தெலுங்கானா மாநிலம், மேடக் மாவட்டம், கத்ரியலை சேர்ந்தவர் பாலையா. இவருடைய மனைவி முத்தவ்வா (வயது 45). அதே பகுதியை சேர்ந்த முரளி என்பவர் அவரது தாய்க்கு முத்தவ்வா சூனியம் வைத்ததாக கருதினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த முரளி அவரது உறவினர்களான ராமசாமி, லட்சுமி, ராஜ லதா உள்ளிட்ட 7 பேருடன் முத்தவ்வா வீட்டிற்கு சென்றனர்.வீட்டில் கணவருடன் தூங்கிக் கொண்டு இருந்த முத்தவ்வாவை தரதரவென வீட்டிற்கு வெளியே இழுத்து வந்தனர்.
பின்னர் 7 பேரும் சேர்ந்து முத்தவ்வாவை சரமாரியாக தாக்கினர். வலி தாங்க முடியாமல் அலறி துடித்த முத்தவ்வா அவர்களிடம் இருந்து தப்பி ஓடினார்.இருப்பினும் விடாமல் துரத்திச் சென்ற கும்பல் அவர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தனர்.
மனைவியை காப்பாற்ற முயன்ற அவரது கணவர் பாலைய்யாவையும் தாக்கினர். இதில் அவர் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முத்தவ்வா, அவரது கணவரை மீட்டு சிகிச்சைக்காக செகந்திராபாத் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முத்தவ்வா பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள 7 பேரையும் தேடி வருகின்றனர். தெலுங்கானாவில் சூனியம் வைத்ததாக கருதி ஒரே மாதத்தில் 3 பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.