கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை திங்கட்கிழமை (25) ஆரம்பமாகவுள்ள நிலையில் அதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. திங்கள் ஆரம்பமாகும் பரீட்சை டிசம்பர் 20 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
இது தொடர்பில் பரீட்சை திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
உயர்தர பரீட்சையை ஒத்தி வைக்குமாறு பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. எவ்வாறாயினும், வினாத்தாள்கள் அச்சிடுதல், பிராந்திய சேகரிப்பு மையங்களை நிறுவுதல், பரீட்சை மையங்களை அமைத்தல் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன.
உயர்தரப் பரீட்சை அட்டவணை கடந்த மார்ச் மாதம் 1 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் மற்றும் பாடசாலைகளுக்கு பரீட்சைக்கு தயார்படுத்துவதற்கு போதுமான நேரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த கட்டத்தில் ஒரு மாற்றம், தேசிய தேர்வு நாட்காட்டியில் குறிப்பிடத்தக்க இடையூறுகளை ஏற்படுத்தும். குறிப்பாக சாதாரண தர பரீட்சையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
எனவே தற்போது உயர்தர பரீட்சையை காலம் தாழ்த்தி, பின்னர் மீண்டும் திட்டமிடுவது பரவலான தளவாடச் சிக்கல்களை உருவாக்கும் மற்றும் இலங்கையின் கல்வி முறையின் சுமூகமான செயல்பாட்டை பாதிக்கும். இந்தக் காரணிகளின் அடிப்படையில், உயர்தரப் பரீட்சை திட்டமிட்டபடி நடைபெறும் என்று கல்வி அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.