ஸ்பெயின், கடந்த 50 ஆண்டுகளில் கண்டிராத பெருவெள்ளத்தை தற்போது சந்தித்து வருகிறது. கிழக்கு மாகாணமான வலென்சியா மற்றும் அதற்கு அப்பால் உள்ள பகுதிகளில் பெய்த கன மழை காரணமாகப் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதில் குறைந்தது 95 பேர் இறந்துவிட்டனர், மேலும் பலர் காணாமல் போய்விட்டனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஸ்பெயின் அரசு தெரிவித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் பாலங்களும் கட்டடங்களும் அடித்துச் செல்லப்பட்டன. மக்கள் வீட்டுக் கூரைகளின் மீது ஏறியும், மரங்களைக் கட்டி அணைத்தும் உயிர் தப்பினர்.

இந்தப் பேரிடருக்காக மூன்று நாட்கள் ஸ்பெயினில் துக்கம் அனுசரிக்கப்படும் என்று பிரதமர் பெட்ரோ சான்சேஸ் அறிவித்துள்ளார்.

“பலர் காணாமல் போயுள்ளனர்” என்பதால் இறப்பு எண்ணிக்கை உயரக்கூடும் என்று அஞ்சுவதாக அரசு கூறுகிறது.

வலென்சியாவில் குறைந்தது 92 இறப்புகள் பதிவாகியுள்ளன, வலென்சியாவின் மேற்கில் உள்ள காஸ்டில்லா-லா மன்சாவில் மேலும் இரண்டு இறப்புகளும், மலாகாவில் ஒரு இறப்பும் பதிவாகியுள்ளன. மலாகாவில் 71 வயதான பிரிட்டிஷ் நபர் தனது வீட்டிலிருந்து மீட்கப்பட்ட பின்னர் மருத்துவமனையில் இறந்தார்.

கடந்த 1973ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் 150 பேர் உயிரிழந்தனர். அதன் பிறகு ஏற்படும் மிக மோசமான வெள்ள பாதிப்பு இது.

PRIME Minister Pedro Sanchez

ஸ்பெயின் நாட்டு மக்களுக்கு பிரதமர் சான்சேஸ் ஆற்றிய உரையில், குடிமக்கள் விழிப்புடன் இருக்குமாறு வலியுறுத்தியதுடன், முழுமையாக மீள்வோம் என்றும் உறுதி அளித்துள்ளார்.

“ஒட்டுமொத்த ஸ்பெயினும் உங்களுடன் சேர்ந்து அழுகிறது… நாங்கள் உங்களைக் கைவிட மாட்டோம்” என்று பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் சான்சேஸ் கூறினார்.

வலென்சியாவுக்கு அருகிலுள்ள முதல் நகரங்களில் ஒன்றான ஷிவாவில், ஒரு வருடத்தில் பெய்ய வேண்டிய மழை எட்டு மணிநேரத்தில் பெய்துள்ளதாக தேசிய வானிலை நிறுவனமான ஏமெட் தெரிவித்துள்ளது.

 

‘சுனாமி போல வந்த வெள்ளம்’

Residents look at cars piled up after being swept away by floods in Valencia, Spain, Wednesday, Oct. 30, 2024. (AP Photo/Alberto Saiz)

புதன்கிழமை காலை ஸ்பெயின் ராணுவம் மற்றும் அவசரக்கால குழுக்கள் மீட்புப் பணிகளை மேற்கொள்ள விரைந்தபோது, பால்கனிகள் மற்றும் கார் கூரைகளில் இருந்து மக்களைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.

வலென்சியாவில் தப்பிப் பிழைத்தவர்கள் செவ்வாய்க்கிழமை இரவு வெள்ளத்தின் கொடூரத்தை விவரித்தனர். திடீரென ஏற்பட்ட அலை வீதிகள் மற்றும் சாலைகளை ஆறுகளாக மாற்றியது எனவும், பல வாகன ஓட்டிகள் அதில் தெரியாமல் சிக்கிக்கொண்டனர் எனவும் தெரிவித்தனர்.

