கடந்த வாரம் பாராளுமன்ற சபாநாயகர் அசோகா சப்புமால் ரண்வலவை பதவியில் இருந்து விலகவைத்த அவரது உயர்கல்வித் தகைமைகள் தொடர்பான சர்ச்சை விடுதலை புலிகள் இயக்கத்துடன் சம்பந்தப்பட்ட முக்கிய பிரமுகர் ஒருவர் தொடர்பிலான இதே போன்ற முன்னைய சர்ச்சை ஒன்றை நினைவுபடுத்துகிறது.
ஊடகங்களில் அடிக்கடி கலாநிதி பாலசிங்கம் என்று குறிப்பிடப்பட்ட விடுதலை புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் ஸ்ரனிஸ்லோஸ் பாலசிங்கம் பற்றியதே அந்த குழப்பமாகும்.
விடுதலை புலிகளுக்கு எதிரான இயக்கங்களின் உறுப்பினர்கள் பாலசிங்கம் ஒரு கலாநிதி அல்ல என்று பரவலாக மறுதலித்தனர். பாலசிங்கம் ஒருபோதுமே கலாநிதி பட்டத்தை பெறவில்லை என்றும் அதனால் அவர் ஒரு ” பாசாங்கு கலாநிதி ” என்றும் கூறப்பட்டது.
அந்த நேரத்தில் நடந்தது இதுதான். இளம் பராயத்தில் ஏ.பி.ஸ்ரனிஸ்லோஸ் என்று அறியப்பட்ட பாலசிங்கம் பேராதனை பல்கலைக்கழகத்தில் கல்விகற்று கலைமாணி ( B.A. degree ) பட்டம் பெற்றவர்.பிறகு பிரிட்டனுக்கு சென்ற பாலசிங்கம் சவுத்பாங்க் லண்டன் பொலிரெக்னிக்கில் முதுமாணி (M.A. degree) பட்டத்தை பெற்றார். மார்க்சிசத்தின் உளவியல் ( Psycology of Marxism ) தொடர்பாகவே அவரது ஆய்வு அமைந்தது.
அதற்கு பிறகு பேராசிரியர் ஜோன் ரெயிலரின் கீழ் சமூகவியலில் உடமை மாற்றம் தொடர்பான மார்க்சின் கோட்பாடு ( Marx’s theory of alienation in sociology) குறித்து கலாநிதி பட்டத்துக்காக ஆய்வைச் செய்யத் தொடங்கினார். விடுதலை அரசியலில் ஈடுபடத் தொடங்கியதனால் பாலசிங்கம் கலாநிதி பட்டத்துக்கான ஆய்வை பூர்த்தி செய்யவில்லை.
1983 கறுப்பு ஜூலை இனவன்செயலுக்கு பிறகு விடுதலை புலிகள் இயக்கத்தின் அரசியல் மதயூகியாக, பேச்சுவார்த்தையாளராக, பேச்சாளராக பாலசிங்கம் இந்தியாவுக்கு வந்தார். இந்திய ஊடகங்களை தொடர்ந்து சர்வதேச ஊடகங்களும் அவரை ” கலாநிதி பாலசிங்கம் ” என்று குறிப்பிடத் தொடங்கின.
அவர் தன்னை ” கலாநிதி ” என்று ஒருபோதும் அழைத்ததில்லை என்பதை நேர்மையாக ஒத்துக்கொள்ள வேண்டும். ஆனால், தன்னை கலாநிதி என்று அழைத்த ஊடகச் செய்திகளை திருத்துவதற்கு அவர் எந்த முயற்சியையும் எடுக்கவில்லை.
பாலசிங்கம் கலாநிதி பட்டத்தை கொண்டிருக்கவில்லை என்பது பிறகு நம்பத்தகுந்த முறையில் நிரூபிக்கப்பட்டது. அது போட்டிக் குழுக்களை சேர்ந்த எதிர்பாளர்களினால் செய்யப்படவில்லை. பதிலாக விடுதலை புலிகள் மத்தியில் இருந்தவர்களே அதைச் செய்தார்கள்.
அந்த நாட்களில் லண்டனில் விடுதலை புலிகள் இயக்கம் இரண்டு பிரிவுகளாக பிளவுபட்டிருந்தது. ஒரு பிரிவு பாலசிங்கத்தின் கீழும் மற்றைய பிரிவு இலங்கையில் மயிலிட்டியைச் சேர்ந்த ஒரு கணக்காளரான சீவரத்தினத்தின் கீழும் இருந்தன. இரு வாரங்களுக்கு ஒரு முறை வெளியான சஞ்சிகை ஒன்றை (Tamil Voice International ) சீவரத்தினம் நடத்தினார்.
பாலசிங்கத்தின் கலாநிதி பட்டத் தகைமைகள் குறித்து அந்த சஞ்சிகைக்கு “வாசகர் ” ஒருவர் கேள்வியை அனுப்பினார். அதற்கு ஆசிரியர்கள் அளித்த பதில் உண்மை நிலையை தெளிவாக விளக்கியது.
இத்தகைய ஒரு பின்புலத்தில் இந்த கட்டுரை பாலசிங்கத்தின் 18 வது நினைவு தினத்தை (டிசம்பர் 14 ) முன்னிட்டு அவர் மீது கவனத்தைச் செலுத்துகிறது. ” பாலா அண்ணை ” என்று அறியப்பட்ட பாலசிங்கம் கிளர்ச்சியூட்டுகின்ற ஆனால் அதேவேளை சர்ச்சைக்குரிய புள்ளியாக விளங்கினார். அவரை நேசிப்பவர்களும் வெறுப்பவர்களும் இருந்தார்கள்.
