ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்காவின் இந்திய விஜயம் வெற்றிகரமான முறையில் அமைந்திருக்கிறது. இந்தியா உடனான இருதரப்பு உறவுகள் மற்றும் வர்த்தக உடன்பாடுகள் பலமான நிலைக்குச் சென்றிருக்கிறது. இவை தொடர்பாக முன்னை நாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராட்டுமளவுக்கு விடயங்கள் மேல்நிலை பெற்று காணப்படுகிறது.

மேலும் சர்வதேச நாணய நிதியத்தின் வழிகாட்டல் கீழ் சந்தை பொருளாதாரத்தை நோக்கிய நகர்வுகள் மூலதன வருகைக்காக மாற்றங்களுக்கு தயாராகும் நிலை என அனைத்து தளங்களிலும் நெகிழ்வுத் தன்மையுடன் பயணிக்க தேசிய மக்கள் சக்தி தயாராகி வருகின்றது. இன்றைய உலகமயமாக்கல் போக்கு பல்தேசிய நிறுவனங்களின் எதிர்பார்ப்புகள் என்பவற்றை தவிர்த்து தனித்த பயணத்தை தொடர முடியாது என்பது தேசிய மக்கள் சக்திக்கு தெளிவாகவே தெரிகின்றது.

எனவே எதிரணி அரசியல் சக்திகளின் பொருளாதார கொள்கை ரீதியான முன்னெடுப்புகள் அனைத்தையும் 159 பாராளுமன்ற உறுப்பினர்கள் பலத்துடன் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தலைமையில் கீழ் தேசிய மக்கள் சக்தி முன்னெடுக்கும் நிலை காணப்படுவதால் எதிரணியினருக்கு பொருளாதார கொள்கை ரீதியான போராட்ட செயற்பாடுகளுக்கு இடமில்லாமல் போயுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் வரலாற்றைப் பார்க்கின்ற போது குறிப்பாக மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் கொள்கை நிலைப்பாட்டை பார்க்கின்ற போது இந்திய விரோத நிலைப்பாடு மிகப் பிரதான பாத்திரத்தை வகித்து வந்திருக்கிறது. குறிப்பாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் ரோகண விஜயவீரவின் ஐந்து பிரதான கொள்கை முன்னெடுப்பில் இந்திய விஸ்தரிப்பு என்ற விடயம் பிரதான ஒன்றாக அமைந்திருந்தது.

எனவே இன்றைய தேசிய மக்கள் சக்தியினர் இவை யாவற்றையும் புறந்தள்ளிவிட்டு இந்தியாவுடனான இணக்க நிலைக்கு தம்மை தயார்படுத்தி வருவது ஒரு ஆரோக்கிய நிலையை அவர்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது. இந்த புதிய மாற்றம் அவர்களின் அங்கத்தவர்களின் மத்தியில் குழப்பங்களை உருவாக்கியிருக்கும் என்பதும் தவிர்க்க முடியாத ஒன்றாக பார்க்கப்படுகிறது.

மேலும் மக்கள் விடுதலை முன்னணியிலிருந்து பிரிந்து நிற்கும் முன்னிலை சோசலிச கட்சியினர் தொடர்ந்தும் இந்திய விரோத முன்னெடுப்புகளை காத்திரமாக முன் எடுத்து வருவதை காணக்கூடியதாக இருக்கின்றது. மிகப் பலவீனமான நிலையில் இருக்கும் விமல் வீரவன்ச அணியினரும் இந்த இந்திய விரோத செயற்பாடுகளுக்கு ஆதரவான கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் தேசிய பிரச்சனைக்கான தீர்வு தொடர்பில் இந்தியா தனது எதிர்பார்ப்பை அனுரகுமார திசாநாயக்காவுடனான சந்திப்பின்போது மீண்டும் வலியுறுத்தி இருப்பதையும் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. இம்முறை 13 வது அரசியலமைப்பு தொடர்பாக குறிப்பிட்டு இந்தியா கூறாமல் இருந்துள்ளது என்ற விமர்சனங்களும் மேல் வந்திருக்கிறது.

மேலும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு விடயம் மூன்று வருடம் கழிந்த நிலையில் தேசிய மக்கள் சக்தியினரால் கொண்டுவரப்படவிருக்கும் புதிய அரசியலமைப்பின் ஊடாக தீர்வை வழங்க இருப்பதாக எதிர்பார்க்கப்படுகின்றது.இது காலதாமதத்தை ஏற்படுத்தும் நிலையாகவே பார்க்கப்படுகின்றது.

இலங்கையின் மிகப் பிரதான பிரச்சினையாக தமிழ் தேசிய பிரச்சினை காணப்படுகிறது. கடந்த 76 ஆண்டு காலமாக நீடித்த நிலையில் இப்பிரச்சனை காணப்படுகிறது. இலங்கை பொருளாதாரம் வங்குரோத்து நிலைக்கு சென்றதும் குறிப்பாக போர் நடவடிக்கைகளுக்காக பெறப்பட்ட கடன் பொருளாதார இழப்பு என அனைத்தும் இதைச் சுற்றியேகாணப்படுகிறது.

எனவே இந்த பிரதான பிரச்சனை தொடர்ந்து பின் தள்ளும் நிலையே தொடர்கிறது. 1977ல் பதவிக்கு வந்த ஜே.ஆர். ஜெயவர்த்தன தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது வட்டமேசை மாநாட்டின் மூலம் தமிழர் பிரச்னைக்கு தீர்வு வழங்கப்படும் என்ற உறுதி மொழியை பிரசாரத்தின் போது வழங்கியிருந்தார்.

