ரஷ்ய எல்லையோரம் உள்ள குர்ஸ்க் பிராந்தியத்தில் ஊடுருவி சற்றொப்ப ஆயிரம் சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பை உக்ரைன் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து ஒரு மாதம் கடந்துவிட்டது.

ரஷ்யா எதிர்பார்த்திராத இந்த ஊடுருவல் ஆரம்பத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும் உக்ரேன் படைகளின் முன்னேற்றத்தைத் தடுத்துள்ள ரஷ்யா , உக்ரேன் படைகள் வசம் இருந்த ஒருசில இடங்களை மீளக் கைப்பற்றி உள்ளதாகத் தெரிகிறது.

இப்பிராந்தியத்தில் இன்னமும் சண்டைகள் நடைபெற்று வருகின்றன. இந்தச் சண்டைகளில் இதுவரை பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட உக்ரேன் படையினர் கொல்லப்பட்டு உள்ளதாகவும் நூற்றுக்கணக்கான கனரக ஆயுதங்கள் அழிக்கப்பட்டு விட்டதாகவும் ரஷ்யா கூறி வருகின்றது.

பிரதான ஆயுதப் படையினர் மாத்திரமன்றி, தற்காலிகமாகத் திரட்டப்பட்ட தொண்டர் படையினரும் இந்தப் படை நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

உலக வல்லரசுகளுள் ஒன்றான ரஷ்யா , அதிலும் உலகில் அதிக எண்ணிக்கையிலான அணுவாயுதங்களைத் தன்வசம் வைத்திருக்கும் ரஷ்யா இரண்டாம் உலகப் போரின் பின்னான காலப்பகுதியில் சுண்டைக்காய் நாடு எனத் தான் நினைத்திருந்த உக்ரேன் நாட்டின் வசம் தனது சொந்தப் பிரதேசத்தைப் பறிகொடுத்து இருப்பது உண்மையிலேயே வெட்கக்கேடு.

அதிலும் உக்ரேன் போரில் தனது கையே ஓங்கியிருப்பதாக ரஷ்யா தொடர்ச்சியாகக் காண்பித்துவந்த நிலையிலேயே இந்த ஊடுருவல் நிகழ்ந்திருக்கின்றது.

உக்ரேனை விடவும் பல மடங்கு அதிகமான படைக் கட்டுமானத்தைக் கொண்டுள்ள ரஷ்யாவால் ஒரு மாதம் கடந்தும் தான் இழந்த நிலத்தை மீட்க முடியவில்லையா? அல்லது மீட்க விரும்பவில்லையா என்ற கேள்வி எழுகின்றது.

உக்ரேன் போருக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பது தொடர்பான செய்திகள் வெளியாகிவரும் நிலையிலேயே உக்ரேனின் ஊடுருவல் நிகழ்ந்திருக்கின்றது.

எதிர்காலத்தில் நடைபெறப் போகும் பேச்சுக்களில் பேரம்பேசலுக்கு ரஷ்ய நிலப்பரப்பைக் கட்டுப்பாட்டில் வைத்திருத்தல் உதவக்கூடுமென உக்ரேன் ஆதரவாளர்கள் கூறிவருகின்றனர்.

உக்ரேன்; ஜனாதிபதி விளாடிமிர் ஸெலன்ஸ்கியைப் பொறுத்தவரைரஷ்யாவின் தாக்குதலில் இருந்து தனது நாட்டைக் காத்துக் கொள்வதற்காக ஒரு இடையீட்டுப் பிராந்தியத்தைத் தக்க வைப்பதே தனது நோக்கம் என்கிறார்.

உக்ரேன் போர் ஆரம்பமான நாள் முதலாக, உக்ரேனுக்கு ஆதரவாக நேட்டோ தலைமையிலான மேற்குலகம் தீவிரமாகக் களமிறங்கிய நாள் முதலாக சிவப்பு எல்லைக் கோட்டை மீறுதல் தொடர்பாக ரஷ்யா பேசி வருகின்றது.

ஒரு எல்லை வரையுமே தன்னால் பொறுமை காக்க முடியும், எல்லை மீறினால் விளைவுகள் பாரதூரமாக அமையுமென ரஷ்யா சார்பில் பல தடவைகள் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுவிட்டன.

அணுவாயுத வல்லரசான ரஷ்யா , ஒரு கட்டத்தில் தன்னிடம் உள்ள அணுவாயுதங்களை உக்ரேன் போரில் பயன்படுத்திவிடுமோ என்ற அச்சம் உலகம் முழுவதுக்கும் உள்ளதை மறைத்துவிடுவதற்கில்லை.

தனது நட்பு நாடும், உக்ரேன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் நாடுமான பெலாரஸ_க்கு தனது அணுவாயுதங்கள் சிலவற்றை ரஷ்யா நகர்த்தி உள்ளதையும் உலகம் அறியும்.

வெளியுலகைப் பொறுத்தவரை ரஷ்யாவின் சிவப்பு எல்லைக் கோட்டை உக்ரேன் பல தடவைகளில் மீறிவிட்டது என்பதே உண்மை.

ரஷ்யாவினுள் பல தடவைகளில் ட்ரோன் தாக்குதல்கள் நடைபெற்றுவிட்டன. கடலில் இருந்த எரிவாயுக் குழாய் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டுவிட்டது. ரஷ்யாவில் இடம்பெற்ற பல குண்டுத் தாக்குதல்களில் ஊடகவியலாளர்கள் உட்படப் பலர் கொல்லப்பட்டுவிட்டனர்.

