மெக்காவில் முஸ்லிம்களின் புனித இடத்தை ஆயுதக் குழுவினர் கைப்பற்றிய போது நடந்தது என்ன?

நவம்பர் 20, 1979. மொஹரத்தின் முதல் நாள் அன்று பாகிஸ்தான், இந்தோனீசியா, மொராக்கோ, ஏமன் நாட்டு யாத்ரீகர்களாலும் உள்ளூர் மக்களாலும், மெக்காவின் மிகப் பெரிய மசூதி நிரம்பி வழிந்தது.

தலையில் சிவப்பு வண்ணக் கட்டம் போட்ட துணி கட்டிய ஆயுதக் குழுவினரும் இந்தக் குழுவில் இருந்தனர்.

அவர்களில் சிலர் பல நாட்களாக அங்கே தங்கியிருந்து மசூதியை கண்காணித்து வந்தனர்.

பாதுகாப்புப் படையினருக்கு அவர்கள் மீது சந்தேகம் வரக்கூடாது என்பதற்காகச் சிலர் தங்கள் மனைவி, குழந்தைகளுடன் காரில் சம்பவ நாளன்று மெக்காவுக்கு வருகை புரிந்தனர்.

இவர்களில் பெரும்பாலானவர்கள், பெடோயின்கள் என்று அழைக்கப்படும் சௌதி நாடோடிகள்.

♠மெக்கா: இஸ்லாமை எதிர்த்த நகரம் அதே இஸ்லாமின் மையமாக உருவெடுத்தது எப்படி?

மசூதியில் ஃபஜ்ர் தொழுகை ஆரம்பமானது. பிறகு இமாமின் குரல் மைக்கில் எதிரொலித்தது. அப்போது நேரம் காலை 5:18 மணி.

‘யாரோஸ்லாவ் ட்ரோஃபிமோவ்’ , தனது ‘The Siege of Mecca: The Forgotten Uprising in Islam’s Holiest Shrine’ என்ற நூலில் இந்தச் சம்பவத்தைப் பற்றி எழுதியுள்ளார்.

“ தொழுகைக்குப் பிறகு, இமாம் கல்மா ஓதத் தொடங்கியவுடன், தோட்டாக்களின் சத்தம் கேட்டது. கையில் துப்பாக்கியுடன் ஒரு இளைஞர் காபாவை நோக்கி வேகமாகச் செல்வதை மக்கள் கண்டார்கள்” என அவர் எழுதியுள்ளார்.

பின்னர் இரண்டாவது தோட்டாவின் சத்தம் கேட்டது.

மசூதிக்கு வெளியே தானியங்களைக் கொத்திக் கொண்டிருந்த நூற்றுக்கணக்கான புறாக்கள், அந்தச் சத்தத்தைக் கேட்டதும் வேகமாக பறந்தன.

 

தாக்குதல் தலைவர் ஜோஹெமன் அல் உதைபி


ஜோஹெமன் அல் உதைபி

வெளிநாட்டில் இருந்து வரும் பக்தர்களைக் கட்டுப்படுத்த மசூதியில் இருந்த போலீசார் ஆயுதங்கள் என்ற பெயரில் சிறிய தடிகளை வைத்திருந்தனர். வாயில்களில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு காவலாளிகளும் சுடப்பட்டவுடன், போலீசார் அங்கிருந்து மறைந்துவிட்டனர்.

அங்கு சலசலப்பு ஏற்பட்ட சற்று நேரத்தில், தாக்குதல் நடத்தியவர்களின் தலைவரான ஜோஹெமன் அல் உதைபி முன் வந்தார்.

