பிரபலங்களின் பேட்டி என்றாலே அது எப்போதும் சுவராஸ்யம் தான். பேட்டிக்கு சொந்தக்காரர் மட்டுமல்ல, பேட்டி எடுத்தவரும் பிரபலம் என்றால் சொல்ல வேண்டுமா அதன் சுவாரஸ்யத்தை…

பேட்டிக்குரியவர் மறைந்தும் மறையாது மக்கள் மனங்களில் வாழ்ந்துகொண்டிருக்கும் அமரர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். சுமார் அரை நூற்றாண்டு காலம் தமிழகத்தை எம்.ஜி.ஆர் என்ற மூன்றெழுத்தால் கட்டிப்போட்ட மந்திரக்காரர்.

1968ம் ஆண்டு பொம்மை என்ற சினிமா இதழுக்கு எம்.ஜி.ஆர் அளித்த இந்த பேட்டியை எடுத்த பிரபலம் யார் தெரியுமா…? முன்னாள் முதல்வர் ஜெயலலிதா!

தன் அரசியல் குருவான எம்.ஜி.ஆரிடம் வெளிப்படையாக ஜெயலலிதா எழுப்பிய கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் இங்கே…

நடிப்புத் துறையில் நீங்கள் ஈடுபடக் காரணம் என்ன?

வறுமை.

உங்கள் பெற்றோர்கள் நீங்கள் நடிப்புத்துறையில் ஈடுபடுவதைப் பற்றி என்ன சொன்னார்கள்?

‘பசி வந்திடப் பத்தும் பறந்து போகும்’ என்று பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள். அப்படி இருக்க பசியைப் போக்குவதற்காக நடிப்புத் தொழிலில் ஈடுபடும்போது எப்படி தடை செய்வார்கள்?

நீங்கள் முதன்முதலாக போட்ட வேஷம் எது? அப்போது உங்கள் வயது என்ன?

லவகுசா நாடகத்தில் குசன் வேஷம் போட்டேன். ஏறக்குறைய ஆறு வயதிருந்திருக்கலாம் என நினைக்கிறேன்.

உங்களுக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த ஆசான் யார்?

குசன் வேஷத்தில் நடிக்கும்போது நான் படித்துக்கொண்டிருந்த பள்ளியின் ஆசிரியர் ஒருவர் எனக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்தார். அவரது பெயர் நினைவில் இல்லை. மதுரை ஒரிஜினல் பாய்ஸ் நாடகக் கம்பெனியில் நான் சேர்ந்தபோது எனக்கு முதன் முதலாக நடிப்பு சொல்லிக் கொடுத்த ஆசான் காலஞ்சென்ற நகைச்சுவை நடிகர் காளி என்.ரத்தினம் அவர்கள். பிறகு காலஞ்சென்ற எம்.கந்தசாமி முதலியார் அவர்கள் எனக்கு நடிப்பு சொல்லித் தந்தவர் ஆவார்.

நீங்கள் கதாநாயகனாக நடித்த முதல் நாடகம், அதில் நீங்கள் ஏற்று நடித்த வேஷம்… இவற்றைச் சொல்ல முடியுமா?

மனோகரா நாடகம். மனோகரன் வேஷம்.

பெண் வேஷம் போட்டு நாடகங்களில் நடித்து இருக்கிறீர்களா?

நடித்ததுண்டு.

அந்த நாளில் நடிகர்கள் சொந்தக் குரலில்தான் பாடுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். நீங்கள் எப்போதேனும் சொந்தக் குரலில் பாடியிருக்கிறீர்களா?

பாடாவிட்டால் எப்படி கதாநாயகன் வேஷம் தருவார்கள்?

நீங்கள் முதன்முதலாக காமிராவின் முன் நின்றபோது எப்படி இருந்தது? அது எந்த ஸ்டூடியோவில் நடந்தது? உடன் இருந்தவர்கள் யார் யார்?

சோபனாசலாவாக இருந்து வீனஸ் ஸ்டூடியோவாக மாறிய இடத்தில் ‘வேல் பிக்சர்ஸ்’ என்ற பெயரில் ஒரு ஸ்டுடியோ இயங்கி வந்தது. அதில்தான் நடித்தேன். அன்று என்னுடன் இருந்தவர்கள் எம்.கே.ராதா, என்.எஸ்.கே., டி.எஸ்.பாலையா முதலியவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.

உங்கள் முதல் படத்தின் கதையை எழுதிய வாசன் அவர்களது படமே உங்கள் நூறாவது படமாக அமைந்தது குறித்து என்ன சொல்கிறீர்கள்?

அதுதான் இயற்கையின் விளையாட்டு என்பது.

திரைப்படத்தில் உங்களை கதாநாயகனாக நடிக்க வைத்தது யார்?

