தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரா குமார திசாநாயக்க நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு மாதம் நிறைவடையப்போகிறது.
இந்த ஒருமாத காலத்தில் அவரும் தேசிய மக்கள் சக்தியின் குறிப்பாக ஜனதா விமுக்தி பெரமுனயின் (ஜே.வி.பி. ) முக்கிய தலைவர்களும் ஆட்சி மாற்றத்துக்கு பிறகு இலங்கை அரசியல் நிலக்காட்சியில் காணப்படக்கூடியதாக இருக்கும் மாறுதல்கள் குறித்து பெருமையாக பேசுகிறார்கள்.
பல அரசியல்வாதிகள் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல் விடுவதற்கு தீர்மானித்ததை ஜே. வி.பி.யின் தலைவர்கள் பெரிய ஒரு மாறுதலாக குறிப்பிடுகிறார்கள்.
தேர்தல்களில் தோல்வியடைந்தால் அல்லது இறந்து போனால் மாத்திரமே கடந்த காலத்தில் அரசியல்வாதிகள் ஓய்வுபெற்ற வரலாற்றைக் கொண்ட இலங்கை அரசியலில் ஓய்வு என்ற சொல்லை தேசிய மக்கள் சக்தியினால் இப்போது அறிமுகப்படுத்தக்கூடியதாக இருந்திருக்கிறது என்று கூறியிருக்கும் ஜனாதிபதி திசாநாயக்க முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் தேர்தலில் இருந்து விலகியிருப்பது மக்கள் எதிர்பார்த்த மாற்றங்களில் ஒன்று என்று குறிப்பிட்டார்.
அதேவேளை, ஊழல்தனமான அரசியல்வாதிகளும் இனவாதிகளான அரசியல்வாதிகளும் தோல்வியை தவிர்ப்பதற்காக பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல் விடுவதற்கு தீர்மானித்ததாகவும் அத்தகைய அரசியல்வாதிகள் வேட்பாளராக வருவதற்கு கூட நினைத்துப் பார்க்காமல் இருப்பதை உறுதிசெய்ததன் மூலம் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாகவே தேசிய மக்கள் சக்தி மகத்தான வெற்றியைப் பெற்று விட்டது என்றும் ஜே.வி.பி.யின் முக்கிய தலைவர்களில் ஒருவரான பிமால் இரத்நாயக்க கூறினார்.
“அநுரா குமார திசாநாயக்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்ததன் மூலம் ஊழல்காரர்களினதும் இனவாதிகளினதும் அரசியலுக்கு முடிவு கட்டியதற்காக மக்களுக்கு நன்றி கூறுகிறோம்.
அந்த அரசியல்வாதிகள் தங்களுக்கு தோல்வி நிச்சயம் என்பதை அறிந்து தேர்தலில் போட்டியிட முன்வரவில்லை.
திசாநாயக்கவுக்கு வாக்களித்த மக்கள் ஊழல்தனமான அரசியல்வாதிகளை அரசியலில் இருந்து அகற்றியதன் மூலம் மகத்தான சாதனை ஒன்றைப் படைத்திருக்கிறார்கள்” என்று இரத்நாயக்க மேலும் கூறினார்.
கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தில் உறுப்பினர்களாக இருந்தவர்களில் ஐம்பதுக்கும் அதிகமானவர்கள் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை.
இலங்கை அரசியலில் முன்னென்றுமே இவ்வாறு நடந்ததில்லை. அவர்களில் முன்னாள் ஜனாதிபதிகள், அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களும் அடங்குகிறார்கள். சிலர் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்திருக்கிறார்கள்.
தங்களது தீர்மானத்துக்கு இந்த அரசியல்வாதிகள் பல்வேறு காரணங்களை கூறுகின்ற போதிலும், மக்கள் தங்களை நிச்சயம் நிராகரிப்பார்கள் என்ற பயம் காரணமாகவே அவர்கள் தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்தார்கள் என்பதில் சந்தேகமில்லை.
ஓய்வுபெறவேண்டிய வயதில் உள்ள சில அரசியல்வாதிகள் மாத்திரமல்ல, இளையவர்களும் கூட தங்களது கட்சிகளின் தேசியப்பட்டியலுக்குள் புகுந்துகொண்டார்கள்.
சில அரசியல்வாதிகள் தங்களது வாரிசுகளை தேர்தலில் போட்டியிட வைத்துவிட்டு தாங்கள் ஒதுங்கிக்கொண்டார்கள்.
