அவை இஸ்ரேலை அடைய 12 நிமிடங்கள் எடுத்தன. மேலும் அவை மூன்று இஸ்ரேலிய விமானப்படை தளங்கள் மற்றும் மொசாட் உளவு அமைப்பின் தலைமையகம் உள்ளிட்ட இலக்குகளை வெற்றிகரமாகத் தாக்கியதாகவும் கூறியது

இரானின் புரட்சிகர காவலர் படை (ஐஆர்ஜிசி – IRGC) தளபதி மேஜர்-ஜெனரல் ஹொசைன் சலாமி, இஸ்ரேல் மீது சுமார் 200 ஏவுகணைகளை ஏவுவதற்கு முன்பாக போர் அறையில் ஒரு பெரிய பேனரின் முன் நின்றிருந்தார்.

செவ்வாய் இரவு, இரானிய ஊடகங்கள் வெளியிட்ட காணொளியில் ஹொசைன் சலாமி தொலைபேசி வாயிலாக இஸ்ரேல் மீது ஏவுகணைகளை ஏவ உத்தரவிட்டார். அவர் நின்று கொண்டிருந்த போர் அறையில் இருந்த அந்தப் பெரிய பேனரில் மூன்று நபர்களின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன.

ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே, ஜூலை மாதம் டெஹ்ரானில் கொல்லப்பட்டார். அந்தத் தாக்குதலுக்கு இரான் இஸ்ரேலை குற்றம் சாட்டியது.

கடந்த வாரம் பெய்ரூட்டில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹெஸ்பொலா தலைவர் ஹசன் நஸ்ரல்லா மற்றும் ஐஆர்ஜிசி குட்ஸ் படைத் தளபதி பிரிக்-ஜெனரல் அப்பாஸ் நில்ஃபோரௌஷன் ஆகியோரின் மரணத்திற்குப் பழிவாங்கவே இந்த மிகப் பெரிய தாக்குதலை நடத்துவதாக மேஜர்-ஜெனரல் ஹொசைன் சலாமி கூறினார்.

ஐஆர்ஜிசி-யின் கூற்றுபடி, அடுத்தடுத்து நடத்திய தாக்குதலில் ஃபட்டா ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டன.

அவை இஸ்ரேலை அடைய 12 நிமிடங்கள் எடுத்தன. மேலும் அவை மூன்று இஸ்ரேலிய விமானப்படை தளங்கள் மற்றும் மொசாட் உளவு அமைப்பின் தலைமையகம் உள்ளிட்ட இலக்குகளை வெற்றிகரமாகத் தாக்கியதாகவும் கூறியது.

இருப்பினும், பெரும்பாலான ஏவுகணைகள் “இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் கூட்டு தற்காப்பு தொழில்நுட்பத்தால் இடைமறிக்கப்பட்டது” என்று இஸ்ரேல் ராணுவம் (IDF) தெரிவித்தது.

மேலும் மத்திய மற்றும் தெற்கு இஸ்ரேலில் “சிறிய எண்ணிக்கையிலான ஏவுகணைகள் மட்டும் தாக்கியதாகவும்” அது குறிப்பிட்டது.

இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, இரான் தலைநகர் டெஹ்ரானின் பாலத்தீன சதுக்கத்தில் ஒரு பெரிய பதாகை வைக்கப்பட்டது.

அதில் இஸ்ரேலின் குறியீடான டேவிட் நட்சத்திரம் (Star of David) போன்ற வடிவிலான கட்டடங்களை நோக்கி ஏவுகணைகள் பறப்பது போன்று சித்தரிக்கப்பட்டிருந்தது. அதில், “சியோனிசத்தின் முடிவின் ஆரம்பம்” என்ற வார்த்தைகள் இடம்பெற்றிருந்தன.

பிராந்திய போருக்கு வழிவகுக்கிறதா?


படக்குறிப்பு, இரான் தலைநகர் டெஹ்ரானின் பாலத்தீன சதுக்கத்தில் ஒரு பெரிய பதாகை வைக்கப்பட்டது. அதில், “சியோனிசத்தின் முடிவின் ஆரம்பம்” என்ற வார்த்தைகள் இடம்பெற்றிருந்தன.

ஹனியேவின் படுகொலைக்குப் பிறகு இரான் நிதானமாக இருப்பதாகத் தோன்றியது. ஆனால் இவ்வாறு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது, இரானின் மிக நெருங்கிய மற்றும் நீண்டகால பிராந்திய கூட்டாளியான ஹெஸ்பொலாவுக்கு இஸ்ரேல் தொடர்ச்சியான பேரழிவு தரும் தாக்குதல்களைக் கொடுத்தபோது இரானுக்கு அவமானத்தை ஏற்படுத்தியது.

வெள்ளியன்று நஸ்ரல்லா மற்றும் நில்ஃபோரௌஷன் கொல்லப்பட்டபோது, இந்த ஆற்றாமை உச்சக்கட்டத்தை எட்டியது.