“பெடோயின் நாடோடியான 43 வயது ஜோஹெமன், கருப்பு நிற கண்களுடன், தோள்பட்டை வரை முடி வளர்த்திருந்தார். தலை முடி அவரது கருப்பு தாடியுடன் கலந்திருந்தது. ஒல்லியாக இருந்தாலும், அவரது ஆளுமையில் அதிகாரம் தெரிந்தது. முழங்காலுக்குக் கீழ் வரை செல்லும் வெள்ளை நிற பாரம்பரிய சௌதி உடையை அணிந்திருந்தார்” என சௌதி அரேபியாவில் தடைசெய்யப்பட்ட, ‘உண்மைக்கும் பொய்க்கும் இடையிலான நிகழ்வுகள்’ எனும் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

அவர் தலையில் எதுவும் அணியவில்லை, ஆனால் அவரது முடி பறக்காமல் இருக்க பச்சை நிற பேண்ட் கொண்டு அதைக் கட்டியிருந்தார். கைத்துப்பாக்கிகள் மற்றும் கத்திகளை ஏந்திய மூன்று நபர்கள் அவருடன் நடந்து கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் புனித காபாவையும், மசூதியின் இமாமையும் நோக்கி விரைந்தனர்.

 

மசூதியின் எல்லா வாயில்களும் மூடப்பட்டன


குண்டுவெடிப்பின் போது மசூதிக்கு அருகில் காணப்பட்ட புகை மூட்டம் (கோப்பு படம்)

ஜோஹெமனை இமாம் கண்டபோது , சில நாட்களுக்கு முன்பு இஸ்லாம் பற்றிய ஜோஹெமனின் உரையில் இமாமும் அவரது தோழர்களும் இருந்ததை அவர் நினைவு கூர்ந்தார்.

“சில நொடிகளுக்குப் பிறகு, ஜோஹெமன் இமாமை தள்ளிவிட்டு மைக்கை கைப்பற்றினார். இமாம் மீண்டும் மைக்கை பறிக்க முற்பட்டபோது, தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் தனது முழு வலிமையையும் கொண்டு அவரது முகத்தில் குத்தினார்” என யாரோஸ்லாவ் ட்ரோஃபிமோவ் எழுதியுள்ளார்.

இந்தக் காட்சியைப் பார்த்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், தங்களது காலணிகளை கையில் தூக்கிக்கொண்டு வெளி வாயில்களை நோக்கி ஓடினர். ஆனால் வாயில்களுக்கு அருகில் சென்றபோது, 51 வாயில்களும் மூடப்பட்டிருப்பதைக் கண்டனர்.

பதற்றத்தில் அனைவரும் ‘அல்லாஹு அக்பர்’ என்று சத்தமாக ஒரே குரலில் கத்த ஆரம்பித்தனர். துப்பாக்கி ஏந்தியவர்களும் அந்தக் குரலுடன் இணைந்து கொண்டனர். காபா வளாகம் முழுவதும் இந்தக் குரலால் எதிரொலித்தது.

கோபுரங்களில் ஏறிய தாக்குதல் குழுவினர்

தாக்குதல் நடத்தியவர்கள் சுற்றியுள்ள கோபுரங்களின் மீது ஏறி ஆங்காங்கே நின்றுக் கொண்டனர்

சத்தம் குறைந்தவுடன், ஜோஹெமன் தனது ஆயுதக் குழுவினருக்கு ஒலிப்பெருக்கி மூலம் அறிவுரைகளை வழங்கத் தொடங்கினார். அவரது குரலைக் கேட்டவுடன், அவரது குழுவினர் வளாகம் முழுவதும் பரவி, மசூதியின் ஏழு மினாரட்டுகளில் (கோபுரங்களில்) இயந்திரத் துப்பாக்கிகளைப் பொருத்தினர்.

சிக்கிக்கொண்ட யாத்ரீகர்கள் தாக்குதல் நடத்தியவர்களுக்கு உதவ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அங்கு விரிக்கப்பட்டிருந்த கம்பளங்களை எடுத்து, சங்கிலியால் கட்டப்பட்ட வாயில்களுக்கு அருகில் நிறுத்தி வைக்குமாறு சில யாத்ரீகர்களிடம் கூறப்பட்டது.

வலிமையானவர்கள் கோபுரங்களில் ஏறி உணவு மற்றும் ஆயுதங்களை வழங்குமாறு துப்பாக்கி முனையில் கேட்டுக் கொள்ளப்பட்டனர். தாக்குதல் நடத்தியவர்கள் இஸ்லாத்தின் புனித இடத்தை மிகக் குறுகிய நேரத்தில் கைப்பற்றினர்.

