சுமார் 4000 சிங்கள பௌத்த தாய்மார்களுக்கு கருத்தடை செய்ததாக குற்றஞ்சுமத்தப்பட்டிருந்த குருணாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஷஹாப்தீன் மொஹமட் ஷாஃபியை அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிப்பதற்கு குருணாகல் பிரதம நீதவான் பந்துல குணரத்ன இன்று(06) உத்தரவிட்டுள்ளார்.

வைத்தியருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கத் தவறியமை மற்றும் வழக்கைத் தக்கவைக்க போதுமான உண்மைகள் இல்லாததால் சட்ட மாஅதிபரின் ஆலோசனையின் பிரகாரம் அவரை விடுவிப்பதாக நீதவான் குறிப்பிட்டார்.

சிசேரியன் சத்திரசிகிச்சையின் மூலம் பெருமளவான பெண்களை மலட்டுத்தன்மையடையச் செய்ததாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசேட வைத்திய நிபுணர்களின் அறிக்கைகளின் பிரகாரம், பிரதிவாதியான வைத்தியரின் சத்திரசிகிச்சையால் அவர்கள் மலட்டுத்தன்மைக்கு ஆளானார்கள் என்பதற்கு போதிய ஆதாரம் இல்லை என நீதவானின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குற்றஞ்சாட்டப்பட்ட வைத்தியர் மீது 768 பெண்கள் முறைப்பாடுகளை முன்வைத்தனர்.

இந்த விடயம் குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் மேற்கொண்ட விசாரணையின் போது, ​​வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள், குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்கள், சிற்றூழியர்கள் உள்ளிட்ட சுமார் 138 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.

சட்டத்தரணி மைத்திரி குணரத்ன உள்ளிட்ட சட்டத்தரணிகள் விசேட வைத்திய நிபுணர் சாஃபி சார்பில் ஆஜராகினர்.

nbsp;

Share.
Leave A Reply

Exit mobile version