மதுபானங்களுக்காக இலங்கை மக்கள் ஒரு நாளைக்கு சுமார் 100 கோடி ரூபாயை செலவளிக்கின்றனர் என புகையிலை மற்றும் மதுபானங்கள் மீதான தேசிய அதிகார சபையின் (NATA) ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கடந்த 2 ஆம் திகதி சர்வதேச மது ஒழிப்பு தினம் அனுஷ்டிக்கப்பட்டதையடுத்து மேற்படி அதிகார சபை வெளியிட்டுள்ள தகவல்களின் மூலம் இந்த விபரங்கள் வெளிவந்துள்ளன.

சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு உலக சுகாதார ஸ்தாபனமானது ‘எந்த அளவிலும் மது அருந்துவது நம் ஆரோக்கியத்துக்கு பாதுகாப்பானது அல்ல ‘ என்ற விடயத்தை இவ்வருடம் வலியுறுத்தியுள்ளது. உலகில் சுமார் 200 கோடி மக்கள் மது அருந்துகின்றனர் என உலக சுகாதார ஸ்தாபனம் கூறுகின்றது. அதே போன்று மதுபான நுகர்வால் உருவாகும் சுமார் இருநூறு நோய்கள் காரணமாக உலகில் ஆண்டுதோறும் 30 இலட்சம் மரணங்கள் சம்பவிக்கின்றன என்ற தகவலையும் ஸ்தாபனம் வெளியிட்டுள்ளது.

சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்வைத்து இலங்கையின் மதுபாவனை தொடர்பில் அதிகம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

ஏனென்றால் சார்க் நாடுகளோடு ஒப்பிடுகையில் இலங்கையில் மதுநுகர்வு மிகவும் அதிகமாக உள்ளது.

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பும் அதற்கு பின்னரும் மதுபான உரிமங்கள் பற்றிய சர்ச்சைகள் அதிகரித்திருந்தன.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது ஆதரவுத்தளத்தை தக்க வைத்துக்கொள்ள, தனக்கு மிகவும் நெருக்கமான எம்.பிக்களுக்கு மதுபான உரிமங்களை விநியோகித்தமை தொடர்பில் பல தரப்பிலும் கண்டனங்கள் எழுந்திருந்தன.

அது தொடர்பான பட்டியல்களும் வெளியிடப்படும் என தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் தெரிவித்திருந்தமை முக்கிய விடயம். இலங்கை மக்களைப் பொறுத்தவரை ‘மதுபாவனையில் தங்கியிருத்தல்’ என்ற விடயம் மிகவும் பாரதூரமாக உள்ளது.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் சுமார் 37 வீத ஆண்களும் 22.4 வீத பெண்களும் மது அருந்துபவர்களாக உள்ளனர்.

புகையிலை மற்றும் மதுபானங்கள் மீதான தேசிய அதிகார சபையின் (NATA) ஆய்வுகளின் படி, இலங்கையில் பியர் பானத்துக்காக ஒரு நாளைக்கு 40 கோடி ரூபாயும் மதுபானத்துக்காக 60 கோடி ரூபாயும் செலவழிக்கப்படுகின்றன.

மதுபானம் அருந்துவதால் ஏற்படும் நோய்கள் காரணமாக இலங்கையில் 18 ஆயிரம் பேர் வருடந்தோறும் மரணத்தைத் தழுவுகின்றனர்.

மதுபானம் காரணமாக ஏற்படும் நோய்களை குணப்படுத்த சுகாதார அமைச்சானது ஆண்டு தோறும் 140 பில்லியன் ரூபாயை செலவழிக்கின்றது.

இதய நோய், புற்றுநோய், நரம்பியல் சிக்கல்கள்,சிறுநீரக கோளாறு , இரத்த அழுத்தம் உட்பட பல்வேறு நோய்களுக்கு காரணியாக மதுபானம் விளங்குகின்றது.

மட்டுமின்றி பல்வேறு குற்றச்சம்பவங்களின் பின்னணியில் மதுபானமே காரணமாக உள்ளது. மது அருந்துவதால் ஏற்படும் மனநல கோளாறுகள் காரணமாக உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன.

இலங்கையில் சராசரியாக நாளொன்றுக்கு எட்டு பேர் வீதி விபத்துகளில் உயிரிழக்கின்றனர். இவ்வாறு இடம்பெறும் வீதி விபத்துகளில் 70 வீதமானவைக்குக்காரணம் மதுபான நுகர்வாகும்.

இலங்கையில் சுமார் 5 ஆயிரம் மதுபான உரிமங்கள் பெற்ற மதுபானசாலைகள் இயங்கி வருகின்றன.

இவை விருந்தகங்களிலும், வர்த்தக வளாகங்களிலும், நகரங்களிலும், பெருந்தோட்டப்பகுதியை அண்டிய பகுதிகளிலும் காணப்படுகின்றன.

மதுபானங்களின் விலை அதிகரிப்பால் கடந்த இரண்டு வருடங்களில் அதன் பாவனைகள் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டாலும், 2023 ஆம் ஆண்டு 273 மதுபான உரிமங்களும் இவ்வாண்டு செப்டெம்பர் வரை 500 இற்கும் அதிகமான உரிமங்கள்விநியோகிக்கப்பட்டிருப்பதாக கலால் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதே வேளை நாட்டில் சுமார் இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான சட்டவிரோதமதுபானங்களை விற்பனை செய்யும் நிலையங்கள் உள்ளதாகவும் கலால் திணைக்களம் தெரிவிக்கின்றது.

இதன் காரணமாக பாடசாலை செல்லும் சிறுவர்களும் இப்போது மதுபான நுகர்வுக்கு அடிமையாகி வருவதாக கவலை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

எமது நாட்டில் மதுபான நுகர்வை கட்டுப்படுத்த சில யோசனைகளை முன்வைத்தாலும் அவற்றை எந்த அரசாங்கமும் கவனத்தில் எடுப்பதில்லை. காரணம் இதன் மூலம் அரசாங்கத்துக்கு கிடைக்கும் வருமானமாகும்.

ஆனால் மிக மோசமான சமூக மற்றும் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் இதன் விளைவுகள் குறித்து புதிய அரசாங்கமாவது அக்கறை செலுத்த வேண்டும். மேலதிகமாக மதுபான உரிமங்கள் விநியோகிக்கப்படுவது நிறுத்தப்படல் அவசியம்.

மதுபானத்தை கொள்வனவு செய்பவர்களின் வயதை 21 ஆக உயர்த்துதல், பாடசாலைகள், வழிபாட்டு தலங்களுக்கு அருகாமையில் மதுபான நிலையங்களை அமைவதை தடுத்தல், மதுபானம் அருந்தி விட்டு வாகனம் செலுத்துவோரின் வாகன அனுமதி பத்திரத்தை இரத்துச் செய்தல், அரசாங்கத்துக்கு சரியான நேரத்தில் வரி செலுத்தாத மதுபான நிலையங்களின் உரித்தை இரத்து செய்தல் போன்ற நடவடிக்கைகளை எடுக்கலாம்.

ஆனால் நாட்டிலுள்ள மக்களை மதுபானம் அருந்த வைத்து அதன் மூலம் வருமானத்தைப்பெறலாம் என்ற மனப்பான்மையில் அரசாங்கம் அதிக மதுபான உரித்துகளை விநியோகிக்க நினைத்தால் அதை விட மிக மோசமான ஒரு சிந்தனை இருக்க முடியாது.

சி.சி.என் Virakesari

Share.
Leave A Reply

Exit mobile version