சர்வதேச பொறிமுறைக்குத் தேவையான சாட்சியங்களைத் திரட்டும் பொறிமுறை ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. அதற்குச் சமாந்தரமாக சர்வதேச நீதிப்பொறிமுறையொன்றின்கீழ் நடவடிக்கை எடுப்பதன் ஊடாக வயோதிபத் தாய்மாரான நாமும் இறப்பதற்கு முன்னர் நீதியைப் பெற்றுக்கொள்ள உதவுங்கள் என வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கிடம் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வட, கிழக்கு மாகாணங்களில் கவனயீர்ப்புப்போராட்டங்களை முன்னெடுத்த வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால், ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கை விழித்து எழுதப்பட்ட மகஜரொன்று ஐ.நா கிளை அலுவலக அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது.

அம்மகஜரில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

நேற்று செவ்வாய்க்கிழமை (10) சர்வதேச மனித உரிமைகள் தினமாகும். ஆனால் வாழ்வதற்கான உரிமை மறுக்கப்பட்ட எமது அன்புக்குரியவர்கள் வலிந்து காணாமலாக்கப்பட்டு 15 வருடங்கள் கடந்துவிட்டன.

அவர்களுக்குரிய நீதியைக்கோரிப் போராடிவரும் எமக்கு, எம்முடைய பிள்ளைகளின் தற்போதைய நிலையை அறிந்துகொள்ளும் உரிமையும், அதற்காகப் போராடும் உரிமையும் மறுக்கப்பட்டுள்ளன.

சிங்கள அரசையும், அதன் வாக்குறுதியையும் நம்பி சரணடைந்த மற்றும் கையளிக்கப்பட்ட எமது உறவுகள் அரசியல் கைதிகளாக சிறையிலும், அடிமைகளாக இரகசிய வதை முகாம்களிலும் வாடுகிறார்கள்.

இவர்களுக்கான நீதிக்காக 2850 நாட்களாக தொடர் கவனயீர்ப்புப்போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நாம் கடும் மனவழுத்தத்துக்கு உள்ளாகி இறந்துகொண்டிருக்கிறோம்.

ஆனால் ஆட்சிபீடமேறும் ஆட்சியாளர்கள் அனைவரும் தமக்கு வாக்களித்தவர்களைத் திருப்திப்படுத்துவதிலேயே அக்கறையுடன் இருக்கிறார்கள். அவர்கள் எம்மையும், சர்வதேச சமூகத்தையும் ஏமாற்றி, கால இழுத்தடிப்புக்களைச்செய்து தமது பதவிக்காலத்தைத் தக்கவைத்துக்கொள்கின்றனர்.

தற்போது ‘மாற்றம்’ என்ற கோஷத்துடன் புதியதொரு தரப்பினர் ஆட்சியமைத்திருக்கிறார்கள். அவர்களும் போராட்ட வழியில் வந்தவர்கள் என்ற விடயத்தை சில நாட்டுப்பிரதிநிதிகள் எம்மிடம் கூறுகின்றனர். ஆனால் உள்ளகப்பொறிமுறையின்மீது நம்பிக்கை இழந்து, சர்வதேசப்பொறிமுறையை மாத்திரம் கோரி நிற்கும் எம்மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தவேண்டிய பொறுப்பு புதிய அரசை நம்பி எம்மை அணுகும் தரப்பினருக்கு உண்டு.

எம்மத்தியில் நம்பிக்கையைக் கட்டியெழுப்பவேண்டுமெனில், எமது உறவுகள் சரணடைந்த மற்றும் கையளிக்கப்பட்டபோது அந்தக் காவலரண்களுக்குப் பொறுப்பாக இருந்த இராணுவ அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, உண்மை கண்டறியப்படவேண்டும்.

அதேபோன்று எவ்வித பயனும் அற்றது என எம்மால் நிரூபிக்கப்பட்ட காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் கலைக்கப்படவேண்டும்.

மேலும், சர்வதேச பொறிமுறைக்குத் தேவையான சாட்சியங்களைத் திரட்டும் பொறிமுறை ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. அதற்குச் சமாந்தரமாக சர்வதேச நீதிப்பொறிமுறையொன்றின்கீழ் நடவடிக்கை எடுப்பதன் ஊடாக வயோதிபத் தாய்மாரான நாமும் இறப்பதற்கு முன்னர் நீதியைப் பெற்றுக்கொள்ள உதவுங்கள் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version