கடந்த 1980களில் ஐஆர்ஜிசி (IRGC) ஹெஸ்பொலா அமைப்பை நிறுவ உதவி செய்தது. அதன் பின்னர், ஹெஸ்பொலா லெபனானின் மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதப் படையாகவும், அரசியல் அமைப்பாகவும் மாறியதில் இரான் வழங்கிய ஆயுதங்கள், பயிற்சி மற்றும் நிதியுதவி முக்கியப் பங்காற்றியது.

ஒருபுறம் காஸாவில் ஹமாஸுக்கு எதிராகப் போரிட்டு வரும் இஸ்ரேலிய ராணுவத்தை அழிக்க, ஹெஸ்பொலா உடனான போர் உதவும் என்று சில வாரங்களுக்கு முன்புவரை இரானிய தலைவர்கள் நம்பினார்கள்.

மேலும், தங்கள் நாட்டின் அணுசக்தி மற்றும் ஏவுகணை கட்டமைப்புகள் மீதான இஸ்ரேலின் நேரடித் தாக்குதல்களுக்கு எதிராக, ஹெஸ்பொலாவும் அதன் மகத்தான ராக்கெட், ஏவுகணைக் கையிருப்பும் ஒரு சக்தி வாய்ந்த தடுப்பாகச் செயல்படும் என்று இரான் நம்பியது.

மேஜர் ஜெனரல் ஹொசைன் சலாமி (வலதுபுறத்தில் இருந்து இரண்டாவது நபர்) போர் அறையில் இருந்து இஸ்ரேல் மீது இரானின் ஏவுகணைத் தாக்குதலுக்கு உத்தரவிடும் காட்சி.

ஜூலை மாதம் தேர்ந்தெடுக்கப்பட்ட இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன், இஸ்ரேல் இரானை தூண்டி ஒரு பிராந்தியப் போரை உருவாக்க முயல்வதாகக் குற்றம் சாட்டினார்.

“நாங்கள் பாதுகாப்பு மற்றும் அமைதியை விரும்புகிறோம். ஆனால், இஸ்ரேல்தான் டெஹ்ரானில் ஹனியேவை படுகொலை செய்தது” என்று அதிபர் மசூத் பெசெஷ்கியன் புதன்கிழமை கத்தார் பயணத்தின்போது கூறியதாக இரானிய ஊடகங்கள் மேற்கோள் காட்டின.

“நாங்கள் எந்த ராணுவ நடவடிக்கை எடுக்காவிட்டால் இன்னும் ஒரு வாரத்தில் காஸாவில் அமைதி ஏற்படும் என்று ஐரோப்பியாவும் அமெரிக்காவும் கூறினர்.”

“தாங்கள் எந்த ராணுவ நடவடிக்கையையும் மேற்கொள்ளாமல் இருந்தால் இன்னும் ஒரு வாரத்தில் காஸாவில் அமைதி ஏற்படும் என்று ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் கூறின. நாங்கள் காத்திருந்தோம். ஆனால் அமைதி திரும்பவில்லை, அவர்கள் தங்கள் தாக்குதல்களையும் கொலைகளையும்தான் அதிகரித்தார்கள்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

பொறுமையிழந்த இரான்

இரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி காமனெயி

இரானில் உள்ள அதிதீவிர பழமைவாதிகள் பலர் இஸ்ரேலுக்கு எதிராக அந்நாடு நடவடிக்கை எடுக்காதது குறித்துக் கவலையடைந்தனர்.

இரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி காமனெயி மற்றும் ஐஆர்ஜிசி (IRGC) ஆகியோரால் கட்டுப்படுத்தப்படும் அரசு தொலைக்காட்சியில் பல தொகுப்பாளர்கள்,

ஹனியேவின் கொலைக்குப் பழிவாங்க வேண்டாம் என்னும் முடிவு, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை லெபனானில் உள்ள இரானின் ஆதரவு அமைப்பைத் தாக்கத் தூண்டியதாக வாதிட்டனர்.

செவ்வாய்க்கிழமை நடந்த ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு, இரானிய ஆயுதப் படைகளின் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் முகமது பக்கேரி, “பொறுமையாகவும் நிதானமாகவும் இருப்பதற்கான நேரம் முடிந்துவிட்டது” என்று கூறினார்.

“நாங்கள் இஸ்ரேலில் உள்ள ராணுவ மற்றும் உளவுத்துறை தளங்களைத்தான் குறிவைத்தோம். பொருளாதார மற்றும் தொழில்துறை இடங்களைத் தாக்குவதை வேண்டுமென்றே தவிர்த்துவிட்டோம்” என்றும் அவர் கூறினார்.

அதேவேளையில், “இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்தால், எங்கள் பதிலடி மிகவும் கடுமையாக இருக்கும்,” என்றார்.

இஸ்ரேலின் தாக்குதல்களுக்குப் பிறகு அமைதியாக இருப்பது இரானிய தலைவர்களிடையே வளர்ந்து வரும் கவலையைப் பிரதிபலிக்கிறது.

மேலும் உள்நாட்டிலும் அவர்களின் பிராந்திய கூட்டாளிகளின் பார்வையிலும் இரான் பலவீனமாக இருப்பதாக ஒரு பிம்பத்தை ஏற்படுத்தியது.

