லிந்துலை, என்போல்ட் தோட்டத்தில் கடந்த 10 ஆம் திகதி முச்சக்கரவண்டி ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சிசு தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த சிசு பிறந்த கையோடு வயரொன்றில் கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

குறித்த தோட்டத்தில் உள்ள வீடொன்றுக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றிலிருந்து கடந்த 10 ஆம் திகதி சிசுவின் சடலம் மீட்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் ஒரு பிள்ளையின் தந்தையான 28 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

மாவனல்லை பகுதியில் இருந்து என்போல்ட் தோட்டத்திற்கு வந்திருந்த பெண்ணொருவரின் பையிலிருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளதாகச் சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, சந்தேக நபரான 24 வயதான பெண் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த பெண்ணுக்கும் முச்சக்கரவண்டி சாரதிக்கும் இடையிலிருந்த தகாத உறவு காரணமாகவே இந்த குழந்தை பிறந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த குழந்தை மாவனல்லை பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்துக் கடந்த 5 ஆம் திகதி பிறந்துள்ள நிலையில் சந்தேக நபரான பெண்ணும் அவரது சகோதரியும் இணைந்து குழந்தையைக் கழுத்து நெறித்து கொலை செய்துள்ளனர்.

இதனையடுத்து, இந்த பெண்ணும் முச்சக்கரவண்டி சாரதியும் இணைந்து குழந்தையின் சடலத்தை அக்கரபத்தனை பகுதியில் புதைப்பதற்குத் திட்டமிட்டுள்ள நிலையில் சடலத்தை அடக்கம் செய்வதற்கு முன்னர் முச்சக்கரவண்டி சாரதியின் தாய் அதனைக் கண்டுபிடித்து அக்கம்பக்கத்தினருக்குத் தகவல் வழங்கியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட பெண் பொலிஸ் பாதுகாப்புடன் நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வரும் நிலையில் இப்பெண்ணையும், முச்சக்கரவண்டி சாரதியையும் இன்று (12) இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அத்துடன், குறித்த பெண்ணின் சகோதரியையும் கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருவதாக அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

Share.
Leave A Reply

Exit mobile version