2004ம் ஆண்டு சுனாமி அனர்த்தம் மற்றும் அதன் 20 வருடங்கள் குறித்து சனல் ஐலண்டை சேர்ந்த இருவர் பிபிசிக்கு தமது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
வரலாற்றில் மிகவும் பயங்கரமான சுனாமி என கருதப்படும் சுனாமி 2004 இல் இந்து சமுத்திரத்தை தாக்கியது. 225,000 பேரை இந்த சுனாமி பலிகொண்டதுடன் 1.7 மில்லியனிற்கும் அதிகமானவர்களை இடம்பெயரச்செய்தது.
சுனாமியின் முதலாவது அலைதாக்கியவேளை பீட்டர் ரோபி இலங்கையின் கடற்கரையொன்றில் காணப்பட்டார்.
அதேவேளை கிராண்ட் பெல்தாம் இயற்கை அனர்த்தத்தின் பின்னர் இலங்கை மக்களிற்கு உதவுவதற்காக அங்கு சென்றிருந்தார்.
நான் உயிரிழக்கப்போகின்றேன் என நினைத்த அந்த தருணம் எனக்கு நினைவிருக்கின்றது என தெரிவிக்கின்றார் ரோபி.
ரோபி உனவடுன கடற்கரையில் தனது சகாவான ஜீன் பிரிச்சர்ட்டுடன் காலை உணவை சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.அவ்வேளையே சுனாமி தாககியது.
‘ என்னை சுனாமி அலைகள் காடுகள் ஊடாக கொண்டு சென்றன,சலவை இயந்திரத்தில் அகப்பட்டது போல உணர்ந்தேன் என அவர் தெரிவிக்கின்றார்.
‘மிதக்கமுடியாதவை என நீங்கள் கருதிய அனைத்துப்பொருட்களும் மிதக்க தொடங்கின”
‘நான் தண்ணீருக்கு அடியில் உறிஞ்சப்பட்டேன்,மேற்பரப்பிற்கு திரும்பமுடியவில்லை”‘
‘நான் எனது இறுதி தருணம் வந்துவிட்டது என உறுதியாக நம்பினேன்”,என மேலும் தெரிவித்த அவர் ‘உணர்வுகள் என்று எதுவும் இருக்கவில்லை, அந்த அதிர்ச்சி மிகவும் பலமானதாக காணப்பட்டது எப்படியாவது உயிர்தப்பிவிடவேண்டும் என்பதை தவிர நீங்கள் வேறு எதனையும் சிந்திக்க மாட்டீர்கள் ” என தெரிவிக்கின்றார்.
சுனாமி அலைகள் நின்றதும் அவர் பல்கனியொன்றில் தஞ்சம்புகுந்தார்.
அதன் பின்னரே நான் எனது தோளில் பெரிய துளையொன்றை கண்டேன்,உண்மையில் நான் வலியால் துடித்திருக்கவேண்டும், அதிர்ச்சி என்னை தடுத்துவிட்டது என அவர் தெரிவிக்கின்றார்.
ரொபியை விருந்தினர் விடுதிக்கு கொண்டு சென்றனர் அங்கிருந்த மருத்துவர்கள் அவர் ஆபத்தான நிலையில் உள்ளார் என தெரிவித்தனர்.
‘அது ஒரு பயங்கரமான இரவு இரவு முழுவதும் அங்கேயே இருந்தேன் அந்த இரவு முடிவின்றி என்றென்றும் தொடரும் போல தோன்றியது” என அவர் தெரிவிக்கின்றார்.
மறுநாள் காலை விமானப்படையினர் ரொபியை கடுமையாக காயமடைந்த வேறு பலருடன் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
நான் பெரும் நன்றியும் கடப்பாடும் உடையவனாக உணர்ந்தேன் என்கின்றார் அவர்.
‘முன்வாயில் வழியாக மருத்துவமனைக்குள் நுழைந்தோம்,முன்பகுதியிலேயே நூற்றுக்கணக்கான உடல்கள் காணப்பட்டன
பிரேதஅறை நிரம்பிவிட்டமையே இதற்கான காரணம் “.
2004 சுனாமிக்கு பின்னர் பல தடவை மீண்டும் இலங்கை வந்துள்ள ரொவே இந்த முறையும் (20வது ஆண்டு ) இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
அவ்வேளை எனக்கு பெரும் உதவியாகயிருந்த உள்ளுர் மக்களிற்காக நான் அங்கு செல்கின்றேன்,வலி வேதனை ஓரளவிற்கு குறைவடைந்துள்ளது, சில வேளைகளில் அது வெவ்வேறு விதங்களில் வெளியாகின்றது என அவர் தெரிவிக்கின்றார்.
நான் தற்போதும் சில நேரங்களில் இரவில் அச்சத்தினால் பாதிக்கப்படுகின்றேன்,சில சமயம் அலறுகின்றேன் சத்தமிடுகின்றேன், இயற்கை மிகவும் வலுவானதாக காணப்படும்போது நான் அச்சமடைகின்றேன், என அவர் குறிப்பிடுகின்றார்.