பாலசிங்கத்துடனான இந்த கட்டுரையாளரின் உறவுமுறையும் கூட நெளிவுசுழிவுகளைக கொண்டதாகவே இருந்தது. பிரச்சினைகளைப் பொறுத்து அவரை நான் கண்டித்ததும் உண்டு, மெச்சியதும் உண்டு. அதேபோன்று அவரும் கூட எனனைப் பற்றி சாதகமாகவும் பாதகமாகவும் எழுதியும் பேசியும் இருக்கிறார்.
இந்த மனிதனைப் பற்றியும் தமிழர் விவகாரங்களில் அவரின் பாத்திரம் பற்றியும் பல சந்தர்ப்பங்களில் நான் எழுதியிருக்கிறேன். இந்த கட்டுரையில் ” பாலா அண்ணைக்கும் ” எனக்கும் இடையிலான துறைசார் மற்றும் தனிப்பட்ட உறவுமுறை பற்றி கவனம் செலுத்துகின்ற அதேவேளை முன்னைய எழுத்துக்கள் சிலவற்றில் இருந்தும் விடயங்களை குறிப்பிடுகிறேன்.
1938 மார்ச் 4 ஆம் திகதி பிறந்த பாலசிங்கம் பல்வேறு குணப் போக்குகளின் ஒரு கலவை. இந்துவான அவரது தந்தையார் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர். கிறிஸ்தவரான தாயார் வடமாகாணத்தவர். ஒரு கத்தோலிக்கராக பாலசிங்கம் வளர்க்கப்பட்ட போதிலும் விரைவாகவே அவர் ஒரு பகுத்தறிவாளராகவும் உலோகயதவாதியாகவும் மாறிவிட்டார்.
பாலசிங்கத்தின் முதல் மனைவி புரட்டஸ்தாந்து மதத்தைச் சேர்ந்த யாழ்ப்பாண தமிழ்ப் பெண்மணி. இரண்டாவது மனைவி அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த அங்ளோ — சக்சன் மரபைக் கொண்ட பெண்மணி. பிரிட்டிஷ் பிரஜையாக இருந்த போதிலும், பாலசிங்கம் தனது ” தமிழ் ஈழம் ” தாயகத்தைக் காண்பதற்கு வேட்கை கொண்டிருந்தார். அது அமைக்கப்படுகின்ற ஒரு கட்டத்தில் இருந்ததாக அவர் நம்பினார்.
பாலசிங்கத்தின் தந்தைவழி பாட்டனார் மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்டூரைச் சேர்ந்த ஒரு “சைவக் குருக்கள்.” அவரது தந்தையார் மட்டக்களப்பு வைத்தியசாலையில் ஒரு மின்சார மேற்பார்வையாளர். யாழ்நகரைச் சேர்ந்த பாலாவின் தாயார் முன்னர் மார்ட்டின் வீதியில் வசித்தவர். மருத்துவமாதுவான அவர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் பணியாற்றியபோது பாலாவின் தந்தையாரைச் சந்தித்து காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
கரவெட்டி
அவர் கணவரிடமிருந்து பிரிந்ததுடன் இளவயதிலேயே விதவையாகியும் விட்டார். பாலசிங்கம் தனது தாயாருடனும் மூத்த சகோதரியுடனும் சிறுபிள்ளையாக வடக்கிற்கு சென்றார். வடமராட்சி கரவெட்டியில் குடியேறி அவர்கள் வாழ்க்கையை தொடங்கினர். பாலாவின் தாயார் ‘ அம்பம் ஆஸ்பத்திரியில் ‘ மருத்துவமாதாக பணியாற்றினார். நான் வீரகேசரியில் பத்திரிகையாளராக இணைந்த நேரத்தில் பாலசிங்கத்தின் இரு மருமகன்கள் விக்டரும் அன்டனும் அச்சுக்கோப்பாளர் பகுதியில் பணியாற்றினார்கள்.
எனது தாயாரும் கூட கரவெட்டியை சேர்ந்தவரே. துன்னாலை தெற்கு, கரவெட்டி என்பதே தபால் விலாசம். பிற்காலத்தில் பாலசிங்கம் அதை அடிக்கடி கூறி தானும் நானும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்களே என்று உரிமை கொண்டாடுவார்.
வீரகேசரி
சிறுவர் பராயத்தில் பாலசிங்கம் ஏ.பி. ஸ்ரனிஸ்லோஸ் என்று அறியப்பட்டார்.கரவெடடி திருஇருதயக் கல்லூரியிலும் நெல்லியடி மத்திய கல்லூரியிலும் அவர் கல்வி கற்றார். அந்த நாட்களில் கரவெட்டி ஒரு இடதுசாரிக் கோட்டையாக விளங்கியது. ‘ஸ்ரனி ‘ என்று அப்போது அறியப்பட்ட இளம் பாலசிங்கமும் இடதுசாரி கோட்பாடுகளினால் ஈர்க்கப்பட்டார்.
சுந்தர் என்று அறியப்பட்ட பிரபல்யமான தமிழ் கார்ட்டூனிஸ்ட் சிவஞானசுந்தரம் கரவெட்டியில் இருந்தே ‘ சிரித்திரன் ‘ என்ற பெயர்பெற்ற சஞ்சிகையை வெளியிட்டார். சிவஞானசுந்தரத்தின் முயற்சியின் காரணமாக ஸ்ரனிஸ்லோஸ் 1960 களின் முற்பகுதியில் கொழும்பு தமிழ்ப் பத்திரிகையான வீரகேசரியில் உதவி ஆசிரியராக நியமனம் பெற்றார்.
பெரும்பாலான நேரத்தை வாசிப்புக்கு செலவிடும் ஒரு மனிதனாக ஸ்ரனியை பற்றி பேசும்போது வீரகேசரியில் அவரின் முன்னாள் சகாக்கள் கூறுவார்கள். தனது தோற்றத்தில் அவர் அக்கறை செலுத்துதில்லை. குறிப்பாக உடைகளைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை.
