நகர்ப்புற பேரழிவு, மோதல்கள் மற்றும் குழப்பங்கள் ஆகியவற்றுக்காகத் தற்போது அறியப்படும் பெய்ரூட், ஒரு காலத்தில் உலகின் மிக அழகான மற்றும் செழிப்பான நகரங்களில் ஒன்றாகக் கருதப்பட்டது.

கடந்த 1955 முதல் 1975 வரையிலான காலம், பெய்ரூட்டின் பொற்காலமாகக் கருதப்பட்டது. அக்காலத்தில், பெய்ரூட் மத்திய கிழக்கின் கலாசார மற்றும் நிதி மையமாக திகழ்ந்தது. அந்த நேரத்தில் ஐன்-எல்-மார்சே (Ain el-Mreiseh) கடற்கரையில் ஆடம்பரமான ஐந்து நட்சத்திர விடுதிகள் திறக்கப்பட்டன.

அக்காலத்தில் பெய்ரூட் எப்படி இருந்தது எனத் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள சமீர் காசிர், “அருகிலுள்ள ரூ டி பினிசியில் ஒரே இரவில் புதிய இரவு விடுதிகள் திறக்கப்பட்டன, ஹாலிவுட் நட்சத்திரங்கள், உலகப் புகழ்பெற்ற சமூகவாதிகள் மற்றும் எண்ணெய்க் கிணறுகளின் உரிமையாளர்கள் அந்த இரவு விடுதிகளுக்கு வருகை தருவார்கள். அதற்கு மிக அருகிலேயே அமெரிக்க பல்கலைக்கழகம் இருந்தது. அந்தப் பல்கலைக்கழகம் பெய்ரூட் நகரத்தின் அறிவுசார் மையமாக இருந்தது.

பெய்ரூட்டின் மிகவும் பிரபலமான ஹோட்டலாக செயின்ட் ஜார்ஜஸ் ஹோட்டல் திகழ்ந்தது. இது புகழ்பெற்ற பிரெஞ்சு கட்டடக் கலைஞர் ஆகஸ்ட் பெரே என்பவரால் வடிவமைக்கப்பட்டது.

கடந்த 1934ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த ஹோட்டல், மிக விரைவிலேயே சர்வதேச அளவில் பிரபலங்கள் பலரின் விருப்பமான ஹோட்டலாக மாறியது.

பிரபல பிரெஞ்சு நடிகைகளான பிரிட்ஜெட் பார்டோட், பீட்டர் ஓ’டூல், மார்லன் பிராண்டோ, லிஸ் டெய்லர், ரிச்சர்ட் பர்டன் ஆகியோர் ஜோர்டான் மன்னர் ஹுசைன் மற்றும் ஷா ரேசா பஹ்லவி போன்ற அரச குடும்பத்தைச் சேர்ந்த பலரும் அந்த ஹோட்டலில் உலா வருவதைக் காணலாம் என்று சமீர் காசிர் தனது புத்தகத்தில் எழுதுகிறார். இதில் ஷா ரேசா பஹ்லவி தனது விடுமுறை நாட்களை மனைவி சுரையாவுடன் இங்கு கழித்தார்.

லெபனான் நாட்டின் பொருளாதார வல்லுநர் ஜார்ஜஸ் கார்ம் தனது ஃபிராக்மென்டேஷன் ஆஃப் தி மிடில் ஈஸ்ட் (Fragmentation of the Middle East) என்ற புத்தகத்தில், “இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய இரட்டை உளவாளியான (double agent) கிம் ஃபில்பி அந்த ஹோட்டலின் மதுபான விடுதியில் அமர்ந்திருப்பதைப் பலர் பார்த்தனர். பெய்ரூட்டின் உயர்குடியினர் இந்த இடத்தில் சுற்றித் திரிவதைப் பெருமையாகக் கருதினர்,” என நினைவுகூர்கிறார்.

‘அந்தக் காலத்து பெய்ரூட்டை எந்த நவீன ஐரோப்பிய நகரத்துடனும் ஒப்பிடலாம்’ என்று, ‘வோக்’ இதழ் (Vogue) கூறியது.

