மும்பை: டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா மறைந்த நிலையில், அவரது ரூ.30 லட்சம் கோடி மதிப்புள்ள நிறுவனத்தை நிர்வகிக்கப் போவது யார் என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.

பிரபல தொழிலதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா, 86, உடல்நலக்குறைவால் கடந்த 9ம் தேதி இரவு காலமானார்.

பொதுமக்களின் அஞ்சலிக்குப் பிறகு, துப்பாக்கிக் குண்டுகள் முழங்க, அரசு மரியாதையுடன் அவரது உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது.

அவரது மறைவு ஈடுசெய்ய முடியாத ஒன்று என்று ஏராளமானோர் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

டாடா நிறுவனத்தை இந்த அபரிமிதமான வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர் ரத்தன் டாடா. திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்ந்து மறைந்த அவர், பொதுசேவைக்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். தற்போது, அவரது மறைவிற்குப் பிறகு, ரூ.30 லட்சம் கோடி மதிப்புள்ள டாடா குழுமத்தை அடுத்து நிர்வகிக்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

முதுமையின் காரணமாக 2012ம் ஆண்டு டாடா குழும தலைவர் பதவியில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகினார்.

அவருக்கு அடுத்ததாக 2017ம் ஆண்டு புதிய தலைவராக நியமிக்கப்பட்ட நடராஜன் சந்திரசேகரன் தான், தற்போது தலைவராக இருந்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு சவால்களை கடந்து டாடா குழுமத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியுள்ளார்.

இருப்பினும், ரத்தன் டாடாவின் சகோதரரான நோயல் டாடா தான், டாடா குழுமத்தின் புதிய தலைவராக தேர்வாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இவர், டாடா குழுமத்தின் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.

இது ஒருபுறம் இருந்தாலும், அடுத்த தலைமுறையினரான நோயல் டாடாவின் வாரிசுகளில் மூத்தவரான லியா டாடா 2006ம் ஆண்டு டாடா குழுமத்தின் செயல்பாடுகளில் ஈடுபடத் தொடங்கினார்.

தற்போது, இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தின் துணை தலைவராக இருந்து வருகிறார். இவரும், டாடா குழுமத்தின் தலைவர் பதவி போட்டியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

அதைத் தொடர்ந்து, நோயல் டாடாவின் மற்ற வாரிசுகளான மாயா டாடா மற்றும் நெவிலே டாடா ஆகியோரில் யாரேனும் ஒருவருக்கு தலைவர் பதவியை கொடுத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version