கிரமமாக நேரங்களில் அவர் சாப்படுவதுமில்லை. வீரகேசரியில் ஸ்ரனிஸ்லோஸ் விரைவாகவே வெளிநாட்டுச் செய்திகளுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டார்.
ராய்ட்டர்ஸ் செய்திச் சேவை பிரதிகளையும் வெளிவிவகாரங்கள் தொடர்பான கட்டுரைகளையும் மொழிபெயர்ப்பது அதில் முக்கிய பணியாக இருந்தது. ஆனால், பாலசிங்கம் தத்துவத்திலும் உளவியலிலும் கருத்தூன்றிய கவனம் செலுத்தினார். மனதை வசியப்படுத்தும் கிலையிலும் ( Hypnotism ) ஈடுபாடு காட்டினார்.
கொழும்பில் உள்ள பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகரகத்தில் ஒரு மொழி பெயர்ப்பாளராக ஸ்ரனிஸ்லோஸுக்கு நியமனம் கிடைத்ததும் நிலைமைகள் மாறின. நேர்த்தியான முறையில் உடைகளை அணியத் தொடங்கியதும் அவரின் தோற்றத்திலும் ஒரு உருநிலை மாற்றம் ஏற்பட்டது.
புதிய தொழிலின் விளைவாக மாத்திரம் முற்றிலும் இந்த மாற்றம் ஏற்பட்டு விடவில்லை. காமனும் கணை தொடுத்தான். பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகரகத்துக்கு அருகாக பிரிட்டிஷ் கவுன்ஸிலில் பணியாற்றிய அழகான தமிழ்ப் பெண்மணி மீது பாலசிங்கம் காதல் கொண்டார். பருத்தித்துறை ஹாட்டி கல்லூரியில் படிப்பித்த இராசரத்தினம் மாஸ்டரின் மகளான பேர்ள் இராசரத்தினமே அந்த பெண்மணி.
அந்த குடும்பம் எனது தாயாரின் குடும்பத்துடன் நெருக்கமான பழக்கத்தைக் கொண்டது. எனது சிறுவர் பராயத்தில் பேர்ள் அரசரத்தினத்தை நான் ” பூ அன்ரி ” என்று அழைத்தது நினைவிருக்கிறது. அவரின் சகோதரி ரதியின் திருமணத்தில் எனது சகோதரிகளில் ஒருவர் மணப்பெண் தோழியர்களில் ஒருவர்.
பேர்ளின் மூத்த சகோதரி நேசம் எனது தாயாருடன் பல வருடங்களாக ஒரே பாடசாலையில் படிப்பித்தார். பேர்ளுக்கும் அன்டனுக்கும் இடையிலான காதல் 1968 ஜூலை 16 கொள்ளுப்பிட்டி மெதடிஸ்ட் தேவாலயத்தில் திருமணத்தில் முடிந்தது.
இங்கிலாந்து
புது மணமகன் பாலசிங்கத்துக்கு மணவாழ்வினை மகிழ்ச்சி நீடித்ததாக இருக்கவில்லை. அவரின் மனைவி பேர்ள் கடுமையாக சுகவீனமுற்றார். அவருக்கு வெளிநாட்டு நவீன சிகிச்சை தேவைப்பட்டது. பிரிட்டிஷ் அதிகாரிகள் மிகவும் அனுதாபமுடையவர்களாகவும் பெருந்தன்மை கொண்டவர்களாகவும் இருந்தனர். பாலசிங்கத்தையும் மனைவியையும் இங்கிலாந்துக்கு செல்ல அவர்கள் அனுமதித்தனர்.
இருவரும் 1971 ஆகஸ்ட் 3 ஆம் திகதி இலங்கையை விட்டுச் சென்றனர். இங்கிலாந்தில் பாலசிங்கம் தனது உயர்கல்வியை தொடர்ந்தார். ஆனால், அவரின் மனைவியின் உடல்நிலை மோசமடையத் தொடங்கியது. பாலசிங்கத்துக்கு வாழ்க்கை இடரும் தியாகமும் நிறைந்தாக மாறியது. அவர் வேலைக்கு செல்வதுடன் படிக்கவேண்டியிருந்தது. நோயாளியான மனைவியை பராமரிக்க வேண்டியும் இருந்தது.மனைவி 1976 நவம்பரில் காலமானார்.
வைத்தியசாலையில் ஒரு தாதியுடன் பாலசிங்கத்துக்கு நன்கு பழக்கமேற்பட்டது. அந்த தாதியும் அவுஸ்திரேலியாவில் இருந்து பிரிட்டனுக்கு வந்த ஒரு அன்னியரே. மனைவியை இளந்த இளம் பாலசிங்கத்துக்கு தாதி அுடல் ஆன் வில்பியுடன் இரண்டாவது காதல் மலர்ந்தது. தெற்கு லண்டனில் பிறிக்ஸ்டனில் பதிவாளர் அலுவலகத்தில் அவர்கள் எளிமையான முறையில் 1978 செப்டெம்பர் முதலாம் திகதி திருமணம் செய்து கொண்டனர்.
மட்ராஸ் / சென்னை
பாலசிங்கம் 1978 ஆம் ஆண்டில் விடுதலை புலிகளுடன அணி சேர்ந்துகொண்டார். இந்தியாவுக்கு கிரமமாக வருகை தந்த அதேவேளை லண்டனில் இருந்து விடுதலை புலிகளுக்காக பெருமளவில் எழுதினார். 1980 ஆம் ஆண்டில் விடுதலை புலிகள் இயக்கத்திற்குள் பிளவு ஏற்பட்டபோது பாலசிங்கம் தன்னை பிரபாகரனின் பிரிவுடன் இணைத்துக்கொண்டார். 1983 கறுப்பு ஜூலைக்கு பிறகு பாலசிங்கமும் மனைவி அடேலும் சென்னைக்கு ( அப்போதைய மட்ராஸ் ) குடிபெயர்ந்தனர்.
