இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளதுடன் பொருட்களுக்கான தட்டுப்பாடும் அதிகரித்து வருகிறது.

இலங்கையில் கொரோனா தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி காலப் பகுதியில் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டு, தட்டுப்பாடு நிலவிவந்த பின்னணியில், கடந்த இரண்டு வருடங்களில் பொருட்களின் தட்டுப்பாடு படிப்படியாக குறைவடைந்ததுடன், பொருட்களின் விலைகளிலும் வீழ்ச்சி காணப்பட்டது.

இந்தநிலையில் தற்போது மீண்டும் விலைவாசி உயந்துள்ளது.

இலங்கையில் புதிதாக ஆட்சி பீடம் ஏறியுள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், நாட்டில் எதிர்கொள்ளும் பிரதான சவால் மிகுந்த விடயமாக இந்த அரிசி, தேங்காய் விலையேற்றம் காணப்படுகின்றது.

இந்தநிலையில், எதிர்வரும் நத்தார் தினம், புதுவருடம் மற்றும் தைப்பொங்கல் காலப் பகுதிக்குள் இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

எனினும், இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர அரசாங்கம் கடந்த நவம்பர் மாதம் முதல் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. ஆனால், இந்த பிரச்னைக்கான சரியான தீர்வு இன்று வரை கிடைக்கவில்லை.

இலங்கையில் நாட்டரிசி என்பது வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் அதிகளவில் 
பயன்படுத்தும் அரிசி வகையாகும்.

தற்போது அரிசி விலைகளின் பட்டியல்

கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் 200 ரூபாவிற்கு (இலங்கை ரூபாய்) விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ நாட்டரிசி தற்போது 260 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்ற போதிலும், நாட்டரிசிக்கான தட்டுப்பாடு சந்தையில் இன்றும் காணப்படுகின்றது.

இலங்கையில் நாட்டரிசி என்பது வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் அதிகளவில் பயன்படுத்தும் அரிசி வகையாகும்.

கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் 190 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ பச்சை அரிசி தற்போது 250 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

அத்துடன், 240 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ சம்பா அரிசி, தற்போது 260 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

290 ரூபாவிற்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கீரி சம்பா அரிசி, தற்போது 280 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

சாதாரண மக்கள் பயன்படுத்தும் நாட்டரிசி மற்றும் பச்சை அரிசி ஆகியவற்றின் விலைகளே அதிகரித்து காணப்படுகின்றது.

அத்துடன், 100 முதல் 130 ரூபா வரை விற்பனை செய்யப்பட்ட தேங்காய் ஒன்றின் தற்போதைய விலை, 180 ரூபா முதல் 220 ரூபா வரை காணப்படுகின்றது.

கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் 300 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ பெரிய வெங்காயம், நாட்டில் சில இடங்களில் 510 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது.

காய்கறி வகைகள் மற்றும் மீன்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளன.

 ஒரு தேங்காய் 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது

கடந்த காலங்களில் மழையுடனான வானிலை மற்றும் புயல் காரணமாக இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்ற நிலையில், எதிர்வரும் ஓரிரு வாரங்களில் காய்கறி மற்றும் மீன் வகைகளின் விலைகள் குறைவடையும் என நம்பிக்கை வெளியிடுகின்றனர்.

பொருட்கள் விலைகள் மற்றும் பொருட்களுக்கான தட்டுப்பாடு தொடர்பில் பொதுமக்கள் இவ்வாறான கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.

”நாட்டில் பொருட்களே இல்லை. அரிசி இல்லை. தேங்காய் இல்லை. தேங்காய் இருந்தாலும் 200 ரூபா வரை விற்கின்றார்கள். தெரிந்த கடைகளில் கேட்டால் மாத்திரமே அரிசி தருகின்றார்கள். இல்லையென்றால், அரிசி இல்லை. சம்பளம் கிடைத்த அடுத்த நாள் கையில் ஒன்றும் இல்லை. வாங்கிய கடனை கொடுப்பதற்கே சரியாக இருக்கின்றது. அடுத்த மாதத்தில் இன்னும் கொஞ்சம் கடனில்தான் ஓட வேண்டியிருக்கின்றது.” என யாழ்ப்பாணத்தில் வசிக்கும் குடும்ப தலைவியான பிரசாந்த் புகலினி தெரிவிக்கின்றார்.