வலென்சியாவுக்கு அருகிலுள்ள பைபோர்ட்டாவை சேர்ந்த 21 வயதான கில்லர்மோ செரானோ பெரெஸ், தண்ணீர் “சுனாமி போல” நெடுஞ்சாலையில் தங்களை நோக்கி வந்ததை நினைவு கூர்கிறார்.

அவரும் அவரது பெற்றோரும் தங்கள் காரைவிட்டு, உயிர் பிழைக்க ஒரு பாலத்தில் ஏறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் கூறினார்.

வெள்ளப்பெருக்கில் சிக்கிக் கொண்ட மற்றொருவர், “வெள்ளம் ஆக்ரோஷமாக நெருங்கி வருவதை உணர்ந்த வாகன ஓட்டிகள், சாலையின் தடுப்புகளுக்கு அருகில் மனித சங்கிலி உருவாக்கி கைகளை இறுகப் பிடித்துக்கொண்டு நின்றனர்.

நல்ல வேளையாக யாரும் கீழே விழவில்லை. விழுந்திருந்தால் அவர்கள் அடித்துச் செல்லப்பட்டிருப்பார்கள்” என்று 45 வயதான பாட்ரிசியா ரோட்ரிக்ஸ் எல் பைஸ் செய்தித்தாளிடம் கூறினார்.

லா டோரேவில் வசிக்கும் ஒருவர் பிபிசியிடம் கூறுகையில், அவரது நண்பர்கள் சிலர் தங்கள் வீடுகளை இழந்துவிட்டதாகவும், செவ்வாய்க் கிழமை இரவு “தண்ணீரில் கார்கள் மிதப்பதையும்” அலைகள் “சில சுவர்களை உடைத்துக் கொண்டு செல்வதையும்” பார்த்ததாகக் கூறினார்.

இதற்கிடையில், வலென்சியாவுக்கு அருகிலுள்ள ஹார்னோ டி அல்செடோ நகரின் மேயர், சில நிமிடங்களில் நீர் மட்டம் ஒரு மீட்டருக்கும் அதிகமாக எவ்வாறு உயர்ந்தது என்று பிபிசி நியூஸ்ஹவரிடம் தெரிவித்தார்.

“வெள்ளப்பெருக்கு மிக விரைவாக இருந்தது – நாங்கள் அவசர சேவைகளை அழைத்தோம், அவர்கள் கழுத்து வரை தண்ணீருடன் இருந்த சிலரை மீட்கத் தொடங்கினர்” என்று கான்சுவேலோ தாராசோன் கூறினார்.

உரிய நேரத்தில் எச்சரிக்கை வழங்கப்பட்டதா?

அவசரக் காலங்களில், உரிய எச்சரிக்கைகள் இருந்தபோதும், பேரிடர் நிவாரண அதிகாரிகள் மிகவும் தொய்வாகச் செயல்பட்டதாகப் பல நேரங்களில் குற்றம் சாட்டப்பட்டது. இதனால் மக்கள் சாலைகளைப் பயன்படுத்தவோ, உயரமான இடத்திற்குச் செல்லவோ முடியவில்லை என்று புகார்கள் எழுந்துள்ளன.

செவ்வாய்க் கிழமை இரவு உள்ளூர் நேரப்படி 8.15 மணி வரை, தேசிய பேரிடர் காலங்களில் பொறுப்பாக நியமிக்கப்படும், தி சிவில் பாதுகாப்பு நிறுவனத்திடம் இருந்து வெள்ளம் குறித்த எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. ஆனால் அதற்குள்ளாக ஷிவா மற்றும் அதற்கு அருகில் இருந்த சில பகுதிகள் 2 மணிநேரமாக வெள்ளத்தில் தத்தளித்து வந்தன.

வெள்ளம், காட்டுத்தீ போன்ற இயற்கைப் பேரிடர்களைச் சமாளிக்க முந்தைய அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட வலென்சியா அவசரக்கால பிரிவைத் தற்போதுள்ள அரசு நீக்கியிருந்தது. அந்த முடிவை நியாயப்படுத்த வேண்டிய நிர்பந்தமும் தற்போது அரசுக்கு எழுந்துள்ளது.