” த ஐலண்ட் “
வீரகேசரி தமிழ்த் தினசரியில் 1977 ஆம் ஆண்டில் இணைந்து கொண்டதன் மூலம் பத்திரிகைத்துறையில் பிரவேசம் செய்த நான், 1981 ஆம் ஆண்டில் ” த ஐலண்ட் ” ஆங்கிலப் பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டபோது அதில் இணைந்து கொண்டேன். அந்த வேளையில் அதன் ஆசிரியராக இருந்த விஜிதா யாப்பா 1984/85 காலப்பகுதியில் இந்தியாவில் இருந்து இயங்கிய இலங்கை தமிழ்த் தீவிரவாத இயக்கத் தலைவர்களை பேட்டிகாணும் பணியை என்னிடம் ஒப்படைத்தார்.
தமிழ்நாட்டில் பெரும்பாலான தீவிரவாத குழுக்களை சந்தித்த எனக்கு விடுதலை புலிகளை சந்திப்பது சற்று சிரமமாக இருந்தது. இறுதியாக மரீனா கடற்கரையில் கண்ணகி சிலை ஓரமாக ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு மாலை 5.30 மணிக்கு வருமாறு என்னிடம் கேட்கப்பட்டது. நானும் அதற்கு இணங்கினேன்.
” நான் பாலசிங்கம் “
சரியாக 5.30 மணிக்கு அந்த இடத்தில் வாகனம் ஒன்று வந்து நின்றது. அதை ஓட்டிவந்த விடுதலை புலிகள் இயக்க முக்கியஸ்தரான ” நேசன் ” ( முன்னாள் கத்தோலிக்க குரு மாணவன் ) என்னை முன் ஆசனத்தில் வந்து ஏறுமாறு கேட்டார். காரை ஓட்டிச் சென்று இன்னொரு இடத்தில் அவர் நிறுத்தினார். சில நிமிடங்களில் இன்னொரு வாகனம் வந்து பின்னால் நின்றது. அதிலிருந்து ஒருவர் இறங்கிவந்து எமது வாகனத்தின் பின் ஆசனத்தில் அமர்ந்து கொண்டார். நான் திரும்பிப் பார்த்தபோது தனது கையை நீட்டி ” நான் பாலசிங்கம் ” என்று கூறினார்.
வாகனத்தை ஓட்டத் தொடங்கிய நேசன் எங்கு போவது என்று தெரியாத மாதிரி பல வீதிகளின் ஊடாக அதைச் செலுத்தினார். பாலசிங்கம் ஒரு மட்டுமதிப்பற்ற முறையில் வெடுக்கென்று என்னிடம் கேள்வி கேட்டுக் கொண்டேயிருந்தார்.
ஒருவிதமான பகைமையுணர்ச்சியுடனான அவரின் கேள்விகள் என்னை அவர் சந்தேகத்துடன் நோக்குகிறார் என்பதை உணர்த்தியது. நான் கதையை மாற்றி எனது குடும்பத்தைப் பற்றியும் காலமான அவரின் மனைவியின் குடும்பத்தைப் பற்றியும் கூறத் தொடங்கினேன். ” உங்களைப் போன்றே நானும் வீரகேசரியில் வேலை செய்தேன்” என்றும் அவரிடம் கூறினேன்.
பாலசிங்கத்தின் மனநிலை மாறியது. அவர் சிரித்துக்கொண்டு ” அப்போ நீங்கள் எங்களில் ஒருவர் ” என்று அவர் கூறினார். ” நாங்கள் புஹாரி ஹோட்டலுக்கு போவோம் ” என்று பாலசிங்கம் நேசனிடம் கூறினார். எனவே நாம் அந்த முஸ்லிம் உணவகத்துக்கு சென்று இரவு உணவாக பிரியாணி சாப்பிட்டுக் கொண்டு கடந்த்காலத்தை நினைவுகூர்ந்த வண்ணம் சமகால அரசியலையும் பேசினோம். அதுவே பாலசிங்கத்துடனான எனது முதலாவது சந்திப்பு. அதற்கு பிறகு அவரை நான் பல தடவைகள் சந்தித்தேன்.
கனடா
1988 ஆம் ஆண்டில் ஹார்வாட் பல்கலைக்கழகத்தில் பத்திரிகைத்துறை ஆய்வு மாணவனாக நீமன் புலமைப்பரிசில் பெற்று நான் அமெரிக்கா சென்றேன். பிறகு 1989 ஆம் ஆண்டில் கனடாவுக்கு மாறி ரொரண்டோவில் 1990 ஆம் ஆண்டில் இருந்து தமிழ் வாரப் பத்திரிகையை வெளியிடத் தொடங்கினேன்.
சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் அரசாங்கத்துடனான போர்நிறுத்தத்தை விடுதலை புலிகள் 1995 ஏப்ரிலில் முறித்துக்கொண்ட பிறகு நான் அவர்களை விமர்சித்தேன்.
ரொரண்டாவில் நான் ஆசிரியராக இருந்து எனது சொந்தத்தில் நடத்திய ” மஞ்சரி ” தமிழ் வாரப் பத்திரிகைக்கு எதிராக கனடாவில் விடுதலை புலிகள் ஒரு பிரசாரத்தை தொடங்கியதனால் நான் பெரிய விலையைச் செலுத்த வேண்டியதாயிற்று. எனது பத்திரிகையை அவர்கள் ” தடை ” செய்தார்கள். தொடர்ச்சியாக கொலை அச்சுறுத்தல்கள் வந்தபோதிலும் நான் தளர்ந்துபோகவில்லை.