கலைஞர்கள், கவிஞர்கள், அறிவுஜீவிகளின் தேர்வாக இருந்த பெய்ரூட்

கடந்த 1955 முதல் 1975 வரையிலான காலம் பெய்ரூட்டின் பொற்காலமாகக் கருதப்பட்டது

பெய்ரூட்டின் ஹம்ரா தெரு, பாரிஸின் புகழ்பெற்ற சாம்ப்ஸ்-ஆலிஸீஸுடன் (Chances Alizees) ஒப்பிடப்பட்டது.

இங்கு அழகான திரையரங்குகள், துணிக்கடைகள், உணவகங்கள், கஃபேக்கள் மற்றும் ஹோட்டல்கள் வரிசையாக இருந்தன. அங்கு உலகம் முழுவதிலும் இருந்து கலைஞர்கள், கவிஞர்கள், அறிவுஜீவிகள் மற்றும் எழுத்தாளர்கள் கூடினர்.

ஹம்ரா தெருவில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகள் இருந்தன. அவற்றில் எல்டோராடோ, பிக்காடில்லி, வெர்சாய்ஸ் ஆகியவை மிகவும் பிரபலமானவை.

பெய்ரூட்டின் மையத்தில் பழைய சந்தைகளும் இருந்தன, அங்கு உள்ளூர் மக்கள் ஷாப்பிங் செய்தனர்.

முதல் உலகப் போருக்குப் பிறகு பெய்ரூட் பிரெஞ்சு ஆக்கிரமிப்பின் கீழ் இருந்ததால், அங்கு பிரெஞ்சு கலாசாரத்தின் செல்வாக்கு அதிகம் இருந்தது. பின்னர் பிரான்ஸிடம் இருந்து 1943இல் சுதந்திரம் அடைந்தது.

கடந்த 1952இல் ஸ்போர்ட்டிங் கிளப் பெய்ரூட் நகருக்கு வெளியே திறக்கப்பட்டது. அங்கு பெய்ரூட்டில் இருந்த வணிகர்கள் பலர் நீச்சலடிக்கச் செல்வார்கள், பிறகு பிற்பகல் நேரத்தில் அங்கு மதுபானங்களை அருந்துவார்கள்.

கடற்கரைக்கு அருகிலுள்ள கேசினோ டு லுபன் (Casino du Louban), உலகம் முழுவதிலும் இருந்து வரும் சூதாட்டக்காரர்களின் புகலிடமாக இருந்தது. அது மட்டுமன்றி, டியூக் எலிங்டன் போன்ற பியானோ கலைஞர்களும், ஜாக் பிரெல் போன்ற பாடகர்களும் அங்கு இசை நிகழ்ச்சிகளை நடத்தினர்.

அந்த நேரத்தில், வங்கி, வணிகம் மற்றும் சுற்றுலா மையமாக பெய்ரூட் திகழ்ந்தது. கிழக்கு மத்திய தரைக்கடல், சௌதி அரேபியா மற்றும் பிற வளைகுடா நாடுகளில் இயங்கும் நிறுவனங்கள், லெபனானின் தலைநகரான பெய்ரூட்டில் தங்கள் தலைமையகத்தை அமைத்தன. ஏனெனில் அங்கு நல்ல தகவல் தொடர்பு ஊடகங்கள், பள்ளிகள் மற்றும் பல்கலைக் கழகங்களுக்குப் பஞ்சம் இருக்கவில்லை.

படப்பிடிப்பு தளமான பெய்ரூட்

கடந்த 1948ஆம் ஆண்டில் பெய்ரூட் கடற்கரை

லெபனானின் ஒரு பக்கத்தில் பனி படர்ந்த மலைகளும் மறுபுறம் அழகிய கடற்கரைகளும் இருந்தன. உலகம் முழுவதிலும் இருந்து வரும் மக்களை வரவேற்க அங்குள்ள மக்கள் தயாராக இருந்ததாகத் தோன்றியது.

அந்தக் காலத்தில் லெபனானில் வளர்ந்த பலரும், பெய்ரூட்டில் சுற்றுலாப் பயணிகள் குவியும் கோடைக்காலத்தை இன்னும் நினைவில் வைத்திருக்கிறார்கள்.

நாடு முழுவதும் பசுமையாக இருந்ததால், மக்கள் பல இடங்களில் சுற்றுலா செல்வதைக் காண முடிந்தது.

