உக்ரேன் – ரஷ்யா போரை முடிக்க, டிரம்பால் முன்வைக்கப்பட்ட திட்டம் நேட்டோவை விட ரஷ்யாவுக்கே சாதகமான நிலையை உருவாக்கும் என்ற கருத்து ஜனநாயக கட்சியால் தீவிரமாகப் பிரசாரப் படுத்தப்பட்டு வருகிறது.

குடியரசுக் கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் ஜேடி.வான்ஸ், ஜனாதிபதி பதவிக்கு டொனால்ட் டிரம்ப் திரும்பினால், உக்ரேன்– ரஷ்யா போரை முடிக்க முழுமையான திட்டம் இருக்கிறது என்று கோடிட்டுக் காட்டினார்.

டொனால்ட் ட்ரம்ப்புக்கு கிரெம்ளின் உதவி?

டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியாக 2016இல் வெள்ளை மாளிகையில் நுழைவதற்கு கிரெம்ளின் உதவியது என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாகவுள்ளது.

மறுதேர்தல் பிரசாரத்தின் மத்தியில், அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நெருங்கி வருவதால், விரிவான திட்டத்தை பகிரங்கமாக முன்வைக்காமல், ரஷ்யா-உக்ரேன் போருக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று டிரம்ப் பலமுறை கூறிவருகிறார்.

எதிர்வரும் மாதங்களில் கணிசமான உக்ரேன் நிதி உதவிப் பொதியை தயார் செய்வதாக அமெரிக்கா கூறுகிறது. தொடரும் இந்த மோதலில் வொஷிங்டனின் எதிர்காலப் பாத்திரத்திற்கான ட்ரம்ப் நிர்வாகத்தின் பார்வை எப்படியிருக்கும் என்பது பற்றிய சில விவரங்களை அவரது பங்காளியான ஜேடி வான்ஸ் இப்போது வழங்கியுள்ளார்.

உக்ரேனில் டிரம்ப் எங்கே நிற்கிறார்?

முன்னாள் ஜனாதிபதி, உக்ரேனைப் பற்றிய அமெரிக்கக் கொள்கையை பலமுறை விமர்சித்துள்ளார். அமெரிக்காவிற்குப் பயனளிக்காத ஒருபெரிய அளவிலான, வெளிப்படையான போருக்கு நிதியுதவி மற்றும் ஆயுத உதவியை உக்ரேனுக்கு அளித்து வருகின்றனர் என்று டிரம்ப் வாதிட்டு வருகிறார்.

டிரம்ப் 2020 தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால் போர் தொடங்கியிருக்காது என்றும், போரை 24மணி நேரத்தில் முடிவுக்கு கொண்டு வந்திருக்க முடியும் என்றும் பெருமையடித்துள்ளார்.

காரசாரமான விவாதம்

நடைபெற்ற ஜனாதிபதி விவாதத்தின் போது, நவம்பரில் தான் தேர்ந்தெடுக்கப்பட்டால், ஜனவரியில் ஜனாதிபதி ஆவதற்கு முன்பே போரை நிறுத்த செய்துவிடுவேன் என்றும் சூளுரைத்துள்ளார். உக்ரேன் போரை எவ்வாறு நிறுத்துவது என்பது குறித்து என்னிடம் மிகத் துல்லியமான திட்டமுள்ளது.

ஆனால் என்னால் அந்தத் திட்டங்களை உங்களுக்கு உடனடியாக வெளிப்படுத்தி வழங்க முடியாது. ஏனென்றால் நான் அந்தத் திட்டங்களை உங்களுக்கு வழங்கினால், என்னால் அவற்றை எதிர்காலத்தில் பயன்படுத்த முடியாது.

போரை நிறுத்தும் திட்டங்களைப் பற்றிய விவரங்களைப் பகிர்ந்து கொள்ள டிரம்ப் தயக்கம் காட்டினாலும், அவரது துணை ஜனாதிபதி போட்டியாளர் சமீபத்தில் அதனை வெளிப்படுத்தியுள்ளார்.

கிரெம்ளின் – உக்ரேன் பேச்சு

துணை ஜனாதிபதி போட்டியாளர் வான்ஸின் கூற்றுப்படி, டிரம்ப் அமைதியான தீர்வை அடையும் நோக்கில், நவம்பர் தேர்தலில் வெற்றி பெற்றால் கிரெம்ளின், உக்ரேன் மற்றும் ஐரோப்பிய பங்குதாரர்களுடன் பேச்சுவார்த்தைகளை தொடங்குவார்.

ரஷ்யாவிற்கும் உக்ரேனுக்கும் இடையே உள்ள தற்போதைய எல்லைக் கோடு பற்றியும், அது இராணுவமயமாக்கப்பட்ட மண்டலமாக மாறும் என்று கூறினார்.

ஆயினும் இராணுவமயமாக்கப்பட்ட பகுதியின் இருப்பிடம் அல்லது அளவைப் பற்றி வான்ஸ் விவாதிக்கவில்லை. ஆனால் அது ரஷ்யர்கள் மீண்டும் படையெடுக்காதபடி மிகவும் பலப்படுத்தப்படும் என்று வலியுறுத்தினார்.

அதேவேளை உக்ரேன் அதன் சுதந்திர இறையாண்மையைத் தக்க வைத்துக் கொள்ளவும், ரஷ்யா உக்ரேனிடமிருந்து நடுநிலைமைக்கான உத்தரவாதத்தைப் பெறும். அத்தோடு உக்ரேன் நேட்டோவில் சேராது, அதுதான் ஒப்பந்த முடிவின் இறுதியில் இருக்கும், என்று அவர் கூறினார்.

கிரிமியா உக்ரேனுக்கு இல்லை?

