பாலத்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண முகமை (United Nations Relief and Works Agency for Palestine Refugees in the Near East – UNRWA) இஸ்ரேலில், செயல்படத் தடைவிதிக்கும் மசோதாவை நிறைவேற்றி இஸ்ரேல் நாடாளுமன்றம் வாக்களித்துள்ளது.

இந்த மசோதா சட்டமாக இயற்றப்பட்டால், UNRWA மூன்று மாதங்களுக்குள் இஸ்ரேல் மற்றும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பில் இருக்கும் கிழக்கு ஜெருசலேமில் அதன் செயல்பாடுகளை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

பாலத்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண முகமை பாலத்தீன அகதிகளுக்காகச் செயல்படுகிறது. இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தவுடன், UNRWA ஊழியர்கள் இஸ்ரேல் அதிகாரிகளுடன் தொடர்பை இழக்க நேரிடும்.

இதனால், காஸா மற்றும் இஸ்ரேல் ஆக்கிரமிப்பில் உள்ள மேற்குக் கரையில் இந்த அமைப்பின் செயல்பாடுகள் குறையக்கூடும்.

இஸ்ரேல் படைகள் காஸாவில் உள்ள அனைத்து பகுதிகளையும் கட்டுப்படுத்துகின்றன. இதனால், போர் பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கு உதவிப் பொருட்களை வழங்குவதற்கு UNRWA-வுக்கு இஸ்ரேல் ராணுவத்தின் ஒத்துழைப்பு அவசியம் தேவைப்படுகிறது.

இந்தப் பகுதிகளில் களத்தில் பணிபுரியும் ஐ.நா-வின் முக்கிய அமைப்பாக UNRWA இருக்கிறது.

இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு, இஸ்ரேலில் உள்ள UNRWA பணியாளர்களுக்கான சட்டப்பாதுகாப்பு முடிவுக்கு வரும். மேலும் கிழக்கு ஜெருசலேமில் உள்ள இந்த அமைப்பின் தலைமை அலுவலகமும் மூடப்படும்.

ஐ.நா பொதுச்செயலாளர் என்ன சொன்னார்?

இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் இந்த முடிவுக்குப் பிறகு, “இந்தச் சட்டம் இஸ்ரேல்-பாலத்தீன போருக்கான தீர்வு, மற்றும் அந்தப் பகுதியின் அமைதி, பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிப்பதாக இருக்கும்,” என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கூறியுள்ளார்.

இந்த முடிவு பாலத்தீனர்களின் பிரச்னையை அதிகரிக்கவே செய்யும் என்று UNRWA தலைவர் பிலிப் லஸ்ஸரினி தெரிவித்துள்ளார்.

எதிர்ப்பு தெரிவிக்கும் அமெரிக்கா, பிரிட்டன்

அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்டப் பல நாடுகள், இஸ்ரேலின் இந்த முடிவு குறித்துக் கவலை தெரிவித்துள்ளன.

இது ‘முற்றிலும் தவறான நடவடிக்கை’ என பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் லாமி தெரிவித்துள்ளார். அதேசமயம், இச்சட்டம் பாலதீனர்களுக்கு முக்கியமான UNRWA-வின் பணியைச் செய்வதைத் தடுக்கிறது என்று பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மர் கூறினார். அதே நேரத்தில், காஸாவில் நடக்கும் சர்வதேச மனிதாபிமான முயற்சிகளும் ஆபத்திற்கு உள்ளாகும்.

காஸா பகுதியில் மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் UNRWA மிகவும் ‘முக்கியப்’ பங்காற்றிவருகிறது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இங்குள்ள அனைத்து பகுதிகளிலிருந்தும் சுமார் 20 லட்சம் பேர் இந்த அமைப்பின் உதவி மற்றும் சேவைகளை நம்பி உள்ளனர்.

“இந்தச் சட்டத்தை அமல்படுத்த வேண்டாம் என்று இஸ்ரேலுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம். அதை நிறைவேற்றவேண்டாம் என்று அவர்களிடம் கேட்டுக்கொள்கிறோம்,” என்று அமெரிக்க வெளியுறவுத்துறைச் செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறுகிறார்.

இஸ்ரேலின் குற்றச்சாட்டுகள்

இந்த முடிவு குறித்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “UNRWA-வின் ஊழியர்கள் இஸ்ரேலுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் இந்தச் செயல்களுக்கு அவர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும்,” என்று கூறியுள்ளார். “ஆனாலும் காஸாவிற்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் உதவிகள் தொடர வேண்டும்,” என்றும் அவர் தெரிவித்தார்.

“காஸாவில் உள்ள மக்களுக்கு இஸ்ரேலுடைய மனிதாபிமான உதவிகள் தொடர்ந்து சென்றடைவதை உறுதி செய்வதற்காக எங்கள் சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக இருக்கிறோம்,” என்று அவர் எக்ஸ் சமூக ஊடகத் தளத்தில் பதிவிட்டார்.

காஸாவில் உள்ள UNRWA ஊழியர்கள் ஹமாஸுடன் இணைந்து செயல்படுவதாக இஸ்ரேல் கூறுகிறது. அக்டோபர் 7-ஆம் தேதி அன்று நடந்த தாக்குதலில் UNRWA-வின் 19 ஊழியர்கள் ஈடுபட்டதாக இஸ்ரேல் குறிப்பிடுகிறது.

