அமெரிக்கப் படைகளால் இயக்கப்படும் “அதிஉயர் பகுதி பாதுகாப்பு முனையம்” எனப்படும் `தாட்’ கவசத்தை, இஸ்ரேலுக்கு அனுப்புவதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் அந்நாட்டின் மீது நடத்தப்பட்ட இரானிய ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து ‘தாட்’ வான் பாதுகாப்பு கவசம் (THAAD : Terminal High-Altitude Area Defense) இஸ்ரேலின் வான் பாதுகாப்பை மேம்படுத்தும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

“இஸ்ரேலைப் பாதுகாப்பதே அதன் இலக்கு” என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குறிப்பிட்டார். அக்டோபர் 1 அன்று இஸ்ரேல் மீது ஏவப்பட்ட 180 க்கும் மேற்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகள் உட்பட இரான் மேற்கொண்ட தாக்குதலைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நடவடிக்கையின் மூலமாக அமெரிக்கா, இஸ்ரேலில் அமெரிக்கப் படைகளை தரையிறக்க உள்ளது. எனவே இந்த செயல்பாடு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
விளம்பரம்

இஸ்ரேலில் ஏற்கனவே சிறிய எண்ணிக்கையிலான அமெரிக்க படைகள் உள்ளன. ஆனால் இம்முறை சுமார் 100 துருப்புகள் நிலைநிறுத்தப்பட உள்ளன.

எனவே இது முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கை. ஏனெனில் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் விரிவடைந்து வரும் போரில் அதிகரித்து வரும் அமெரிக்க ஈடுபாட்டை இது குறிக்கிறது.

இரான் மீது இஸ்ரேல் இன்னும் அதன் தாக்குதலைத் தொடங்கவில்லை. பதிலடி மிகவும் “ஆபத்து நிறைந்ததாகவும், துல்லியமாகவும் இருக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக ஆச்சரியம் அளிப்பதாக இருக்கும்” என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் காலண்ட் கூறியுள்ளார்.

இரான் ஆதரவு பெற்ற ஹெஸ்பொலா தலைவரான ஹசன் நஸ்ரல்லாவை பெய்ரூட்டில் படுகொலை செய்ததால் தான் இஸ்ரேலை தாக்கியதாக இரான் கூறியது.


`தாட்’ கவசத்தை (THAAD) இஸ்ரேலுக்கு வழங்குவதன் பின்னணி என்ன?

படக்குறிப்பு, தாட் கவசம் ஏவுகணை தாக்குதலில் இருந்து பாதுகாப்பு அளிப்பதாக கூறப்படுகிறது (கோப்புப் படம்)

இது இஸ்ரேலிய வான் பாதுகாப்பில் இருக்கும் குறைகளை நிவர்த்தி செய்ய அமெரிக்கா முன்னெடுத்த திட்டமா அல்லது இரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவது குறித்து அமெரிக்காவில் அதிகரித்து வரும் கவலைகளை இது சுட்டிக்காட்டுகிறதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

அதிபர் பைடன் இரானின் அணுசக்தி நிலையங்கள் மற்றும் அதன் எண்ணெய், எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான எந்தவொரு தாக்குதலையும் ஏற்றுக்கொள்ள முடியாது என தீர்க்கமாக குறிப்பிட்டுள்ளார். அப்படி நடந்தால் அது ஒரு தீவிரமான மோதலைத் தூண்டும் மற்றும் உலகப் பொருளாதாரத்தை பாதிக்கும் என்று அவர் கருதுகிறார்.

அமெரிக்காவின் சமீபத்திய நடவடிக்கையின் பின்னணி எதுவாக இருந்தாலும், விரிவடைந்து வரும் மத்திய கிழக்குப் போருக்கு மத்தியில் அமெரிக்காவின் பாதுகாப்பு உதவி இஸ்ரேலுக்கு எவ்வளவு தேவை என்பதை சுட்டிக்காட்டுகிறது.

இரானின் தாக்குதல் குறைவான சேதத்தையே ஏற்படுத்தி இருப்பதாக புகைப்படங்கள் காட்டின.
தாட் கவசம் எவ்வாறு செயல்படும்?

இந்த மாத தொடக்கத்தில் இரான் பயன்படுத்திய Fattah-1 போன்ற பாலிஸ்டிக் ஏவுகணைகள் பூமியின் வளிமண்டலத்தில் ஏவப்பட்டு பின்னர் தங்கள் இலக்கை நோக்கி இறங்குகின்றன. மற்ற ஏவுகணைகள் அல்லது ட்ரோன்களுடன் ஒப்பிடுகையில் அதன் வேகம் மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவின் மிகப்பெரிய ஆயுத உற்பத்தியாளரான லாக்ஹீட் மார்ட்டின் கூற்றுப்படி, தாட் அமைப்பு பாலிஸ்டிக் ஏவுகணைகளுக்கு எதிராக மிகவும் துல்லியமாக செயல்படும். மற்றொரு அமெரிக்க ஆயுத உற்பத்தி நிறுவனமான `ரேதியோன்’ ( Raytheon) தாட் கவசத்தின் அதிநவீன ரேடாரை உருவாக்குகிறது.