அதையடுத்து விடுதலை புலிகள் தமிழ்ப் பத்திரிகைகளை விற்பனை செய்கின்ற தமிழர்களுக்கு சொந்தமான கடைகளையும் முக்கியமான தமிழ் விளம்பரதாரர்களையும் இலக்கு வைக்கத் தொடங்கினர்.
48 பக்கங்களைக் கொண்ட அந்த ஒரு டொலர் ‘ ரப்லொய்ட் ‘ பத்திரிகை 22 பக்கங்களில் விளம்பரங்களை கொண்டு வெளியானது. 4,500 — 5,000 பிரதிகள் விற்பனயாகின. விடுதலை புலிகளின் அச்சுறுத்தல் காரணமாக எனது பத்திரிகையை விற்பனை செய்வதை பல கடைகள் நிறுத்திக் கொண்டன.
பத்திரிகை 24 பக்கங்களாக சுருங்கியதுடன் இரு பக்கங்களுக்கே விளம்பரங்கள் கிடைத்தன. விற்பனையான பிரதிகளின் எண்ணிக்கையும் நூறுகளுக்கு கண்டது. விடுதலை புலிகளுக்கு முழந்தாழிட்டு உயிர் வாழ்வதையும் விட எனது காலில் நின்று சாவதற்கு முடிவெடுத்த நான் 1996 ஆம் ஆண்டில் பத்திரிகை வெளியிடுவதை நிறுத்தினேன்.
ஆங்கிலப் பத்திரிகைத்துறை
நானும் எனது மனைவியும் அந்த பத்திரிகைக்காக முழுநேர பணியாற்றினோம். எங்களைத் தவிர, வேறு ஒன்பது பேர் பகுதிநேர ஊழியர்களாக பணியாற்றினர். பத்திரிகையை நிறுத்தியது அந்த நேரத்தில் பாரிய நிதி நெருக்கடியை ஏற்படுத்தியது. இருந்தாலும், கெடுதியின் உருவில் வந்த நன்மையாக, நான் மிண்டும் ஆங்கிலப் பத்திரிகைத்துறையில் பிரவேசித்தேன்.
கொழும்பில் தமிழில் எழுதி வீரகேசரிக்காக பணியாற்றியதன் மூலமாக பத்திரிகைத்துறை வாழ்க்கையை தொடங்கியவன் நான். த ஐலண்டுக்காகவும் பிறகு ‘தி இந்து ‘ வுக்காகவும் பணியாற்றியதன் மூலமாக ஆங்கிலப் பத்திரிகைத்துறையில் பிரவேசித்தவன் நான்.
கனடாவுக்கு வந்த பிறகு முதலில் ” செந்தாமரை ” வாரப்பத்திரிகையினதும் பிறகு ” மஞ்சரி” யினதும் ஆசிரியராக தமிழ்ப் பத்திரிகைத்துறைக்கு திரும்பினேன். மீண்டும் “த ஐலண்ட்” , பிறகு “த சண்டே லிடர்”, “த நேசன்”, இப்போது ” டெயிலி மிறர்” , ” டெயிலி ஃபைனான்சியல் ரைம்ஸ் ” ஆகியவற்றுக்கு எழுதுவதன் மூலம் ஆங்கிலப் பத்திரிகைத்துறைக்கு திரும்பி வந்திருக்கிறேன்.
என்னை மௌனமாக்க விடுதலை புலிகள் எனது பத்திரிகையை நிறுத்தினாலும் கூட, நான் தொடர்ந்து ஆங்கிலத்தில் எழுதி பதவியில் இருந்த அரசாங்கங்களையும் விடுதலை புலிகளையும் விமர்சித்தேன். புலிகளின் ஆதரவாளர்கள் என்னை ஒரு தமிழ்த் துரோகி என்று பழிதூற்றினார்கள். புலிகளுக்கு எதிரானவன் என்று எனக்கு பட்டஞ்சூட்டினாலும், எனது பத்திரிகையாளனாக நான் தொடர்ந்து எழுதிக் கொண்டேயிருந்தேன்.
பாலசிங்கம் நீட்டிய நேசக்கரம்
புதிய மிலேனியம் ஒரு அதிர்ச்சியைக் கொண்டுவந்தது. 2000 ஆண்டு நடுப்பகுதியில் ரொரண்டோவுக்கு வந்த தமிழக் கத்தோலிக்க மதகுரு வணபிதா எஸ்.ஜே. இம்மானுவேல் என்னுடன் தொடர்புகொண்டார். லண்டனில் இருந்த பாலசிங்கம் என்னுடன் பேசுவதற்கு விருப்புவதாக வணபிதா என்னிடம் கூறினார். இது மீண்டும் பாலசிங்கத்துடன் தொடர்பை ஏற்படுத்துவதற்கு வழிவகுத்தது.
நான் இலங்கையை விட்டு வெளியேறிய பிறகு அவருடனான தொடர்பை இழந்துவிட்டேன். ஆனால், 1999 ஆம் ஆண்டில் பாலசிங்கம் லண்டனில் இருந்து வன்னிக்கு திரும்பவிருப்பதை பற்றிய செய்தியை ஏனைய ஊடகங்களை முந்திக்கொண்டு நானே பிரத்தியேகமாக வெளியிட்டிருந்தேன்.
பல வருடங்களுக்கு பிறகு என்னுடன் பேசிய பாலசிங்கம் போரை முடிவுக்குக் கொண்டுவந்து பேச்சுவார்த்தை மூலமான ஒரு இணக்கத்தீர்வின் ஊடாக சமத்துவமான உரமைகளுடன் சமாதானத்தை காணவேண்டியது தமிழ் மக்களுக்கு அவசியமாகிறது என்ற எனது கருத்துடன் உடன்படுவதாக எனக்கு கூறினார். நோர்வேயின் உதவியுடன் சமாதான முயற்சி ஒன்று தொடர்பாக ஆராய்ந்து கொண்டிருப்பதாக கூறிய அவர் எனது எழுத்துக்களின் ஊடாக அதற்கு நான் ஆதரவளிக்க வேண்டும் என்று விரும்பினார். அந்த நேரத்தில் நான் ‘ த சண்டே லீடர் ‘ பத்திரிகையில் எழுதிக் கொண்டிருந்தேன்.