இதன் காரணமாக தெற்கிலே தமிழர்கள் தமது வாக்குகளை ஐக்கிய தேசியக் கட்சிக்கே வழங்கியிருந்தனர்.ஜே .ஆர். பதவிக்கு வந்து நான்கு வருடங்கள் கழிந்த நிலையில் ஒன்றுக்குமே பிரயோசனம் இல்லாத மாவட்ட சபைகளை தமிழ் மக்களுக்கு தீர்வாக முன்வைத்தார். இந்த குறை பிரசவத்தின் காரணமாகவே மிகப்பெரிய அனர்த்தங்கள் தமிழர் தேசத்தில் உருவாகும் நிலை தோற்றம் பெற்றது.

சமாதான தேவதையாக 1994 ல் 62.4 விகித வாக்குகளை பெற்று பதவிக்கு வந்த சந்திரிகா குமாரதுங்க ஆறு வருடங்கள் கழிந்த நிலையிலேயே புதிய அரசியல் யாப்பின் ஊடாக தீர்வைக் கொண்டு வந்தார். ஆனால் அவரது முயற்சியும் தோல்வியிலேயே முடிந்தது. இது தொடர்பாக முக்கிய சந்திப்பு ஒன்றில் மங்கள சமரவீரா கருத்து கூறுகையில்; 1994ல் மக்கள் ஆதரவு பலமாக இருந்த காலப்பகுதியில் புதிய பாராளுமன்றத்தை அரசியலமைப்பு நிர்ணய சபையாக மாற்றி தீர்வு முயற்சிகளை மேற்கொண்டிருந்தால் வெற்றி பெற்றிருக்க முடியும் என கூறியிருந்தார்.

எனவே தற்போது கூட இனவாதம், மதவாதம் என்பன மிகவும் பலவீனமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் குறிப்பாக இந்த சக்திகளுக்கு தலைமை தாங்கி வந்த மகிந்த ராஜபக்ஷ அணி ஆடை களைந்த நிலையில் அம்மணமாக நிற்கும் இன்றைய சூழ்நிலையில் தீர்வு முயற்சிகள் நிச்சயம் வெற்றி பெறும். தென்னிலங்கை மக்களும் இதற்கு ஆதரவாகவே உள்ளனர். ஏதோ காரணங்களுக்காக தேசிய மக்கள் சக்தி இதனை பின்தள்ளி வருவது கவலை தரும் நிலையாகும்.

தற்போது பாராளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகமை தொடர்பான சர்ச்சை சபாநாயகர் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் ஆளும் தரப்பில் ஆறு பேர் இந்த சிக்கலுக்கு முகம் கொடுத்திருக்கும் நிலையில் எதிர்க்கட்சி தலைவரும் இந்த சிக்கலுக்குள் சிக்கியிருக்கும் நிலை தோற்றம் பெற்றிருக்கிறது.

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஆளும் தரப்பு 42 விகிதம் என்ற நிலையும் எதிரணிக்கு 58 விகிதம் என்ற நிலையும் காணப்பட்டிருந்த நிலையில் எதிரணிகளின் பலவீன நிலை காரணமாக பாராளுமன்ற தேர்தலில் மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிக்கும் நிலை ஏற்பட்டிருந்தது. எதிரணியின் பலவீன நிலை காரணமாக தொழிற்சங்க மட்டத்தில் சிவில் அமைப்புகள் மட்டத்தில் பெரிய அளவிலான பின்னடைவுகள் ஏற்பட்டு வருகிறது. எனவே இலங்கையில் ஆளும் தரப்பின் பலத்தை விட எதிரணியின் பலவினமே அரசாங்கத்துக்கு அதிக பலத்தை வழங்கி வருகிறது.

தமிழர் தேசத்தைப் பொறுத்தவரையில் தென்னிலங்கை எதிரணி தளத்தை விட தமிழர் தேசத்தின் அரசியல் அணிகளின் நிலை அதிக பலவீன நிலையில் காணப்படுகிறது. தற்போதைய காலகட்டத்தில் தமிழர் தேசம் ஐக்கியமான அணுகுமுறைக்குள் பயணிக்க வேண்டும் என்பது சூழ்நிலை நிர்ப்பந்தமாக காணப்படுகிறது.

ஆனால் தமிழர் தேசிய அரசியல் இயக்கங்கள் அந்த நிலைக்கு இன்னும் வராத நிலையே காணப்படுகிறது . தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கும் ரெலோவுக்கும் இடையே ஒரு சந்திப்பு ஏற்பட்டிருந்தது.அந்த நிலைமைக்கு பின்னர் ஐக்கியமான செயற்பாட்டு மேல் வருகை கரைந்து போன நிலையே காணப்படுகிறது.

வடபகுதியில் 27 ஆயிரம் மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்து சுயேட்சை வேட்பாளர்களுக்கு ஒருவருக்கு தமது வாக்குகளை அள்ளி வழங்கியிருந்தனர். மேற்படி வேட்பாளர் சிக்கல்கள் மேல் சிக்கல்களை உருவாக்கியிருப்பதுடன் தற்போது நீதிமன்றம் வரை விடையங்கள் நகர்ந்து வருகின்றது.

புதிய சூழ்நிலைகள் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய பிரதான நகர்வுகள் தொடர்பில் தமிழர் தேசத்தின் அரசியல் இயக்கங்களுக்கிடையே ஒரு புரிதல் நிலைமை இன்று வரை தோற்றம் பெறாதிருப்பது கவலை தரும் நிலையாகும். இந்த நிலை மேலும் தொடர்ந்தால் வரவிருக்கும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை தேர்தலில் கூட பெரும் பின்னடைவுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகிறது.

நடராஜ ஜனகன்

Share.
Leave A Reply

Exit mobile version