தெற்கு லெபனானில் இஸ்ரேல் தரைவழி தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இஸ்ரேல் ராணுவத்தின் (IDF- ஐடிஎப்) எக்ஸ் தளப் பக்கத்தில் இது தொடர்பாக ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், “நாங்கள் தெற்கு லெபனானில் தரைவழி ராணுவ நடவடிக்கைகளை முன்னெடுக்கப் போகிறோம்.
தெற்கு லெபனானில் ஹெஸ்பொலா பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைப்போம். இந்த இராணுவ நடவடிக்கை வரம்புக்குட்பட்டதாக இருக்கும். இந்த இலக்குகள் எல்லையோர கிராமங்களில் உள்ளன.”
“இங்கிருந்து தான், வடக்கு இஸ்ரேலின் எல்லையில் வசிக்கும் மக்களை ஹெஸ்பொலா தாக்குகிறது. இந்த ராணுவ நடவடிக்கை, கடந்த சில மாதங்களாக உருவாக்கப்பட்ட ஒரு திட்டத்தின் பகுதியாகும்.
இஸ்ரேலிய விமானப்படையுடன் இணைந்து இந்த ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.” என்று இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.
வடக்கு இஸ்ரேலின் எல்லைப் பகுதியில் ரோந்து செல்லும் ஐடிஎப் வீரர்கள்
‘வான், கடல் மற்றும் நிலம் வழியாக தாக்குதல்’
இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யெஹோவ் கேலன்ட், செப்டம்பர் 30 அன்று லெபனான் எல்லைக்கு அருகில் இஸ்ரேலிய வீரர்களை சந்தித்தார்.
அப்போது, ”இஸ்ரேலின் முழு பலத்தையும் நாங்கள் பயன்படுத்துவோம். இந்த போராட்டத்தில் நீங்களும் ஒரு அங்கம். உங்களால் எதையும் சாதிக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.” என்று கேலன்ட் கூறினார்.
“செய்ய வேண்டியவை அனைத்தும் செய்யப்படும். வான், கடல் மற்றும் நிலம் வழியாக மூலம் நமது முழு பலத்தையும் நாம் பயன்படுத்துவோம்.” என்றும் அவர் கூறினார்.
பிபிசியின் சர்வதேச விவகாரங்களுக்கான நிருபர் பால் ஆடம்ஸின் கூற்றுப்படி, ‘தங்களால் தரை வழியாக தாக்குதல் நடத்த முடியும் என்பதை ஹெஸ்பொலா உணர வேண்டும் என்று இஸ்ரேல் விரும்புகிறது. இதற்கான அறிகுறிகள் பல நாட்களாக கொடுக்கப்பட்டு வருகின்றன.”
ஹெஸ்பொலாவின் துணைத் தலைவர் ஷேக் நயீம் காசிம், “இஸ்ரேலின் தரைவழித் தாக்குதலை எதிர்கொள்ள ஹெஸ்பொலா தயாராக உள்ளது. இஸ்ரேலுக்கு எதிரான எங்கள் போராட்டத்தை தொடர்வோம்.” என்று தெரிவித்துள்ளார்.
அதேசமயம், தனது உரையின் முடிவில் காசிம் ‘பொறுமையைக் கடைபிடிப்பது’ குறித்தும் அவர் பேசினார்.
நஸ்ரல்லாவின் இடத்தை நிரப்பப் போவது யார்?
ஹசன் நஸ்ரல்லாவின் கொலைக்குப் பின்னர், ஹெஸ்பொலாவின் மூத்த தலைவரின் முதல் அறிக்கை செப்டம்பர் 30-ஆம் தேதியன்று வந்தது.
ஹசன் நஸ்ரல்லாவின் இடத்தை அடுத்து யார் நிரப்புவார்? என்பது குறித்து, விரைவில் தீர்மானிக்கப்படும் என ஹெஸ்பொலாவின் துணைத் தலைவர் ஷேக் நயீம் காசிம் தெரிவித்தார்.
“போர் நீண்ட காலத்திற்கு நீடிக்கும். நமக்கான வழிகள் திறந்துள்ளன. தரைவழி தாக்குதலுக்கு எதிராக நாங்கள் தயாராக உள்ளோம், வெற்றி நமதே. லெபனான் மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் நன்றி.” என்று காசிம் கூறினார்.
