பாபா வங்கா… இந்தப் பெயரை ஏற்கெனவே கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பல்கேரியா நாட்டின் பெலாசிகா பகுதியைச் சேர்ந்த பெண்மணி இவர். சின்ன வயதில் கண் பார்வையை இழந்த பாபா வங்கா, வருங்கால உலகில் இனி என்னென்ன நடக்கும் என்று ஆரூடங்களைச் சொல்ல ஆரம்பித்தார்.

அந்த வகையில் பாபா வங்காவுக்கு, ‘பால்கன் பகுதியின் பெண் நாஸ்டிரடாமஸ்’ என்ற பெயர் கூட உண்டு. (பிரான்ஸ் நாட்டில் பழங்காலத்தில் வாழ்ந்த தீர்க்கதரிசி நாஸ்டிரடாமஸ், நூற்றாண்டுகள் என்ற புத்தகத்தின் மூலம் எதிர்கால உலகத்தைப் பற்றி ஏராளமான சங்கதிகளை புட்டுபுட்டு வைத்தவர்)

பாபா வங்கா, எதிர்காலத்தில், அதாவது 5079ஆம் ஆண்டு வரை என்னென்ன நடக்கும் என்று கூறியிருக்கிறார். இவரது ஆரூடங்களில் 85 சதவீத ஆரூடங்கள் பலித்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

சரி, இப்போது எதற்கு பாபா வங்காவைப் பற்றி நாம் பேச வேண்டும் என்ற கேள்வி எழலாம். மேற்கு ஆசிய நாடான சிரியாவில் தற்போது ஆட்சி கவிழ்ந்து, சிரியா கிளர்ச்சியாளர்கள் கையில் சிக்கிவிட்ட நிலையில் பாபா வங்கா பற்றிய நினைப்பு உலக அளவில் பலருக்கு மீண்டும் வந்திருக்கிறது.

ஏன்? என்ன காரணம்?

‘சிரியாவின் வீழ்ச்சிக்குப்பிறகு மூன்றாம் உலகப்போர் தொடங்கும்’ என்று பாபா வங்கா ஏற்கெனவே ஆரூடம் கூறியிருப்பதுதான் காரணம்.

1996ஆம் ஆண்டு, பாபா வங்கா மரணமடைவதற்கு முன் கூறிய ஆரூடம் இது.

‘சிரியா நாடு நிலைகுலையும். சிரியாவின் இந்த வீழ்ச்சி, ஒரு பெரும்போருக்கான முன்னறிவிப்பும், தொடக்கப் புள்ளியும் ஆகும்’ என்று கூறியிருக்கிறார் பாபா வங்கா.

‘வெற்றியாளரின் காலில் சிரியா விழுந்துவிடும். அந்த வெற்றியாளர் ஒருவர் இல்லை’ என்பது பாபா வங்கா கூறியிருப்பது பலரையும் இப்போது வியப்புக்குள்ளாக்கி வருகிறது.

சிரியாவில் ஜனாதிபதி பசர்-அல்-அசாத்தின் ஆட்சி கவிழ்ந்த நிலையில் தலைநகர் டமாஸ்கஸை, ஹாயத்-தஹ்ரீர்-அல்-ஷாம் (ஹெச்.டி.எஸ்.) என்ற கிளர்ச்சிப்படை கைப்பற்றி இருக்கிறது. அதற்கு துருக்கி நாட்டின் ‘துருக்கி தேசிய ராணுவம்’ என்ற மற்றொரு கிளர்ச்சிப் படை உதவி புரிந்திருக்கிறது. இதுபோக சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதப் படை, குர்த் இனப் போராளிகள் என பல்வேறு ஆயுதக் குழுக்கள் உள்ளன. ஜனாதிபதி பசர்-அல்-அசாத் வீழ்ந்ததை இவர்கள் அனைவருமே வெற்றியாகவே நினைக்கிறார்கள்.

இந்த நிலையில், ‘சிரியாவில் வெற்றியாளர் ஒருவர் இல்லை’ என்று அந்தக்காலத்திலேயே துல்லியமாக வரும்பொருள் உரைத்திருக்கிறார் பாபா வங்கா.

பாபா வங்காவின் கணிப்புப்படி பார்த்தால் 2025 ஆம் ஆண்டின் வசந்தகாலத்தில் பெரும்போர் (மூன்றாம் உலகப்போர்?) மூளும் என்று தெரிகிறது. ‘கிழக்கும் மேற்கும் மோதிக்கொள்ளும். கிழக்கில் தொடங்கும் போர் மேற்கை அழிக்கும்’ என்று கணித்திருக்கிறார் பாபா வங்கா.

‘2025 ஆம் ஆண்டு ஐரோப்பா கண்டம் அழிவைச் சந்திக்கும். மக்கள் தொகை குறைந்து, ஐரோப்பா பயன்படாத நிலமாக மாறும்’ என்பது பாபா வங்காவின் கணிப்பு.