இந்த மினாரட்டுகளின் உயரம் 89 மீட்டர் (292 அடி). அங்கிருந்து முழு மெக்காவையும் கண்காணிக்க முடியும்.

“அரசாங்க அதிகாரி யாரேனும் உங்களுக்கு எதிராகக் கையை உயர்த்துவதைக் கண்டால், அவருக்கு இரக்கம் காட்டாதீர்கள், அவரைச் சுடத் தயங்காதீர்கள்” என ஜோஹெமன் கட்டளையிட்டார்.

பணயக் கைதிகளாக அங்கே இருந்த பலருக்கும் அரபி மொழி புரியவில்லை. உள்ளூர் மக்களிடம் இந்த விஷயத்தை விளக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

தாக்குதல் நடத்தியவர்கள், இந்திய மற்றும் பாகிஸ்தான் யாத்ரீகர்கள் இருந்த குழுவை மசூதியின் ஒரு மூலையில் நிற்கச் செய்தனர். உருது மொழி பேசும் ஒருவர் அந்த அறிவிப்பை உருது மொழியில் மொழிபெயர்க்கத் தொடங்கினார்.

ஆப்பிரிக்க யாத்ரீகர்களுக்கு புரிவதற்காக ஆங்கில மொழிபெயர்ப்பாளர் ஏற்பாடு செய்யப்பட்டார்.

“தாக்குதல் நடத்தியவர்கள் மெக்கா, மதீனா மற்றும் ஜெடாவை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததாக மசூதியின் ஒலிப்பெருக்கிகள் மூலம் அறிவித்துள்ளதாக” சௌதி அரேபியாவுக்கான அமெரிக்க தூதர் ஜான் சி வெஸ்ட், அமெரிக்க வெளியுறவுத்துறைக்கு ஒரு தந்தி அனுப்பினார்.

 

அழிவு நாள் நெருங்கிவிட்டது

தாக்குதல் நடத்தியவர்கள் மசூதியின் ஒலிப்பெருக்கி மூலம் உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களுக்கு ஒரு பழைய தீர்க்கதரிசனத்தை ஒலிபரப்பினர் : “அழிவு நாள் வந்துவிட்டது, மஹ்தி வந்துவிட்டது”

அடுத்த ஒரு மணிநேரத்தில், தாக்குதல் நடத்தியவர்கள் மசூதியின் ஒலிப்பெருக்கி மூலம் உலகம் முழுவதும் உள்ள ஒரு பில்லியன் முஸ்லிம்களுக்கு ஒரு பழைய தீர்க்கதரிசனத்தை ஒலிபரப்பினர்.

“அழிவு நாள் வந்துவிட்டது, மஹ்தி வந்துவிட்டது” என்று அதில் கூறப்பட்டது.

துப்பாக்கிச் சூட்டுக்கு மத்தியில் இந்த அறிவிப்பு முடிந்ததும் மெக்காவின் மையப் பகுதி முழுவதும் அச்சம் நிலவியது. இதைக் கேட்டு மசூதிக்கு வெளியே வேலை பார்த்தவர்கள் அங்கிருந்து ஓடினர்.

சௌதி அரேபியாவிலும் அதற்கு வெளியிலும் வாழும் முஸ்லிம்கள் இந்த அறிவிப்பைக் கேட்டு மிகவும் வருத்தமடைந்தனர்.

“ஜோஹெமனும் அவரது கூட்டாளிகளும் வெளியே நின்று கொண்டிருந்த காவலர்களுக்கு 40 ஆயிரம் ரியால்கள் லஞ்சம் கொடுத்தனர்.

அதன் மூலம், உணவுப் பொருட்களாலும் ஆயுதங்களாலும் நிரப்பப்பட்ட மூன்று டொயோட்டா டாட்சன் மற்றும் ஜிஎம்சி டிரக்குகள் மசூதிக்குள் எளிதாக நுழைய முடிந்தது. இந்த டிரக்குகள் மசூதியின் அடித்தளத்தில் நிறுத்தப்பட்டு இருந்தன” என்று சௌதி இளவரசர் ஃபஹத், லெபனானின் ‘அல் சஃபிர்’ நாளிதழுக்குப் பின்னர் அளித்த பேட்டியில் கூறினார்.

