மூட நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் போன்றன கீழைத்தேய நாடுகளில் வாழ்ந்து வரும் மக்களிடம் மாத்திரம் தான் உள்ளது என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும். மேலைத்தேய நாடுகளில் உள்ள மக்களும் சில விநோத பழக்க வழக்கங்களை கொண்டிருக்கின்றனர்.
13 என்ற இலக்கம், அமெரிக்காவில் அபசகுனமான இலக்கமாக பார்க்கப்படுகின்றது. அங்கு பல ஹோட்டல்களில் 13 ஆம் இலக்கத்தில் அறைகள் இல்லை.
சில வீதிகளில் உள்ள ஒழுங்கைகளுக்கும் வீடுகளுக்கும் 13 ஆம் இலக்கங்கள் இல்லை.
இவ்வாறு மர்மமான நம்பிக்கைகளும் மூட பழக்க வழக்கங்களும் உள்ள ஒரு நகர் கலிபோர்னியாவில் உள்ளது.
19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பெருமளவுக்கு தங்கம் உள்ளதாக அதிர்ஷ்டமான இடமாக கருதப்பட்ட இந்த இடம் இன்று ஒரு சபிக்கப்பட்ட நகரமாக மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி கிடக்கின்றது.
அமெரிக்கர்கள் சாபங்களை நம்புகிறார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம்.
இந்த நகரத்தின் பெயர் போடி (Bodie) என்பதாகும். இந்த நகரத்துக்கு என்ன நடந்தது? ஏன் இது சாபம் பெற்ற நகராக உள்ளது? ஒரு காலத்தில் மிகவும் அதிர்ஷ்டகரமான நகராக விளங்கிய போடி நகரத்துக்கு என்ன நடந்தது? வாருங்கள் பார்ப்போம்.
தங்க நகரம்
1876 ஆம் ஆண்டு வில்லியம் எஸ்,போடே (William S. Bodey) என்பவர் இந்த கிராமத்தை கண்டு பிடித்தார். இதன் காரணமாகவே பின்பு செல்வச் செழிப்புடன் இந்த கிராமம் நகரமாக மாறியவுடன் அவரது பெயரைத் தழுவி போடி என பெயர் சூட்டப்பட்டது.
பலரும் அங்கு படையெடுத்தனர். தங்க அகழ்வுகள் மூலம் குறித்த கிராமம் திடீரென வளர்ச்சி கண்டது. கடை வீதிகள், மதுபானசாலைகள், கேளிக்கை களியாட்ட மண்டபங்கள், பாலியல் தொழில் விடுதிகள், 24 மணியத்தியாலங்களும் செயற்படும் விருந்தகங்கள், விளையாட்டு நிகழ்வு மண்டபங்கள் என சுமார் பத்தாயிரம் மக்களைக் கொண்ட நகராக வளர்ச்சி பெற்றது.
அக்காலத்திலேயே பெரும் தனவந்தர்கள் வந்து போகும் இடமாக மாறியது போடி. கலிபோர்னியா பிரதேசத்தின் புகழ் பூத்த நகரமாக மாறியது.
ஆனால் எந்தளவுக்கு திடீர் புகழடைந்ததோ அதே போன்று அங்கு வேறு அசம்பாவிதங்களும் இடம்பெறத் தொடங்கின.
அதாவது செல்வமும் பொழுது போக்கு அம்சங்களும் எல்லை மீறி போனதால் வன்முறைகளும் குற்றச்சம்பவங்களும் அங்கு அதிகரித்தன.
கொலை ,கொள்ளை , துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் சர்வசாதாரணமாக இடம்பெறத் தொடங்கின. இதன் காரணமாக அந்த நகருக்குள் செல்வதை மக்கள் குறைத்து கொண்டனர்.
தமது உறவினர்களை இழந்தவர்கள் இந்த நகரை சபிக்கத் தொடங்கினர்.
அதாவது 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பெரும் எழுச்சியை கண்ட போடி நகரம் 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பெரும் வீழ்ச்சியை சந்தித்தது. தங்க சுரங்கங்கள் மூடப்பட்டன.
அச்சம் காரணமாக இங்கு வசித்து வந்த பெருமளவான மக்கள் வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்தனர்.
பேய் கதைகள்
1940 ஆம் ஆண்டளவில் யாருமே இல்லாத நகராகியது போடி. அங்கு தனியாக செல்வதற்கு பலரும் பயந்தனர்.
ஆனாலும் செல்வச்செழிப்புடன் இருந்த இந்த நகரத்தில் விலை மதிக்க முடியாத தங்க ஆபரணங்கள் மற்றும் பொருட்கள் இருக்கலாம் என அதை அங்கிருந்து எடுத்து வருவதற்கு சிலர் முயன்றனர்.
ஆனால் அதன் பிறகே இந்த நகரத்தைப் பற்றிய கதைகள் உலாவத் தொடங்கின.
