அநுரகுமார திசாநாயக்க அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், சர்வதேச பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான விடயத்தில் எவ்வாறான கொள்கையைக் கடைப்பிடிக்கப் போகிறது என்ற கேள்வி உருவாகி இருக்கிறது.
ஒருங்கிணைந்த கடல்சார் படைகள் (Combined Maritime Forces) என்ற பாதுகாப்பு கூட்டில், இலங்கை கடந்த ஆண்டு இணைந்து கொண்டது. ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியில் இருந்தபோது, அமெரிக்காவின் அழைப்பை ஏற்று, இந்த ஒருங்கிணைந்த கடல்சார் படைகள் அமைப்பில், இலங்கை 39 ஆவது நாடாக இணைந்தது.
இப்போது இந்த ஒருங்கிணைந்த கடல்சார் படைகள் கூட்டில் 46 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்த ஒருங்கிணைந்த கடல் சார் படைகள் கூட்டுக்கு அமெரிக்க கடற்படையின் வைஸ் அட்மிரல் ஒருவரே தலைமை தாங்குவார்.
பஹ்ரெயனை தலைமையகமாக கொண்ட இந்த கூட்டுப் படைகளின் தளபதியே, அமெரிக்காவின் ஐந்தாவது கப்பல் படை மற்றும் அமெரிக்க கடற்படையின் மத்திய கட்டளை பீடம் ஆகியவற்றின் தளபதியாகவும் பதவி வகிப்பார்.
இந்த கூட்டுப்படைகளின் துணைத் தளபதியாக பிரித்தானிய ரோயல் கடற்படையின் கொமடோர் தர அதிகாரி ஒருவர் பணியாற்றுவார்.
இவர்களுக்கு கீழேதான், தலைமையக அதிகாரிகளாக ஏனைய உறுப்பு நாடுகளின் கடற்படை அதிகாரிகள் செயற்படுவார்கள்.
இந்த கூட்டில் அவுஸ்ரேலியா, பிரேசில், கனடா , டென்மார்க் பின்லாந்து, தென்கொரியா, மலேசியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, நோர்வே, பாகிஸ்தான், சிங்கப்பூர் ,ஸ்பெயின், துருக்கி, பிரித்தானியா , அமெரிக்கா , பிரான்ஸ், ஜேர்மன் ,கிரீஸ் , இந்தியா , இத்தாலி, ஜப்பான் போன்ற முக்கியமான நாடுகளும் அங்கம் வகிக்கின்றன.
இந்த கூட்டில் பெரும்பாலும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ போன்ற அமெரிக்காவின் கூட்டணியில் உள்ள நாடுகளும், மத்திய கிழக்கில் கடல் சார் பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்ற நாடுகளும் இடம்பெற்றிருக்கின்றன.
இந்த ஒருங்கிணைந்த கடல்சார் படைப்பிரிவில், சீனா, ரஷ்யா , ஈரான் போன்ற நாடுகள் எதுவும் இடம்பெற்றிருக்கவில்லை.
போதைப்பொருள் கடத்தல் தடுப்பு, கடற்கொள்ளையர்களை அடக்குதல், பிராந்திய ஒத்துழைப்பை ஊக்குவித்தல் மற்றும் பிராந்திய மற்றும் பிற கூட்டாளர்களுடன் தொடர்புடைய திறன்களை வலுப்படுத்துதல், ஒட்டுமொத்த பாதுகாப்பு மற்றும் உறுதித்தன்மையை மேம்படுத்துதல் மற்றும் அரசு சாரா சட்டவிரோத செயற்பாட்டாளர்களிடம் இருந்து கடல்சார் சூழலை பாதுகாத்தல், மற்றும் மனிதாபிமான நெருக்கடிகளுக்கு பதிலளித்தல் போன்ற நோக்கங்களை அடிப்படையாக கொண்டு ஒருங்கிணைந்த கடல்சார் படைகள் என்ற கூட்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.
ஆனாலும், இது செங்கடல், அரபிக் கடல் உள்ளிட்ட பதற்றத்துக்குரிய சர்வதேச கடற்பரப்பில், பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது என்பதே மெய்யாகும்.
இது முற்றுமுழுதாக அமெரிக்கா மற்றும் அதனை சார்ந்த நாடுகளின் கடற்படைகளின் கூட்டு என்றும் குறிப்பிடலாம். இந்த கூட்டில் ஐந்து விதமான ஒருங்கிணைந்த அதிரடிப்படைகள் (Combined Task Force) இருக்கின்றன.
