் சொல்லியுள்ளது.

உக்ரேன் கைப்பற்றிய பிரதேசத்திலும் பார்க்க மூன்று மடங்கு பரப்பளவு கொண்ட நிலப்பரப்பில் இருந்து இரசியர்கள் இரசிய அரசால் வெளியேற்றப்பட்டுள்ளனர். இரசியா அணுக்குண்டு பாவிப்பதற்கு ஏதுவாக மக்களை வெளியேற உத்தரவிட்டிருக்கலாம்.

உக்ரேனின் தாக்குதல் பற்றிய கருத்துகள்:

அமெரிக்க அதிபர் ஜோ பைடன்: இரசியாவை உக்ரேனியர்கள் ஒரு தர்மசங்கடமான நிலைக்குத் தள்ளியுள்ளனர்.

விளடிமீர் புட்டீன்: உக்ரேன் படையினர் இரசியாவில் நிலைகொண்டிருக்கும் வரை பேச்சு வார்த்தை இல்லை.

நேட்டோ படைத்துறை அதிகாரி Christopher G Cavoli: உக்ரேனியர் ஒரு வலுவற்ற புள்ளியைக் கண்டறிந்து அதை துரிதமாக தமக்கு சாதகமாகப் பயன்படுத்தியுள்ளனர். உக்ரேனியர்களுடைய தாக்குதல் சரியாகப் போய்க்கொண்டிருக்கின்றது.

டென்மார்க், நெதர்லாந்து, நோர்வே ஆகிய நாடுகள் உக்ரேனுக்கு மொத்தமாக 45 அமெரிக்கத் தயாரிப்பு F-16களை வழங்கவுள்ளன.

நெதர்லாந்து 2024 ஜூலை இறுதியில் ஆறு F-16களை வழங்கியுள்ளது. அவை முப்பது ஆண்டுகள் பழைய விமான்ங்கள் என்றாலும் பல புதிய இலத்திரனியல் போர் முறைமைகள், ரடார்கள் போன்றவை பொருத்தப்பட்டிருப்பதுடன் பல புதிய தொலைதூர ஏவுகணைகளையும் தாங்கிச் செல்லக் கூடியவை.

உக்ரேன் போர் இனி தீவிரமானதாக மாறுவதுடன் இரசிய நிலப்பரப்பில் செய்யப் படும் தாக்குதல்களின் எண்ணிக்கையும் காத்திரமும் அதிகரிக்கும்.

Share.
Leave A Reply

Exit mobile version