லெபனானில் பேஜர்கள் வெடிப்பு நடந்த ஒரு நாளுக்கு பிறகு தற்போது வாக்கி டாக்கிகள் வெடித்துள்ளன.
லெபனான் முழுவதும் வாக்கி-டாக்கிகள் வெடித்ததில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர் மற்றும் குறைந்தது 300 பேர் காயமடைந்துள்ளனர் என்று நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே லெபனானில் நூற்றுக்கணக்கான பேஜர்கள் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் வெடித்ததில் 12 பேர் உயிரிழந்தனர், ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். இந்தநிலையில் பல வாக்கி டாக்கி சாதனங்கள் வெடித்துள்ளன.
தெற்கு லெபனானில் உள்ள சிடோனில் உள்ள ஒரு தொலைபேசி கடையில் இருந்து புகை வெளியேறும் புகைப்படங்கள் வந்துள்ளன.
விளம்பரம்
கடந்த ஒரு மணி நேரத்தில் லெபனானில் மீண்டும் வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியிருந்தாலும், புகைக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
மேலும் சில கைடக்க ரேடியோ சாதனங்களும் வெடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன என ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது.
நேற்று வெடித்த பேஜர்களும், இந்த ரேடியோக்களும் ஐந்து மாதங்களுக்கு முன்பு ஒரே நேரத்தில் வாங்கப்பட்டவை எனவும் தகவல்கள் கூறுகின்றன.
நவீன தகவல் தொடர்பு யுகத்திலும் பாதுகாப்பு காரணங்களுக்காக ஹெஸ்பொலா இன்னும் பேஜர்களையே பயன்படுத்துகிறது. அதனை குறிவைத்தே இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் ரகசிய தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்று தகவல்கள் கூறுகின்றன. ஹெஸ்பொலாவும் இஸ்ரேலையே கைகாட்டுகிறது. ஆனால், இஸ்ரேலோ இதுவரை எதுவும் தெரிவிக்காமல் மௌனம் காக்கிறது.
அந்த பேஜர் எங்கே தயாரானது? அதனை வெடிக்கச் செய்தது யார்?
பேஜர் சிதைவுகளில் தெரியவந்தது என்ன?
ஆனால், இரு பேஜர்களின் பாகங்களிலும் GOLD என்ற வார்த்தையை தெளிவாகப் பார்க்க முடிகிறது. மாடல் எண் ஒரு பகுதியளவு தெரிகிறது. அது AR-9 அல்லது AP-9 போல் தெரிகிறது. அந்த புகைப்படங்களை ஆய்வு செய்யும் போது, அந்த பேஜர்கள், ரக்கட் பேஜர் AR-924 என்ற மாடலைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று தெரிகிறது. அந்தமாடல் தைவானைச் சேர்ந்த கோல்ட் அப்பொலோ என்ற நிறுவனத்தின் தயாரிப்பாகும்.
இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பே காரணம் – ராய்ட்டர்ஸ்
ஹெஸ்பொலா ஆர்டர் செய்திருந்த, தைவானில் தயாராகும் 5 ஆயிரம் பேஜர்களில் சிறிய அளவிலான அதிநவீன வெடிமருந்தை பல மாதங்களுக்கு இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பு வைத்திருந்ததாக லெபனானி பாதுகாப்புத்துறை மூத்த அதிகாரியை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஹெஸ்பொலாவை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலால் லெபனானில் மருத்துவமனைகள் காயமடைந்தவளால் நிரம்பியுள்ளன. பாதிக்கப்பட்டவர்களில் சிலர் பார்வையிழந்துள்ளனர், வேறு சிலர் உறுப்புகளை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
எங்களுக்கு தொடர்பு இல்லை – தைவான் நிறுவனம்
ஆனால், லெபனானில் பேஜர்கள் வெடித்ததற்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தைவானிய எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் கோல்ட் அப்பொலோவின் நிறுவனர் சூ சிங்-குவாங் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பாவைச் சேர்ந்த BAC என்ற நிறுவனத்துடன் 3 ஆண்டுகளுக்கு முன்பு பேஜர் தயாரிப்பு தொடர்பாக ஒப்பந்தம் செய்து கொண்டதாக அவர் கூறினார்.