கலந்துரையாடல்
அந்த பத்திரிகையின் ஆசிரியரும் எனது நெருங்கிய நண்பருமான லசந்த விக்கிரமதுங்கவிடம் அதைக் கூறியபோது அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்து வெற்றிகரமாக இணக்கத் தீர்வொன்றைக் கொண்டுவருவதற்கு முன்னெடுக்கப்படும் சகல முயற்சிகளையும் ஆதரிப்பதாக உறுதியளித்தார்.
அதற்கு பிறகு பாலசிங்கத்துடன் நான் கிரமமாக தொடர்பில் இருந்தேன். பல சந்தர்ப்பங்களில் நானும் அவரும் பத்திரிகையில் பிரசுரிக்கப்படுவதற்கு அப்பாலான விடயங்கள் பலவற்றைப் பற்றி மணிக்கணக்காக பேசியிருப்போம். அந்த சம்பாஷணைகளின் ஊடாக விடுதலை புலிகளின் அந்தரங்கமான செயற்பாடுகள், அதன் படிமுறை வளர்ச்சி பற்றி பெருமளவு விடயங்களை அறிந்துகொண்டேன்.
போர்நிறுத்தம்
ஒஸ்லோவின் அனுசரணையுடனான போர்நிறுததம் 2002 பெப்ரவரி 23 ஆம் திகதி நடைமுறைக்கு வந்தது. ஆரம்பத்தில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். ஆனால், உண்மையான சமாதான இணக்கத்தீர்வுக்குை அனுகூலமில்லாத முறையில் விடுதலை புலிகள் நடந்து கொள்கிறார்கள் என்பதை விரைவாகவே நான் கண்டு கொண்டேன்.
பாலசிங்கத்திடம் எனது விசனத்தை வெளிப்படுத்தியபோது எனது முறைப்பாடுகளுக்கு அவர் செவிசாய்ப்பதாக இல்லை என்பதைக் கண்டுகொண்டேன்.
சமாதான முயற்சி ஒன்றுக்கு விடுதலை புலிகள் தங்களை பரிச்சியப்படுத்துவதற்கு அவர்களுக்கு கால அவகாசம் கொடுக்கப்படவேண்டும் என்று நினைத்து நான் ஆறு மாதங்கள் காத்திருந்தேன். அது நடக்கவில்லை என்றபோது நான் விடுதலை புலிகள் செய்த எதிர்மறையான காரியங்களுக்காகவும் செய்யத்தவறிய காரியங்களுக்காகவும் அவர்களைை விமர்சிக்கத் தொடங்கினேன். சமாதானப் பேச்சுவார்த்தைகளில் விடுதலை புலிகளுக்கு உண்மையான அக்கறை இல்லை என்பதை நான் விரைவாகவே புரிந்துகொண்டேன். இந்த சிந்தனை எனது பத்திகளில் பிரதிபலித்தது.
பாலசிங்கம் ஆத்திரமடைந்தார். எனது பத்திகளை பிரசுரிக்க வேண்டாம் என்றும் பிரசுரித்தால் அதனால் பத்திரிகைக்கு தமிழ் வாசகர்கள் மத்தியில் உள்ள மதிப்பு கெட்டுவிடக்கூடும் என்றும் லசந்த விக்கிரமசிங்கவுக்கு அவர் ” ஆலோசனை ” கூறினார். என்னிடம் அதைக் கூறிய லசந்த , மச்சான் வழமைபோன்று எழுது” என்று உற்சாகப்படுத்தினார். நான் தொடர்ந்து எழுதினேன்.
பிறகு பாலசிங்கம் செய்தியாளர்கள் மகாநாடுகளிலும் பொதுக்கூட்டங்களிலும் எனது பெயரைக் கூறி தாக்கத் தொடங்கினார். அவருக்கும் எனக்கும் இடையிலான தொடர்பு இல்லாமல் போனது. என்னை கடுமையாக தாக்கி எழுதுமாறு அவர் தமிழ் பத்திரிகை ஆசிரியர்களை கேட்குமளவுக்கு எனக்கு எதிராகச் சென்றார்.
தொலைபேசி அழைப்பு
ஒரு சில வருடங்கள் கழித்து 2006 நவம்பர் மூன்றாம் வாரம் லண்டனில் இருந்து தொலைபேசி அழைப்பு ஒன்று எனக்கு வந்தது. பாலசிங்கம் தான் அழைத்தார். எங்களுக்கு இடையிலான அரசியல் வேறுபாடுகள் காரணமாக இருவரும் சுமார் மூன்று வருடங்களாக பேசிக்கொள்ளும் மனநிலையில் இல்லாமல் இருந்ததால் எனக்கு அதிர்ச்சியாகப் போய்விட்டது.
ஆனால், ” பாலா அண்ணை” யுடன் பேசுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். ஏனென்றால் அவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருப்பதாகவும் அவரது நாட்கள் எண்ணப்படுகின்றன என்றும் நான் கேள்விப்பட்டேன்.
தனது பழைய சகாக்கள், நண்பர்கள் மற்றும் தொடர்பு வைத்திருந்தவர்கள் சிலருடன் தொலைபேசியில் பேசிவருவதாக பாலா அண்ணை தொடக்கத்தில் கூறினார். அவர் வெளிப்படையாக கூறாவிட்டாலும் கூட, விரைவில் எம்மிடமிருந்து விடைபெறப் போகின்ற ஒரு மனிதரிடமிருந்து வருகின்ற தொலைபேசி அழைப்பு அது என்பதை விளங்கிக்கொண்டேன். அவருக்கு மலவாசலில் புற்றுநோய் என்று கண்டறியப்பட்டது. அது ஒரு முதிர்ச்சியடைந்த நிலையில் இருந்தது. வைத்தியர்கள் அவர் ஒரு நான்கு தொடக்கம் ஆறு வாரங்களுக்கே உயிருடன் இருப்பார் என்று கூறிவிட்டார்கள்.