‘2025-ல், அபோகலப்ஸ் என்ற பேரழிவு தொடங்கும், வேற்றுலக உயிர்களுடன் தொடர்பு உருவாகும், கருவிகளின் துணையின்றி பேசக்கூடிய டெலிபதி என்ற எண்ணத்தொடர்பு முறை வளரும். புற்றுநோய்க்கு எதிரான மிகச்சிறந்த மருந்து கண்டுபிடிக்கப்படும்’ என்பதெல்லாம் பாபா வங்காவின் இதர கணிப்புகள்.

ஆரூடங்களில் பழம் தின்று கொட்டை போட்டவரான நாஸ்டிரடமாசும் கூட, ‘2025 ஆம் ஆண்டு ஒரு போர் வெடிக்கும், ஐரோப்பா கண்டத்துக்குச் சிக்கல் ஏற்படும்’ என்று கூறியிருக்கிறார். ‘பிளேக் மாதிரியான கொள்ளை நோய் ஐரோப்பாவில் பரவும்’ என்றும் நாஸ்டிரடாமஸ் எச்சரித்திருக்கிறார்.

அண்மையில், கரோனா என்ற பெருந்தொற்றை உலகம் ஏற்கெனவே சந்தித்து முடித்து விட்டது. இந்தநிலையில் நாஸ்டிரடாமஸ் எச்சரிக்கும் ‘பிளேக்’ இதுபோன்ற இன்னுமொரு பெருந்தொற்றா என்பது தெரியவில்லை. ஒருவேளை கரோனா பெருந்தொற்றுகூட மாறுவேடம் அணிந்து, 2025 ஆம் ஆண்டில் இன்னொரு சுற்று வரக்கூடும்.

ஒருவகையில் 2025-இல் பிளேக் நோய் என்று நாஸ்டிரடாமஸ் கூறியிருப்பது பாராட்டத்தக்க ஒரு கணிப்பு. ‘பிளேக் என்பது எலிகளால் பரப்பப்படும் நோய். போர் என்பது மனிதர்களால் பரப்பப்படும் பிளேக் நோய்’ என்று ஒரு பொன்மொழி உண்டு. அந்த வகையில் மூன்றாம் உலகப் போரைத்தான் பிளேக் என்று நாஸ்டிரடாமஸ் நாசூக்காக கூறியிருக்கிறாரா எனத் தெரியவில்லை.

‘ஐரோப்பாவில் நடக்கும் போர் உலகப் பேரழிவாக விரிவடையும்’ என்றும் நாஸ்டிரடாமஸ் கூறியிருக்கிறார்.

தற்போது சிரியாவில் நடந்து முடிந்த போர்கூட, ஒருவகையில் ஒரு மினி உலகப்போர் மாதிரியானதுதான். சிரிய ராணுவம், ரஷியப் படையினர், துருக்கி ராணுவம், குர்து போராளிகள், அவர்களுக்குத் துணையாக 900 அமெரிக்கப் படையினர், ஐ.எஸ். தீவிரவாதப் படை, துருக்கி தேசிய ராணுவம், ஹாயத்-தஹ்ரீர்-அல்-ஷாம் கிளர்ச்சிப் படை, லெபனானில் இயங்கும் ஹிஸ்புல்லா அமைப்பு, ஈரான், இஸ்ரேல் நாடுகளின் தலையீடு என்று சிரியாவில் கிட்டத்தட்ட ஒரு மினி உலகப்போர் நடந்து இப்போது இடைவேளை விடப்பட்டிருக்கிறது.

இந்தநிலையில்தான், வரும் ஆண்டில் மூன்றாம் உலகப்போர் வெடிக்கும் என்று நாஸ்டிரடாமஸ், பாபா வங்கா போன்றவர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.‘

பாபா வங்கா சொன்ன 85 சதவீத ஆரூடங்கள் ஏற்கெனவே பலித்திருக்கின்றன என்று பார்த்தோம். அமெரிக்காவில் நடந்த செப்டம்பர் 11 இரட்டைக் கோபுரத் தாக்குதலை, ‘பயங்கரம் பயங்கரம் அமெரிக்கா மீதான இரண்டு எஃகு பறவைகளின் தாக்குதல்’ என்று பாபா வங்கா முன்கூட்டியே கணித்திருந்தார். ‘எஃகு பறவைகள்’ என்று அவர் கூறியது தாக்குதலுக்குப் பயன்பட்ட பயணிகள் விமானங்களை என்பது இப்போது புரிகிறது.

அதுபோல அமெரிக்காவின் 44 ஆவது அதிபராக கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவர் வருவார் என்பதும் பாபா வங்காவின் கணிப்பு. அதன்படி பராக் ஒபாமா, அமெரிக்காவின் 44ஆவது ஜனாதிபதியாக வந்து அந்த கணிப்பை மெய்யாக்கினார்.

இதுபோல இளவரசி டயானாவின் மரணம், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறும் (பிரெக்சிட்) என்பன போன்ற பாபா வங்காவின் பல ஆரூடங்கள் துல்லியமாக பலித்திருக்கின்றன.

பாபா வங்காவின் 85 சதவீத ஆரூடங்கள் பலித்திருக்கும் நிலையில், வரும் ஆண்டில் மூன்றாம் உலகப்போர் தொடங்கும் என்று பாபா வங்கா கணித்திருப்பது உலக அளவில் ஒருவித பதற்றத்தை உருவாக்கி வருகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version