“எங்களது லோகோவை பயன்படுத்த மட்டுமே அங்கீகாரம் தந்துள்ளோம். மற்றபடி, அந்த பேஜரின் வடிமைப்பிலோ அல்லது தயாரிப்பிலோ எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை” என்று அவர் கூறுகிறார்.
கோல்ட் அப்பொலோ சுட்டிக்காட்டும் BAC நிறுவனம் ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரை மையமாகக் கொண்டது.
லெபனானில் நடந்தது குறித்து அதிர்ச்சி தெரிவித்த அவர், தங்கள் நிறுவனமும் அதனால் பாதிக்கப்பட்ட ஒன்றுதான் என்றார்.
தைவான் அரசு கூறுவது என்ன?
தைவானில் இருந்து லெபனானுக்கு நேரடியாக இதுபோன்று ஏற்றுமதி நடந்ததாக எந்தவொரு ஆவணமும் இல்லை என்று தைவானின் பொருளாதார அமைச்சர் கூறியுள்ளார். கோல்ட் அப்பொலோ நிறுவனம் 2022-ம் ஆண்டில் இருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் வரையிலும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுக்கு 2.6 லட்சம் பேஜர்களை ஏற்றுமதி செய்திருப்பதாக அவர் கூறினார்.
ஊடகங்களில் வெளியாகும் புகைப்படங்களை பார்க்கையில், தாங்கள் ஏற்றுமதி செய்த பேஜர்கள் அதன் பிறகு மாற்றியமைக்கப்பட்டிருக்கலாம் என்று அந்த நிறுவனம் சந்தேகிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கோல்ட் அப்பல்லோ அலுவலகத்தில் சோதனை
தைவான் தலைநகர் தைபேயில் உள்ள பிபிசி குழு, பேஜர் தாக்குதலை தொடர்ந்து செய்திகளில் இடம்பிடித்துள்ள தைவானிய நிறுவனமான கோல்ட் அப்பல்லோவின் அலுவலகங்களுக்குச் சென்றுள்ளது.
போலீஸ் அதிகாரிகள் தற்போது வரை அந்த வளாகத்திற்குள் உள்ளனர். அவர்கள் தொடர்ந்து ஊழியர்களை விசாரித்து ஆவணங்களை ஆய்வு செய்து வருகின்றனர். நிறுவன வளாகத்திற்கு வெளியே செய்தியாளர்கள் குவிந்துள்ளனர்.
இஸ்ரேலுக்கு லெபனான் எச்சரிக்கை
இந்த தாக்குதல் சம்பவங்கள் “லெபனான் இறையாண்மையின் மீது நடத்தப்பட்ட கடுமையான தாக்குதல். அனைத்து தரநிலைகளின் படியும் இது ஒரு குற்றம்” என்று பிரதமர் நஜிப் மிகாட்டி கூறினார்.
தாக்குதல்களின் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக குற்றம் சாட்டிய ஹெஸ்பொலா தனது அறிக்கையில், “பொதுமக்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த குற்றச் சம்பவத்துக்கு அந்த நாடே முழுப் பொறுப்பு” என்று கூறியது.
“இந்த துரோகச் சம்பவத்தை நிகழ்த்திய `கிரிமினல்’ எதிரி நிச்சயமாக இந்த பாவச் செயலுக்கு நியாயமான தண்டனையைப் பெறுவார். அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தண்டனை கிடைக்கும்” என்று குறிப்பிட்டுள்ளது.
ஹெஸ்பொல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா நாளை உரையாற்றுவார் என்று அந்த குழு தெரிவித்துள்ளது.