மஹ்தியின் வருகை

கைது செய்யப்பட்ட பிறகு தாக்குதல் நடத்திய மஹ்தியின் கூட்டாளிகள் (கோப்பு படம்)

மசூதி கைப்பற்றப்பட்டதும், மசூதியின் ஒவ்வொரு நுழைவாயிலையும் தனது ஆட்கள் கட்டுப்படுத்தியிருப்பதை ஜோஹெமன் உறுதி செய்தார்.

அப்போது அங்கு இருந்தவர்களிடம் நீண்ட காலமாகக் காத்திருந்த மஹ்தி இப்போது வந்துவிட்டார். அவரது பெயர் முகமது அப்துல்லா அல் குரேஷி என்று ஜோஹெமன் கூறினார்.

உண்மையில், அழிவு நாளுக்கு முன் அநீதியை ஒழிக்கவும், ‘உண்மையான மதத்தை’ மீண்டும் நிறுவவும் மஹ்தி பூமிக்கு வருவார் என்று ஒரு நம்பிக்கை உள்ளது.

“ஜோஹெமனின் துப்பாக்கி ஏந்திய கூட்டாளிகள் அனைவரும் முகமது அப்துல்லாவின் கையை முத்தமிட்டு அவருக்கு விசுவாசமாக இருப்போம் எனச் சத்தியம் செய்தனர்.

அதன் பிறகு, துப்பாக்கிகள் நிரப்பப்பட்ட பெட்டியை வளாகத்தின் மையத்திற்குக் கொண்டு வந்தனர். அவர்கள் அதைத் தங்களது தோழர்கள் மற்றும் தாக்குதலை ஆதரிக்க முடிவு செய்த யாத்ரீகர்களிடையே விநியோகித்தனர்” என்று யாரோஸ்லாவ் ட்ரோஃபிமோவ் எழுதியுள்ளார்.

ஆயுதங்கள் தவிர, குவைத்தில் அச்சிடப்பட்ட, ஜோஹெமென் எழுதிய கட்டுரைகள் அடங்கிய பிரசுரங்கள் மக்களிடையே விநியோகிக்கப்பட்டன.

“இந்தத் தாக்குதலின் பின்னணியில் இரான் உள்ளதா?” என்று சில யாத்ரீகர்கள் அப்துல்லாவிடம் கேட்டனர். அவர் ‘இல்லை’ என்று ஒரே வார்த்தையில் பதிலளித்தார்.

 

தாக்குதலுக்கு ஆளான போலீசார்

மெக்கா

எட்டு மணியளவில் மெக்கா போலீஸ் இதற்கு எதிர்வினையாற்றியது. அந்த இடத்திற்கு போலீஸ் ஜீப் அனுப்பப்பட்டது.

கேட் அருகே ஜீப் வந்தவுடன், தோட்டாக்கள் அதன் மீது பாயத் தொடங்கின. கோபுரத்தின் உச்சியில் இருந்து பாய்ந்து வந்த தோட்டாவால் ஜீப்பின் கண்ணாடி உடைந்தது. ஜீப் ஓட்டுநர் காயமடைந்து ஜீப்பில் இருந்து கீழே விழுந்தார்.

சிறிது நேரம் கழித்து, மசூதியின் இரண்டாவது வாயிலுக்கு ஒரு பெரிய ஜீப் அனுப்பப்பட்டது. மினாரட்டுகளில் இருந்து தாக்குதல் நடத்தியவர்கள், இந்த ஜீப்பின் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இந்தத் தாக்குதலில், 8 போலீசார் சம்பவ இடத்திலேயே பலியாகினர், 36 பேர் காயமடைந்தனர். போலீசார் தங்கள் வாகனங்களை விட்டுவிட்டு மசூதியின் வெளிப்புறச் சுவர்களின் வழியே ஓடினர்.