பட உரிமையாளர்கள் என்று எடுத்துக்கொண்டால் முதலாவதாக எனக்கு கதாநாயகன் வேடம் தந்து படம் எடுத்தவர் நாராயணன் கம்பெனி உரிமையாளராக இருந்த காலஞ்சென்ற கே.எஸ்.நாராயண ஐயங்கார் அவர்கள்.

ஆனால், அந்தப் படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டுவிட்டது. அதன் பிறகு எனக்கு கதாநாயகன் வேடம் தந்து, மக்களுக்கு என்னை கதாநாயகனாக அறிமுகப்படுத்தியவர் ஜுபிடர் பிக்ஸர்ஸின் உரிமையாளர்களில் ஒருவரான காலஞ்சென்ற எம்.சோமசுந்தரம் அவர்கள்.

நீங்கள் சொந்தத்தில் எடுத்த படம் ‘நாடோடி மன்னன்’. சொந்தத்தில் படம் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏன் வந்தது?

நான் விரும்புவதை என் தொழிலில் செய்து காட்ட வேண்டும் என்பது எனது நீங்காத ஆசையாகும். ஒருவேளை என் விருப்பம் தவறாகவும் இருந்துவிடலாம். என்னுடைய ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக பிறருடைய பணத்தை வைத்து சோதனையில் இறங்க நான் தயாராக இல்லை. நான் சொந்தத்தில் படம் எடுக்க இதுதான் காரணம்.

நீங்களே இந்தப் படத்தை டைரக்ட் செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏன் ஏற்பட்டது?

முன் கேள்விக்கு சொன்ன விடையிலேயே இதற்குரிய பதிலும் அடங்குகிறதே!

சினிமா மந்திரியாக வந்தால் நீங்கள் என்னென்ன சீர்திருத்தங்களை செய்வீர்கள்?

நாடோடி மன்னனை பாருங்கள், எனது எண்ணங்களை அதில் கோடிட்டுக் காட்டியிருக்கிறேன்.

திரைப்பட உலகில் நீங்கள் சாதிக்க விரும்புவது என்ன?

நமது பண்பாட்டை கலாசாரத்தின் தனித்தன்மையை பிற மதத்தினரும் பிற நாட்டினரும் உணர்ந்து மதிக்கும் வகையில் சினிமாக் கலையின் மூலமாக தொண்டு செய்ய வேண்டும் என்பதும், அதோடு இந்தத் துறையில் நமக்கு வசதியும் வாய்ப்பும் இருந்தால் பிறருக்கு சமமாகவாவது நமது கலைத்துறையை உருவாக்கிக் காட்ட முடியும் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பதுமாகும்.

நீங்கள் ஆங்கிலப் படங்கள் பார்ப்பதுண்டா?

உண்டு.

உங்களுக்கு பிடித்த மேல்நாட்டு நடிகர்கள் யார்?

எல்லாரையும் பிடிக்கும்!

இந்திப் படங்களை நீங்கள் பார்ப்பதுண்டா?

ஒரு சில படங்களைப் பார்த்திருக்கிறேன்.

நீங்கள் எந்த அரசியல் கட்சியில் முதலில் இருந்தீர்கள்?

காங்கிரஸில். காந்திய வழியில் சமதர்மத்தை விரும்பும் ஒருவனாக இருந்தேன்.

அந்தக் கட்சித் தலைவர்களில் நீங்கள் யாரிடம் ரொம்பவும் நெருங்கிப் பழகி இருக்கிறீர்கள்?

அந்த அளவுக்கு அப்போது நான் வளர்ந்திருக்கவில்லை. அதாவது நான்கு பேர் என்னைத் தெரிந்து கொள்ளுமளவுக்கு விளம்பரம் பெற்றிருக்கவில்லை.

தி.மு.க.வில் எந்த ஆண்டு சேர்ந்தீர்கள்?

1952ஆம் வருடம் தி.மு.க.வில் சேர்ந்தேன்.

தி.மு.க.வில் சேரக் காரணம் என்ன?

எனது காந்திய வழிக் கொள்கைகள் அண்ணாவினால் உருவாக்கப்பட்ட தி.மு.க.வில் இருப்பதை அறிந்து சேர்ந்தேன்.

உங்களை இக்கட்சியில் சேர்த்த பெருமை யாருக்கு உண்டு?

என்னை யாரும் சேர்க்கவில்லை. அறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், என்.வி.நடராஜன் போன்றவர்களிடம் என்னை அழைத்துச்சென்று அறிமுகப்படுத்திய பெருமை நாடகமணி டி.வி.நாராயணசாமி ஒருவருக்கே உண்டு.

உங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டா?

நிச்சயமாக உண்டு.

நீங்கள் கோயிலுக்குப் போனதுண்டா?