CTF 151 என்ற அணி கடற்கொள்ளை முறியடிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கிறது.
CTF 152 என்ற கடல்சார்அதிரடிப்படை, அரேபிய வளைகுடாவுக்குள் கடல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.
CTF 153 என்ற அதிரடிப்படை அணி, செங்கடலில் கடல் பாதுகாப்பில் ஈடுபடுகிறது.
CTF 154 என்ற ஐந்தாவது கடல் சார் அதிரடிப்படை அணி, கடல் பாதுகாப்பு பயிற்சிகளில் ஈடுபடுகிறது.
கடந்த ஆண்டு அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று, அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இலங்கை கடற்படையின் போர்க்கப்பல் ஒன்றை இந்த ஒருங்கிணைந்த அதிரடிப்படை அணியில் பணியாற்றுவதற்கு அனுப்பியிருந்தார்.
இந்த ஒருங்கிணைந்த கூட்டில், இலங்கை கடற்படை இணைவது பற்றி அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்படவில்லை. அது பற்றி நாடாளுமன்றத்திற்கும் அறிவிக்கப்படவில்லை.
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி என்ற அதிகாரத்தில் இந்த நடவடிக்கையை முன்னெடுத்திருந்தார்.
செங்கடலில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படுவதற்கு இலங்கை கடற்படை கப்பல் அனுப்பப்பட்டிருப்பதாக பரபரப்பாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இலங்கை கடற்படையில் ஆழ்கடல் ரோந்து கப்பல்கள் ஒருங்கிணைந்த கடல்சார் படையணியில் அவ்வப்போது பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
ஆனால் அவை செங்கடலில் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படவில்லை. ஏடன் வளைகுடாவுக்கு வெளியே 154 ஆவது அதிரடிப்படையணி செயற்படுகின்ற கடல்சார் பயிற்சி பிரிவிலேயே இலங்கை கடற்படைக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
இந்தக் கூட்டில் இலங்கை கடற்படை இணைந்து கொண்டதையிட்டு அப்போது பரவலான விமர்சனங்கள், எதிர்ப்புகள் தோன்றியிருந்தன. அதனை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கண்டுகொள்ளவில்லை.
அமெரிக்கா தலைமை தாங்கும் இந்த பாரிய கடல்சார் நடவடிக்கைக் கூட்டு, எந்த இராணுவ நோக்கத்தையும் கொண்டதல்ல என்று யாராலும் நம்ப முடியாது. இதற்கும் பிராந்திய பாதுகாப்பு சூழலுக்கும் நெருங்கிய தொடர்புகள் இருக்கின்றன.
நல்லாட்சி அரசாங்கம் பதவியில் இருந்த காலத்திலேயே இலங்கை கடற்படையுடன் அமெரிக்கா நெருக்கமான தொடர்புகளையும் உறவுகளையும் ஏற்படுத்த தொடங்கி விட்டது.
இலங்கை கடற்படையில் மரைன் படைப் பிரிவை உருவாக்கியது அமெரிக்காதான். அதற்கு பயிற்சி அளித்தது தொடக்கம் அவர்களுக்கான ஆயுதங்கள் மற்றும் வசதிகளை செய்து கொடுத்தது வரைக்கும் அமெரிக்காவின் ஏற்பாட்டிலேயே இடம்பெற்றன.
இலங்கை இராணுவத்துக்கான உதவிகளை அமெரிக்கா வழங்காத போதும், இலங்கை கடற்படையையும் விமானப்படையையும் நவீனமயப்படுத்துவது, வலுப்படுத்துவது போன்றவற்றில் அமெரிக்கா கணிசமாக பங்களித்திருக்கிறது.
இந்தியப் பெருங்கடலில் சர்வதேச கடல் பாதைக்கு அருகே கேந்திர முக்கியத்துவம் இடத்தில் அமைந்திருக்கின்ற இலங்கையை, தனது கைக்குள் வைத்திருப்பதன் மூலம் சர்வதேச கடல் பாதுகாப்பு மூலோபாயத்தில் இலங்கையையும் ஒரு பங்காளியாக நிலைத்திருக்க செய்ய முடியும் என்று அமெரிக்கா நம்புகிறது.