தாக்குதல் நடத்தியவர்கள் மசூதிக்குள் நுழையும்போது, சௌதி மன்னர் காலித், ரியாத்தில் உள்ள தனது அரண்மனையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் இளவரசர் ஃபஹத் நாட்டில் இல்லை. பல மைல் தொலைவில் இருந்த துனிஸில் உள்ள ஒரு ஹோட்டலில் தூங்கிக் கொண்டிருந்தார்.

தேசிய காவல் படைத் தளபதி இளவரசர் அப்துல்லாவும், அப்போது சௌதி அரேபியாவில் இல்லை. மொராக்கோவில் விடுமுறையைக் கழித்துக் கொண்டிருந்தார்.

 

வெளி உலகுடனான தொடர்பை இழந்தது சௌதி அரேபியா

 இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, செளதி அரேபியாவில் முழுமையாக தகவல் தொடர்பு முடக்கப்பட்டது

மெக்கா மற்றும் மதீனா மசூதியின் பொறுப்பாளரான ஷேக் நாசர் இபின் ரஷீத் என்பவரால் இந்தத் தாக்குதல் குறித்து கலீத்துக்கு முதலில் தெரிவிக்கப்பட்டது.

சௌதி அரேபியாவிற்கு வரும் சர்வதேச தொலைபேசி அழைப்புகளைக் கையாளும் கனடிய நிறுவனத்திற்கு “முழுமையான தகவல் தொடர்பு முடக்கத்தை அமல்படுத்த” பிற்பகலில் உத்தரவிடப்பட்டது.

இதன் விளைவாக சௌதி அரேபியாவை யாராலும் தொடர்புகொள்ள முடியவில்லை. அங்கு தந்தி அனுப்பவும் முடியவில்லை.

இதன் மூலம், சௌதியை சாராத மக்களுக்கு சௌதியின் எல்லைகள் மூடப்பட்டன. சௌதி அரேபியாவுக்கு வெளி உலகத்துடனான தொடர்பு கிட்டத்தட்ட துண்டிக்கப்பட்டது.

சௌதி அரேபியாவின் வானொலி மற்றும் தொலைக்காட்சியில் இந்தச் சம்பவம் குறித்து எந்தச் செய்தியும் ஒளிபரப்பப்படவில்லை.

இதற்கிடையில், சௌதி ராணுவ வீரர்களுக்கும், தாக்குதல் நடத்தியவர்களுக்கும் இடையே அவ்வப்போது துப்பாக்கிச் சூடு நடந்து வந்தது. தாக்குதல் நடத்தியவர்களில் பெரும்பாலானோர் மசூதியின் தரைத்தளத்திற்கு அனுப்பட்டனர்.

அப்துல்லா மசூதியின் மேற்பகுதியிலேயே இருந்தார். கிரெனேட் எனப்படும் கையெறி குண்டுகளை வீசி, எதிரில் இருந்த தடைகளை சௌதி வீரர்கள் அகற்றிக் கொண்டிருந்தனர்.

வரோஸ்லாவ் ட்ரோஃபிமோவ், “கிரெனேட் குண்டு வந்து தரையில் விழும் சத்தம் கேட்டவுடன், அப்துல்லா உடனடியாக ஓடிச் சென்று, அதே குண்டை எடுத்து மீண்டும் சௌதி வீரர்களை நோக்கி வீசுவார்.

ஆனால் அதிர்ஷ்டம் அவருக்குக் கைகொடுக்கவில்லை. தொடர்ந்து குண்டுகளை இவ்வாறு திருப்பி எறிய முற்படும்போது, ஒரு கிரெனேட் குண்டு வெடித்தது. அதில் அப்துல்லா உடல் சிதறி இறந்தார். கடைசி நேரத்தில் அவருக்கு உதவ யாரும் வரவில்லை,” என்று எழுதியுள்ளார்.

கமாண்டோக்களை அனுப்பிய பிரான்ஸ்

சௌதி அரேபியாவின் வேண்டுகோளுக்கு இணங்க, பிரான்சின் GIGN கமாண்டோக்கள் சௌதி துருப்புகளுக்கு உதவ அனுப்பப்பட்டனர்.