திரைப்பட நட்சத்திரங்களும் உளவாளிகளும் உலவிய ஓர் இடமாக பெய்ரூட் 1960களில் புகழ் பெற்றதில், சினிமாவுக்கு பெரும் பங்கு உண்டு. பெய்ரூட்டின் வரி விதிமுறைகளில் இருந்த தாராளவாதம், தயாரிப்பு நிறுவனங்களை அதன் பக்கமாக அதிகம் ஈர்த்தது.

லெபனான் 1950களில் ஒரு வளமான நாடாக இருந்தது. குறிப்பாக, அது தாராளமயப் பொருளாதாரக் கொள்கையைக் கடைபிடித்தது. அதனால், சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.

பெய்ரூட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள், 1965இல் வெளியான ’24 ஹவர்ஸ் டு கில்’ (24 Hours to Kill) திரைப்படத்தில் சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டன.

இந்தப் படத்தில் மிக்கி ரூனியின் நடிப்பு அற்புதமாக இருந்தது மட்டுமின்றி, நவீன பெய்ரூட், அதன் சர்வதேச விமான நிலையம், செயின்ட் ஜார்ஜஸ் ஹோட்டல், கேசினோ டு லுபன் ஆகியவற்றின் அழகிய காட்சிகள் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களைக் கவர்ந்தன.

இதுதவிர ‘சீக்ரெட் ஏஜென்ட் 777’ (Secret Agent 777), ‘வேர் தி ஸ்பைஸ் ஆர்’ (Where the Spies Are), ‘ஏஜென்ட் 505’ (Agent 505) போன்ற பல படங்களில் பெய்ரூட் கதையின் மையமாக இருந்தது.

பெய்ரூட், இஸ்ரேல் – லெபனான்பட மூலாதாரம்

பெய்ரூட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் 1965இல் வெளியான '24 ஹவர்ஸ் டு கில்' படத்தில் சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டன.

கடந்த 1975ஆம் ஆண்டு முதல் லெபனானில் உள்நாட்டுப் போர் தொடங்கியது. அதற்குப் பிறகு, பெய்ரூட்டின் நிலைமை மாறத் தொடங்கியது.

அடுத்த 15 ஆண்டுகளில், பெய்ரூட்டில் நடந்த வன்முறையில் சுமார் 1,50,000 பேர் பலியானார்கள். சுமார் பத்து லட்சம் மக்கள் பெய்ரூட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

பெய்ரூட், ‘பசுமைக் கோடு’ (Green Line) எனும் எல்லைக் கோட்டால் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது.

கிழக்குப் பகுதியில் கிறிஸ்தவ ஆயுதக்குழுவினர் ஆதிக்கம் செலுத்தினர். மேற்குப் பகுதி பாலத்தீன மற்றும் சன்னி குழுவினரின் கோட்டையாக இருந்தது.

பெய்ரூட்டின் பொற்காலத்தின் பல அடையாளங்கள், செயின்ட் ஜார்ஜஸ் ஹோட்டல் போன்றவை உள்நாட்டுப் போரில் அழிக்கப்பட்டன. அவை சில நேரங்களில் சண்டையிடும் குழுவினரால் மாறிமாறி ஆக்கிரமிக்கப்பட்டன.

கடந்த 1978இல், சிரிய வீரர்கள் பெய்ரூட் நகருக்குள் நுழைந்தனர். தங்கள் பீரங்கிகளால் கிழக்குப் பகுதியைக் குறிவைத்து தாக்குதல் நடத்தினர். 1982 லெபனான் போரின்போது, ​​மேற்கு பெய்ரூட்டின் பெரும் பகுதி இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருந்தது.

கடந்த 1982இல் இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பிறகு, ஐரோப்பியர்கள் பலர் ‘அராம்கோ வேர்ல்ட்’ (Aramco World Magazine ) இதழில் கட்டுரைகளை வெளியிட்டனர். அதில் அவர்கள் போருக்கு முந்தைய லெபனானை விவரித்தனர்.

