சிரியா, சிறந்த வரலாற்றையும், செழிப்பான கலாசாரத்தையும் கொண்ட தேசம்.
அங்கு பல தசாப்தங்களாக நீடித்த நெருக்கடிகள், கடந்த பத்தாண்டுகளில் உச்சத்தை தொட்டிருந்தன.
கடந்த வாரம் நிகழ்ந்த சம்பவங்கள் மீண்டும் சிரியாவின் மீது உலகத்தின் பார்வையை திரும்பச் செய்திருக்கின்றன.
இந்நாட்டின் நெருக்கடி இடியப்ப சிக்கல் போன்றது தான். பல உலக நாடுகள் சம்பந்தப்பட்டுள்ளன. உள்ளூர் அரசியல் கட்சிகளும், ஆயுதக் குழுக்களும் தொடர்புபட்டுள்ளன.
இதனை ஓரளவேனும் புரிந்து கொள்ள வேண்டுமாயின், ஜனாதிபதி பஷார் அல்-அஸாத்தை பதவி கவிழ்க்க முனைந்த சக்திகள், அவற்றின் சதிமுயற்சிகள், போரினால் சிக்கி சீரழிந்த சிரியாவின் எதிர்காலம் போன்ற விடயங்களை ஆழமாக பார்க்க வேண்டும்.
தமது தந்தையின் தொடர்ச்சியாக, 2000ஆம் ஆண்டு முதல் ஜனாதிபதியாக இருந்தவர், பஷார் அல்-அஸாத். அவர் சிலரால் விரும்பப்பட்டு பலரால் வெறுக்கப்படக்கூடிய ஆளுமையாக இருக்கிறார்.
சிரிய மண்ணியில் அல்-அஸாத்தை ஆட்சேபிக்கும் குழுக்கள் உள்ளன. ஒரு எதேச்சாதிகாரியாகவும், ஊழல் கறைபடிந்த தலைவராகவும், தம்மை எதிர்க்கும் சக்திகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குபவராகவும் விமர்சிக்கின்றன.
அல்-அஸாத்தை ஆட்சேபிக்கும் குழுக்கள் பல வகைப்பட்டவை. அவற்றில் அரசியல் கட்சிகள் உண்டு. ஆயுதப்படைகளும் இருக்கின்றன. கிளர்ச்சி அமைப்புக்களும் உள்ளன. சில தரப்புகள் உண்மையான கரிசனையோடு இயங்குபவை. கடும்போக்கு சிந்தனையின் அடிப்படையில் ஆயுதமேந்திய சக்திகளும், வெளிநாடுகளின் விருப்பங்களை நிறைவேற்ற சதிகளில் ஈடுபடும் இயக்கங்களும் உண்டு.
சர்வதேச அரங்கை ஆராய்ந்தால், சிரியாவின் தலைவிதியை தீர்மானிக்க முனையும் பல வெளிநாட்டு சக்திகள் இருக்கின்றன. மேலைத்தேய நாடுகள், குறிப்பாக அமெரிக்கா போன்றவை, சிரியாவில் ஜனநாயகத்தையும், மனித உரிமைகளையும் மேம்படுத்தும் போர்வையில் அல்-அஸாத்திற்கு எதிராக ஆயுதக்குழுக்களுக்கு உதவி புரிகின்றன.
ஆனால், அந்த சக்திகளின் உண்மையான நோக்கம், பிராந்தியத்தில் ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகளின் செல்வாக்கை சீர்குலைப்பது தான்.
மறுபுறத்தில், அவ்விரு நாடுகளும் அல்-அஸாத்தின் மிக நெருக்கமான நட்பு நாடுகளாக திகழ்கின்றன. அவரது அரசாங்கம் அரசியல் சூழ்ச்சிகளைத் தாண்டி பதவியில் நீடிக்க வேண்டும் என்பதற்காக அவ்விரு நாடுகளும் இராணுவ ரீதியாக உதவி செய்தன. நிதியுதவியும் வழங்கின.
இத்தகைய சூழ்நிலையில், ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற இயக்கங்கள் சிரியாவின் அராஜக நிலையை தமக்கு சார்பாக பயன்படுத்திக் கொள்ள தவறவில்லை. இதன் காரணமாக, உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகள் சம்பந்தப்பட்ட சிக்கலான கட்டமைப்பில் இன்னொரு அடுக்கும் சேர்ந்தது. இத்தகைய அமைப்புக்கள் பல் பிடுங்கப்பட்ட பாம்புகள் போன்று இருந்தாலும், தீர்வு நோக்கிய பாதையை சிக்கலாக்கி வருகின்றன.
