லெபனானில் ஹெஸ்பொலா அமைப்பால் பயன்படுத்தப்பட்ட பேஜர்கள் வெடித்ததில் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். செவ்வாயன்று நாடு முழுவதும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் பேஜர்கள் வெடித்து சிதறின.
இதில் 12 பேர் பலியாகினர். 2,800 பேர் காயமடைந்தனர், அவர்களில் பலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
இந்த சம்பவத்தில் ஹெஸ்பொலா இஸ்ரேலைக் குற்றம் சாட்டியுள்ளது. ஆனால், தாக்குதல் எவ்வாறு நிகழ்ந்தது என்பது பற்றி தெளிவாகத் தெரியவில்லை. இஸ்ரேலிய அதிகாரிகள் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
இந்த தாக்குதல் சம்பவம் பற்றி இதுவரை நாம் அறிந்த தகவல்கள் இதோ.
பேஜர் வெடிப்பு எப்போது, எங்கு நடந்தது?
செவ்வாய்க்கிழமை உள்ளூர் நேரப்படி சுமார் 15:45 மணியளவில் (13:45 BST) லெபனான் தலைநகர் பெய்ரூட் உட்பட நாட்டின் பல பகுதிகளில் பேஜர்கள் வெடிக்கத் தொடங்கின.
பட்டாசுகள் போன்றும் துப்பாக்கிச்சூடு போன்றும் சிறிய வெடிப்புகள் நிகழ்வதற்கு முன்னதாக, சிலரில் பாக்கெட்டுகளில் இருந்து புகை வருவதைக் கண்டதாக சாட்சிகள் தெரிவித்தனர்.
ஒரு சிசிடிவி காணொளியில் கடையின் நின்று கொண்டிருக்கும் ஒரு நபரின் பேண்ட் பாக்கெட்டில் இருந்த பேஜர் வெடித்தது.
ஆரம்பத்தில் சிறியளவில் வெடிக்கத் தொடங்கியது, பின்னர் சுமார் ஒரு மணி நேரம் இது தொடர்ந்தது என்று ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.
அதன் பின்னர் ஏராளமான மக்கள் லெபனான் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் குவிந்தனர். மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் நிரம்பி, குழப்பமான சூழல் நிலவியதாக நேரில் பார்த்த சாட்சிகள் தெரிவித்தனர்.
பேஜர்கள் வெடித்தது எப்படி?
செவ்வாய் கிழமை நடந்த தாக்குதலின் அளவை குறிப்பிட்டு ஆய்வாளர்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
பேஜர் பேட்டரிகள் அதிக வெப்பமடைவதற்கு `ஹேக்கிங்’ காரணமாக இருக்கலாம், இதனால் சாதனங்கள் வெடித்திருக்கலாம் என்று சிலர் கூறினர். இதுபோன்ற செயல் முன்னெப்போதும் நிகழாத ஒன்று.
ஆனால் பல வல்லுநர்கள் இது சாத்தியமற்றது என்கின்றனர். பேஜர் வெடித்த காட்சிகளை பார்க்கும் போது பேட்டரிகள் அதிக வெப்பமடைந்து அது நிகழ்ந்திருப்பதாக தெரியவில்லை என்று கூறினர்.
மாற்றாக, பிற ஆராய்ச்சியாளர்கள் பேஜர்கள் தயாரிப்பு அல்லது விநியோகத்தின் போது தாக்குதல் நடக்கும் வகையில் மாற்றப்பட்டிருக்கும் என்று வாதிடுகின்றனர்.
’சப்ளை செயின்’ தாக்குதல்கள் இணைய பாதுகாப்பு உலகில் வளர்ந்து வரும் பிரச்னையாக உள்ளது, சமீபத்தில் ஹேக்கர்கள் சில சாதனங்களை அவற்றின் தயாரிப்பின் போதே அணுகி அவற்றை மாற்றி அமைக்கின்றனர். இதன் மூலம் பல உயர்மட்ட சம்பவங்கள் ஏற்படுகின்றன.
