‘க்ளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தின் கீழ் 2025ஆம் ஆண்டில் 40 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வருவதன் ஊடாக 8 பில்லியன் டொலர் வருமானத்தை திரட்டிக்கொள்வதே இலக்கு என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது கொள்கை பிரகடனத்தில் தெரிவித்துள்ளார்.
இதற்கு வலுசேர்க்கும் வகையில் தற்போது இலங்கைக்கு வருகைத்தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது.
புவியியல் ரீதியாக உலகின் சிறந்த சுற்றுலாத்தளமாக இலங்கை காணப்படுகிறது. இதுவே வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவருவதற்கு பிரதான காரணம். இலங்கை பல்வேறு சவால்களுக்கு மத்தியில் முன்னேற்றம் கண்டு வருகின்றபோதிலும் டொலர் உள்வருகையை அதிகரிக்க வேண்டுமென்பதை பொருளாதார நிபுணர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதற்குரிய மூலங்களில் மிகமுக்கியமானவொரு கருவியாக சுற்றுலாத் துறையை அடையாளப்படுத்தியுள்ளனர்.
இவ்வருடத்தின் ஜனவரி முதல் நவம்பர் 26ஆம் திகதியுடனான காலப்பகுதி வரையில் இலங்கைக்கு 1,776,889 வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வருகைத் தந்துள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
‘க்ளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தின் கீழ் 40 இலட்சம் சுற்றுலாப்பயணிகளை இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்படும். இதன் ஊடாக 8 பில்லியன் டொலர் வருமானம் ஈட்டுவதே எமது நோக்கமாகும். அடுத்த வருடம் சுற்றுலாத்துறையில் வணிக ரீதியில் முக்கியமானதொரு ஆண்டாக அமையும் என தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் இந்த ஆண்டில் இந்தியா, பிரித்தானியா, ரஷ்யா போன்ற நாடுகளிலிருந்தே அதிகளவான சுற்றுலாப்பயணிகள் வருகைத் தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024ஆம் ஆண்டு வெளிநாட்டு பயணிகளின் வருகை உயர்வடைந்துள்ளது. ஒவ்வொரு மாதமமும் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. அதன்படி நவம்பர் மாதம் 26ஆம் திகதி வரையில் மாத்திரம் 156,174 சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளனர்.
2023ஆம் ஆண்டு 1,487,303 சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளனர். 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நவம்பர் 26ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் மாத்திரம் 1,776,889 வெளிநாட்டுப் பயணிகள் வருகைத்தந்துள்ளனர்.
இக்காலப்பகுதியில் இந்தியா, பிரித்தானியா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளிலிருந்தே அதிகளவான சுற்றுலாப்பயணிகள் வருகைத்தந்துள்ளனர்.
அதனடிப்படையில் இந்தியாவிலிருந்து 322,973 சுற்றுலாப்பயணிகளும் பிரித்தானியாவிலிருந்து 146,670 சுற்றுலாப்பயணிகளும் ரஷ்யாவிலிருந்து 137,599 சுற்றுலாப்பயணிகளும் வருகைத்தந்துள்ளனர்.
மேலும் ஜேர்மனியிலிருந்து 108,788 சுற்றுலாப்பயணிகளும் சீனாவிலிருந்து 105,574 சுற்றுலாப்பயணிகளும் இக்காலப்பகுதியில் இலங்கைக்கு வருகைதந்துள்ளனர்.
2025ஆம் ஆண்டு 40 இலட்சம் சுற்றுலாப்பயணிகளை இலங்கைக்கு அழைத்து வர அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. இதன் ஊடாக 8 பில்லியன் டொலர் வருமானத்தை ஈட்டிக்கொள்ள அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.
இலங்கையின் சுற்றுலாத்துறை அண்மைக்காலமாக சீரான நிலையில் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது.
2018ஆம் ஆண்டு இலங்கைக்கு 2.3 மில்லியன் சுற்றுலாப்பயணிகள் வருகை தந்துள்ளனர். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம், கொவிட் தொற்று பரவல் மற்றும் அதனோடு இணைந்த பொருளாதார வீழ்ச்சி போன்ற காரணங்களால் சுற்றுலாத்துறை பாரியதொரு வீழ்ச்சியை சந்தித்திருந்தது.