நிறைய. திருப்பதிக்கு இரண்டு முறை போய் வந்திருக்கிறேன். முதல் தடவை நான் திருப்பதிக்கு போய் வந்தபோது எனக்கு வயது 12 அல்லது 13 வயதிருக்கும். நாடகக் கம்பெனியில் அப்போது நான் நடித்து வந்தேன்.

இரண்டாவது தடவை போனது ‘மர்மயோகி’ படம் வெளியானபோது. இரண்டாவது தடவை போனதுதான் திருப்பதியைப் பொறுத்தவரை கடைசியானது அதற்குப் பிறகும் வேறு பல கோயில்களுக்குப் போயிருக்கிறேன்.

ஏதேனும் பிரார்த்தனை செய்துகொண்டு அதை நிறைவேற்றப் போயிருந்தீர்களா?

பார்க்க வேண்டும் என்ற ஆவல். பக்தி, பிரார்த்தனை எதுவும் நான் செய்துகொள்ளவில்லை.

உங்கள் தாயார் எந்த கடவுளை வழிப்பட்டு வந்தார்கள்?

எங்கள் தாயார் இரண்டு கடவுளை வணங்கி வந்தார்கள். ஒன்று விஷ்ணு-நாராயணன். அதன் காரணமாக திருப்பதி வெங்கடாசலபதியை வணங்குவதில் ஆர்வம் உள்ளவர்களாக இருந்தார்கள். குல தெய்வமாக வணங்கி வந்தது காளியை.

வீட்டை விட்டுப் புறப்படும் முன்பு இப்போது யாரை வணங்கிவிட்டு வருகிறீர்கள்?

என் தாயை.

உங்கள் வீட்டில் பூஜை அறை உண்டா? எந்தக் கடவுளை வணங்குகிறீர்கள்?

என் பூஜை அறையில் என் தாய் – தந்தை, மகாத்மா காந்தியடிகள். என் வாழ்க்கைத் துணைவியின் தாய் தந்தையரின் படங்கள் இருக்கின்றன. (அதோடு முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்று உண்டு) இவர்கள்தாம் நான் வணங்கும் தெய்வங்கள்.

பழைய உங்களது படம் ஒன்றைப் பார்த்தேன். அதில் கழுத்தில் ருத்திராட்சை மாலையுடன் இருக்கிறீர்கள். ஏதேனும் ஜெபம் செய்துகொண்டிருந்தீர்களா?

நான் வணங்கும் கடவுளுடைய நாமத்தை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்வதற்காகத்தான் அந்த மாலையை கழுத்தில் அணிந்து கொண்டிருந்தேன். இப்போது அந்த மாலை இல்லாமலேயே கடவுளை நினைத்துக்கொண்டே இருக்கும் தகுதியை நான் பெற்றிருப்பதாக நினைக்கிறேன். ஒரு சின்னத் திருத்தம், அது ருத்ராட்சை மாலை அல்ல. தாமரை மணி மாலை. திருப்பதியில் நானே வாங்கிய மாலை அது.

தமிழ்ப் படங்களில் தமிழ்நாட்டின் பண்பை விளக்கும் காட்சிகள், கலாசாரத்தை பிரதிபலிக்கும் காட்சிகள் அவ்வளவாக இல்லை என்று சிலர் சொல்கிறார்களே, இதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா? உங்கள் அபிப்பிராயம் என்ன?

மறுக்கிறேன்… கலை, ஆச்சாரம், பண்பாடு அதையும் கலாசாரம் என்று சொல்லலாம். பண்பு+பாடு = பண்பாடு. பாடு என்றால் உழைப்பு. பண்படுத்தப்பட்ட செயல், இப்படியும் கொள்ளலாம். ஆக இவை அத்தனையும் சமூகத்தில் உள்ள மக்களிடையே நிலவும் நம்பிக்கைகளை, செயல்களை ஆதாரமாக கொண்டு சொல்லப்படும் வார்த்தைகள்.

இப்போது தமிழ்ப் படங்களில் காண்பிக்கப்பட்டு வரும் காட்சிகள் தமிழகத்தில் நடைபெறாத நிகழ்ச்சிகளை அடிப்படையாக கொன்டு உருவாக்கப்படுகிறது என்று நீங்கள் உண்மையிலேயே நம்புகிறீர்களா?

நாகரிகம் சிலரை ஆட்கொண்டுவிட்டதன் விளைவாக தமிழ்ச் சமுதாயத்தில் எப்படிப்பட்ட வேதனை தரத்தக்க காட்சிகள் நம் முன் நிகழ்த்திக் காண்பிக்கப்படுகின்றன என்பதை தயவுசெய்து சிந்தித்துப் பார்க்க துணிவீர்களா?

சமீபத்தில் நான் ஒரு செய்தி கேள்விப்பட்டேன். ஒரு பத்திரிகையை படித்ததன் விளைவாக. ஒரு மாளிகையில் விருந்து நடக்குமாம். குறிப்பிடத்தக்கவர்கள் தங்கள் மனைவியுடன் செல்வார்களாம். நடனம் ஆடுவார்களாம்.