ஆனால் இந்த தாக்குதல்கள் பொதுவாக மென்பொருள் சார்ந்து இருக்கும். வன்பொருள் சார்ந்த விநியோகச் சங்கிலி தாக்குதல்கள் மிகவும் அரிதானவை, ஏனெனில் சாதனத்தில் நேரடியாக மாற்றங்கள் செய்ய வேண்டி இருக்கும்.
இது விநியோகச் சங்கிலி தாக்குதலாக இருக்கும் பட்சத்தில், பேஜர்களை ரகசியமாக சேதப்படுத்தும் ஒரு பெரிய நடவடிக்கை நிகழ்ந்திருக்கும்.
ஒரு முன்னாள் பிரிட்டிஷ் ராணுவ ஆயுதங்கள் நிபுணர் (பெயர் குறிப்பிட விரும்பவில்லை) பிபிசியிடம், இந்த சாதனங்கள் ஒவ்வொன்றிலும் 10 முதல் 20 கிராம் வரை ராணுவ உயர்தர வெடிமருந்துகள் நிரப்பி வைக்கப்பட்டிருக்கலாம். போலி மின் சாதனக் கூறுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம்” என்றார்.
ஒரு எண்ணெழுத்து (alphanumeric) குறுஞ்செய்தி இதற்கு ஒரு சமிக்ஞையாக செயல்பட்டிருக்கும் என்று நிபுணர் கூறினார்.
இந்த தாக்குதலில் உயிரிழந்த இருவர் ஹெஸ்பொலா எம்.பி.க்களின் மகன்கள் என்று ஹெஸ்பொலாவுக்கு நெருக்கமான வட்டாரம் ஏஎஃப்பி (AFP) செய்தி முகமையிடம் தெரிவித்தது. ஹெஸ்பொலா உறுப்பினர் ஒருவரின் மகள் கொல்லப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களில் லெபனானுக்கான இரான் தூதர் மொஜ்தபா அமானியும் அடங்குவார். அவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டிருப்பதாக இரானிய ஊடகங்களில் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஹெஸ்பொலா தலைவர் ஹசன் நஸ்ரல்லா இந்த தாக்குதலில் காயமடையவில்லை என்று ராய்ட்டர்ஸ் முகமை, ஒரு ஆதாரத்தை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.
லெபனான் பொது சுகாதார அமைச்சர் ஃபிராஸ் அபியாட் கூறுகையில், பெரும்பாலானவர்களுக்கு கைகள் மற்றும் முகத்தில் காயங்கள் ஏற்பட்டுள்ளது என்றார்.
பிபிசியின் நியூஸ் ஹவர் நிகழ்ச்சியில் பேசிய அவர், “பெரும்பாலான காயங்கள் முகம், கண்கள் மற்றும் கைகளில் ஏற்பட்டன. சிலருக்கு விரல் அல்லது கைகள் துண்டிக்கப்பட்டன. ” என்றார்.
அவர் மேலும் கூறியதாவது: “அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் பெரும்பான்மையான மக்கள் சிவில் உடையில் உள்ளனர், எனவே அவர்கள் ஹெஸ்பொலா போன்ற ஒரு குறிப்பிட்ட அமைப்பைச் சேர்ந்தவர்களா என்பதைக் கண்டறிவது மிகவும் கடினம். அதே சமயம் படுகாயமடைந்தவர்களில் வயதானவர்கள், சிறிய குழந்தைகள் ஆகியோரும் அடக்கம்.
துரதிர்ஷ்டவசமாக குழந்தை இறந்ததையும் பார்க்க முடிந்தது. காயமடைந்தவர்களில் சிலர் சுகாதாரப் பணியாளர்களாக உள்ளனர்” என்று அமைச்சர் கூறினார்.