குடும்ப அரசியலை ஒழிப்பது என்பது அவ்வளவு சுலபமானது அல்ல என்பதை இது வெளிக்காட்டுகிறது.
கடந்த இரு தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக இலங்கையில் குடும்ப ஆதிக்க அரசியலின் பிரத்தியேகமான அடையாளமாக விளங்கிவந்த ராஜபக்சாக்கள் சிங்கள மக்கள் தங்களைப் பற்றி உண்மையில் என்ன நினைக்கிறார்கள் என்பதை ஜனாதிபதி தேர்தல் முடிவுகளின் மூலம் தெளிவாகப் புரிந்து கொண்டிருப்பார்கள்.
அரசியலில் இருந்து தற்காலிகமாகவே விலகியிருப்பதாக கூறியிருக்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தங்களது கட்சி எளிதாக வெற்றிபெறும் என்று கூட நம்பிக்கை வெளியிட்டிருக்கும் விசித்திரத்தைக் காண்கிறோம்.
விடுதலை புலிகளை தோற்கடித்து போரை முடிவுக்கு கொண்டு வந்ததற்காக தங்களை சிங்கள மக்கள் நெடுகவும் ஆதரிப்பார்கள் என்றும் தங்களது முறைகேடுகளைப் பொருட்படுத்தமாட்டார்கள் என்றும் ராஜபக்ச்க்கள் நம்பிக்கையை வளர்த்திருந்தார்கள்.
ஆனால், அவர்களின் தவறான ஆட்சியே இறுதியில் குடும்ப அரசியல் ஆதிக்கத்துக்கு எதிராகவும் பிரதான அரசியல் கட்சிகளுக்கு எதிராகவும் இலங்கை அரசியல் வரலாற்றில் முன்னென்றும் இல்லாத வகையில் மக்கள் கிளர்ந்தெழுவதற்கும் பாரம்பரிய அரசியல் அதிகார வர்க்கத்துக்கு வெளியில் உள்ள ஒருவரை ஜனாதிபதியாக தெரிவு செய்வதற்கும் வழிவகுத்தது.
2022 மக்கள் கிளர்ச்சி உச்சக்கட்டத்தில் இருந்தபோது பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச விலகிய பிறகு பாராளுமன்றத்தில் ஒரு தடவை உரையாற்றிய அவரது மூத்த சகோதரரும் முன்னாள் சபாநாயகருமான சமால் ராஜபக்ச தனது சகோதரர் ஜனாதிபதியாக இரண்டாவது பதவிக்காலம் முடிவடைந்தபோது அரசியலில் இருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என்று கூறினார். சகோதரரின் ஆலோசனையை மகிந்த ராஜபக்ச இன்று வரை கருத்தில் எடுக்கவில்லை.
விமல் வீரவன்ச
ராஜபக்சாக்களும் விமல் வீரவன்ச போன்ற அரசியல்வாதிகளும் பாராளுமன்ற தேர்தலில் இருந்து ஒதுங்கியிருப்பதற்கு எடுத்த தீர்மானத்தையே ஜே.வி.பி.யின் தலைவர்கள் இனவாத அரசியலின் முடிவாகக் கூறுகிறார்கள் என்றே தோன்றுகிறது.
ஆனால், சிறுபான்மைச் சமூகங்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளுக்கு எதிராக இடையறாது பேசிவரும் உதய கம்மன்பில மற்றும் சரத் வீரசேகர போன்ற இனவாத அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.
இனவாத அரசியல்வாதிகள் தேர்தல்களில் போட்டியிடாமல் இருப்பதோ அல்லது அரசியலில் இருந்து ஒதுங்குவதோ இனவாத அரசியலின் முடிவாக அமைந்துவிடப் போவதில்லை.
இனவாத அரசியலின் வெளிப்பாடுகளான அவர்கள் பெரும்பான்மையின மக்கள் மத்தியில் சிறுபான்மைச் சமூகங்களின் அரசியல் அபிலாசைகளுக்கு எதிராக விதைத்த நச்சுத்தனமான சிந்தனைகள் தோற்கடிக்கப்பட வேண்டும்.
பெரும்பான்மைச் சமூகத்தின் மத்தியில் சிறுபான்மைச் சமூகங்களின் உரிமைகளுக்கும் அதிகாரப் பரவலாக்கத்துக்கும் எதிராக உணர்வுகள் ஆழமாக வேரூன்றியிருக்கின்றன.
