இலங்கையில் திறந்தவெளிப் பூங்கா ஒன்றில், உள்நாட்டில் மட்டுமே காணப்படும் 92 வகையான பட்டாம்பூச்சிகள் உட்பட நூற்றுக்கணக்கான பூச்சியினங்களைக் கடத்த முயன்றதாக, இத்தாலியை சேர்ந்த தந்தை-மகனுக்கு இலங்கை ரூபாய் மதிப்பில் 60 மில்லியன் ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ஒரு கோடியே 67 லட்சம்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பூச்சிகளுடன் கூடிய ஜாடிகளை அவர்கள் வைத்திருந்ததைக் கண்டறிந்ததையடுத்து, லூயிஜி ஃபராரி (68), அவருடைய மகன் மட்டியா ஆகிய இருவரையும் கடந்த மே மாதம் 8ஆம் தேதி யாலா தேசிய பூங்காவின் பாதுகாவலர்கள் கைது செய்தனர்.

அவர்கள் இருவரும் பூச்சிகளைக் கவர்வதற்கான பொருட்களைப் பயன்படுத்தி அவற்றைப் பிடித்ததாகவும், மெழுகு பூசப்பட்ட பாக்கெட்டுகளை பயன்படுத்தி பூச்சிகளைப் பதப்படுத்த முயன்றதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சட்ட விரோதமாக பூச்சிகளைப் பிடித்து, கடத்த முயன்றதாக, செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருவர் மீதான குற்றமும் நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து, நாட்டிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு காட்டுயிர் தொடர்பான குற்றங்களில் மிகப்பெரும் அபராதம் இருவருக்கும் விதிக்கப்பட்டது.

எப்படி சிக்கினார்கள்?

பூங்காவின் பாதுகாவலர்களுள் ஒருவரான கே சுஜீவா நிஷாந்தா பிபிசி சிங்களா சேவையிடம் கூறுகையில், அன்றைய தினம் பூங்கா சாலையில் “சந்தேகத்திற்கிடமான கார்” ஒன்று நிறுத்தப்பட்டுள்ளதாக பூங்கா ஜீப் ஓட்டுநர் ஒருவர் பாதுகாவலர்களிடம் தெரிவித்ததாகக் கூறினார். அந்த காரில் இருந்த இருவரும் பூச்சிகளைப் பிடிக்கும் வலைகளுடன் வனத்திற்குள் நுழைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

அந்த கார் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்த பாதுகாவலர்கள், காரின் பின்பக்கத்தில் பூச்சிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான ஜாடிகளை கண்டுபிடித்தனர்.

“நாங்கள் அதைக் கண்டறிந்தபோது அனைத்து பூச்சிகளும் இறந்திருந்தன. அந்த பாட்டில்களில் அவர்கள் ரசாயனத்தை செலுத்தியுள்ளனர். அதில், முந்நூறுக்கும் மேற்பட்ட பூச்சியினங்கள் இருந்தன,” என நிஷாந்தா தெரிவித்தார்.

இருவர் மீதும் 810 குற்றச்சாட்டுகள் ஆரம்பத்தில் பதியப்பட்டன. ஆனால், பின்னர் 304 குற்றச்சாட்டுகளாகக் குறைக்கப்பட்டன. இந்த அபராதத் தொகையை செப்டம்பர் 24க்குள் செலுத்தாவிட்டால் இருவரும் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும்.

‘சிறந்த முன்னுதாரணம்’

அந்த நேரத்தில் இருவரும் இலங்கையில் விடுமுறையைக் கழிக்கச் சென்றதாகவும், இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அவர்கள் இலங்கையில் பிடிக்கப்பட்டுள்ளதாகவும் இத்தாலி நாட்டு செய்திகள் கூறுகின்றன.

இலங்கையின் தென்-கிழக்கு பகுதியில் அமைந்துள்ள யாலா தேசிய பூங்கா, அந்நாட்டின் பிரபலமான காட்டுயிர் பூங்காவாக உள்ளது. இங்கு அதிகளவிலான சிறுத்தைகள், யானைகள், காட்டெருமைகள் மற்றும் பிற விலங்குகளும் உள்ளன.

யாலா தேசிய பூங்கா இலங்கையின் பிரபலமான காட்டுயிர் பூங்காவாக உள்ளது

எலும்பியல் நிபுணரான லூயிஜி ஃபராரி கால் மற்றும் கணுக்கால் காயங்களுக்கு சிகிச்சையளிப்பதில் நிபுணத்துவம் பெற்றவர் என்றும் அவருடைய நண்பர்களால் பூச்சியின ஆர்வலர் என்றும் அழைக்கப்படுவதாகத் தகவல்கள் கூறுகின்றன.

இத்தாலியின் வடக்குப் பகுதியில் உள்ள மோடெனா நகரத்தில் உள்ள பூச்சியியல் சங்கத்திலும் அவர் உறுப்பினராக உள்ளார்.

இத்தாலியில் உள்ள அவருடைய நண்பர்கள் மற்றும் சகாக்கள், அபராதத் தொகையைக் குறைக்குமாறு கோரியுள்ளனர். அவர் பிடித்த பட்டாம்பூச்சிகளுக்கு எந்தவித வணிக மதிப்பும் இல்லை என இத்தாலிய தினசரி செய்தித்தாளான கோரியெர் டெல்லா சேரா ( daily Corriere della Sera) கூறுவதாகச் சிலர் தெரிவிக்கின்றனர்.

சுற்றுச்சூழல் சட்டத்தில் நிபுணரான டாக்டர் ஜெகத் குணவர்த்தனா பிபிசி சிங்கள சேவையிடம் கூறுகையில், இந்த அபராதத் தொகை, குற்றவாளிகளுக்கு எச்சரிக்கையாகவும் சிறந்த முன்னுதாரணமாகவும் இருக்கும் எனத் தெரிவித்தார்.

Share.
Leave A Reply

Exit mobile version