அதாவது யாராவது ஒருவர் அங்கு சென்று ஏதாவதொரு பொருளை எடுத்து வந்து விட்டால் அப்பொருள் அவரிடம் இருக்கும் வரை அவருக்கு பிரச்சினைகள் தொடர்ந்த வண்ணமிருந்தன என்ற கதைகள் அதிகமாக அடிபட தொடங்கின.
இந்த கதைகள் ‘போடி சாபம்’ அதாவது Bodie Curse என்ற தலைப்பில் அதிகமாக அடிபட தொடங்கின.
தமது உறவினர்களின் நினைவாக அங்கு சென்ற பலர் பல பொருட்களை தமது வீட்டுக்கு எடுத்து வந்ததாகவும் அதன் பிறகு தமது வாழ்க்கையில் நம்பி முடியாத சம்பவங்கள் இடம்பெற்றதுடன் துரதிர்ஷ்டம் துரத்தியதாக சிலர் கூறிய கதைகள் இந்த போடி சாப கதைகளுக்கு வலுவூட்டின.
அங்கு சென்றவர்கள் விபரிக்கும் அமானுஷ்யமான கதைகள் , சம்பவங்களால் எவருமே போகாத வெறிச்சோடிய மர்ம நகரமாக போடி மாறி விட்டது.
வித்தியாசமான சத்தங்கள் கேட்பதாகவும் அமானுஷ்யமான உருவங்கள் நடமாடுவதாகவும், மற்றும் எதிர்பாராத சம்பவங்கள் அங்கு இடம்பெறுவதாக அங்கு சென்றவர்கள் கூறிய கதைகளால் அந்த நகரம் தொடர்பில் அச்சம் ஏற்பட்டது.
அங்கு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களாலும் வேறு வழிகளாலும் கொலை செய்யப்பட்டவர்களில் ஆவிகள் அங்கு உலாவுவதாக கதைகள் பரவின.
மேலும் அங்குள்ள தங்கத்தை அகழந்ததாலேயே இப்பிரச்சினைகள் உருவாகின என்றும் தங்கத்தை காவல் காத்து வரும் அசுத்த ஆவிகளே இவ்விடத்தை விட்டு மனிதர்கள் செல்ல காரணம் என்றும் கூறப்பட்டன.
செல்வச்செழிப்புடன் இருந்த இடமாகையால் இங்கு சென்ற திருடர்களும் ஏராளமான பொருட்களை எடுத்துக்கொண்டு திரும்பியுள்ளனர்.
ஆனால் அதன் பிறகு அவர்களுக்கு ஏற்பட்ட சம்பவங்களால் அதை பகிரங்கமாக அறிவித்து அப்பொருட்களை அங்கேயே சென்று வீசி விட்டு வந்த கதைகளும் அக்காலத்தில் பிரபலமாக இருந்தன.
செல்வத்தில் திளைத்த பலர் தாம் பாவித்த விலை உயர்ந்த வாகனங்களை அப்படியே விட்டுச்சென்றுள்ளனர்.
அவை துருப்பிடித்து மண்ணோடு மண்ணாக இன்றும் காட்சியளிக்கின்றன.
150 வருடங்களுக்கு முன்னர் உள்ள கட்டுமானங்கள் இன்னும் உறுதியாக இருக்கின்றன. கத்தோலிக்க ஆலயங்கள் ஒரு வெறுமையையும் அமானுஷ்யத்தையும் ஏற்படுத்துகின்றன.
நகரத்தின் பெரும் தொழில் அதிபராக விளங்கிய ஜேம்ஸ் கெய்ன் ஸ்டுவோர்ட் என்பவரின் குடும்பத்திலுள்ளவர்களின் ஆவிகள் அந்த நகரை ஆக்கிரமித்துள்ளதாகவும் கதைகள் உள்ளன.
அவரது பிரமாண்ட வீட்டினுள்ளே விலை உயர்ந்த பொருட்கள் அப்படியே தூசு படிந்து கிடக்கின்றன. சுற்றுலாப்பயணிகள் அவற்றைப் பார்த்து வியந்த வண்ணமும் பயந்தவண்ணமும் இரசித்து வருகின்றனர்.
இன்று வரை போடி நகரமானது அமெரிக்கர்களால் Bodie– the Ghost Town – போடி பேய்களின் நகரம் என்றே அழைக்கப்பட்டு வருகின்றது.
இந்த நவீன யுகத்திலும் அதுவும் அமெரிக்கா போன்ற முதலாம் உலக வல்லரசு நாட்டிலும் பேய்க்கதைகளுக்கும் மூட நம்பிக்கைகளுக்கும் பஞ்சமில்லை. அதற்கு இந்த போடி நகரம் நல்ல உதாரணமாக விளங்குகின்றது.
-சி.சிவகுமாரன்-