கடந்த 1982இல் உள்நாட்டுப் போரின்போது பெய்ரூட்டில் அமெரிக்கப் படையினரின் ஒரு பிரிவு

ஆனால் இதையெல்லாம் மீறி, கடினமான நாட்களிலும் பலர் பெய்ரூட்டில் தஞ்சம் புகுந்தனர். அவர்களில் ஒருவர் சிறந்த உருது கவிஞர் ஃபைஸ் அகமது ஃபைஸ்.

ஜெனரல் ஜியாவுல் ஹக் ஆட்சியின்போது ஃபைஸுக்கு பாகிஸ்தானில் வாழ்வது கடினமாக இருந்தது. அப்போது ​​பெய்ரூட்டில் அமைதியின்மை இருந்தபோதிலும் அவர் சில ஆண்டுகளை அங்கேயே கழித்தார். அங்கே தங்கியிருந்தபோது ‘லோட்டஸ்’ (Lotus) இதழைத் தொகுத்து வந்தார்.

கடந்த 1982இல் இஸ்ரேல் பெய்ரூட்டை தாக்கியபோது, ​​அவர் பெய்ரூட்டை விட்டு வெளியேறித் தனது நாட்டுக்குத் திரும்பினார்.

பல அழிவுகளைக் கண்ட பெய்ரூட்

கடந்த 1990இல் போர் முடிவடைந்த பின்னர், பெய்ரூட்டை மீண்டும் கட்டி எழுப்புவதற்கான முயற்சிகள் தொடங்கின. நகரத்தின் பழைய பொழிவை மீண்டும் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

அங்கு ஆசிய கிளப் கூடைப்பந்து மற்றும் ஆசிய கால்பந்து போட்டிகள் நடைபெற்றன.

இதுமட்டுமின்றி, கடந்த 25 ஆண்டுகளில் மூன்று முறை மிஸ் ஐரோப்பா போட்டியும் பெய்ரூட்டில் நடத்தப்பட்டது. ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, 2017இல், ‘எக்ஸிகியூட்டிவ்’ (Executive) பத்திரிகை லெபனான் மீண்டும் சுற்றுலாப் பயணிகளின் தேர்வாக மாறி வருவதாக எழுதியது.

கடந்த 2002ஆம் ஆண்டில் 'மிஸ் ஐரோப்பா' அழகிப்போட்டி பெய்ரூட்டில் நடத்தப்பட்டது.

அங்கு ஏற்பாடு செய்யப்பட்ட வடிவமைப்பு மற்றும் கலைக் கண்காட்சிகள் பல கலைஞர்களை ஈர்த்தன.

‘ஆர்ட்நெட் போஸ்ட்டில்’ (Artnet Post ) வெளியான ஒரு கட்டுரையில், ‘அகதிகள் பிரச்னைகள், மோசமான உள்கட்டமைப்பு மற்றும் அரசியல் ஸ்த்திரமின்மை ஆகியவற்றுடன் பெய்ரூட் போராடிக் கொண்டிருக்கலாம். ஆனால் அங்குள்ள கலைக் காட்சிகள் தனித்துவமானவை’ எனக் குறிப்பிட்டுள்ளது.

காலப்போக்கில், பெய்ரூட்டின் அழிவு ஒரு வகையில் அதன் அடையாளமாக மாறியது.

பல்லாண்டு காலமாக பெய்ரூட் நகரம் ஒரு நெருக்கடியில் இருந்து இன்னொரு நெருக்கடியை நோக்கி நகர்கிறது. பலி எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அங்கு பொருளாதாரம் முற்றிலும் சீரழிந்துவிட்டது. ஆகஸ்ட் 4, 2020 அன்று, பெய்ரூட் துறைமுகத்தில் ஒரு பெரிய வெடிகுண்டு தாக்குதல் நிகழ்ந்தது. இதில் 180 பேர் கொல்லப்பட்டனர், 6,000 பேர் காயமடைந்தனர்.

இந்த குண்டுவெடிப்பு நகரின் பெரும்பகுதியை அழித்தது, சுமார் 3 லட்சம் மக்கள் வீடற்றவர்களாக ஆக்கப்பட்டார்கள். சமீபத்தில் பெய்ரூட் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் நகரம் இன்னும் அழிவில் இருந்து விடுபடவில்லை என்பதைக் காட்டுகின்றன.

பிபிசி வெளியீடு

Share.
Leave A Reply

Exit mobile version