வங்குரோத்து நிலையிலிருந்த இலங்கைக்கு இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகளினதும் சர்வதேச நாணய நிதியத்தினதும் கடன் உதவிகள் கிடைக்கப் பெற்றதையடுத்து இலங்கை மெதுமெதுவாக முன்னேறத் தொடங்கி மீண்டும் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளின் பட்டியலுக்குள் இடம்பிடித்துள்ளது.
இவ்வாண்டு சுற்றுலாப்பயணிகள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவங்கள்
இலங்கையின் சுற்றுலாத்துறை தற்போது முன்னேறி வருகின்ற நிலையில் அதனை சவாலுக்குட்படுத்தும் வகையில் இவ்வாண்டு சில அச்சுறுத்தல் சம்பவங்களும் பதிவாகியிருந்தன.
இலங்கையில் கடந்த செப்டெம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது. இதன்போது அமெரிக்க பிரஜைகளை இலங்கைக்கு செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறும் இலங்கையில் இருக்கும் அமெரிக்க பிரஜைகள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும் அமெரிக்க தூதரகம் அறிவித்திருந்தது.
இதற்கு தேர்தல் நிமித்தம் இலங்கையில் கலவரங்கள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க தூதரகத்தினால் காரணம் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இங்கு வருகைத்தந்திருந்த சுற்றுலாப்பயணிகள் மத்தியில் ஒருவித பதற்றம் நிலவினாலும் கூட இலங்கை வரலாற்றில் முதல்முறையாக எவ்வித குளறுபிடிகளுமின்றி இடதுசாரி கொள்கையுடைய கட்சியான ஜே.வி.பி. எனும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
இதையடுத்து அமெரிக்க தூதரகமும் தமது பிரஜைகள் இலங்கைக்கு தயக்கமின்றி வந்துசெல்ல முடியுமென பின்னர் அறிவித்திருந்தது.
நிலைமை இவ்வாறிருக்க கடந்த ஒக்டோபர் மாதம் கிழக்கு மாகாணத்திலுள்ள அறுகம்குடாவில் அதிகளவான இஸ்ரேலியர்கள் நடமாடுவதாக தகவல் வெளியானதையடுத்து நாடளாவிய ரீதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
ஜனாதிபதி அநுரகுமார நாட்டை பொறுப்பேற்ற சில தினங்களில் மீண்டும் சுற்றுலாத்துறையை கேள்விக்குட்படுத்தும் வகையிலான பீதி அலையொன்று கிளம்பியிருந்தது. இந்த அலையை அமெரிக்காவே தோற்றுவித்தது என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
இலங்கைக்கு இஸ்ரேலை சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் வருவதன் காரணமாகவும் அவர்கள் அறுகம்குடாவில் ஒரு கட்டிடத்தை ஆக்கிரமித்துள்ளதன் காரணமாகவும் அந்த பகுதியில் தாக்குதல் நடைபெறக்கூடிய சாத்தியமுள்ளதாக அமெரிக்கா எச்சரித்திருக்கலாம் என பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்திருந்தார்.
ஆக இதுபோன்ற பீதி அலைகளுக்கு மத்தியில் கடந்த ஒக்டோபர் மாதம் முதல் மிகப்பாரியதொரு முன்னேற்றத்தை சுற்றுலாத்துறை அடைந்துவருகின்றதை அவதானிக்க முடிகிறது.
அதனடிப்படையில் கடந்த ஒக்டோபர் மாதத்தில் மாத்திரம் 135,907 சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளனர்.
இந்த எண்ணிக்கையானது மேற்குறிப்பிடப்பட்ட சம்பவங்களுக்கு பின்னர் பதிவான எண்ணிக்கையாகும். இந்த மாதத்தில் மாத்திரம் 68,486 (50.4 வீதம்) சுற்றுலாப்பயணிகள் ஆசிய பசுபிக் நாடுகளிலிருந்தும் 58,577 (43.1 வீதம்)சுற்றுலாப்பயணிகள் ஐரோப்பிய நாடுகளிலிருந்து வருகைத்தந்துள்ளனர்.
