– படுகாயமடைந்த 27 பேர் வைத்தியசாலையில் அனுமதி

உத்தராகண்டில் 650 அடி ஆழ பள்ளத்தில் பஸ் கவிழ்ந்ததில் 36 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 27 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் முர்மு, பிரதமர் மோடி, மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

உத்தராகண்ட் மாநிலம் பவுரி கார்வால் மாவட்டம் நைனி தண்டாவில் இருந்து புறப்பட்ட ஒரு பஸ், நைனிடால் மாவட்டம் ராம்நகரை நோக்கி சென்று கொண்டிருந்தது.

40 பேர் பயணிக்கக் கூடிய அந்த பஸ்ஸில் 63 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது. நேற்று (04) காலை 7.00 மணி அளவில் அந்த பஸ் கீத் ஜாகிர் ஆற்றங்கரையில் அல்மோரா மாவட்டம் கூபி கிராமத்துக்கு அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த பஸ் அருகில் இருந்த சுமார் 650 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.

இதுகுறித்து அல்மோரா மாவட்ட பேரிடர் நிர்வாக அதிகாரி வினீத் பால் கூறும்போது, “பஸ் விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் உள்ளூர் பொலிஸார், மாநில பேரிடர் மீட்புப்படை, தேசிய பேரிடர் மீட்புப் படையினர்,

வருவாய் துறையினர், மருத்துவ குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். எங்களுடைய படையினரும் அவர்களுடன் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்” என்றார்.

இந்த விபத்தில் சிக்கிய பெண்கள், குழந்தைகள் உட்பட 36 பேர் சடலமாக மீட்கப்பட்டதாகவும், படுகாயமடைந்த 27 பேர் ராம்நகர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

படுகாயமடைந்தவர்களில் 5 பேர் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

இதனிடையே, மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி, பேரிடர் மேலாண்மை துறை செயலாளர், அல்மோரா மாவட்ட ஆட்சியர் தொலைபேசியில் தொடர்புகொண்டு இந்த விபத்து குறித்து கேட்டறிந்தார். அப்போது மீட்புப் பணிகளை விரைவுபடுத்துமாறு அவர் அதிகாரிகளிடம் உத்தரவிட்டார்.

இதனிடையே இந்த சம்பவம் குறித்து அப்பகுதி பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

43 பேர் பயணிக்கக் கூடிய பஸ்ஸில் 60இற்கும் மேற்பட்டோர் பயணித்ததும் விபத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடமையை செய்யத் தவறிய வட்டார போக்குவரத்து உதவி அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்யுமாறு முதல்வர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 4 இலட்சம் நிவாணரம் வழங்கப்படும் என முதல்வர் புஷ்கர் சிங் தாமி அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 இலட்சம் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

இதுதவிர இந்த விபத்து குறித்து நீதி விசாரணை நடத்த குமாவோன் மண்டல ஆணையருக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, அவர்களுடைய குடும்பத்தினருக்கு பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 இலட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் தனது எக்ஸ் பக்கத்தில், “அல்மோரா மாவட்டத்தில் நிகழ்ந்த பஸ் விபத்து வேதனை அளிக்கிறது.

இந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மீட்புப் பணிகளை விரைவாக மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தனது எக்ஸ் பக்கத்தில், “உத்தராகண்ட் விபத்தில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் உயிரிழந்த செய்தியை அறிந்து மன வேதனை அடைந்தேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

மேலும் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 

 

Share.
Leave A Reply

Exit mobile version