எந்தப் பெண்ணும் எந்த ஆடவனும் அதாவது யாருடனும் யாரும் சேர்ந்து ஆடலாமாம். குறித்த நேரத்தில் விளக்கு அணைக்கப்படுமாம். யாரை யார் விரும்புகிறார்களோ அவர்களோடு கணவன், மனைவி தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளலாமாம்.

வரையறுக்கப்பட்ட நேரத்திற்குப் பிறகு விளக்கு எரியுமாம். பிறகு திரும்பிச் சென்று விடுவார்களாம். மனைவியர்களை மாற்றிக்கொள்ளும் விளையாட்டு என்று அதற்குப் பெயராம்.

இது உண்மையாக இருக்கும் என்று கற்பனை செய்துபார்க்கக் கூட நமக்கு துணிவில்லா விட்டாலும் சமூகத்திலுள்ள ஒரு சிறு பகுதியினரால் நிறைவேற்றப்படும் பண்பாடு என்று சொல்லப்படுமானால் இதைப் படத்தில் காண்பிக்கவில்லை என்பதற்காக வருத்தப்படுகிறீர்களா?

தமிழ்ப் படங்களுக்கு தங்கப் பதக்கம் கிடைக்குமா?

தமிழர்களால் அமைக்கப்பட்ட குழு ஒன்றுக்கு இந்த அதிகாரம் அளிக்கப்படுமானால் தங்கப் பதக்கம் நிச்சயம் கிடைக்கும்.

நீங்கள் விரும்பி உங்களுக்கு கிடைக்காமல் போன வேஷம் ஏதாவது இருக்கிறதா?

விரும்பியவை பல. ஆனால், நான் விரும்பிய பாத்திரங்களை என்னிடமிருந்து இன்னும் யாரும் பறித்துக் கொள்ளவில்லை.

உங்கள் அன்னையார் இப்போது உயிருடன் இருந்திருந்தால்?

என் நிலைக்காக மிகவும் அனுதாபப்பட்டிருப்பார்.

எப்படிச் சொல்கிறீர்கள்?

குறைந்த வருமானத்தில் இருந்தபோது எனக்கு கிடைத்த மன நிம்மதி இப்போது எனக்கு இல்லை. என்னிடம் உதவி பெறாத நிலையில் என்னை அப்போது உள்ளன்போடு நேசித்து வந்தவர்கள் என்னிடம் பல உதவிகளைப் பெற்றும் உள்ளன்போடு இப்போது நேசிப்பதில்லை.

உண்மையாக சொல்கிறேன். என்னை உளமாற நேசிக்கும் உண்மையான நண்பர்கள் மிகக்குறைவு. இது எனக்கே தெரியும். இப்படிப்பட்ட நிலையில், சூழ்நிலையில் இருக்கும் என்னைப் பார்த்து என் தாயார் அனுதாபப்படாமல் சந்தோஷப்பட்டுக்கொண்டா இருப்பார்?

பலருக்கு பல ஆயிரக்கணக்கில் உதவி வரும் நீங்கள் எப்போதாவது, யாரிடமாவது ஏதாவது உதவி பெற்றிருக்கிறீர்களா?

பிறருடைய உதவியினாலேயே வளர்ந்தவன் நான் என்பதை திட்டவட்டமாக தெளிவாக புரிந்துகொள்ளுங்கள்.

அப்படிப் பெற்ற உதவிகளில் நீங்கள் பெரிதெனக் கருதுவதும், மறக்க முடியாததும் எது?

கலைவாணர் என்.எஸ்.கே. அவர்கள் கீழ்ப்பாக்கத்தில் குடியிருந்தபோது அவரது வீட்டிலேயே கோவிந்தன் என்ற தோழர் ஒருவர் இருந்தார்.

பத்து, பதினைந்து என்று மாதச் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த அந்தத் தோழர் தன்னுடைய குடும்பத்தைப் பற்றிக்கூட கவலைப்படாமல் எனக்கு ஒரு நாள் இரண்டு ரூபாய் கொடுத்து உதவியதை மறக்க முடியாது. ஆனால், அந்த நண்பரைத் தேடித் தேடி அலைகிறேன். என்னால் அந்தத் தோழனைக் காண முடியவில்லை.

ஒரு காலத்தில் நடிகன் என்ற நிலையில் நெப்டியூன் ஸ்டூடியோவில் பணியாற்றிய நீங்கள் இப்போது சத்யா ஸ்டூடியோவாக மாறியிருக்கும் அதன் பங்குதாரர்களில் ஒருவராக இருக்கிறீர்கள். இந்த மாறுதலைப் பற்றியும், அந்தப் பழைய நாட்களையும் இணைத்துப் பார்க்கும்போது உங்களுக்கு என்ன தோன்றும்?