குதூகலமாக பகிடிவிட்டு பேசுவது பாலசிங்கத்தின் பழக்கம். நான் பேசிக்கொண்டிருந்தபோது அவர் மிகவும் கவலையடைந்திருந்தார் என்பதை உணர்ந்து கொண்டேன். அவருக்கு இருந்த அந்தக் கவலை தனக்கு நேரப்போகிற மரணத்தைப் பற்றியதல்ல. ” தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை.
நிலைமை படுமோசமாகுது. முழு உலகமும் சேர்ந்து புலிகளை மொங்கப்போகுது” என்று பாலா அண்ணை படபடவென்று பேசினார். தம்பி என்று அவர் கூறியது விடுதலை புலிகளின் தலைலர் வேலுப்பிள்ளை பிரபாகரனையே. போராட்டத்தின் ஆரம்பக்கட்டங்களில் பிரபாகரன் தம்பி என்றே அறியப்பட்டார்.
விடுதலை புலிகளின் நடவடிக்கைகளினால் சர்வதேச சமூகம் ஆத்திரமடைந்திருக்கிறது. புலிகள் தங்களது போக்கை மாற்றிக் கொண்டு ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு முறையில் செயற்பட வில்லையானால் மேற்கு நாடுகள், சீனா, ஜப்பான், பாகிஸ்தான் மற்றும் இந்தியா எல்லாம் ராஜபக்ச அரசாங்கத்தை ஆதரித்து விடுதலை புலிகள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டு நிராமூலம் செய்யப்படுவதை உறுதிசெய்யப் போகின்றன என்று பாலசிங்கம் சொல்லிக்கொண்டே போனார். யதார்த்த நிலையை பிரபாகரனுக்கு புரியவைத்து அதன் பிரகாரம் செயற்படவைக்க உங்களால் ஏன் முடியவில்லை என்று நான் அவரை கேட்டேன். பல தடவைகள் தான் முயன்றும்
பயனில்லாமல் போய்விட்டது என்று அவர் மிகுந்த கவலையுடன் பதிலளித்தார்.
வடக்கில் வன்னி பெருநிலப்பரப்பில் கேப்பாபுலவில் பிரபாகரனை தனியாகச் சந்தித்து உண்மையான நிலைவரத்தை விளங்கிக்கொள்ளுமாறு கெஞ்சியதாகவும் ஆனால் பிரபாகரன் அசையவில்லை என்றும் மிகுந்த வேதனையுடனை பாலா அண்ணை கூறினார். ” உனக்கு தெரியும்தானே ‘ வீரமார்த்தாண்டன் ‘ ( கோபம் வந்தால் பிரபாகரனை அவ்வாறுதான் பாலா அண்ணை அழைப்பார்) என்னுடன் எப்படி நடந்து கொள்கின்றவன் என்று ” தமிழில் கூறியவாறு அவர் தொடர்ந்தார்.
” உண்மையான நிலைவரம் குறித்து நான் பேசிக்கொண்டிருந்த போது பிரபாகரன் திடீரென்று இடைமறித்து தமிழ்நாட்டின் பிரபல படத்தயாரிப்பாளர் சேரன் இயக்கிய ” ஆட்டோகிராவ்” படம் பார்த்தீர்களா என்று என்னைக் கேட்டார். நான் இல்லை என்று சொன்னதும் இப்போது அந்த படத்தை நாம் பார்க்கவேண்டும் என்று கூறினார்.டி.வி.டி.மூலம் தொலைக்காட்சியில் படம் போடப்பட்டு நாம் அமைதியாகப் பார்த்தோம்.
படம் முடிந்ததும் நான் மீண்டும் அன்றைய நிலைவரத்தைப் பற்றி மீண்டும் பேச முயற்சித்தேன். மீண்டும் அந்த படத்தை பார்ப்போமா என்று பிரபாகரன் கேட்டார். அதனால் அதே படத்தை மீண்டும் பார்த்தோம். மீண்டும் படம் முடிந்ததும் பழைய விடயத்தை மீண்டும் நான் பேசத்தொடங்க பிரபாகரன் குறும்புச் சிரிப்புடன் ‘ இன்னொருக்கா பார்ப்போம் ‘ என்று கேட்டார். அவர் என்ன சொல்லவருகிறார் என்பதை புரிந்துகொண்டு அவரிடமிருந்து விடைபெற்றேன். பிரபாகரன் இவ்வாறு நடந்துகொள்கிறபோது அவரை இறங்கி வரச்செய்ய எதனாலும் முடியாது என்பது எனது அனுபவத்தின் அடிப்படையில் எனக்கு தெரியும்.”
விடுதலை புலிகளின் ஏனைய மூத்த தலைவர்களுக்கு நிலைவரத்தை புரியவைக்க முயற்சிக்கவில்லையா என்று நான் கேட்டபோது வன்னியில் உள்ள தமிழ்ச்செல்வன், காஸ்ட்ரோ, பொட்டுஅம்மான், நியூயோர்க்கில் உள்ள உருத்திரகுமாரன் போன்றவர்கள் ஒஸ்லோவின் அனுசரணையுடன் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு எனக்கு எதிராக பிரபாகரனின் மனதில் தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்திவிட்டார்கள் என்று பாலசிங்கம் பதிலளித்தார்.