2014ஆம் ஆண்டு தாக்குதலுக்குப் பிறகு ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்ட கிரிமியாவை உக்ரேன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வொஷிங்டன் உதவினால், நிறைய ஆபத்துகளை எதிர் கொள்ள வேண்டியிருக்கும் என்று முன்னாள் அமெரிக்க கடற்படை வீரரும், துணை ஜனாதிபதி வேட்பாளர் வான்ஸ் கூறியுள்ளார்.

அத்துடன் வருங்காலத்தில் ட்ரம்ப் ஜனாதிபதியானால் விரைவாக ஒரு ஒப்பந்தத்தை எட்ட முடியும் என்று அவர் நம்புகிறார்.

ஏனெனில் ரஷ்யாவில் அவரைப் பற்றி அறிந்துள்ளார்கள். ஐரோப்பாவில் அவர்கள் அவரைப் பற்றி கவலைப்படுகிறார்கள். ஏனெனில் அவர் உண்மையில் அவர் சொல்வதை புரிந்துகொள்கிறார்கள்.

உக்ரேன் மோதலை ‘நம் காலத்தின் மனிதாபிமான பணி’ என்று பார்ப்பது தவறானது என்றும் ‘நன்மை மற்றும் தீமை’ ஆகியவற்றுக்கு இடையேயான போராக கருதுவது தவறானது என்ற வான்ஸ் கருத்தும் அமெரிக்க ஊடகங்களில் கண்டிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா உக்ரேனை ஆக்கிரமித்திருக்கக் கூடாது, ஆனால் உக்ரேனியர்களுக்கு நிறைய உள்நாட்டு ஊழல் பிரச்சனைகளும் போருக்கான அவசரமும் கூடவே என்றும் துணை ஜனாதிபதி வேட்பாளர் வான்ஸ் கூறியுள்ளார்.

உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவர மொஸ்கோ முன்வைத்த தொலைநோக்கு திட்டமும், ட்ரம்ப் – வான்ஸ் முன்வைத்த திட்ட வெளிப்புறங்கள் மிகவும் நெருக்கமாகத் தோன்றுகின்றன எனவும் நேட்டாவால் கண்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தற்போதைய ரஷ்ய ஆக்கிரமித்த எல்லைக் கோடுகளைப் பராமரிப்பதை அவர் ஆதரிக்கிறார். அதாவது உக்ரேன் அதன் ஆக்கிரமிக்கப்பட்ட சில பகுதிகளின் கட்டுப்பாட்டை விட்டுக்கொடுக்க வேண்டும்.

பொப்ரவரி 2022இல் உக்ரேன் மீதான படையெடுப்பைத் தொடங்கிய சில மாதங்களுக்குள், ரஷ்யா உக்ரேனின் பல பகுதிகளை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. இதில் லுஹான்ஸ்க், டொனெட்ஸ்க், கெர்சன் மற்றும் சபோரிஷியா பகுதிகள் முக்கியமாகும். அதன்பின்னர் பொது வாக்கெடுப்புகள் மூலம் கிரெம்ளினுக்கு விசுவாசமான அதிகாரங்களை ரஷ்யா நிறுவியது.

2014இல் இருந்து உக்ரேனின் சுமார் 20சதவீதத்தை ரஷ்யா இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. எந்தவொரு சமாதான திட்டமும் தரையில் உள்ள யதார்த்தத்தை அங்கீகரிக்க வேண்டும் என்று ரஷ்யா வலியுறுத்துகிறது.

ஆனால் உக்ரேன் எந்த ஒரு சமாதான உடன்படிக்கையானாலும் அதன் அனைத்துப் பகுதிகளின் ரஷ்யா ஆக்கிரமித்த இணைப்புகளையும் செல்லாததாக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இதில் கிரிமியாவை இணைத்ததை இரத்து செய்து கிவ்வின் கட்டுப்பாட்டிற்கு திரும்புவதும் அடங்கும்.

உக்ரேனுக்கு கூடுதலான நிதி

உக்ரேனுக்கு கூடுதலான நிதி மற்றும் ஆயுதங்களுக்காகவும், மேற்கத்திய இராணுவக் கூட்டணியில் அங்கம் வகிக்கவும் நாடுகள் கடுமையாக அமெரிக்காவை அழுத்தம் கொடுத்து வருகின்றன. உக்ரேனை நேட்டோவின் 32உறுப்பினர்களைக் கொண்ட கூட்டணியில் நுழைவதற்கான பாதை என்றும் அண்மையில் உறுதியளித்தது.

போரை உடனடியாக முடிவுக்கு கொண்டுவரும் ட்ரம்பின் கூற்றுக்கள் குறித்து அவநம்பிக்கையை கிரெம்ளின் வெளிப்படுத்தியுள்ளது. மொஸ்கோவில் அரச செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் இந்த வகையான சிந்தனை ‘கற்பனையின் எல்லைக்குள்’ வரும் என்று ட்ரம்பை விமர்சித்து கூறியுள்ளார்.

மொஸ்கோ கமலா ஹாரிஸுக்கு ஆதரவு?

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்த மாதத் தொடக்கத்திலும் கமலா ஹாரிஸ் பிரசாரத்தை தொடர்வதாக பொய்யாக பிரசாரம் செய்வதாகத் தெரியவந்தது. இதனை மொஸ்கோ அவரை ஆதரிப்பதாக என்றும் சிலர் கூறினார். ஒருவேளை கமலா தெரிவானால், அவர் ரஷ்யா மீது மேலும் தடைகளை விதிக்க மாட்டார் என்றும் புட்டின் கருதுவதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.

ஐங்கரன் விக்கினேஸ்வரா

Share.
Leave A Reply

Exit mobile version