நான் பல பேர்களுக்கு உபதேசம் செய்கின்ற, செய்துகொண்டிருக்கின்ற ஒரே கருத்துதான் என் நினைவில் நின்றுகொண்டிருக்கிறது. மனித உடலைப்பற்றிப் பெரியவர்கள் ‘நீரின் மேல் குமிழியைப் போன்றது’ என்று சொல்லி இருக்கிறார்கள். அதைவிட ஆபத்தானது, நிச்சயமற்றது, ஒரு மனிதனுக்கு சேர்கின்ற பொருளும், புகழும். நான் எந்த ஸ்டூடியோவில் யாரோ ஒருவனாக பனியாற்றினேனோ அதே ஸ்டூடியோவில் நானே பங்குதாரராக இருப்பது ஒன்றே போதாதா, பொருளும், புகழும் நிலையற்றது என்பதை எடுத்துக்காட்ட.

இந்திப் படங்களில் நடிக்க அழைப்பு வந்தால் ஏற்பீர்களா?

நேரம் இருந்து, அந்தப் பாத்திரத்தில் என் கருத்துக்களை சொல்ல முடியும் என்ற நிலை இருந்து, என்னைத் தாங்கிக்கொள்ளக்கூடிய இதயம் அவர்களுக்கு இருந்தால் கண்டிப்பாக நடிப்பேன்.

உங்கள் எதிர்காலத்திற்கு ஏதாவது சேமித்து வைத்திருக்கிறீர்களா?

சேமித்து வைப்பதில் இரண்டு வகை உண்டு. ஒன்று, தனக்கென்று சேமித்து வைப்பது. மற்றொன்று, பிறருக்கென்றே சேமித்து வைப்பது. என் வரை எனக்கென்று எதையும் சேமித்து வைத்துக்கொள்ள நான் விரும்பவில்லை.

தி.மு.க. தலைவர்களால் திரைப்பட உலகம் எந்த அளவுக்கு முன்னேறி இருக்கிறது?

திரைப்பட உலகம் என்பது திரைப்படத் தொழிலை அடிப்படையாக கொண்ட ஒரு அமைப்பைப் பற்றிய ஒரு வார்த்தை என்று நான் நினைக்கிறேன்.

வேறு ஒரு கேள்விக்கு நான் பதில் சொன்னதுபோல திரைப்படத் தொழில் ஒரு சில பகுதிகளை மட்டும் கொண்ட தொழில் அல்ல.

திரைப்பட உலகம் என்று நீங்கள் கேட்பது தமிழ்த் திரைப்பட உலகம் பற்றித்தான் என்று நான் சேர்த்துக்கொள்ளலாம் அல்லவா? அப்படி உங்கள் அனுமதி கிடைக்குமானால் தமிழ்த் திரைப்படத் தொழிலில் தூய தமிழுக்கு வித்திட்டது தி.மு.க. தலைவர்கள்தான் என்று நான் அறுதியிட்டுக் கூற முடியும்.

திரைப்படத் துறையிலிருந்து நீங்கள் ஓய்வுபெற்றால் என்ன செய்வீர்கள்?

என் உடலில் உழைக்கும் சக்தி இருக்கும் வரையில் திரைப்படத் தொழிலிலிருந்து நான் ஓய்வுபெறுவதாக இல்லை.

விதியை யாராலும் வெல்ல முடியாது என்று நம்புகிறீர்களா? அல்லது விதியை மாற்றி அமைக்க முடியும் என்று நம்புகிறீர்களா?

எந்த விதி? சட்டமன்றத்திலே நிறைவேற்றுகின்றார்களே அந்த விதிதானே? அதை எப்படி வேண்டுமானாலும் மாற்றலாம் என்பதுதான் நமக்கு தெரிகின்றதே.

சந்தர்ப்ப வசத்தால் ஒரு ஆணும் பெண்ணும் தவறு செய்ய நேர்ந்தால் சமூகம் பெண்ணை மட்டுமே கண்டிக்கிறது. ஆணைக் கண்டிப்பதில்லை. இதற்கு என்ன காரணம்? இது நியாயமா?

அப்படி ஒரு காலம் இருந்திருக்கலாம். இப்போது அப்படி இல்லை என்று நினைக்கிறேன்.

நீங்கள் அதிக மகிழ்ச்சி அடைந்த அனுபவம் நாடக மேடை நடிப்பிலா? அல்லது திரைப்பட நடிப்பிலா?

நாடக மேடை நடிப்பில்! நடிகன் நாடக மேடையில் நடிக்கும்போது அவனுடைய திறமைக்கு உடனடியாக பலனைக் காண்கிறான். அதாவது மக்கள் மகிழ்வதை அதாவது அவனுடைய திறமையான நடிப்பை ஏற்றுக்கொள்வதை நேரடியாக அனுபவிக்கிறான். அப்படி அனுபவித்த சந்தர்ப்பங்கள் பல உண்டு. சினிமாவில் அப்படி இல்லையே.