இஸ்ரேலின் இந்தக் கருத்துக்களை ஆய்வு செய்த பின்னர், குற்றம் சாட்டப்பட்ட ஒன்பது ஊழியர்களை ஐக்கிய நாடுகள் சபை வெளியேற்றியது. ஆனால் இஸ்ரேல் தனது விரிவான குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆதாரங்களை அந்நாடு வழங்கவில்லை என்று ஐ.நா கூறியுள்ளது.

மறுபுறம், ஹமாஸுடன் தான் செய்துகொண்ட ஒப்பந்தங்கள் அதன் பணி சார்ந்தது மட்டுமே இருந்தது என்றும், காஸா பகுதியில் தங்களது பணிகளை எளிதாக்கும் வகையில் மட்டுமே இந்த ஒப்பந்தங்கள் செய்யப்பட்டதாகவும் UNRWA கூறுகிறது.

இஸ்ரேலின் நாடாளுமன்றமான நெசெட் (Knesset) திங்கட்கிழமையன்று (அக்டோபர் 28) மாலை இரண்டு மசோதாக்களுக்கு அதீதப் பெரும்பான்மையுடன் ஒப்புதல் அளித்தது.

நெசெட்-இன் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் குழுவின் தலைவர் யூலி எடெல்ஸ்டீன், மசோதாவை அறிமுகப்படுத்தியபோது, ​’பயங்கரவாத நடவடிக்கைகளை மறைப்பதற்காக’ UNRWA பயன்படுத்தப்படுகிறது என்று குற்றம் சாட்டினார்.

நாடாளுமன்றத்தில் அவர் பேசுகையில், “பயங்கரவாத அமைப்புக்கும் (ஹமாஸ்) UNRWA-க்கும் இடையே ஆழமான தொடர்பு உள்ளது, இதை இஸ்ரேல் சகித்துக் கொள்ளாது,” என்று அவர் தெரிவித்தார்.

UNRWA-வின் செயல்பாடுகள் என்ன?

பல ஆண்டுகளாக காஸாவில் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு சுகாதாரம் மற்றும் கல்வி உட்பட பல்வேறு உதவிகளை UNRWA அமைப்பு வழங்கி வருகிறது.

கடந்த ஆண்டு ஹமாஸ் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து அங்கு ஏற்பட்ட போரினால் பாதிக்கப்பட்ட காஸா பொதுமக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கான முயற்சிகளில் இந்த அமைப்பு களத்தில் இருந்து செயல்பட்டு வருகிறது.

தற்போது ஏறக்குறைய அத்தனை காஸா மக்களும் உதவிக்காக இந்த அமைப்பை சார்ந்தே உள்ளனர்.

இந்த தடையை ‘முன்னோடியில்லாதது’ என்றும் இது ஐ.நா சட்டத்திற்கு புறம்பானது என்றும் சர்வதேசச் சட்டத்தை இஸ்ரேல் மீறுவதாகவும் UNRWA-வின் கமிஷனர் ஜெனரல் பிலிப் லாஸரினி தெரிவித்துள்ளார்.

“காஸா ஏற்கனவே மோசமான பாதிப்புகளை அனுபவித்துவிட்டது. UNRWA-வின் உதவிகள் கிடைக்காவிட்டால் இங்குள்ள 6.5 லட்சம் சிறுவர், சிறுமியர் கல்வியை இழக்க நேரிடும். இது குழந்தைகளை ஆபத்தில் தள்ளும்,” என்றார்.

மேற்குக் கரையில் என்ன நிலைமை?

இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் இருக்கும் மேற்குக் கரையில் உள்ள 25 லட்சம் பாலத்தீனர்கள் UNRWA-வில் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

இஸ்ரேல் படைகள் இங்குள்ள மக்களுக்கு குண்டுவீச்சு, ஆக்கிரமிப்பு, மற்றும் பட்டினி போன்ற பிரச்னைகளை ஏற்படுத்துகின்றன என்று ஐ.நா மனித உரிமைகள் தலைவர் வெள்ளிக்கிழமையன்று (அக்டோபர் 25) கூறினார்.

காஸாவின் வடக்கில் இஸ்ரேல் ராணுவம் ‘சரணடைதல் அல்லது பட்டினியால் இறந்துபோவது’ என்ற கொள்கையைப் பின்பற்றுவதாக பல பாலத்தீனர்கள் கருதுகின்றனர்.

இதன் காரணமாக, சுமார் நான்கு லட்சம் மக்கள் தெற்கு நோக்கி இடம்பெயர வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதற்குப் பிறகு, எஞ்சியுள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவினர் சுற்றி வளைக்கப்படுவார்கள்.

இதுபோன்ற திட்டங்கள் எதுவும் தங்களிடம் இல்லை என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த ஆபத்தில் இருந்து இங்குள்ள குடிமக்கள் மீள வேண்டும் என்பதே அவர்களது எண்ணமாக உள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி அன்று காஸா மீது இஸ்ரேல் ராணுவம் தொடங்கிய தாக்குதலில் இதுவரை 42,710 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அக்டோபர் 7-ஆம் தேதி அன்று, ஹமாஸ் நடத்திய இஸ்ரேலிய தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 251 பேர் பணயக் கைதிகளாக கொண்டுசெல்லப்பட்டனர்.

பிபிசி

Share.
Leave A Reply

Exit mobile version