லெபனானுக்கு வெளியே, அண்டை நாடான சிரியாவில் இதேபோன்ற வெடிப்பு சம்பவத்தில் 14 பேர் காயமடைந்துள்ளனர் என்று பிரிட்டனை தளமாகக் கொண்ட `மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம்’ என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
யார் பொறுப்பு?
இதுவரை இந்த பேஜர் வெடிப்பு சம்பவத்துக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை. லெபனானின் பிரதமரும் ஹெஸ்பொலாவும் இஸ்ரேலைக் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவங்கள் “லெபனான் இறையாண்மையின் மீது நடத்தப்பட்ட கடுமையான தாக்குதல். அனைத்து தரநிலைகளின் படியும் இது ஒரு குற்றம்” என்று பிரதமர் நஜிப் மிகாட்டி கூறினார்.
தாக்குதல்களின் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக குற்றம் சாட்டிய ஹெஸ்பொலா தனது அறிக்கையில், “பொதுமக்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த குற்றச் சம்பவத்துக்கு அந்த நாடே முழுப் பொறுப்பு” என்று கூறியது.
“இந்த துரோகச் சம்பவத்தை நிகழ்த்திய `கிரிமினல்’ எதிரி நிச்சயமாக இந்த பாவச் செயலுக்கு நியாயமான தண்டனையைப் பெறுவார். அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தண்டனை கிடைக்கும்” என்று குறிப்பிட்டுள்ளது.
இஸ்ரேலிய அதிகாரிகள் இந்த குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து தெரிவிக்கவில்லை. ஆனால் பெரும்பாலான ஆய்வாளர்கள் தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேல் இருக்கலாம் என்பதை ஒப்புக் கொள்கிறார்கள்.
லான்காஸ்டர் பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகளின் தலைவரான பேராசிரியர் சைமன் மாபோன் பிபிசியிடம் கூறுகையில்: “இஸ்ரேல் தனது இலக்கை கண்காணிக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் ஒரு முன்னோடியாக உள்ளது.
இதனை நாங்கள் அறிவோம். ஆனால் இந்த தாக்குதலின் அளவு முன்னெப்போதும் இல்லாதது” என்று அவர் குறிப்பிட்டார்
ஹெஸ்பொலாவின் “தகவல் தொடர்பு வலையமைப்பில் இஸ்ரேல் ஆழமாக ஊடுருவியுள்ளதை இந்தத் தாக்குதல் பிரதிபலிக்கிறது” என்று பிரிட்டனை தளமாகக் கொண்ட சத்தம் ஹவுஸைச் சேர்ந்த லினா காதிப் கூறினார்.
இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பு காரணமா?
ஹெஸ்பொலா ஆர்டர் செய்திருந்த, தைவானில் தயாராகும் 5 ஆயிரம் பேஜர்களில் சிறிய அளவிலான அதிநவீன வெடிமருந்தை பல மாதங்களுக்கு இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பு வைத்திருந்ததாக லெபனானின் பாதுகாப்புத்துறை மூத்த அதிகாரியை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஹெஸ்பொலாவை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலால் லெபனானில் மருத்துவமனைகள் காயமடைந்தவர்களால் நிரம்பியுள்ளன. பாதிக்கப்பட்டவர்களில் சிலர் பார்வையிழந்துள்ளனர், வேறு சிலர் உறுப்புகளை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பேஜர்களை ஹெஸ்பொலா பயன்படுத்துவது ஏன்?
இஸ்ரேலின் கண்காணிப்பில் இருந்து தப்ப பேஜர்களை ஹெஸ்பொலா பயன்படுத்துகிறது. இதை ஒரு குறைந்த-தொழில்நுட்பம் கொண்ட தகவல் தொடர்பு வழிமுறையாக ஹெஸ்பொலா பெரிதும் நம்பியுள்ளது.
பேஜர் என்பது வயர்லெஸ் தொலைத்தொடர்பு சாதனம். இது எழுத்து அல்லது குரல் செய்திகளை காண்பிக்கும்.