சதிமுயற்சி கட்டமைக்கப்பட்டது எவ்வாறு?
அல்-அஸாத்தின் அரசாங்கத்தை பதவி கவிழ்க்கும் முயற்சிகள் எழுந்தமானமாக இயங்கவில்லை. அவற்றை ஒருங்கிணைக்கக் கூடியதொரு சக்தி இருப்பதை அனுமானிக்கலாம்.
அல்-அஸாத்தின் ஒடுக்குமுறை ஆட்சியை விரும்பாதவர்கள் ஏராளம். அங்கு பொருளாதாரம் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு, அன்றாட வாழ்க்கை சுமையாகிப் போன பிராந்தியங்கள் இருந்தன.
இங்கு மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி வேரூன்றியிருந்தது. சிரியாவின் மீது சர்வதேச சமூகம் விதித்த தடைகள் காரணமாக, சிரியாவின் சாதாரண குடிமக்கள் வாழ்வதற்கே போராடினார்கள்.
இது தவிர, அமெரிக்கா, ரஷ்யா, ஈரான், துருக்கி, இஸ்ரேல் போன்ற நாடுகளும் சிரிய மண்ணை தத்தமது போர்க்களமாக பயன்படுத்தி வந்தன.
அவை நேரடியாக அன்றி, ஒவ்வொரு இயக்கங்களுக்கு ஆதரவு அளித்து அவற்றின் மூலமாக போர் புரிந்தன. இங்கு அமெரிக்காவை உதாரணம் காட்டலாம்.
இத்தகைய மறைமுக ஆயுதப் போர்களுக்கும் (Proxy Wars), திரைமறைவு செயற்பாடுகளுக்கும் (Covert Operations) தூண்டல்கள் இருந்தன. சிரியாவின் ஆயுதக் குழுக்களுக்கு வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த புலனாய்வு குழுக்கள் ஆயுதங்களையும், மூலவளங்களையும் தாராளமாக விநியோகித்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
இவற்றின் முதல் நோக்கம் அல்-அஸாத்தின் அரசாங்கத்தை பலவீனப்படுத்துவதாக இருந்தாலும், அவரை ஆட்சி கவிழ்த்த பின்னர் தமது நலனுக்கு ஏற்றவாறு சிரியாவின் அரசியல் ஆட்சி நிர்வாக கட்டமைப்பை உருவாக்கிக் கொள்ளுதல் என்ற இலட்சியமும் இருந்திருக்கலாம்.
அல்-அஸாத்தை பதவி கவிழ்த்தவர்கள் யார்?
ஆயுத போராட்டம் நடத்தி அல்-அசாத்தை பதவி கவிழ்த்த பிரதான கிளர்ச்சிக் குழுவிற்கு ஹயாத் தஹ்ரீர் அல்-ஷாம் என்று பெயர்.
இதனை சிரிய நிலப்பரப்பைத் தாண்டி பரந்து விரிந்ததாக அடையாளப்படுத்தப்படும் லெவன்ட் என்ற பிராந்தியத்தின் விடுதலைக்கான ஸ்தாபனம் என அடையாளப்படுத்த முடியும்.
சிரியாவின் சிவில் யுத்தம் ஆரம்பமான சமயத்தில், அல்-அஸாத்திற்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்துவதற்காக ஜிஹாத் அமைப்புக்கள் நுஸ்ரா முன்னணி என்ற அமைப்பை உருவாக்கின.
இந்தக் குழுவிற்கு ஆரம்பத்தில் ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்பு இருந்தது. அதனைத் தொடர்ந்து, அல்-கொய்தா அமைப்புடன் தொடர்புகளைப் பேணியது. ஆனால், 2016ஆம் ஆண்டளவில், நுஸ்ரா முன்னணி தன்னை மறுசீரமைத்துக் கொண்டது. கடும்போக்கு வேர்களைக் களைந்தது.
அது ஏனைய இயக்கங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தியபோது, பல கிளர்ச்சியாளர்கள் ஹயாத் தஹ்ரீர் அல்-ஷாம் என்ற குடையின் கீழ் ஒன்று திரண்டார்கள். இதனை அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் இன்னமும் பயங்கரவாத அமைப்பாகவே கருதுகிறார்கள்.
அபு மொஹம்மட் அல்-ஜொலானி.
இந்த அமைப்பின் தலைவர் அபு மொஹம்மட் அல்-ஜொலானி. ஒடுக்குமுறை ஆட்சியாளர்களின் பிடியில் இருந்து சிரியாவை விடுதலை செய்வது தமது நோக்கம் என அவர் கூறியிருக்கிறார்.