மேலும், இலங்கை இராணுவத்தை தோற்கடிக்க முடியும் என்றும் ராஜபக்சவுக்கு எதிராக உலகம் விடுதலை புலிகளை ஆதரிக்கும் என்றும் அவர்கள் தவறான விடயங்களை கூறி பிரபாகரனை நம்பவைத்தும் விட்டார்கள்.
சூசை, ‘பேபி ‘ சுப்பிரமணியம், பாலகுமாரன் மற்றும் பரா போன்ற மூத்த தலைவர்கள் இடர்பாட்டை விளங்கிக் கொண்டார்கள். ஆனால், யதார்த்த நிலையை கண்திறந்து பார்க்க பிரபாகரனை வழிக்குக் கொண்டுவரக்கூடிய அளவுக்கு அவர்கள் பலமுள்ளவர்களாக இருக்கவில்லை என்று பாலசிங்கம் கூறினார்.
நாமிருவரும் 20 – 25 நிமிடங்கள் பேசியிருந்த நிலையில் பாலசிங்கம் தொடர்ச்சியாக இரும ஆரம்பித்தார்.அவரால் தொடர்ந்து பேசமுடியவில்லை. உரையாடலை நிறுத்த வேண்டியதாயிற்று. போர் தீவிரமடைவது தவிர்க்கமுடியாததாகப் போகின்றது என்பதை புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்ததால், பாலசிங்கத்துடனான உரையாடல் எனக்கு பெரும் கவலையைத் தந்தது. வன்னி மண்ணில் உள்ள அப்பாவி தமிழ்க் குடிமக்கள் ஒரு மனதாபிமான அவலத்தை சந்திக்கப் போகிறார்கள் என்று கவலையடைந்தேன்.
எனது பயம் நியாயமானது என்பதை அடுத்துவந்த நிகழவுகள் நிரூபித்தன. சர்வதேச சமூகம் விடுதலை புலிகளை ” மொங்கப் போகிறது” என்ற பாலா அண்ணையின் எச்சரிக்கையும் சரியென்று நிரூபிக்கப்பட்டது. கேவலமான வேலை செய்வதற்கு கொழும்பை அனுமதித்துவிட்டு சர்வதேச சமூகம் இப்போது போர்க்குற்றங்கள் இடம்பெற்றதாகக் கூறிக்கொண்டு விசாரணை நடத்த விரும்புகிறது.
தப்பெண்ணம்
பாலசிங்கத்துடனான இறுதி உரையாடல் எனக்கு பெருமளவு விடயங்களை தெளிவுபடுத்தவும் செய்தது. அவருடன் நான் கொண்டிருந்த ( மென்னயமாகக் கூறுவதானால்) “தப்பெண்ணம் ” அவற்றில் பிரதானமானது. பாலசிங்கம் மெய்யாகவே பேச்சுவார்த்தை மூலமான இணக்கத்தீர்வு ஒன்றில் ஆழமான கரிசனை கொண்டிருந்தார் என்பதையும் ஆனால் ( பின்னர் கட்டவிழ்ந்த நிகழ்வுகள் நிரூபித்ததைப் போன்று ) பிரபாகரன் அதை நிராகரித்துவிட்டார் என்பதையும் பாலசிங்கத்துடனான உரையாடல் ஊடாக எனானால் விளங்கிக் கொள்ளக்கூடியதாக இருந்தது.
என்னைத் தாக்கி ஏன் பேசினீர்கள் என்றோ அல்லது சண்டே லீடர் பத்திரிகைக்கு நான் எழுதுவதை ஏன் தடுக்க முயன்றீர்கள் என்றோ நான் அவரிடம் கேட்கவில்லை. இறக்கும் தறுவாயில் இருக்கும் மனிதரிடம் அவ்வாறு கேட்பது நயநாகரிகம் இல்லை என்று நான் உணர்ந்தேன்.
ஆனால், தன்னை விடுதலை புலிகள் இயக்கத்திற்குள் பாதுகாப்பதற்காகவே எனக்கு எதிராக பாலா அண்ணை பகிரங்கமாக திரும்புவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கக்கூடும் என்று உணர்ந்தேன். தமிழ்ச்செல்வனும் காஸ்ட்ரோவும் அந்த நேரத்தில் வெளிநாடுகளில் இருந்த விடுதலை புலிகள் மத்தியில் எனக்கு எதிராக கயமைத்தனமான பிரசாரம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்கள்.
அத்துடன் முன்னைய காலகட்டங்களில் என்னுடன் பாலசிங்கம் வைத்திருந்த நெருக்கமான தொடர்பை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது அவர் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருந்திருக்கக்கூடியது மிகவும் சாத்தியமே.
தேசத்தின் குரல்
அன்டன் ஸ்ரனிஸ்லோஸ் பாலசிங்கம் தெற்கு லண்டனில் உள்ள தனது வீட்டில் 2006 டிசம்பர் 14 ஆம் திகதி வியாழக்கிழமை (பிரிட்டிஷ் நேரப்படி ) பிற்பகல் 1.45 மணிக்கும் அமைதியாக காலமானர். பாலா அண்ணை இறுதிமூச்சை விட்ட தருணம் அவரது அன்பு மனைவி அடேல் ஆன் அருகே இருந்தார்.2006 டிசம்பர் 20 ஆம் திகதி லண்டனில் அலெக்சாண்டிரா பலஸில் இறுதிச்சடங்கு இடம்பெற்றது. விடுதலை புலிகளின் தத்துவவாதியும் மதியூகியுமான பாலா அண்ணைக்கு இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ” தேசத்தின் குரல் ” என்ற பட்டத்தை வழங்கி அஞ்சலி செய்தார்.
நான் பாலா அண்ணையுடன் கொண்டிருந்த உறவுமுறை பற்றிய நினைவுகளும் சிந்தனைகளும் கடந்த 14 ஆம் திகதி அவரது 18 வது நினைவு தினம் என்பதால் மீண்டும் எழுந்தன.