தமிழ்ப் படங்களின் தரம், முன்னேற்றம் இவற்றைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

தமிழ்நாட்டில் வெளியிடப்படும் அத்தனை படங்களையும் பார்க்கின்ற நல்ல வாய்ப்பினை நான் பெற்றவனல்ல. எனவே பொதுவாக ஒரு படம் எப்படி இருக்கிறது என்று சொல்வது தெரியாத ஒன்றைப் பற்றி நான் தீர்ப்புக் கூறுவதாக முடிந்துவிடலாம்.

ஆனால், நான் கேள்விப்பட்டதில் இருந்து மக்கள் சொல்கின்ற கருத்தில் இருந்து பெரும்பாலான படங்கள் நான்கைந்து வருடங்களுக்கு முன்பு வந்த படங்களைவிட தரத்திலும் தகுதியிலும் உயர்ந்ததாக உள்ளன என்பதை சொல்ல முடியும்.

முன்னேற்றம் என்ற ஒரு வார்த்தையை மட்டும் வைத்துக்கொண்டு பதில் சொல்வது இயலாத ஒன்று. ஏனெனில், ஒரு தொழிலின் முன்னேற்றம் என்பது பல்வேறு வகையான, வெவ்வேறு தொடர்பான செயலிலிருந்து, விளைவிலிருந்து உருவாக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

உதாரணத்திற்கு ஒரு சினிமாப் படத்தை எடுத்துக் கொண்டால் உரையாடல், காட்சிகள், இசையமைப்பு, நடிப்பு, பாத்திரத்திற்கேற்ற உடைகள், காட்சி ஜோடனை, ஒலிப்பதிவு, ஒளிப்பதிவு, இயக்குதல் முதலியவைகளில் ஒவ்வொன்றிலும் தனித்தனியாக முன்னேற்றம் ஏற்படுவதும், ஏற்படாமல் இருப்பதும் இயற்கை.

குறிப்பாக சினிமாப் படங்களின் முன்னேற்றம் என்றால் இவை அத்தனையும் சேர்த்துதான் பதில் சொல்லவேண்டியிருக்கிறது.

ஆனால், மேலே சொன்னவைகளில் ஒன்றில் முன்னேற்றம் என்று கூறினாலும் அது சினிமாத்தொழிலுக்கே முன்னேற்றமாகத்தான் கருத வேண்டும்.

அந்த வகையில் ஒலி, ஒளி, காட்சி ஜோடனை, ஒப்பனை, நடிப்பு, கதை, இசை, உரையாடல், படத்தொகுப்பு, பதிப்பு முதலிய பல்வேறு வகைகளில் தமிழகம் சினிமாத் துறையில் நிச்சயமாக முன்னேறி இருக்கிறது.

சினிமாவை நீங்கள் ஒரு கலை என்று நினைக்கிறீர்களா? வியாபாரம் அல்லது தொழில் என்று நினைக்கிறீர்களா?

ஒரு தொழிலை கலைநுணுக்கத்தோடு உருவாக்கினால் சிறந்த வியாபாரமாக அது பயன்படும். அதுபோல சினிமாவை தொழிலாகக் கருதி, கலை அம்சத்திற்கு எந்த ஊறுவிளைவிக்காமல் பயன்படுத்தினால் அந்த வியாபாரம் செழிக்கும்.

நீங்கள் நடித்த படங்களிலேயே உங்களுக்கு மனதிருப்தியைத் தந்த படம் எது?

ஒரே ஒரு முறைதான் ‘பெற்றால்தான் பிள்ளையா’ படத்தில் என் பாத்திரம் பிடித்திருக்கிறது என்று சொல்லி இருக்கிறேன். அதற்குப் பிறகு இதுவரையில் நான் எதையும் அப்படிச் சொல்லி, என்னைக் கட்டுப்படுத்திக் கொண்டது இல்லை.

நீங்கள் உண்மையிலேயே மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் நடிப்புத் துறையை விட்டுவிட்டு அரசியலிலேயே ஈடுபட்டால் என்ன?

என்னைப் பொறுத்தவரை நல்ல ஒரு அரசியல்வாதிக்கு கலையின் மூலமாக மக்களுக்கு சேவை செய்வதை விட வேறு ஒரு வழிவகை அவர்களுக்கு இருக்காது என்பதை நான் திடமாக நம்புகிறேன்.

நீங்கள் தி.மு.க.வில் இருப்பதால்தான் உங்கள் படங்கள் பெரும் வரவேற்பு பெறுவதாகச் சொல்கிறார்கள். அக்கட்சியிலுள்ள நீங்கள் படத்தில் நடிப்பதால்தான் தி.மு.க. அதிக செல்வாக்கு பெறுகிறது என்றும் சிலர் சொல்கிறார்கள். உங்கள் கருத்து என்ன?