அந்த துரதிர்ஷ்டவசமான நிலைவரத்தில் ஓரளவுக்கேனும் மாற்றம் ஏற்படாதவரையில் புதிய அரசியல் கலாசாரத்தைப் பற்றி பேசுவதில் அர்த்தமில்லை.
சிறுபான்மைச் சமூகங்களின் உரிமைகளுக்கும் அபிலாசைகளுக்கும் எதிராக நெடுகவும் நியாயமற்ற ஒரு நிலைப்பாட்டைக் கொண்டிருப்பது பொருளாதார நெருக்கடி உட்பட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் காண்பதற்கும் தடையாக இருந்துவருகிறது என்ற புரிதலை இனிமேலாவது பெரும்பான்மைச் சமூகத்தவர்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்கான அரசியல் துணிவாற்றல் தேசிய மக்கள் சக்தியின் தலைவர்களுக்கு வரவேண்டும்.
தேசிய இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கு இதுகாலவரையில் முன்னெடுக்கப்பட்ட சகல முயற்சிகளையும் கடுமையாக எதிர்த்த ஒரு கசப்பான வரலாற்றை ஜே.வி.பி. கொண்டிருக்கிறது.
1957 பண்டா — செல்வா ஒப்பநந்தமும் 1965 டட்லி — செல்வா ஒப்பந்தமும் கைச்சாத்திட்டபோது ஜே.வி.பி. தோன்றியிருக்கவில்லை.
அரசைக் கவிழ்ப்பதற்காக இரு ஆயுதக் கிளர்ச்சிகளை முன்னெடுத்த ஜே.வி.பி.யின் வன்முறைக் கடந்த காலத்துக்கு அதை பணயக்கைதியாக வைத்திருக்காமல் தென்னிலங்கை மக்கள் மாற்றத்துக்கான தங்கள் வேட்கையில் அதை ஆட்சியதிகாரத்துக்கு கொண்டு வந்திருக்கிறார்கள்.
அதேபோன்று தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் ஜே. வி.பி.யினர் இதுகாலவரையில் கொண்டிருந்த எதிர்மறையான நிலைப்பாடுகளுக்கு அவர்களை பணயக் கைதியாக வைத்திருக்காமல் அவர்களுக்கு சிறுபான்மைச் சமூகங்கள் நேசக்கரம் நீட்டுவதற்கான வழியை அதன் தலைவர்கள் திறந்துவிடவேண்டிய காலம் வந்துவிட்டது.
பெரும்பான்மைச் சமூகத்தின் நம்பிக்கைக்குரியவர்களாக ஜனாதிபதி திசாநாயக்கவும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர்களும் மாறியிருக்கும் தற்போதைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணத்தை இனப்பிரச்சினை தொடர்பிலும் தென்னிலங்கையில் ஆரோக்கியமான சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு பயன்படுத்தவேண்டும்.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க
ஜனாதிபதி தேர்தலில் திசாநாயக்க வெற்றிபெற்று பதவிக்கு வந்ததை தொடர்ந்து இனப்பிரச்சினை தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் குறிப்பாக ஜே.வி.பி.யின் நிவைப்பாட்டில் ஓரளவுக்கேனும் நெகிழ்ச்சித்தன்மை ஏற்படக்கூடும் என்று கணிசமான ஒரு பிரிவினர் எதிர்பார்க்கிறார்கள்.
பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிக்க வேண்டும் என்ற ஆர்வம் வடக்கு, கிழக்கில் ஒரு கணிசமான பிரிவினர் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
ரில்வின் சில்வா
ஆனால், தங்களிடம் எந்த மாற்றத்தையும் எதிர்பார்க்க வேண்டாம் என்று கூறுவதைப் போன்று ஜே.வி.பி.யின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா சில தினங்களுக்கு முன்னர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கூறிய கருத்துக்கள் அமைந்திருந்தன.
“அரசிலமைப்புக்கான 13 வது அரசியலமைப்பு திருத்தம் தமிழ் மக்களுக்கு அவசியமில்லை.
அவர்களுக்கு பொருளாதாரப் பிரச்சினைக்கே தீர்வு அவசியமாகிறது. தமிழ் அரசியல்வாதிகள் மாத்திரமே தங்களது அதிகாரத்தை தக்கவைப்பதற்காக 13 வது திருத்தத்தையும் அதிகாரப் பரவலாக்கத்தையும் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்” என்று அவர் கூறினார்.