சௌதி அரேபியாவின் வேண்டுகோளுக்கு இணங்க, பிரான்சின் GIGN கமாண்டோக்கள் சௌதி துருப்புகளுக்கு உதவ அனுப்பப்பட்டனர். ஆயுதக் குழுக்களைச் சமாளித்த அனுபவம் அவர்களுக்கு இருந்தது.

கடந்த 1976ஆம் ஆண்டு, ஜிபூட்டியில் ஆயுதக் குழுக்களிடம் இருந்து குழந்தைகள் நிறைந்த பள்ளிப் பேருந்தை மீட்டனர். கமாண்டோக்கள் முதலில் ஆயுதக் குழுவினருக்கு போதைப்பொருள் கலந்த உணவைக் கொடுத்துவிட்டு, பின்னர் அவர்களைச் சுட ஆரம்பித்தனர்.

கமாண்டோக்களின் இந்த நடவடிக்கையால் அனைத்துக் குழந்தைகளும் காப்பாற்றப்பட்டனர்.

சௌதியின் வேண்டுகோளுக்குப் பிறகு, பிரெஞ்சு அதிபர் வலேரி கிஸ்கா டி எஸ்ட், சௌதி அரேபியாவிற்கு அனைத்து உதவிகளையும் வழங்க GIGN தலைவர் கிறிஸ்டியன் ப்ரொய்டியாவுக்கு உத்தரவிட்டார்.

இந்த நடவடிக்கையின் பொறுப்பை பால் பேரிலிடம் ப்ரொய்டியா ஒப்படைத்தார். இதற்கு கண்ணீர் புகைக்குப் பதிலாக ரசாயனத்தை பயன்படுத்தத் திட்டமிட்டார். பயிற்சியின்போது அதைத் தன் மீதே பயன்படுத்தி பார்த்தார். அந்தப் பயிற்சியின்போது, கண் பார்வை பறி போகாமல் நூலிழையில் தப்பினார்.

ரகசியமாக வந்த கமாண்டோக்கள்

பேரிலின் குழுவினர் மிஸ்டெரி-20 (Mystere-20) விமானத்தில் ஏறி சைப்ரஸ் வழியாக ரியாத்தை அடைந்தனர்.

பிரான்ஸ் ஒரு பெரிய குழுவை இந்தத் திட்டத்திற்கு அனுப்பும் என்று சௌதி எதிர்பார்த்தது. ஆனால் பேரிலின் குழுவில் மூன்று பேர் மட்டுமே இருந்ததைக் கண்டு சௌதி அதிர்ச்சியடைந்தது.

“ரகசியத்தைப் பாதுக்காக்க, நானும் எனது தோழர்களும் எங்கள் பாஸ்போர்ட்களை பிரெஞ்சு தூதரகத்திடம் ஒப்படைக்க வேண்டியிருந்தது. நாங்கள் சாதாரண மக்களைப் போல பெல் பாட்டம் மற்றும் கவ்பாய் பெல்ட் அணிந்திருந்தேன்,” என்று பால் பேரில் பின்னர் ‘வெரி ஸ்பெஷல் மிஷன்ஸ்’ என்ற தனது சுயசரிதையில் எழுதினார்.

மேலும், தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அவர்களிடம் எந்த ஆயுதங்களும் இல்லை என்றும், சௌதியின் தொலைபேசிகளை நம்பியிருப்பதைத் தவிர அவர்களது அதிகாரிகளுடன் தொடர்புகொள்ள வேறு எந்த வழியும் இல்லை என்றும் பால் பேரில் தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்.

“வெளி உலகைப் பொறுத்த வரை, நாங்கள் மூன்று தொழிலதிபர்கள். ஆனால் பரந்த எங்களது தோள்களும், உடலும் வேறு கதையைக் கூறின” என்று எழுதியுள்ளார் அவர்.

நள்ளிரவில் பிரெஞ்சு கமாண்டோ குழு தைஃப் ராணுவ விமான நிலையத்தில் தரையிறங்கியது. அவர் தாஃப்பில் உள்ள இன்டர்காண்டினென்டல் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டார்.

