சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்திருக்கும் ‘புஷ்பா -2’ திரைப்படம் டிசம்பர் 5ம் தேதி உலகம் முழுவதும் பல மொழிகளில் வெளியாகியிருந்தது.
முதல் பாகம் நல்ல வசூலையும், வரவேற்பையும் பெற்று அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும், தேவி ஶ்ரீ பிரசாத்திற்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருதும் கிடைத்தது. இந்த மிகப்பெரிய வெற்றியை அடுத்து இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்புகள் எகிறி இருந்தன. கடந்த டிசம்பர் 5ம் தேதி இதன் இரண்டாம் பாகமும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
படம் வெளியாகி 7 நாள்களே ஆகியிருக்கும் நிலையில் ரூ.1000 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக ‘மைத்ரீ மூவிஸ்’ தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. இந்நிலையில் இன்று டெல்லியில் ‘புஷ்பா -2 வெற்றி விழா’ நடைபெற்றது.
இதில் பேசியிருக்கும் நடிகர் அல்லு அர்ஜுன், “இந்திய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. இண்டர் நேஷனல் அளவில் இருக்கும் ரசிகர்களுக்கும் நன்றி. ‘புஷ்பானா வைல்டு ஃபையர்..’. நீங்கள் பொழிந்த அன்புதான் இந்த மிகப்பெரிய வெற்றிக்குக் காரணம். படக்குழு அனைவருக்கும் இந்த வெற்றி போய்ச் சேரும். முக்கியமாக பாக்ஸ் ஆபிஸை கலக்கும் இயக்குநர் சுகுமார் இந்த மிகப்பெரிய வெற்றிக்குக் காரணமானவர். அவர்தான் இந்தப் படத்தைத் தூக்கிச் சுமந்து கடுமையான உழைப்பைக் கொடுத்திருக்கிறார். அவரின் கனவு இது.
இது நம் இந்திய சினிமாவின் வெற்றி. இந்த ஆயிரம் கோடி வசூல் என்பது இந்தியர் அனைவரின் அன்பின் வெளிபாடு என்றே கருதுகிறேன். இந்த வசூல் சாதனைகள் எல்லாம் அடுத்தடுத்து முறியடிக்கப்படுவது வழக்கமான ஒன்றுதான். அடுத்தடுத்து வருபவர்கள் இந்த வசூல் சாதனையை முறியடிப்பார்கள்.
அல்லு அர்ஜூன்
ஆனால், ஒன்றை உறுதியாகச் சொல்லிக்கொள்கிறேன், அடுத்த மூன்று மாதத்தில் சம்மர் சீசனில் இந்த வசூல் சாதனையை நானே முறியடிப்பேன். ஏனென்றால் அதுதான் வளர்ச்சி. வளர்ச்சிதான் எனக்குப் பிடிக்கும். இன்னும் இன்னும் இந்திய சினிமா வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும். எல்லோரும் சேர்ந்து அதைச் செய்வோம். இந்த மொழி, அந்த மொழி என்றெல்லாம் இல்லை, ஒட்டுமொத்தமாக இது இந்திய சினிமாவின் வளர்ச்சி. அதை மேலும் மேலும் வளர்ப்பதில் எனக்கும் மிகப்பெரிய பங்கு இருப்பதாக உணர்கிறேன்” என்று பேசியிருக்கிறார்.