இந்த கவச அமைப்பில் ஆறு டிரக் அமைப்பிலான லாஞ்சர்கள் இருக்கும். ஒவ்வொரு லாஞ்சரிலும் எட்டு இடைமறிக்கும் ஏவுகணைகள்(interceptors) உள்ளன.

மேலும் இதில் பயன்படுத்தப்படும் ஒரு பேட்டரிக்கு சுமார் $1 பில்லியன் (£766m) வரை செலவாகும். அதை இயக்குவதற்கு 100 ராணுவப் பணியாளர்கள் தேவை. தாட் அமைப்பு, குறுகிய மற்றும் நடுத்தர தொலைவு ஏவுகணைகளை இடைமறித்து தாக்கி அழிக்கும் தன்மை கொண்டது.

ரஷ்யாவின் தாக்குதலுக்கு பதிலடி தர யுக்ரேன் இந்த தாட் கவசத்தை வாங்க விரும்பியது. அதிகமாக தேவைப்படும் ஆயுதமாக இது கருதப்படுகிறது.

சவுதி அரேபியாவும் இதனை வாங்க முடிவு செய்திருக்கிறது. இஸ்ரேலை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதற்கு கைமாறாக அமெரிக்காவிடம் இருந்து இதனை அதிகமாக வாங்க சவுதி விரும்பியதாகவும் தெரிய வருகிறது.

ஆனால், ஹமாஸின் அக்டோபர் 7-ஆம் தேதி தாக்குதலுக்கு பிறகு இந்த ஒப்பந்தம் தடம் புரண்டது.

ரஷ்யாவின் தாக்குதலுக்கு பதிலடி தர யுக்ரேன் இந்த தாட் கவசத்தை வாங்க விரும்பியது

இரான் தாக்குதல் மற்றும் இஸ்ரேல் கொடுக்கப் போகும் பதிலடி

இரான் அக்டோபர் 1-ஆம் தேதியன்று இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது, இதில் மேற்குக் கரையில் உள்ள ஜெரிகோவில் ஒரு நபர் கொல்லப்பட்டார். அவர் சுட்டு வீழ்த்தப்பட்ட ஏவுகணையின் ஒரு பகுதி தாக்கி உயிரிழந்தார்.

இஸ்ரேல், ஏரோ 2 மற்றும் ஏரோ 3 எக்ஸோ உட்பட அமெரிக்காவுடன் இணைந்து உருவாக்கப்பட்ட மிகவும் சக்தி வாய்ந்த வான்வழி பாதுகாப்பு அமைப்பைக் கொண்டுள்ளது.

இந்த ஏவுகணைகள் சூப்பர்சோனிக் வேகத்தில் சீறிப் பாயும். பாலிஸ்டிக் ஏவுகணைகளை விண்வெளியில் சுட்டு வீழ்த்தும் திறன் கொண்டவை. இந்த பாதுகாப்பு அமைப்பின் இஸ்ரேலிய வடிவமைப்பாளர்கள், ஏரோ ஏவுகணைகள் இரானிய தாக்குதலுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டது என்று கூறினார்கள்.

அமெரிக்கா இஸ்ரேலின் தற்காப்பு நடவடிக்கைக்கு ஆதரவாக செயல்பட்டது. அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய மற்றும் அரபு நாடுகளின் ஆதரவுடன் இஸ்ரேல், கிழக்கு மத்தியதரைக் கடல் பகுதியில் இருந்து இடைமறிக்கும் ஏவுகணைகளை ஏவியது,

படக்குறிப்பு, எதிரி ஏவுகணைகளை இடைமறிக்கும் தாட். (சித்தரிப்புப் படம்)

அமெரிக்கா இரானிய தாக்குதலை “தோல்வியுற்றது மற்றும் பயனற்றது” என்று விவரித்தது. இரானின் தாக்குதல் குறைவான சேதத்தையே ஏற்படுத்தி இருப்பதாக புகைப்படங்கள் காட்டின.

F-35 போர் விமானங்களை வைக்கப்பட்டிருக்கும் இஸ்ரேலிய விமானப்படையின் `Nevatim’ தளத்தில் சேதம் ஏற்பட்டிருப்பதை செயற்கைக்கோள் படங்கள் காட்டின.

வாஷிங்டனை தளமாகக் கொண்ட கடற்படை பகுப்பாய்வு மையத்தை சேர்ந்த டெக்கர் ஈவெலத் கூறுகையில், புகைப்படங்கள் 32 இடங்களில் பாதிப்பு ஏற்பட்டிருந்ததை காட்டியது. F-35 போர் விமானங்கள் வைக்கப்பட்டிருக்கும் பகுதிகளுக்கு அருகில் சேதங்கள் இருந்தது. அவை தப்பித்தது அதிர்ஷ்டம் தான் ” என்றார்.