இந்த இரண்டு விதமான அபிப்பிராயங்கள் குறித்து எனக்கு எந்த விதமான கருத்தும் கிடையாது. நான் கலைப் பணிபுரிகின்றேன். தொழிலுக்காக அரசியலில் இருக்கிறேன், என் கொள்கைக்காக என் கொள்கையை கூடுமானவரை பிறர் மனம் புண்படாத வகையில் கலையில் புகுத்தி தொழில் நடத்திவருகின்றேன்.

உங்கள் சொந்த வாழ்க்கையில் பெரிய சோதனையாக அமைந்த நிகழ்ச்சி எது?

ஒரு பெண் என்னை காதலித்ததுதான். தயவுசெய்து இதற்கு மேல் அதைப் பற்றி ஒன்றும் கேட்க வேண்டும்.

உங்கள் தொழிலிலே உங்களுக்கு பெரிய சவாலாக இருந்தது எது?

என்னை அழிக்க விரும்பிய எதிரிகளின் நட்பு.

உங்களுக்குக் கார் ஓட்டத் தெரியுமா?

ஓட்டத் தெரியும். நான் ஓட்டுவதெல்லாம் பிறருடைய துணிவைப் பொறுத்தது. சினிமாவில் கார் ஓட்ட லைசென்ஸ் தேவை இல்லை. படத்தில் காதலிக்க லைசென்ஸ் தேவையா? அதுபோலத்தான்.

அதிர்ஷ்டம், ஆருடம், ராசி இவற்றில் நீங்கள் நம்பிக்கை வைத்திருந்தது உண்டா?

உறுதியாக. மிகப் பலமான நம்பிக்கை இருந்தது உண்டு.

திரு. மு.கருணாநிதி அவர்களுக்கும் உங்களுக்கும் முதலில் தொடர்பு ஏற்பட்டது எப்படி?

ஜூபிடர் ‘அபிமன்யூ’ படத்திற்காக உரையாடல் எழுத அவர் கோவை வந்தபோது

உலகிலேயே அழகானது எது?

குருடர்கள் யானையைத் தொட்டுப் பார்த்து கருத்துச் சொன்னால் எப்படி இருக்குமோ, அப்படித்தான் இருக்கும் இந்தக் கேள்விக்கு நான் பதில் சொன்னால்! பரந்த இந்த உலகத்தில் ஏதோ ஒரு மூலையில் உள்ள நான், உலகத்தில் உள்ளதில் அழகானது எது என்று கேட்டால் என்ன பதில் சொல்வது?

ஆடு, மாடு, கோழி மனிதனுக்கு இம்சை செய்வதில்லை. அதைக் கொன்று சாப்பிடுவது பாவம் இல்லையா?

உங்களுடைய கேள்வியிலிருந்து மனிதனுக்கு இம்சை செய்கின்றவைகளை கொன்று சாப்பிடலாம் என்ற பொருளும் தொக்கி நிற்கிறது என்பதை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.

அப்படியானால் உயிர்ப் பிராணிகளையே கொன்று தின்பது தவறு என்று உங்கள் கேள்வியில் கருத்து வெளிப்படவில்லை. தீங்கு செய்யும் பிராணிகளை கொன்று தின்னலாம் என்ற கருத்தாகிறது. அப்படியானால் தீங்குச் செய்கின்ற மனிதனையே, ஏன் மனிதன் கொன்று தின்னக் கூடாது? இதை வேடிக்கையாகத்தான் கேட்கிறேன்…

கொல்லாமை, புலால் உண்ணாமை இவை எல்லாம் மனத்தின் பழக்கத்தைப் பொறுத்தது. புலால் உணவு உண்பவர்களிலேயே பலர் சிலவற்றை உண்கிறார்கள். சிலவற்றை உண்பதில்லை. இவை எல்லாம் மனப் பழக்கத்தின் விளைவாக ஏற்படுகின்ற பழக்க வழக்கங்களாகும்.

நீங்கள் காங்கிரஸில் இருந்தபோது கதராடை கட்டிய துண்டா?

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி இருந்தபோதுகூட கதர் கட்டி இருக்கிறேன். முன்பெல்லாம் கதராடை தூய்மையின் அடையாளமாக இருந்தது.

பெரிய மகானாக விளங்கும் காஞ்சி காமக்கோடிகளை நீங்கள் எப்போதாவது தரிசித்துப் பேசியதுண்டா?

என்னைவிட அதிகமாக விஷயம் தெரிந்தவர்களைக்கூட நான் மதிப்பதுண்டு. மிக உயர்ந்த நிலையிலுள்ள, தகுதி வாய்ந்த பெரியவரை மகான் என்று ஏற்றுக்கொள்ள எனக்கு என்ன தடை இருக்கப் போகிறது?