பெய்ரூட்டில் உள்ள பிபிசி பாரசீக சேவையின் மத்திய கிழக்கு நிருபர் நஃபிசா கோனாவர்ட் கூற்றுப்படி, “பெரும் பின்னடைவுகளை எதிர்கொண்டாலும், ஹெஸ்பொலா இன்னும் களத்தில் நிற்கிறது, இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வருகிறது என்ற செய்தியை அவர் உலகிற்கு சொல்ல விரும்புகிறார் என்பது தெளிவாகிறது.”
‘இந்த போரில் யார் கொல்லப்பட்டாலும், அவரின் இடம் நிரப்பப்பட்டு, இயக்கம் வலுவாக இருக்கும்’ என்பதை ஹெஸ்பொலா தனது ஆதரவாளர்களுக்கு தெரிவிக்க விரும்புகிறது.
எவ்வாறாயினும், ஹெஸ்பொலாவின் சில ஆதரவாளர்கள் மத்தியில் ஒரு ஏமாற்றம் நிலவுகிறது.
பெய்ரூட்டில் உள்ள ஒருவர் ஹசன் நஸ்ரல்லாவின் புகைப்படத்தைக் காட்டி, “இப்போது சொல்ல ஒன்றும் இல்லை. என்ன சொல்வது? எங்கள் தலைவர் போய்விட்டார். நாங்கள் அநாதைகளாகி விட்டோம்.” என்று கூறுகிறார்.
இருப்பினும், ஹசன் நஸ்ரல்லா உயிருடன் இருக்கிறார் என்று சிலர் நம்புகிறார்கள். 55 வயது பெண்ணான ஜிஹான், “இவை போர் தந்திரங்கள், ஹசன் இன்னும் உயிருடன் இருக்கிறார்.” என்று கூறுகிறார்.
காஸாவில் கான் யூனிஸ் அகதிகள் முகாமில் தண்ணீர் தேடிச் செல்லும் ஒரு பெண் குழந்தை (மே 2024)
இஸ்ரேல் ஹெஸ்பொலாவை தாக்குவது ஏன்?
கடந்தாண்டு அக்டோபர் 7-ஆம் தேதியன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் திடீரென தாக்குதல் நடத்தியது.
இதில் 1200க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதாகவும், 200க்கும் மேற்பட்டோர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டதாகவும் இஸ்ரேல் கூறுகிறது.
இதைத் தொடர்ந்து, காஸாவில் இஸ்ரேல் தாக்குதல் நடவடிக்கையை தொடங்கியது. இஸ்ரேலின் நடவடிக்கையில் இதுவரை 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொல்லப்பட்டவர்களில் ஏராளமான குழந்தைகளும் பெண்களும் அடங்குவர்.
பாலத்தீனர்களுக்கு ஆதரவாக இஸ்ரேலின் நிலைகளின் மீது ஹெஸ்பொலா தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, இஸ்ரேலுக்கும் ஹெஸ்பொலாவுக்கும் ஆங்காங்கே சண்டைகள் நடைபெற்று வந்தன.
இஸ்ரேல் படைகள் வான்வழி தாக்குதல்கள் மற்றும் பீரங்கிகள் மூலமாக லெபனானில் உள்ள ஹெஸ்பொலா நிலைகள் மீது தாக்குதல் நடத்தின.
அதேநேரத்தில், இதுவரை வடக்கு இஸ்ரேல் மற்றும் இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள கோலன் குன்றுகளை நோக்கி 8,000க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஹெஸ்பொலா ஏவியுள்ளது. பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளையும் இஸ்ரேல் படைக்கு எதிராக அந்த அமைப்பு பயன்படுத்தியுள்ளது.
லெபனான் எல்லைக்கு அருகில் இஸ்ரேல் மீது ஹெஸ்பொலா தொடர்ந்து ராக்கெட் தாக்குதல்களை நடத்தியது. இதனால் லெபனான் எல்லைக்கு அருகில் வசிக்கும் ஆயிரக்கணக்கான இஸ்ரேலிய குடிமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.
தனது குடிமக்கள் பாதுகாப்பாக வீடுகளுக்குத் திரும்புவதற்காக ஹெஸ்பொலாவை குறிவைப்பதாக இஸ்ரேல் கூறுகிறது.