சிரியாவில் இருந்து புலம்பெயர்ந்த பெற்றோருக்கு சவூதி அரேபியாவில் பிறந்து, மீண்டும் சிரியாவிற்கு திரும்பி, பின்னர் ஈராக்கிற்கு சென்று அமெரிக்காவிற்கு எதிராக போராடுவதற்காக அல்கொய்தாவுடன் இணைந்த மனிதர்.
பின்னர், அந்த வலைப்பின்னலுடனான தொடர்பைத் துண்டித்து, சிரியாவின் இத்லிப் பிராந்தியத்தில் மக்கள் பணியில் ஈடுபட்டு தமக்கு மக்களின் அங்கீகாரம் பெறவும் முனைந்திருக்கிறார்.
சிரியாவின் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது?
அல்-ஜொலானியும் அவரது குழுவும் கடும்போக்கு ஜிஹாத் இலட்சியங்களைக் கைவிட்டு, உலக அங்கீகாரம் பெற முனைவதுடன் மாத்திரம் நிற்கவில்லை. சிரியாவில் ஒழுங்கமைக்கப்பட்ட ஆட்சி நிர்வாகத்தை ஏற்படுத்துவதில் தமக்குள்ள ஆர்வத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
அல்-அஸாத்தும் அவரது தந்தையும் ‘பாத்’ கோட்பாடுகளுக்கு அமைய ஒரே கட்சி தலைமையிலான ஆட்சி நிர்வாகத்தை முன்னெடுத்து,
ஷியாக்களின் அலவி பிரிவைச் சேர்ந்தவர்களை முக்கியமான பதவிகளில் அமர்த்தினார்கள் என்றால், சுன்னத்துல் ஜமாஅத் இஸ்லாமிய கோட்பாடுகளின் கீழமைந்த ஆட்சி நிர்வாகத்தை தாம் வரித்துக் கொள்ளத் தயாரென அல்-ஜொலானி சமிக்ஞை காட்டியுள்ளார்.
அரசுக்கு எதிரான ஆயுதத் தாக்குதலை ஆரம்பித்த நாள் தொடக்கம், சிரியாவில் வாழும் ஏனைய மதத்தவர்களுக்கும், இஸ்லாமிய மதப் பிரிவுகளைச் சேர்ந்த ஏனைய சிறு குழுவினர்க்கும் நியாயம் கிடைக்குமென அவர் உறுதியளிக்கவும் முனைந்திருக்கிறார்.
ஆனால், ஆண்டாண்டு கால அராஜகத்தாலும், ஆயுதப் போராட்டங்களாலும் சிதறி சின்னாபின்னமாகி இருக்கும் சிரிய மக்களை ஐக்கியப்படுத்துதல் என்பது அவ்வளவு எளிதாக சாத்தியமாகக் கூடிய விடயமா என்ற கேள்வி உண்டு.
சிரியாவை ஒரு தேசமாக கட்டியெழுப்பி மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவதொன்றும் எளிதான விடயம் அல்ல.
இன, மத பிரிவுகளின் அடிப்படையிலும், பிராந்திய ரீதியிலும் பிளவுபட்டிருக்கும் மக்களை ஐக்கியப்படுத்தக்கூடிய ஆட்சி நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும். அதற்கென காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. மறுபுறத்தில், சிதைந்து போயுள்ள உட்கட்டமைப்பு வசதிகளை மீளக் கட்டியெழுப்புவது அவசியம்.
சிரியாவின் மொத்த சனத்தொகையில் பாதிப் பேருக்கு மேல் இடம்பெயர்ந்தவர்களாக புலம்பெயர்ந்தவர்களாக வாழ்கிறார்கள்.
அவர்களுக்கொரு வாழ்க்கையை உருவாக்குதல் அவசியம். வேறு குழுக்கள் ஊடாக சண்டையிட்டு சிரியாவை தமது போர்க்களமாக மாற்றியுள்ள நாடுகள் வெளித்தரப்பில் இருந்து பிரயோகிக்கும் அழுத்தங்களை எதிர்கொள்வது இன்னொரு சவால்.
இவற்றையெல்லாம் தாண்டி, சிரியாவின் மக்கள் கௌவரமாக வாழக்கூடிய ஸ்திரமான தேசமொன்றை உருவாக்கிக் கொள்ள முடியுமா என்ற கேள்விக்கான பதில், வெறுமனே அதிகாரங்களின் தாழ்வாரங்களில் மாத்திரமன்றி, சிரிய மக்களின் மீண்டெழும் திறனிலும் திடசங்கற்பத்திலும் கூட தங்கியிருக்கிறது எனலாம்.
-சதீஷ் கிருஷ்ணபிள்ளை–