சினிமாவுலகில் நீங்கள், யாருமே அடையமுடியாத உச்ச நிலைக்கு போய்விட்டீர்கள்? நீங்கள் விரும்பிய லட்சியத்தை அடைந்துவிட்டோம் என்ற பூரிப்பு உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறதா?

எந்த மனிதனும் அவனுடைய வாழ்க்கையில் உச்ச நிலைக்குப் போய்விட்டதாக நினைப்பது, தோல்வியான ஒரு சூழ்நிலையில் தோன்றும் திகைப்பேயாகும்.

பல ஆண்டுகளுக்கு முன்பு சென்னை ‘நியூ எல்பின்ஸ்டன்’ தியேட்டரில் ‘இரு சகோதரர்கள்’ என்ற படம் திரையிடப்பட்டது. அதில் கதாநாயகனாக ‘இந்த மேடைப் புலி’ என்று பட்டம் பெற்ற கே.பி.கேசவன் அவர்கள் நடித்திருந்தார். நாடக மேடையிலும் சினிமாவிலும் நடித்து பெரும் புகழ்ப் பெற்றிருந்தார். அவருடன் நானும் வேறு சிலரும் இந்தப் படத்தைப் பார்க்க சென்றிருந்தோம்.

இடைவேளையின்போது, அவர் வந்திருப்பதை அறிந்த ரசிகர்கள் அவரைப் பார்ப்பதற்காக எழுந்து நின்று அவர் பெயரைக் கூறிக் கூச்சலிட ஆரம்பித்தார்கள். அந்தப் படத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மிகச் சிறிய வேடங்களில் நடித்திருந்த நான் இதைக் கண்டு திகைத்து கே.பி. கேசவன் அவர்களையே பார்த்துக் கொண் டிருந்தேன். இத்தனை ஆதரவும், செல்வாக்கும் பெற்றிருக்கும் அவருக்கு அருகில் நாம் அமர்ந்திருக் கிறோமே என்ற பெருமை கூட உண்டாயிற்று.

படம் முடிவதற்குள் வெளியே வந்துவிட வேண்டும் என்று நாங்கள் புறப்பட்டோம். அதற்குள் மக்களும் வெளியே வந்துவிட்டனர்.

நாங்கள் மேலே இருந்து படி இறங்கி கீழே வருவதற்குக்கூட சிரமமாகிவிட்டது. நான் மற்றவர்களை பிடித்துத் தள்ளி, கே.பி.கே. அவர்களை பாதுகாப்பாகக் காப்பாற்றி காருக்கு அழைத்துச் சென்று அனுப்பி வைத்தேன்.

அன்று மக்களுக்கு என்னை யார் என்று தெரியாது. அதற்குப் பல ஆண்டுகளுக்கு பின், சென்னை ‘நியூ குளோப்’ தியேட்டருக்கு நானும் கே.பி.கே. அவர்களும் ஓர் ஆங்கிலப் படம் பார்க்கப் போனோம். அப்போது நான் நடித்த ‘மர்மயோகி’ திரைப்படம் வெளிவந்து சில மாதங்களே ஆகி இருந்தன.

இடைவேளையின்போது நான் வந்திருந்ததை அறிந்த ரசிகர்கள் எழுந்து கூச்சல் போட்டார்கள். எனக்கு அருகில் அதே கே.பி.கே. அவர்கள்தான் அமர்ந்திருந்தார் கள். அவரை யார் என்றே படம் பார்க்க வந்தவர்கள் தெரிந்து கொள்ளவில்லை.

படம் முடிந்து வெளியே வந்தோம். மக்கள் கூட்டம் எங்களை சூழ்ந்தது. கே.பி.கே. அவர்கள் அந்த ரசிகர் களிடமிருந்து என்னைக் காப்பாற்றி ஒரு டாக்ஸியில் ஏற்றி அனுப்பினார். நான் புறப்படும்போது அவரும் அந்த மக்கள் கூட்டத்தில் ஒருவராக நின்றிருந்தார். அவரது நடிப்பாற்றல் எந்த வகையிலும் குறைந்து விடவில்லை.

கலைஞர்களுக்கு உச்சநிலை, தாழ்ந்தநிலை என்பதெல்லாம் மக்களால் தரப்படும் ஒரு மயக்க நிலை. அவ்வளவுதான். கலைஞனைப் பொறுத்தவரை அவனுக்கு வீழ்ச்சி கிடையாது. சூழ்நிலை அவனை உயர்த்தும்; தாழ்த்தும். அது மக்களின் மனதில் தோன்றும் முடிவு!

-தொகுப்பு: எஸ்.கிருபாகரன்

Share.
Leave A Reply

Exit mobile version