தேசிய மக்கள் கட்சியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதியாக தேர்தலில் வென்றுள்ளார். அவர் இந்தத் தேர்தலில் 57,40,179 வாக்குகளைப் பெற்றுள்ளார். அதன்படி, இலங்கையின் ஜனாதிபதியாக அநுர குமார பதவியேற்பார் என பிபிசி சிங்கள சேவை தெரிவிக்கிறது. இலங்கை தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக இந்தத் தேர்தலில்தான் விருப்ப வாக்குகள் எண்ணப்பட்டன.

தான் அதிபராவது குறித்து அநுர குமார தெரிவித்துள்ள செய்தியில், “நூற்றாண்டுகளாக நாம் கண்ட கனவு இறுதியில் இன்று நனவாகியுள்ளது. இந்தக் கனவு நனவாக உழைத்த பல்லாயிரக்கணக்கான மக்களின் முயற்சிகள் இன்று பலித்துள்ளது.”

“அதற்காக உங்களுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். ஏனெனில், இது என்னுடைய முயற்சி மட்டுமல்ல, நம் அனைவருடைய கூட்டுப் பணியும்கூட. இந்த வெற்றி நம் எல்லோருக்குமானது.”

“இந்த வெற்றிக்காக நாம் மட்டுமல்லாமல், பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் ரத்தம், கண்ணீர், வியர்வை மற்றும் தங்கள் உயிரையும்கூடத் தியாகம் செய்துள்ளனர். அவர்களின் இந்தத் தியாகங்கள் வீண்போகவில்லை. அவர்களின் தியாகங்கள் வரும் தலைமுறைகளுக்கு நினைவுகூரப்படும். இலங்கையின் வரலாறு மாற்றி எழுதப்பட்டுள்ளது.”

“கனவை நனவாக்க, இந்த நிலத்திற்குப் புதிய தொடக்கம் தேவை. சிங்களர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் ஒற்றுமை, புதிய யுகத்தின் தொடக்கமாக இருக்கும். இதன் அடிப்படையில்தான் மறுமலர்ச்சி தோன்றும். வாருங்கள், எல்லோரும் இதற்காகக் கைகோர்ப்போம்!” எனத் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version