கேரள செண்டை மேளம் முழங்க, ஆட்டம் பாட்டத்துடன் வான வேடிக்கை, கலர்ஃபுல் லைட் ஷோ பேப்பர் ஷாட் என பிரம்மாண்டமாக கண்டெய்னர் லாரியில் 350 சீர்வரிசை தட்டுகளுடன் மருமகளுக்கு தாய்மான் சீர்வரிசை கொண்டு சென்றுள்ளனர் தூத்துக்குடி தாய்மாமன்கள்.

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள சங்கரராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பவித் குமார் மற்றும் சூர்யா.‌ இவர்களது சகோதரி ஆனந்தியை விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரத்தைச் சேர்ந்த ஆசைத்தம்பி என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.

இந்த தம்பதிக்கு சபீஷ்னா என்ற மகள் உள்ளார். சபீஷ்னாவிற்கு பூப்புனித நீராட்டு விழா, நாகலாபுரத்தில் உள்ள அவர்களது இல்லத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு ஆனந்தியின் உடன்பிறந்த சகோதரர்களான பவித் குமார் மற்றும் சூர்யா இருவரும் தங்களது மருமகளின் பூப்புனித நீராட்டு விழாவில் தாய்மாமன் முறை சீர்வரிசையை சிறப்பாகச் செய்ய வேண்டும் என முடிவெடுத்து அமர்களப்படுத்தியுள்னர்.

சீர் வரிசை பொருட்கள்

பட்டுச்சேலை, தங்க நகை, வளையல், பித்தளை அண்டா, சில்வர் பாத்திரங்கள், இனிப்பு வகைகள், பழ வகைகள், அழகு சாதப் பொருள்கள் என பல பொருள்கள் அடங்கிய 350 தாம்பூலத் தட்டுகளை நீளமான கண்டெய்னர் லாரியில் ஏற்றிக்கொண்டு பட்டாசுகள் வெடித்து, வான வேடிக்கையுடன் கேரளா செண்டை மேளம் முழங்க தனது உறவினர்களுடன் உற்சாகமாக ஆட்டம் பாட்டத்துடன் நாகலாபுரத்தில் உள்ள சகோதரியின் வீட்டை நோக்கி ஊர்வலமாகச் சென்றனர்.

அவ்வாறு செல்லும் வழி நெடுகிலும் ஊர் மக்களின் கண்களை கவரும் வகையில் கலர் ஃபுல் லைட் ஷோ போட்டு அசத்தியுள்ளனர். இந்த தாய்மாமன் பிரதர்ஸ். வழக்கமாக சீர் வரிசை என்றாலே மதுரை,

தேனி பகுதியைத்தான் குறிப்பிட்டுச் சொல்வார்கள். இந்த நிலையில் அதற்கு சற்றும் குறைந்தவர்கள் இல்லை தூத்துக்குடி தாய் மாமன்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் இவர்கள் செய்த சம்பவம் இப்பகுதி மக்களிடையே மிகுந்த கவனத்தை பெற்றுள்ளது.

கண்டெய்னர் லாரியில் சீர் வரிசை பொருட்கள்

ஆடுகளை கையில் பிடித்துக் கொண்டு சீர்வரிசையுடன் வீட்டிற்கு வந்த தாய்மாமன்மார்களுக்கு பாத பூஜை செய்து, மாலையிட்டு ஆரத்தி எடுத்து இன்முகத்துடன் வரவேற்றனர் ஆசைத்தம்பி – ஆனந்தி தம்பதியினர்.

பின்னர், தங்களது மருமகளுக்கு சடங்குகள், சம்பிரதாயங்களை செய்த தாய்மாமன்கள் சபீஷ்னாவிற்கு தங்க செயின் அணிவித்து தங்களது உரிமையை விட்டுக்கொடுக்காமல் சிறப்பாக செய்த அசத்தினர்.

பெரும்பாலும் இது போன்ற நிகழ்ச்சிகளில் தாய்மாமன்கள் மேளதாளங்களுடன் சீர்வரிசை எடுத்துச் செல்வதை மட்டுமே கண்ட இப்பகுதி மக்கள் கண்டெய்னர் லாரியில் சுமார் ரூ.10 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருள்களை சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் ஊர்வலமாக கொண்டு சொல்லப்பட்டதை வியப்புடன் பார்த்து ரசித்தனர்.

“ இன்றைய நவீன காலத்தில் நாளுக்குநாள் கலாச்சாரமும், தமிழரின் பாரம்பரியமும் மறைந்து கொண்டே வருகிறது. இந்தச் சூழ்நிலையில் இன்றளவும் இது போன்ற ஒரு சில நிகழ்ச்சிகள் மூலமாக ஆங்காங்கே தமிழரின் பண்பாடு மேலோங்கி காணப்படுகிறது.

அந்த வகையில் நாகலாபுரத்தில் இன்று தாய்மாமன்கள் தனது மருமகளுக்கு 350 தாம்பூல தட்டுகளில் சீர் கொண்டு சென்றது மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக அமைகிறது” என்று ஊர்மக்கள் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version