நாமக்கல் அருகே ப்ளஸ் 1 மாணவிக்கு குழந்தை பிறந்த சம்பவத்தில் மாணவியின் உறவினர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில், அரசு மேல்நிலைப்பள்ளியில் ப்ளஸ் 1 பயிலும் மாணவி நேற்று முதல் நாள் பள்ளி வகுப்பறையில் திடீரென மயக்கம் ஏற்பட்டு விழுந்துள்ளார்.
உடனே அவரை ஆசிரியர்கள் மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர் மாணவி நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதாக கூறியுள்ளார்.
தொடர் சிகிச்சையில் மாணவிக்கு பெண் குழந்தை பிறந்தது. அதனைத் தொடர்ந்து மாணவி மற்றும் குழந்தைக்கு மேல்சிகிச்சை தேவைப்பட்டதால் திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட சைல்டு லைன் அலுவலர்கள், மருத்துவமனைக்கு நேரில் வந்து விசாரித்து, அதன்மூலம் திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதுகுறித்து காவல்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, “மாணவியின் உறவினர்தான் கர்ப்பத்திற்கு காரணம்.
மாணவி தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லாததால் கடந்த 2023 ஆம் ஆண்ட தனது உறவினர் வீட்டில் தங்கி அங்குள்ள அரசுப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துள்ளார்.
அப்போது, உறவினர் தங்கராஜ் வீட்டில் யாரும் இல்லாதபோது சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் சீண்டல் செய்துள்ளார். மேலும் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்ததும் அதனை களைப்பதற்கு பல மருந்துக்களை வாங்கிவந்து கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் தான் மாணவி அவரின் தொடர் டார்ச்சர் தாங்கமுடியாமல் ப்ளஸ் 1 வகுப்பு தனது சொந்த ஊரில் படிப்பதற்காக வந்துள்ளார்.
ஆனால் மாணவிக்கு தான் கர்ப்பமாக இருப்பது கூட தெரியாமல் இத்தனை நாட்களாக இருந்துள்ளார். நேற்று மாணவிக்கு திடீரென வயிறு வலி ஏற்பட்டு மயக்கமடைந்தார்.
சிகிச்சையில் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. உறவினர் தங்கராஜை போக்ஸோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம்” என்றார்.