‘முன்னெப்போதும்’ இல்லாத மழை

People walk through flooded streets in Valencia, Spain, Wednesday, Oct. 30, 2024. (AP Photo/Alberto Saiz)

புதன்கிழமை மீட்புப் பணிகளில் ஈடுபட ஸ்பெயின் அரசு 1,000க்கும் மேற்பட்ட துருப்புகளை களத்தில் இறக்கியது. ஆனால் பல குழுக்கள் வெள்ளம் சூழ்ந்த சாலைகள் மற்றும் தகவல் தொடர்பு, மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட நகரங்களை நெருங்க முடியவில்லை.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், ஸ்பெயினின் மீட்புக் குழுக்களை ஒருங்கிணைக்க உதவுவதற்காக அதன் கோப்பர்நிக்கஸ் செயற்கைக்கோள் அமைப்பு செயல்படத் தொடங்கியதாகக் கூறினார். மற்ற ஐரோப்பிய அண்டை நாடுகளும் கூடுதல் படைகளை அனுப்ப முன்வந்துள்ளன.

ஸ்பெயினின் பாதுகாப்பு அமைச்சர் மார்கரிட்டா ரோபில்ஸ், இந்த வெள்ளம் “முன்னெப்போதுமே இல்லாத நிகழ்வு” என்று புதன்கிழமை கூறியிருந்தார்.

நாட்டின் மத்திய கிழக்கில் புதன்கிழமையன்று மழை தணிந்தது. ஆனால் மழை வடகிழக்கு நோக்கி கட்டலோனியா பிராந்தியத்திற்கு நகர்வதாக வானிலை அதிகாரிகள் எச்சரித்தனர். நாட்டின் பல பகுதிகளிலும் வானிலை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன, வெள்ளத்தை எதிர்கொள்ளவும் தஞ்சமடையவும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன.

வெள்ளம் பல்வேறு காரணங்களால் உருவாகிறது. ஆனால் காலநிலை மாற்றத்தால் வளிமண்டலம் வெப்பமடையும்போது, அது தீவிர மழைப் பொழிவுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.

தீவிர மழைக்கு முக்கியயக் காரணம் “கோட்டா ஃப்ரியா” என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். இலையுதிர்க் காலத்திலும் குளிர்காலத்திலும் மத்தியதரைக் கடலில் சூடான நீரில் குளிர்ந்த காற்று இறங்கும்போது ஸ்பெயினை தாக்கும் ஒரு இயற்கை வானிலை நிகழ்வு இது.

மழை வெடிப்புகளுக்கு காலநிலை மாற்றம் காரணமா?

இருப்பினும், புவி வெப்பநிலை அதிகரிப்பது, மேகங்கள் அதிக மழையைக் கொண்டு செல்ல வழிவகுத்துள்ளதாக விஞ்ஞானிகள் பிபிசியிடம் தெரிவித்தனர்.

“புதைபடிம எரிபொருள் உமிழ்வால் புவி வெப்பமடையும் ஒவ்வொரு முறையும் வளிமண்டலம் அதிக ஈரப்பதத்தை வைத்திருக்க முடியும். இது கனமழை வெடிப்புகளுக்கு வழிவகுக்கிறது” என்று லண்டன் இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த டாக்டர் ஃப்ரெடெரிக் ஓட்டோ கூறினார்.

“இதில் எந்தச் சந்தேகமும் இல்லை, இந்த மழை வெடிப்புகள் காலநிலை மாற்றத்தால்தான் தீவிரமடைந்தன” என்கிறார் ஓட்டோ.

தொழில்புரட்சி தொடங்கியதில் இருந்து உலகம் ஏற்கெனவே சுமார் 1.1 டிகிரி செல்சியஸ் வெப்பமடைந்துள்ளது. உலக நாடுகள், தங்கள் கரிம வெளியீட்டை விரைந்து குறைக்காவிட்டால், வெப்பநிலை மேலும் உயரும்.

Share.
Leave A Reply

Exit mobile version