அதன் அடிப்படையில் தான், இலங்கை கடற்படைக்கான போர்க்கப்பல்களை வழங்குவது தொடக்கம், ஏனைய வசதிகள் மற்றும் உதவிகளை வழங்குவது வரைக்கும் முன்னெடுத்து வருகிறது.
ஒருங்கிணைந்த கடல்சார் படைகள் அமைப்பில், இலங்கையை இணைத்துக் கொண்டதற்கும் இதுதான் அடிப்படை காரணம்.
அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் இலங்கையுடன் பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்களை தொடர்ந்து வலுப்படுத்துவதற்கு அமெரிக்கா தயாராக இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இலங்கை தொடர்பான அமெரிக்காவின் கரிசனைகள் பாதுகாப்பு சார்ந்த உறவுகள், ஒத்துழைப்புக்களை மையப்படுத்தியது என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.
அந்த வகையில் தான், ஒருங்கிணைந்த கடல் சார்ந்த படைகளின் கூட்டில் இலங்கையை அமெரிக்கா இணைத்துக் கொண்டது
அநுரகுமார திசாநாயக்க அரசாங்கம் எல்லா நாடுகளையும் ஒரே விதமாக அணுகப் போவதாகவும், எந்த நாட்டுடன் பக்க சார்பாக செயற்படுவதில்லை என்றும் கூறுகிறது.
ஆனால் சீனாவோ ரஷ்யாவோ அங்கம் வகிக்காத ஒருங்கிணைந்த கடல்சார் கூட்டில் இலங்கை கடற்படை அங்கம் வகிப்பது எந்த வகையிலும் நடுநிலைப் போக்கை கொண்ட செயற்பாடாக எடுத்துக் கொள்ள முடியாது.
இந்த வகையில், அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கம், இந்த கூட்டில் இலங்கை நீடித்திருப்பதை அனுமதிக்குமா என்ற கேள்வி இருந்தது.
இவ்வாறான நிலையில், 154 ஆவது அதிரடிப்படையின் தலைமை கட்டளை பொறுப்பு, வரும் ஜனவரி மாதம் இலங்கைக்கு வழங்கப்பட உள்ளது. இது சுழற்சி முறையில் வழங்கப்படும் பொறுப்பு.
இந்த பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் இலங்கை கடற்படை தனது அதிகாரிகள் குழு ஒன்றை பஹ்ரெய்னுக்கு அனுப்பி வைக்கும் பணியில் இறங்கியுள்ளது.
இது தொடர்பாக பேச்சு நடத்தவும், முன்னேற்பாடுகளை கவனிக்கவும், தற்போது 154 ஆவது அதிரடிப்படை அணியின் கட்டளை தளபதியாக இருக்கும் கொமடோர் ஹைதம் எல்சையட் கலீல் இந்த மாத தொடக்கத்தில் கொழும்பு வந்து இலங்கை கடற்படைத் தளபதியுடன் பேச்சு நடத்தியிருந்தார்.
ஒருங்கிணைந்த கடல் சார் படைகள் அணியில் இலங்கை் கடற்படை நீடிக்குமா என்ற கேள்விகள் இருந்த சூழலில், அதன் ஒரு அலகிற்கு இலங்கைக் கடற்படை தலைமை தாங்குவது என்பது குறிப்பிடத்தக்க ஒரு விடயம்.
இந்த கூட்டில் இருந்து இலங்கை வெளியேறாத வகையில் தடுப்பதற்கு போடப்படுகின்ற ஒரு கடிவாளம் என்றும் இதனைக் குறிப்பிடலாம்.
இலங்கை கடற்படைக்கு இவ்வாறான ஒரு வாய்ப்பு கிடைத்திருப்பது, அதன் வரலாற்றில் இதுதான் முதல் முறை.சீனாவுக்கு நெருக்கமான இடதுசாரி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இந்த விவகாரத்தை எப்படி அணுகப் போகிறார்?
அநுரகுமார திசாநாயக்கவினால் அவ்வளவு இலகுவாக அமெரிக்கா தலைமையிலான இந்த கூட்டில் இருந்து விலகிச் சென்று விட முடியாது.அவ்வாறு விலகிச் செல்வதற்கு அமெரிக்கா அவ்வளவு இலகுவாக அனுமதிக்கவும் மாட்டாது.