எனவே நீண்ட இடைவெளிக்கு பின்னர் இலங்கைக்கு இவ்வாண்டு சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் வருகைத்தருகின்றனர். எனவே இந்த எண்ணிக்கையை தொடர்ந்தும் அதிகரிக்கும் விடயத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மிகச்சிறந்த பொறிமுறைகைளை கையாள வேண்டுமென்பதே பொருளாதார நிபுணர்களுடைய கருத்தாக அமைந்துள்ளது.
பேராசிரியர் திலக் விஜயதுங்க பண்டார
‘சுற்றுலாத்துறை ஊடாக நாட்டுக்கு வருமானம் கிடைப்பது பற்றி அதிகம் பேசப்பட்டாலும் கூட கடந்த காலத்திலிருந்து இன்றுவரை நாட்டில் அதற்குரிய சரியான பொறிமுறை இல்லை’ என பேராதனை பல்கலைக்கழக புவியியல் துறை தலைவர் பேராசிரியர் திலக் விஜயதுங்க பண்டார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
சுற்றுலாப்பயணிகள் வெறும் பொழுதுபோக்குக்காக மட்டும் வெளிநாடுகளுக்கு செல்வதில்லை. எந்த நோக்கத்துக்காக நாட்டுக்கு வந்தாலும் தரமான சுற்றுலாவை ஒழுங்குபடுத்தி அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் மேம்படுத்தும் திட்டத்தை உருவாக்க வேண்டும்.
புவியியல் ரீதியாக உலகின் சிறந்த சுற்றுலாத்தளமாக இலங்கை காணப்படுகிறது. இதுவே வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவருவதற்கு காரணம். என்றாலும் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்து இங்கு வருகைத்தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையிலான சேவைகளை முன்னெடுப்பது தொடர்பில் சரியான பொறிமுறையொன்று இலங்கையிடம் இல்லை.
சுற்றுலாத் துறையினூடாகவே எமது நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும் என கூறப்படுகின்ற போதிலும், இப்பிரச்சினைகளுக்கு உரிய வேலைத்திட்டம் இலங்கையிடம் இல்லை. இதேநிலையில் சுற்றுலாத்துறையை தொடர்ந்தும் கொண்டு செல்லும்பட்சத்தில் அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு கேள்விக்குள்ளாகும் என தெரிவித்தார்.
ஆக, இலங்கைக்கு வருகைத்தரும் சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியவொரு தேவை புதிய அரசாங்கத்துக்கு காணப்படுகிறது.
சுற்றுலாத்தளங்களில் அரங்கேறும் கொள்ளை, கப்பம்கோரம் போன்ற சம்பவங்களை இடம்பெறுவதை தடுக்க வேண்டியது கட்டாயமாகவுள்ளது.
அதேபோன்று சுற்றுலாத்தளங்கள் பார்வையிடுவதற்கு ஏற்றவாறு அமைந்துள்ளது என்பதை கண்காணிப்பதற்கு விசேட பொறிமுறையொன்றை உருவாக்க வேண்டுமெனவும் அரசியல் மட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
காரணம் அண்மைக்காலங்களில் மலையேறும் சுற்றுலாப்பயணிகள் தவறி விழுவதும் வழிமாறிபோய் காணாமல்போன சம்பவங்களும் பதிவாகியுள்ளன. அதேபோன்று காட்டு விலங்குகளால் தாக்கப்படும் சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
எனவே இதுபோன்ற சம்பவங்களால் சர்வதேச ரீதியில் இலங்கையின் ஜனநாயகம் கேள்விக்குள்ளாக்கப்படக்கூடும் என துறைசார் பேராசிரியர்கள் எச்சரிக்கின்றனர்.
எனவே ‘க்ளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தின் கீழ் இலங்கையின் சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பில் பொருளாதார நிபுணர்களாலும் துறைசார் கல்விமான்களாலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயங்களை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கவனத்திற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் முழுமையான பாதுகாப்பை உணர வேண்டும். இந்த மனோநிலையானது இலங்கை மீதான சர்வதேசத்தின் நம்பிக்கையை உறுதிப்படுத்துவதாக அமையும்.