-தற்காலிக போர் நிறுத்தத்தை நிராகரித்தது ஹமாஸ்

காசாவில் குறிப்பாக வடக்கு காசா மீது இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 45 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு மருத்துவமனை ஒன்றில் இடம்பெற்ற ஒரு தாக்குதலில் மருத்துவ விநியோகங்கள் தீவியில் கருகிய நிலையில் மருத்துவ செயற்பாடுகளுக்கும் இடையூறு ஏற்பட்டிருப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மறுபுறம் லெபனான் மற்றும் சிரியாவிலும் இஸ்ரேல் நேற்று தாக்குதல்களை தொடர்ந்த நிலையில் அந்தப் பகுதிகளிலும் உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன.

வடக்கு காசாவில் இருந்து ஹமாஸ் இராணுவக் கட்டமைப்பு கலைக்கப்பட்டு விட்டதாக இஸ்ரேல் கடந்த ஜனவரியில் கூறியது.

எனினும் வடக்கு காசாவை கடந்த ஒரு மாதமாக முற்றுகை இட்டிருக்கும் இஸ்ரேல் இராணுவம் அங்கு ஹமாஸ் போராளிகள் ஒருங்கிணைவதை தடுக்கும் படை நடடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக கூறி வருகிறது.

வடக்கு காசாவின் ஜபலியா, பெயித் ஹனூன் மற்றும் பெயித் லஹியாவுக்கு இந்த மாத ஆரம்பத்தில் டாங்கிகளை அனுப்பிய இஸ்ரேல் அங்க சரமாரித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

பெயித் லஹியா சிறு நகரில் இருக்கும் மருத்துவமனையில் மூன்றாவது மாடி மீது இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதலில் மருத்துவ பணியாளர்கள் சிறு காயத்திற்கு உட்பட்டதாக அந்த மருத்துவமனையின் பணிப்பாளர் ஈத் சபா ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்.

கடந்த வாரம் இஸ்ரேலியப் படை இந்த மருத்துவமனைக்குள் ஊடுருவிய நிலையில் தற்போது நடத்தப்பட்டிருக்கும் தாக்குதலில் உயிரிழப்புகள் பதிவாகவில்லை.

இந்த மருத்துவனை சுற்றிவளைப்பில் சுமார் 100 ஹமாஸ் போராளிகளை பிடித்ததாக இஸ்ரேல் அப்போது குறிப்பிட்டிருந்தது. இந்த மருத்துவமனையைச் சுற்றி இஸ்ரேலிய டாங்கிகள் தொடர்ந்து நிலைகொண்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆக்கிரமிப்பாளர்களின் (இஸ்ரேல்) கொடூரத்தில் இருந்து மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ பணியாளர்களை பாதுகாப்பதற்கு அனைத்து சர்வதேச அமைப்புகளுக்கும் காசா சுகாதார அழைச்சு அழைப்பு விடுத்துள்ளது.

மத்திய காசாவின் நுசைரத் அகதி முகாமில் அபூ ஷமலா குடும்ப வீட்டின் மீது இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சில் மூவர் கொல்லப்பட்டனர்.

ஜபலியாவில் இடம்பெற்ற மற்றொரு தாக்குதலில் மேலும் இருவர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவமான வபா குறிப்பிட்டது.

வடக்கு காசாவின் பெயித் ஹனூனில் இஸ்ரேல் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் இருவர் பலியாகி இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

காசாவில் கடந்த ஓர் ஆண்டுக்கு மேலாக இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல்களில் 43 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காசாவில் போர் நிறுத்தம் மற்றும் அங்கு பிடிக்கப்பட்டிருக்கும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வரும் நிலையில் நிரந்த போர் நிறுத்தம் அன்றி தற்காலி போர் நிறுத்தம் ஒன்றை ஹமாஸ் மூத்த அதிகாரி ஒருவர் நிராகரித்துள்ளார்.

‘போரை தற்காலிமாக நிறுத்தும் திட்டம், பின்னர் தாக்குதலை ஆரம்பிப்பதற்காகும். தற்காலிகமன்றி போரை முடிவுக்குக் கொண்டுவரும் நிரந்தர போர் நிறுத்தம் ஒன்றுக்கே ஹமாஸ் ஆதரவு அளிக்கிறது’ என்று ஹமாஸ் மூத்த தலைவர் தஹர் அல் நுனு ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்குத் தெரிவித்துள்ளார்.

காசா போர் நிறுத்தம் ஒன்றுக்கு மத்தியஸ்தம் வகிப்பவர்கள் ஒரு மாதத்திற்குக் குறைவான காலத்திற்கு போர் நிறுத்தத் திட்டம் ஒன்றை ஹமாஸிடம் முன்வைத்திருப்பதாக அது தொடர்பில் தெரிந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஏ.எப்.பி. செய்தி நிறுவனம் கடந்த புதன்கிழமை கூறி இருந்தது.

காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 41 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு மேலும் 131 பேர் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி காசாவில் கொல்லப்பட்ட பவஸ்தீனர்கள் எண்ணிக்கை 43,204 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 101,641 பேர் காயமடைந்துள்ளனர்.

இதேவேளை லெபனானை ஒட்டிய எல்லைக்கு அருகில் சிரியாவின் குசைர் பிராந்தியத்தில் இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதல்களில் மூவர் கொல்லப்பட்டதாக மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இதன்போதும் அங்குள்ள குடியிருப்பு பகுதிகள் மீது சரமாரித் தாக்குதல் இடம்பெற்றதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

சிரியா மீது இஸ்ரேல் கடந்த பல ஆண்டுகளாக தாக்குதல்களை நடத்தி வருவதோடு காசாவில் போர் வெடித்தது தொடக்கம் இந்தத் தாக்குதல்கள் தீவிரம் அடைந்துள்ளன.

ஈரானுடன் தொடர்புபட்ட இலக்குகள் மீது நடத்தப்படும் இந்தத் தாக்குதல்கள் தொடர்பில் இஸ்ரேல் வெளிப்படையாக எந்தக் கருத்தும் கூறுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மறுபுறம் தெற்கு லெபனானில் இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதல்களில் ஆறு லெபனான் சுகாதாரப் பணியாளர்கள் கொல்லப்பட்டு நால்வர் காயமடைந்ததாக லெபனான் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதன்மூலம் ஒக்டோபர் ஆரம்பம் தொடக்கம் இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்ட சுகாதார பணியாளர்களின் எண்ணிக்கை 178 ஆக அதிகரித்திருப்பதாகவும் மேலும் 279 பேர் காயமடைந்திருப்பதாகவும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கடந்த மாதத்தில் லெபனானில் ஹிஸ்புல்லா மற்றும் இஸ்ரேல் போரினால் நாளொன்றுக்கு குறைந்தது ஒரு குழந்தை கொல்லப்படுவதாக ஐக்கிய நாடுகள் சிறுவர் அமைப்பு தெரிவித்துள்ளது.

‘இந்த ஆண்டு ஒக்டோபர் 4 தொடக்கம் குறைந்தது ஒரு குழந்தை கொல்லப்பட்டு மற்றும் 10 குழந்தைகள் காயமடைந்துள்ளன’ என்று யுனிசெப் நிறுவனம் கூறியது.

‘லெபானின் தற்போதைய போர் குழந்தைகளின் உயிரைப் பறிப்பாதாக உள்ளது’ என்று அந்த நிறுவனம் கூறியது.

Share.
Leave A Reply

Exit mobile version