”பொருட்கள் தட்டுப்பாடு இருக்கின்றது. விலைகளிலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. சாதாரணமாக வாழகூடிய சூழ்நிலை இன்று மக்களுக்கு இல்லை. பொருட்கள் விலை அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை. இன்று பொருட்களும் இல்லை. விலையும் அதிகமாக காணப்படுகின்றது.” என வெலிமடை பகுதியைச் சேர்ந்த சத்திவேல் கோகுலன் தெரிவிக்கின்றார்.

”டிசம்பர் காலப் பகுதியில் கட்டாயம் காய்கறியின் விலை அதிகரிக்கும். காரணம், மழையுடனான காலநிலை ஏற்படுகின்றமையினால், அது சாதாரணமாக நடக்கின்ற ஒன்று. ஆனால், அரிசி விலை அதிகரிப்பு மற்றும் தட்டுப்பாட்டில் எங்களுக்கு நிறையவே சந்தேகம் இருக்கின்றது.” என கண்டியைச் சேர்ந்த குமாரவேல் கணேஷ் பிபிசி தமிழுக்கு குறிப்பிடுகின்றார்.

”சம்பளம் கூடவில்லை. அதனால், இந்த விலை அதிகரிப்பு வாழ்க்கையில் பாரியளவு பாதிக்கப்பட்டுள்ளது. அரிசி தேங்காய் என்பது ஆக அடிப்படையாக இருக்கக்கூடிய ஒருவரின் தேவை. சம்பா அல்லது பாசுமதி அரிசி விலை கூடியிருந்தால், பிரச்னை இல்லை. ஆனால், நாட்டரிசி விலையே கூடியுள்ளது. ஏழைகளின் அரிசி விலையே கூடியுள்ளது. அது நேரடியாகவே மக்களின் வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படுகின்றது.” என்கிறார் அவர்

பொருட்களுக்கான தட்டுப்பாடு மற்றும் பொருட்களுக்கான விலை அதிகரிப்பு குறித்து, கண்டி பகுதியைச் சேர்ந்த வர்த்தகரான யோகா பிபிசி தமிழுக்கு கருத்து வெளியிட்டார்.

”வியாபாரம் நல்ல போகின்றது. ஆனால், விலைதான் அதிகரித்துள்ளன. அரிசி தட்டுப்பாடு இருந்தது. இப்போது அரிசி தட்டுப்பாடு குறைந்துள்ளது. ” என அவர் கூறுகின்றார்.

ஒரு கிலோ நாட்டரிசியை அரிசி ஆலை உரிமையாளர்கள் தமக்கு 245 ரூபாவிற்கு விற்பனை செய்வதாகவும், அந்த அரிசியை கொண்டு வருவதற்கான செலவு மற்றும் நுகர்வோருக்கு வழங்கும் போது அதற்கான பைகளை வழங்குவதற்கான செலவுகள் என்பது உள்ளடக்கப்படும் பட்சத்தில் 260 ரூபா செலவு காணப்படுகின்றது என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

கண்டியைச் சேர்ந்த குமாரவேல் கணேஷ்

அரிசி பிரச்னைக்கு தலையீடு செய்த ஜனாதிபதி

அரிசி பிரச்னைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் வகையில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலையீடு செய்துள்ளார்.

இதன்படி, நாட்டரிசி ஒரு கிலோவுக்கான மொத்த விற்பனை விலையாக 225 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், சில்லறை விலையாக 230 ரூபா ஜனாதிபதியினால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் கடந்த 7-ஆம் தேதி நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

எதிர்வரும் 10 நாட்களுக்கு இந்த விடயம் தொடர்பில் அதிக கவனம் செலுத்துவதுடன், தமது தீர்மானத்திற்கு எதிராக செயற்படும் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி இந்த சந்திப்பின் போது கூறியுள்ளார்.

ஜனாதிபதியின் இந்த தீர்மானத்தை அடுத்து, சந்தையில் நேற்று வரை காணப்பட்ட அரிசிக்கான தட்டுப்பாடு இன்றைய தினத்தில் ஓரளவு குறைந்துள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version