ஒரு டன் ரசாயன வாயு கேட்ட கமாண்டோக்கள்

அடுத்த நாளில் இருந்து, சௌதி கமாண்டோக்களுக்கு பேரில் பயிற்சி அளிக்க ஆரம்பித்தார். தானே மெக்காவுக்கு சென்று மசூதிக்கு ராணுவ நடவடிக்கைக்குத் தலைமை தாங்குவார் என்று பேரில் நம்பினார்.

ஆனால், “மற்ற மதங்களைச் சேர்ந்தவர்கள் அங்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். நீங்கள் மெக்காவிற்கு செல்ல விரும்பினால், இஸ்லாத்தை ஏற்க வேண்டும்” என்று ஒரு சௌதி அதிகாரி கூறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

“நான் ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவராக இருந்தேன். அப்போது இஸ்லாம் பற்றி எதுவும் தெரியாது. ஆனால் நான் உடனே, பணியை முடிக்க வேண்டும் என்றால் மதம் மாறுவதில் ஆட்சேபனை இல்லை என்று சொன்னேன்” என்று பேரில் தனது சுயசரிதையில் எழுதியுள்ளார்.

ஹோட்டலை அடைந்ததும், பேரில் தனக்குத் தேவைப்படும் பொருட்களின் பட்டியலைத் தனது தலைமை அதிகாரிக்கு அனுப்பினார்.

அந்தப் பட்டியலில் ஃபிளாக் ஜாக்கெட்டுகள், கையெறி குண்டுகள், ஸ்னைப்பர் துப்பாக்கிகள், ஃபீல்ட் ரேடியோக்கள், இரவுப் பார்வை கண்ணாடிகள் மற்றும் ஒரு டன் ரசாயன வாயு ஆகியவை இருந்தன.

ரசாயன வாயுவின் அளவைக் கேட்டு ப்ரோட்டியா ஆச்சரியப்பட்டார். ஏனெனில் இவ்வளவு அதிகமான ரசாயனங்களை வைத்து முழு நகரத்தையும் கட்டுக்குள் கொண்டு வர முடியும்.

“தடை இருந்தபோதிலும், பேரிலும் அவரது இரண்டு தோழர்களும் மெக்காவிற்கு சென்றது மட்டுமல்லாமல், தாக்குதலுக்கு முன் மசூதிக்குள் நுழைந்தனர்” என யாரோஸ்லோவ் ட்ரோஃபிமோவ் எழுதியுள்ளார்.

எப்படி இருந்தாலும் இந்த நடவடிக்கையில், உபகரணங்களை வழங்குவது மற்றும் சௌதி கமாண்டோக்களுக்கு, தைஃபில் பயிற்சி அளிப்பது மட்டுமே, தங்களின் பங்கு என்று பிரான்ஸ் பின்னர் தெளிவுபடுத்தியது.

அவர்களைப் பொறுத்தவரை, பேரிலும் அவரது தோழர்களும் தாக்குதல் நடவடிக்கையின்போது புனித பூமியான மெக்காவில் இருக்கத் தேவையில்லை.

பேரிலின் திட்டத்தைத் தொடர்ந்து, பாகிஸ்தானிய மற்றும் துருக்கிய தொழிலாளர்கள் மசூதியின் மேற்பரப்பில் துளைகளை உருவாக்கத் தொடங்கினர். பிரான்ஸ் வழங்கிய முகமூடிகள் மற்றும் ரசாயன உடைகளை அணிந்த சௌதி வீரர்கள் ரசாயன குப்பிகளைச் சுட்டனர்.

ரேடியோ அமைப்பு சரியாக வேலை செய்யாததால், முதல் வெடிச் சத்தம் கேட்டவுடன் ரசாயன வாயு லாஞ்சர்களை பயன்படுத்த ராணுவ வீரர்களுக்கு உத்தரவிடப்பட்டது. ரசாயன வாயு உடனடியாக அதன் விளைவை ஏற்படுத்தியது. தாக்குதல் நடத்தியவர்கள் நச்சு நிறைந்த ரசாயனப் புகையால் சூழப்பட்டனர்.