ஜனாதிபதி திசாநாயக்கவை பதவிக்கு கொண்டுவந்ததன் மூலம் தென்னிலங்கை மக்கள் கொண்டுவந்திருப்பதாக கூறப்படும் மாற்றத்தில் தங்களது நீண்டகால அரசியல் அபிலாசைகளுக்கு எந்தளவுக்கு இடமளிக்கப்படும் என்பதில் தமிழ் மக்களுக்கு ஏற்கெனவே இருக்கும் சந்தேகத்தை வலுப்படுத்தும் வகையில் ஜே.வி.பி. செயலாளரின் கருத்துக்கள் அமைந்திருக்கின்றன.
தமிழ் மக்கள் அல்ல தமிழ் அரசியல்வாதிகளே 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கேட்கிறார்கள் என்று தமிழ் மக்களின் குறைந்தபட்ச அரசியல் அபிலாசைகளைக்கூட ஏற்றுக்கொள்ள மறுத்துவரும் இனவாதிகள் நீண்டகாலமாகவே கூறிவருகிறார்கள்.
அது ஒன்றும் ரில்வின் சில்வாவின் கண்டுபிடிப்பு அல்ல. ஜே.வி.பி. தலைவர்கள் ஒருபுறத்தில், தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்கு பிறகு இனவாத அரசியல் முடிவுக்கு வருவதாக கூறுகின்ற அதேவேளை, மறுபுறத்தில் இனவாதிகளின் பழையை கருத்தை தாங்களே திருப்பிக் கூறிக்கொண்டிருப்பது விசனத்துக்குரியது.
மாற்றத்தைக் கொண்டுவரப்போவதாகவும் புதிய அரசியல் கலாசாரத்தை தோற்றுவிக்கப்போவதாகவும் சூளுரைத்துக் கொண்டு ஆட்சிக்கு வந்திருக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர்களும் இனவாதிகள் காலங்காலமாக மக்களை தவறாக வழிநடத்துவதற்கு கூறிவந்த கருத்துக்களையே நம்பிக்கை வைப்பதாக இருந்தால் மாற்றம் என்பதில் அர்த்தமில்லை.
தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கான முயற்சிகள் தொடர்பில் ஜே.வி.பி. தலைவர்கள் இதுகாலவரையில் கடைப்பிடித்துவந்த கொள்கைகளில் மாற்றம் செய்யாதவரை அவர்கள் பெருமையுடன் பேசுகின்ற மாற்றம் முழுமைடையப் போவதில்லை.
குறைந்த பட்சம் 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கேனும் வசதியான சூழ்நிலை தென்னிலங்கையில் தோன்றவில்லை என்றால் ஜனாதிபதி திசாநாயக்க கூறுகின்ற புதிய கலாசாரம் சிறுபான்மைச் சமூகங்களுக்கு எந்த பயனையும் கொண்டு வரப்போவதில்லை. மாற்றத்தின் மட்டுப்பாடுகள் மாத்திரமே அம்பலமாகும்.
இலங்கையின் இதுகாலவரையிலான இனஉறவுகளை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது சகல இனத்தவர்களையும் சமத்துவமாக நடத்தி இலங்கையர்கள் என்ற அடையாளத்தை ஏற்படுத்துவது என்பது வெறுமனே ஒரு சுலோகமாகவே இருந்து வந்திருக்கிறது.
சிறுபானமைச் சமூகங்களுக்கு எதிராக படுமோசமான அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்ட அரசாங்க தலைவர்களும் கூட அந்த சுலோகத்தை தாராளமாகப் பயன்படுத்தினர்.
சமூகங்களின் கலாசார தனித்துவங்களைப் பேணக்கூடியதாகவும் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்ற வசதி செய்யக்கூடியதாகவும் ஒரு சட்டரீதியான கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம் மாத்திரமே இலங்கையர்கள் என்ற தேசிய அடையாளத்தை சகல சமூகங்களும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள வழிசெய்யமுடியும். அதற்கான நேர்மறையான சமிக்ஞை தென்னிலங்கையில் இருந்து புதிய ஆட்சியாளர்ளிடம் இருந்தே வரவேண்டும்.
— வீரகத்தி தனபாலசிங்கம் —
(ஈழநாடு)