டெல்லி முழுவதும் உள்ள 40 க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு இன்று திங்கள்கிழமை காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. பொலிஸார் அதிக உஷார் நிலையில் உள்ளனர். மாணவர்கள் பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

டிபிஎஸ், ஆர் கே புரம், டிபிஎஸ் வசந்த் குஞ்ச், ஜி.டி கோயங்கா, பஸ்சிம் விஹார், தி பிரிட்டிஷ் பள்ளி, சல்வான் பப்ளிக் பள்ளி, மாடர்ன் பள்ளி, கேம்பிரிட்ஜ் பள்ளி மற்றும் பல டிஏவி பள்ளிகள் உள்ளிட்ட பள்ளிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில் மின்னஞ்சல்கள் வந்தன.

காலை 6.15 மணிக்கு ஜிடி கோயங்கா பஸ்சிம் விஹார் பள்ளிக்கு முதல் இ-மெயில் மிரட்டல் வந்தது, அதைத் தொடர்ந்து டிபிஎஸ் ஆர் கே புரம் காலை 7 மணிக்கு இதேபோன்று இ-மெயில் வந்துள்ளது என்று டெல்லி பொலிஸார் தெரிவித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை இரவு 11.38 மணிக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல்களில், பள்ளிகளில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

டெல்லி பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து காவல்துறை, வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் கல்வி நிறுவனங்களுக்கு விரைந்தனர். முழுமையான சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதுவரை எங்கும் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் இ-மெயில்கள் பதற்றத்தை ஏற்படுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர். மேலும் விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில் பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. மின்னஞ்சல் அனுப்பியவர்களைக் கண்டறிய சைபர் கிரைம் பொலிஸார் பணியாற்றி வருகின்றன.

டெல்லி முதல்வர் அதிஷி தனது X பக்கத்தில், டெல்லியில் தினமும் இதுபோன்ற மிரட்டல், கொலை, துப்பாக்கிச் சூடு போன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. இப்போது பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வருகிறது.

டெல்லியில் சட்டம்-ஒழுங்கு இவ்வளவு மோசமாக உள்ளது. பாஜக ஆளும் மத்திய அரசு, டெல்லி மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் தனது பணியில் தோல்வியடைந்துள்ளது” என்று கூறியுள்ளார்.

நவம்பரில், டெல்லி உயர் நீதிமன்றம் இதுபோன்ற அவசரநிலைகளைக் கையாள்வதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறையை (எஸ்ஓபி) உருவாக்குமாறு மாநில அரசு மற்றும் காவல்துறைக்கு உத்தரவுகளை வழங்கியது.

Share.
Leave A Reply

Exit mobile version