எதிர்பார்த்ததைப் போலவே, ரசாயனப் புகை ஆயுதக் குழுவினரை நிலைகுலையச் செய்தது. சௌதி வீரர்கள் தடைகளையும் கம்பிகளையும் உடைத்து மசூதிக்குள் நுழைந்தனர்.

உள்ளே நுழைந்த சௌதி வீரர்கள், மசூதியின் ஒவ்வோர் அறையாகத் தேடத் தொடங்கினர். 40 பேர் கொண்ட சௌதி பாதுகாப்பு குழுவினரிடம் அங்கு உயிருடன் பிடிபட்டவர்கள் ஒப்படைக்கப்பட்டனர்.

ஜோஹெமன் கைது

இந்த முழு தாக்குதலில், 75 ஆயுதக் குழுவினர் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்திய 170 பேர் கைது செய்யப்பட்டனர்.

டிசம்பர் 4 அன்று, “அல்லாஹ்வின் கிருபையால், அதிகாலை 1:30 மணியளவில் மசூதி ஆயுதக் குழுவினரிடம் இருந்து விடுவிக்கப்பட்டதாக” உள்துறை அமைச்சர் ஷாஜாதே நயிஃப் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

சௌதி அரேபிய வீரர்கள் வெடிபொருட்களை வைத்து அறைகளின் கதவுகளை உடைத்தனர். இரவு நெருங்கியதும், கேப்டன் அபு சுல்தான் தலைமையில் பாராசூட் படையினர் தங்களது நடவடிக்கையைத் தொடங்கினர்.

“நாங்கள் ஒருவரைக் கண்டோம். அவர் தாடி வரை வளர்ந்திருந்த சிக்குப் பிடித்த தலைமுடியுடன் இருந்தார் . அவருக்கு அருகே ஆயுதப் பெட்டிகளும், பானைகளில் பேரீச்சம் பழங்களும், சில பிரசுரங்களும் கிடந்தன.”

“அவருக்கு நோக்கித் துப்பாக்கியைக் காட்டி, ‘உன் பெயர் என்ன?’ என்று கேட்டேன். அவர் மெல்லிய குரலில், ‘ஜோஹெமன்’ என்று பதிலளித்தார்,” என கேப்டன் அபு சுல்தான் பின்னர் ஒரு நேர்காணலில் கூறினார்.

தங்கள் வீரர்கள் ஜோஹெமனை கொன்றுவிடக்கூடும் என்பதால் கவனமாக இருந்ததாக கூறியுள்ளார் கேப்டன் அபு சுல்தான்.

“இரண்டு அதிகாரிகளுடன் அவரைச் சுற்றி வளைத்து, மேலே அழைத்து வந்து அங்கே நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்சில் உட்கார வைத்தேன். ஆம்புலன்ஸ் அவரை அங்கிருந்து நேராக மெக்கா ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றது. ஏன் இப்படிச் செய்தாய் எனக் கேட்டதற்கு, ‘இது அல்லாஹ்வின் விருப்பம்’ என்பதுதான் ஜோஹெமனின் பதில்.

ஒரு சௌதி சிப்பாய் ஜோஹெமனின் தாடியை இழுத்தார். இதைப் பார்த்த அங்கிருந்த இளவரசர் ஒருவர் ராணுவ வீரரிடம் அவ்வாறு செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.
63 பேருக்கு மரண தண்டனை

இந்த முழு தாக்குதலில், 75 ஆயுதக் குழுவினர் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்திய 170 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஜனவரி 9, 1980இல், இவர்களில் 63 பேருக்கு சௌதி சட்டப்படி மரண தண்டனை விதிக்கப்பட்டது. மெக்காவில் முதலில் தலை துண்டிக்கப்பட்டவர் ஜோஹெமன்.

சில நிமிடங்களுக்குப் பிறகு, அப்துல்லாவின் சகோதரர் சயீத்துக்கும் அதே இடத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் 39 சௌதி அரேபியர்கள், 10 எகிப்தியர்கள் மற்றும் 6 ஏமன் நாட்டவர்கள் இருந்தனர்.

கட்டுரை தகவல்
எழுதியவர், ரெஹான் ஃபசல்
 பிபிசி

 

Share.
Leave A Reply

Exit mobile version