ஹெஸ்பொலா மற்றும் ஹமாஸ் அமைப்புகளை உள்ளடக்கிய “எதிர்ப்பின் அச்சு” (Axis of Resistance) குழுவின் பார்வையிலும் இரான் பாதிக்கப்படக் கூடியதாக இருக்கும் எனக் கருதப்பட்டது. எனவே இரான் இஸ்ரேல் மீது சரமாரி தாக்குதலை நடத்தியது.

நீடித்த ‘நிழல் யுத்தம்’

இஸ்ரேல் மீதான இரானின் தாக்குதலைத் தொடர்ந்து, டெஹ்ரானில் நடத்தப்பட்ட பேரணி (அக்டோபர் 1)

இரானும் இஸ்ரேலும் பல ஆண்டுகளாக ஒரு நிழல் போரை நடத்தி வருகின்றன. மேலும் “போர் இல்லையென்றால், அமைதி இல்லை” என்ற கொள்கையைக் கடைபிடிக்கின்றன. ஆனால், தற்போது அந்தச் சூழல் முடிவுக்கு வரும் எனத் தெரிகிறது.

“இரான் மிகப் பெரிய தவறிழைத்துவிட்டது, அதற்கு உரிய பதிலடி தரப்படும்” என்று நெதன்யாகு எச்சரித்துள்ள நிலையில், இஸ்ரேல் கடுமையாக பதிலடி கொடுப்பதாக உறுதியளித்துள்ளது. அமெரிக்காவின் நிலைப்பாடு மற்றும் தொனி மாறுவதற்கான அறிகுறிகளும் உள்ளன.

கடந்த ஏப்ரலில் சிரியாவில் இருந்த இரான் தூதரகம் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியதில் பல உயர் ஐஆர்ஜிசி கமாண்டர்கள் கொல்லப்பட்டனர்.

அந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக இஸ்ரேல் மீது இரான் ஏவிய 300 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளில் பெரும்பாலானவற்றை இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க பாதுகாப்புப் படைகள் வானிலேயே சுட்டு வீழ்த்தின.

அந்த நேரத்தில் அதிபர் ஜோ பைடன் நிதானமாக இருக்க வேண்டும் என இஸ்ரேலை வலியுறுத்தினார்.

இஸ்ரேல் அமெரிக்காவின் ஆலோசனைக்கு செவி சாய்த்தது. மத்திய இரானில் உள்ள இரானிய வான் பாதுகாப்பு பேட்டரியை தாக்கும் ஏவுகணையை ஏவியது.

ஆனால் தற்போது, பைடனின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் இரானிய தாக்குதலுக்கு “கடுமையான விளைவுகள்” இருக்கும் என்றும் அமெரிக்கா “இஸ்ரேலுடன் இணைந்து செயல்படும்” என்றும் எச்சரித்துள்ளார்.

இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் என்ன ஆகும்?

இஸ்ரேலிய ஊடகங்கள் புதனன்று இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி, இரான் மீதான பதிலடி தாக்குதல்களுக்கு இஸ்ரேல் தயாராகி வருவதாக செய்தி வெளியிட்டன. மேலும், நாட்டின் முக்கிய எண்ணெய்க் கிடங்குகள் உள்பட “மூலோபாய தளங்களை” அவர்கள் குறிவைப்பார்கள் என்றும் குறிப்பிட்டது.

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதாக இரான் மீண்டும் அச்சுறுத்தினால் அதன் அணுசக்தி நிலையங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படலாம் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.

மூத்த இரானிய அதிகாரிகளின் கூற்றுபடி, ஹனியே, நஸ்ரல்லா மற்றும் நில்ஃபோரௌஷன் ஆகியோரின் கொலைக்கான பதிலடி முடிவுக்கு வந்துவிட்டது, இஸ்ரேல் மேலும் தூண்டிவிடாத பட்சத்தில் இதற்கு மேல் தாக்குதல் நடத்தப்படாது.

வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, டெஹ்ரானில் உள்ள சுவிஸ் தூதரகம் மூலம் அமெரிக்காவிடம், “இதில் தலையிட வேண்டாம்” என்று எச்சரித்ததாகக் கூறினார்.

“எந்தவொரு மூன்றாவது நாடாவது, இஸ்ரேலுக்கு உதவினால், இரானுக்கு எதிராகத் தனது வான்வெளியைப் பயன்படுத்த உதவினால், அந்த நாடும் இரானின் இலக்காகக் கருதப்படும்” என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்கா ஏறத்தாழ 40,000 துருப்புகளை மத்திய கிழக்கில் நிறுத்தியுள்ளது, பலர் இராக் மற்றும் சிரியாவில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இரு நாடுகளிலும் உள்ள இந்த வீரர்களை இரான் ஆதரவு ஷியா அமைப்பினர் அச்சுறுத்தலாம்.

இரான் இப்போது இஸ்ரேல் கொடுக்கப் போகும் பதிலடிக்குத் தன்னைத்தானே தயார்படுத்திக் கொள்ள வேண்டும். அதன் `துணிவான முயற்சி’ பலனளிக்கும் என்று இரான் நம்புகிறது.

 

Share.
Leave A Reply

Exit mobile version