ஏவுகணைகள் மற்றும் இடைமறிக்கும் கருவிகளின் உதிரி பாகங்களால் நேரடியாக சேதம் ஏற்பட்டதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று இஸ்ரேலிய செய்தித்தாள் `Haaretz’ தெரிவித்துள்ளது.

டெல் அவிவ் உட்பட சில இடங்களில் நேரடி தாக்கங்கள் இருந்தன. ஏவப்பட்ட ஏவுகணைகளில் ஒன்று இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாட்டின் தலைமையகத்திற்கு அருகில் மக்கள் வாழும் பகுதியில் ஒன்பது மீட்டர் ஆழமான பள்ளத்தை உருவாக்கியதாக கூறப்படுகிறது.

தாட் கவசம் இஸ்ரேலுக்கு எவ்வாறு உதவும்?

அரசியல் ரீதியாக பார்த்தால், `தாட்’ கவசம் பற்றிய அறிவிப்பு, இஸ்ரேலின் பாதுகாப்பிற்காக பைடன் நிர்வாகம் அளிக்கும் “இரும்புக் கவச” ஆதரவை பிரதிபலிக்கிறது.

இஸ்ரேலின் புள்ளிவிபரங்களின்படி கடந்த ஆண்டு 50,000 டன்களுக்கும் அதிகமான ஆயுதங்களை அமெரிக்கா இஸ்ரேலுக்கு அனுப்பியுள்ளது.

அதேசமயம் அமெரிக்காவில் நிலவும் சில அரசியல் முரண்பாடுகளையும் எடுத்துக்காட்டுகிறது. முதலாவதாக, இஸ்ரேலையும் அதன் எதிர்ப்பாளர்களையும் மோதலை அதிகரிக்க வேண்டாம் என்று அழுத்தம் கொடுக்க முயற்சிக்கிறது. அதற்கு பதிலாக ராஜ்ஜிய நடவடிக்கைகளை நாடுமாறு வலியுறுத்துகிறது.

இந்த முயற்சிகள் தோல்வியடைந்த போது, வெள்ளை மாளிகை அதன் நட்பு நாடான இஸ்ரேலின் முடிவுகளை வலுவாக ஆதரித்தது. அதே நேரத்தில் அதை ராஜதந்திர ரீதியாகவும் ராணுவ ரீதியாகவும் இஸ்ரேலை பாதுகாக்க முடிவு செய்துள்ளது.

, முன்னதாக தாட் கவசம் 2019 இல் பயிற்சிக்காக தெற்கு இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டது.

ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே, ஹெஸ்பொலா தலைவர் ஹசன் நஸ்ரல்லா மற்றும் ஐஆர்ஜிசி தளபதி அப்பாஸ் நில்ஃபோரோஷன் ஆகியோரின் மரணங்கள், லெபனான் தரைப்படை ஆக்கிரமிப்பு ஆகியவற்றைத் தொடர்ந்து இரானிய ஏவுகணைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டது.

11 மாத காலமாக எல்லை தாண்டிய ராக்கெட் தாக்குதல் நடத்தியதால்தான் ஹெஸ்பொலாவின் தலைமையை தாக்கி அதன் பாரிய ஏவுகணைகளை அழித்ததாக இஸ்ரேல் கூறியது.

ராணுவ அழுத்தம் மற்றும் ஹெஸ்பொலாவின் திறன்களை அழிப்பது மட்டுமே 60,000 இஸ்ரேலியர்கள் வடக்கு இஸ்ரேலில் உள்ள அவர்களது வீடுகளுக்கு திரும்புவதை உறுதி செய்யும் என்பது இஸ்ரேலின் நிலைப்பாடு.

இஸ்ரேலை ஆதரிப்பதற்கும், இரான் மற்றும் இரானிய ஆதரவு குழுக்களின் தாக்குதல்களில் இருந்து அமெரிக்கப் பணியாளர்களைப் பாதுகாப்பதற்கும் “சமீபத்திய மாதங்களில் அமெரிக்க ராணுவம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் ஒரு பகுதியா தாட் இஸ்ரேலுக்கு வழங்கப்படுகிறது” என்று அமெரிக்கா விவரிக்கிறது.

இதற்கு முன்னதாக தாட் கவசம் 2019 இல் பயிற்சிக்காக தெற்கு இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டது.

இரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராச்சி, “அமெரிக்க ஏவுகணை அமைப்புகளை இயக்க தனது படைகளை இஸ்ரேலுக்கு அனுப்புவதன் மூலம் அவர்களை அமெரிக்கா ஆபத்தில் ஆழ்த்துகிறது” என்று எச்சரித்தார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Share.
Leave A Reply

Exit mobile version