கிரிமியாப் பாலம் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுவிட்டது. ஆபிரிக்காவிலும், சிரியாவிலும் ரஷ்யப் படைகளுக்கும், ரஷ்ய படைத்துறை ஆலோசகர்களுக்கும் எதிராகப் போரிடும் தீவிரவாதிகளுடன் தொடர்பை ஏற்படுத்தியுள்ள உக்ரேன் அவர்களுக்கு படைத்துறை உதவிகளை வழங்குவதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.

மேலே குறிப்பிடப்பட்ட நடவடிக்கைகள் எதுவுமே ரஷ்யாவின் சிவப்பு எல்லைக் கோட்டைத் தாண்டிய செயல்கள் இல்லையா? அப்படியாயின் ரஷ்யா கூறிவரும் சிவப்பு எல்லைக் கோட்டைத் தாண்டும் செயல்தான் எது?

ரஷ்யா திரும்பத் திரும்பக் கூறிவரும் சிவப்பு எல்லைக் கோடு என்று எதுவுமே இல்லையா? அல்லது சிவப்பு எல்லைக் கோடு தாண்டப்பட்டாலும் பதிலடி தரும் நிலையில் ரஷ்யா இல்லையா? வைகைப் புயல் வடிவேல் பாணியில் சொல்வதானால் ”பில்டிங் ஸ்ட்ராங்கு, பேஸ்மன்ட் வீக்கு|” என்பதுதானா ரஷ்யாவின் நிலைமை?

உக்ரேன்; போரைப் பொறுத்தவரை நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் மிகவும் முக்கியமானது எனக் கருதப்படுகின்றது.

இந்தத் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெற்றிபெறும் பட்சத்தில் உக்ரேனுக்கான படைத்துறை உதவிகளை நிறுத்துவதன் மூலம் போரை முடிவுக்குகு; கொண்டுவர அவர் முயல்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆரம்பம் முதலே ட்ரம்ப் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகக் கருத்துக் கணிப்புகள் வெளியாகிவரும் நிலையில் அந்த வெற்றியை எதிர்பார்த்து ரஷ்யா காத்திருக்கிறதா என்ற கேள்வி எழுகின்றது.

ஆரம்பத்தில் ட்ரம்புக்கும் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் இடையேதான் போட்டி என்றிருந்த நிலைமைமாறி தற்போது ட்ரம்புக்கும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ_க்கும் இடையிலான போட்டி என்ற நிலை உருவாகிய பின்னர் கமலா ஹாரிஸ_க்கு சம அளவிலான வெற்றி வாய்ப்பு உள்ளதாக கணிப்புகள் வெளியாகத் தொடங்கியிருக்கின்றன.

உக்ரேனுக்கு வரையறையற்ற பொருளாதார மற்றும் படைத்துறை உதவிகளை குடியரசுக் கட்சி நிர்வாகம் தொடர்ந்து வழங்கிவரும் நிலையில் கமலா ஹாரிஸின் வெற்றி உக்ரேனுக்கு மிகுந்த உற்சாகத்தை வழங்கும் என்பது தெளிவு.

இத்தகைய ஒரு நிலை உருவானால் மாத்திரமே ரஷ்யா தன்னிடம் உள்ள முழுப் பலத்தையும் பாவித்து உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவர முயற்சி செய்யுமா?

உலகின் பொருளாதாரத்திலும் அரசியலிலும் மிகப் பாரிய தாக்கத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்திய உக்ரைன் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

வெற்றி தோல்விகளுக்கு அப்பால் பேச்சுவார்த்தை மூலமே போர்கள் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்பதுவும் யதார்த்தமானது.

உக்ரேன் போர் மூன்றாவது ஆண்டை நெருங்கிக் கொண்டிருக்கும் தறுவாயில் இரண்டு தரப்பிலும் பெறுமதியான பல மனித உயிர்கள் இழக்கப்பட்டுவிட்டன.

போர் தொடரும் பட்சத்தில் இன்னும் பல ஆயிரக் கணக்கான இறப்புகள் நிகழும் என்பதுவும் நிச்சயமானது.

இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா செய்ததைப் போன்று அணுவாயுதத்தைப் பாவித்துத்தான் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யா நினைக்குமானால் அது வரலாற்றில் ஒரு கறையாகவே அமையும்.

பேச்சுவார்த்தைக்குத் தான் எப்போதும் தயார் என ரஷ்யா கூறி வருகின்றது. தற்போதைய ரஷ்ய ஜனாதிபதி புட்டினுடன் ஒருபோதும் பேசுவதில்லை என்பது உக்ரேன் ஜனாதிபதி ஸெலன்ஸ்கியின் நிலைப்பாடு. பேச்சுவார்த்தைக்குத் தயார் எனக் கூறிவரும் ரஷ்யா உண்மையில் விட்டுக்கொடுப்புக்கும் தயாராக இருக்க வேண்டும்.

உக்ரேன் போரில் ரஷ்யப் படைகளுக்கு எதிராக நேட்டோ தலைமையிலான மேற்குலகம் அணிதிரண்டு நிற்பதைப் பார்க்கும் போது அமைதி திரும்புவதற்கான வாய்ப்பு கிட்டிய எதிர்காலத்தில் இல்லை என்பதாகவே தெரிகிறது.

எந்தத் தரப்பு தோற்றாலும் வென்றாலும் பெறுமதியான மனித உயிர்களின் அழிவிலேயே அது சாத்தியம் என்பதே யதார்த்தம்.

அரசுகளைக் கடந்து, மனிதாபிமானம் மிக்க உலக சமூகம் ஒன்றிணைந்து உரக்கக் குரல் கொடுத்தால் மாத்திரமே இந்தப் போர் முடிவுக்கு வரும் வாய்ப்பு உள்ளது என்பதே உண்மை.

சுவிசிலிருந்து சண் தவராஜா-

Share.
Leave A Reply

Exit mobile version