ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான அறிக்கைகளை எதிர்வரும் ஏழு நாட்களுக்குள் அரசாங்கம் வெளியிடாவிட்டால், திங்கட்கிழமை தாம், அதனைப் பகிரங்கப்படுத்தப்போவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மம்பில தெரிவித்துள்ளார்.
உதய கம்மம்பிலவிடம் அவ்வாறான அறிக்கைகள் இருந்தால் அதனை மூன்று நாட்களுக்குள் வெளியிட வேண்டும் என, அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்திருந்தார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே நேற்றைய தினம் முன்னாள் எம்பி உதய கம்மம்பில, கொழும்பில் விசேட ஊடகவியலாளர்கள் சந்திப்பொன்றை நடத்தி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அறிக்கைகளை வெளியிடுவதாக, தாம், உறுதியளித்தாலும் அதனை ஒருபோதும் அரசாங்கத்திடம் கையளிக்கப் போவதில்லை என்றும் அதனைப் பகிரங்கமாகவே வெளியிடப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதல் தொடர்பான செனல் 4 அறிக்கை மற்றும் அத்தாக்குதல் தொடர்பாக புலனாய்வு அமைப்புகள் செயற்பட்ட விதம் தொடர்பில் ஆராய்வதற்கு, நியமிக்கப்பட்டிருந்த குழுவினால் வழங்கப்பட்ட அறிக்கைகளின் பக்கங்கள் காணாமற் போயுள்ளமை தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்படும் என அரசாங்கம் அண்மையில் தெரிவித்திருந்தது.
அந்த அறிக்கைகளின் பக்கங்கள் காணாமற் போகவில்லை என்றும் அரசாங்கத்திடம் உள்ள அந்த அறிக்கைகளை அரசாங்கம் ஏழு நாட்களுக்குள் வெளியிட வேண்டும் என்றும் தெரிவித்த கம்மகம்பில, அதனை அரசாங்கம் வெளியிடாவிட்டால் பகிரங்கப்படுத்தப் போவதாகவும் அவர் நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் இரகசிய சட்ட ஏற்பாடுகளுக்கு அமையவோ அல்லது பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழோ தம்மை கைது செய்வதற்கான விடயங்கள் தொடர்பில் நேற்று முன்தினம் அரசாங்க உயர் மட்டத்தினர் கலந்துரையாடியுள்ளதாக தெரிய வருகிறது என குறிப்பிட்ட அவர், அந்த அறிக்கை தமக்கு கடந்த பத்தாம் திகதி கிடைத்தவுடனே, அது தொடர்பில் தாம் நான்கு நாட்களுக்குள் அறிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எத்தகைய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள நேர்ந்தாலும், நாட்டு மக்களுக்கு உண்மையை அறிவிப்பதிலிருந்து ஒரு போதும் பின்வாங்கப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே கிடைத்ததென்றும் தற்போதைய அரசாங்கத்துக்கு அது மூன்று வாரங்களுக்கு முன்பே கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர், தமக்கு அது கிடைத்து மூன்று நாட்களே ஆவதாகவும் அவர் நேற்று தெரிவித்துள்ளார்.