நீண்டகாலம் முன்பே மொபைல் போன்கள் மிகவும் எளிதாக கண்காணிப்புக்கு இலக்காகக் கூடியவை என்று கருதப்பட்டு கைவிடப்பட்டுள்ளன.
காரணம் 1996 ஆம் ஆண்டு, ஹமாஸ் வெடிகுண்டு நிபுணரான யாஹியா அய்யாஷை இஸ்ரேல் மொபைல் போன் மூலம் படுகொலை செய்தது. அவரது செல்பேசி அவரது கையில் இருந்த போது வெடித்து சிதறியது.
ஆனால், ஒரு ஹெஸ்பொலா செயற்பாட்டாளர் ஏபி செய்தி முகமையிடம், இந்த பேஜர்கள் ஹெஸ்பொலா குழு இதற்கு முன்பு பயன்படுத்தாத புதிய பிராண்ட் என்று கூறினார்.
சிஐஏவின் முன்னாள் ஆய்வாளர் எமிலி ஹார்டிங், பாதுகாப்பு அத்துமீறல் நடந்திருப்பது ஹெஸ்பொலாவுக்கு மிகவும் சங்கடத்தை ஏற்படுத்தி இருப்பதாக கூறினார்.
“இத்தகைய சம்பவங்கள் மக்களுக்கு உடல் ரீதியாக ஆபத்தானது மட்டுமல்ல, அவர்கள் தங்கள் முழு பாதுகாப்பு அமைப்பையும் சந்தேகிக்கும் சூழலுக்கு தள்ளப்படுவர்” என்று அவர் பிபிசியிடம் கூறினார்.
“இஸ்ரேலுடனான மோதலில் இருந்து அவர்களின் கவனத்தை திசை திருப்பி, அவர்கள் ஒரு முழுமையான உள் விசாரணையைத் தொடங்குவார்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன்.” என்று அவர் தெரிவித்தார்.
ஹெஸ்பொலா-இஸ்ரேல் மோதல் அதிகரிக்குமா?
ஹெஸ்பொலா இஸ்ரேலின் எதிரியான இரானுடன் கூட்டணி வைத்துள்ளது. தெஹ்ரானின் எதிர்ப்பின் ஒரு பகுதியாக, ஹெஸ்பொலா அமைப்பும் இஸ்ரேலும் பல மாதங்களாக அவ்வப்போது சிறிய அளவிலான மோதல்களில் ஈடுபட்டு வருகின்றன.
இஸ்ரேலின் வடக்கு எல்லையில் ராக்கெட் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் வழக்கமான ஒன்றாக மாறியுள்ளன. இரு தரப்பிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.
இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை நாட்டின் வடக்கே குடியிருப்பவர்களை பாதுகாப்பாக திரும்பச் செய்தது. அப்பகுதி அதிகாரப்பூர்வ போர் இலக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து மக்கள் பாதுகாப்பாக திரும்பிய சில மணி நேரங்களுக்கு பிறகு பேஜர் வெடிப்புகள் நிகழ்ந்தன.
பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்க அதிகாரியிடம் இஸ்ரேல் “அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையானதைச் செய்யும்” என்று கூறினார்.
முன்னதாக திங்கட்கிழமை, இஸ்ரேலின் உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பு, முன்னாள் அதிகாரி ஒருவரைக் கொல்ல ஹெஸ்பொலா முயற்சி செய்ததாகவும், அதனை முறியடித்ததாகவும் கூறியது.
செவ்வாய் நடந்த பேஜர் வெடிப்புகளுக்கு பதிலடி கொடுக்கப் போவதாக ஹெஸ்பொலா ஏற்கனவே அச்சுறுத்தி வருவதால், நிலைமை கட்டுப்பாட்டை மீறலாம் என்ற அச்சம் உள்ளது.
–பிபிசி செய்தி-