தரம் 11இல் கல்வி கற்கும் 16 வயது சிறுமியை 2 மாத கர்ப்பிணியாக்கியதாகக் கூறப்படும் அயல் வீட்டுச் சிறுவனை நேற்று வெள்ளிக்கிழமை (27) கைது செய்த சம்பவம் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தரம் 11இல் கல்வி கற்கும் 16 வயது சிறுவனே கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமியின் தாயார் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்றுள்ள நிலையில் சிறுமி தனது பாட்டியின் பராமரிப்பில் வாழ்ந்து வந்துள்ளார்.

அதேவேளை, சிறுமியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் 16 வயது சிறுவனின் தந்தை உயிரிழந்துள்ள நிலையில் அவரின் தாயாரும் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்றுள்ளார்.

இந்நிலையில், அயல் வீட்டில் வசிக்கும் சிறுவன், குறித்த சிறுமியுடன் பாடசாலையில் ஒரே வகுப்பில் கல்வி கற்று வந்துள்ள நிலையில், இருவருக்கும் இடையில் ஏற்பட்ட காதல் உறவு காரணமாக சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ள நிலையில் சிறுமியை நேற்றைய தினம் வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர், சிறுமி 2 மாத கர்ப்பிணியாக இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபரான சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

கைது செய்யப்பட்ட சிறுவனை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version