“சென்னை:சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த வாரம் என்ஜினீயரிங் மாணவி தனது காதலருடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போது மர்மநபர் ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

காதலனை அடித்து விரட்டி விட்டு அந்த மாணவியை அந்த நபர் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

அந்த மாணவியை மிரட்டிய மர்ம நபர், “நான் கூப்பிடும் போது எல்லாம் வரவேண்டும்” என்று மிரட்டல் விடுத்தார்.

இல்லையெனில் செல்போனில் பதிவாகி இருக்கும் காட்சிகளை உன் தந்தைக்கு அனுப்பி விடுவேன் என்றும் மிரட்டினார்.

ஆனால் அந்த மாணவி இந்த மிரட்டலுக்கு பயப்படவில்லை. தனக்கு நேர்ந்த கொடூரம் பற்றி அந்த மாணவி போலீசில் புகார் அளித்தார்.

தனக்கு நேர்ந்த விவரங்கள் அனைத்தையும் போலீசாரிடம் அவர் தெரிவித்தார்.புகழ்பெற்ற கல்வி நிறுவனமான அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாகவே மாணவியிடம் அந்த நபர் அத்துமீறலில் ஈடுபட்டது உறுதியானது.

இது தமிழக மக்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இந்த சர்ச்சை வெளிச்சத்துக்கு வந்ததை தொடர்ந்து போலீசார் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

அண்ணா பல்கலைக்கழக வளாகம் அருகே பிரியாணி கடை நடத்தி வந்த கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவனை கைது செய்தனர்.

விசாரணை நடக்கும் போது அவர் வழுக்கி விழுந்ததால் அவருக்கு மாவு கட்டு போடப்பட்டது. அவர் மீது 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கைதான ஞானசேகரன் தி.மு.க.வை சேர்ந்தவர் என்று முதலில் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

ஆனால் அதை தி.மு.க. தலைவர்கள் மறுத்தனர். இந்த நிலையில் ஞானசேகரன் விசாரணைக்கு பிறகு புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

அவர் தொடர்பான சர்ச்சை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

இதற்காக கோட்டூபுரம் போலீசார் கோர்ட்டில் மனு செய்துள்ளனர். அந்த மனு மீதான விசாரணை திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது.

இதற்கிடையே ஞானசேகரன் அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்யும்போது “சார்” என்று அழைத்து யாரிடமோ பேசியது தெரியவந்துள்ளது.

எனவே ஞானசேகரன் தவிர மேலும் சிலருக்கு இந்த விவகாரத்தில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இது தவிர ஞானசேகரன் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் சர்வசாதாரணமாக நடமாடி உள்ளார்.

இதனால் மேலும் சில மாணவிகளை அவர் பாலியல் வன்கொடுமை செய்து இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

இதைத் தொடர்ந்து இதை உறுதிப்படுத்துவதற்கு போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அதன் ஒரு பகுதியாக ஞானசேகரனின் செல்போனை பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர். அப்போது ஞானசேகரன் ஏராளமான வீடியோக்களை அழித்து இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் அந்த செல்போனை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் அழிக்கப்பட்ட வீடியோ காட்சிகளில் என்ன இடம்பெற்றுள்ளது என்று ஆய்வு செய்தனர்.

அப்போது அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரிய வந்தது.அந்த செல்போனில் ஞானசேகரன் வேறு சில பெண்களுடன் இருக்கும் ஆபாச வீடியோ காட்சிகள் இருப்பதாக தெரியவந்துள்ளது.

இதில் சில வீடியோக்களில் பெண்கள், மாணவிகள் போல இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. சில வீடியோக்களில் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சில வீடியோ காட்சிகளில் திருநங்கைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்த வீடியோ பதிவுகள் விசாரணை நடத்தும் போலீசாரை மேலும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

ஞானசேகரன் செல்போனில் இருக்கும் வீடியோ காட்சிகள் அவரால் படம் பிடிக்கப்பட்டவை என்று கருதப்படுகிறது.

சில காட்சிகள் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் எடுக்கப்பட்டது போல இருக்கிறது.எனவே மேலும் சில மாணவிகளை ஞானசேகரன் படம் பிடித்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தாரா? என்று தீர்வு காண முடியாத சிக்கல் உருவாகி இருக்கிறது.

இதுபற்றி போலீசார் அடுத்த கட்ட விசாரணையை தொடங்கி உள்ளனர்.ஞானசேகரனுக்கு நெருக்கமாக இருப்பவர்கள் யார்-யார் என்ற பட்டியலை போலீசார் தயார் செய்து உள்ளனர்.

அதன் அடிப்படையில் ஒவ்வொருவரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து போலீசார் கேள்விகள் கேட்டு வாக்குமூலம் பெற்று வருகிறார்கள்.

அதன்படி ஞானசேகரனின் 3 மனைவிகளிடமும் நேற்றும், இன்றும் தீவிர விசாரணை நடந்தது. அவர்களது வாக்குமூலம் வீடியோவில் பதிவு செய்யப்பட்டன.

இதன் மூலம் ஞானசேகரனின் நடத்தைகள், குண நலன்கள் அனைத்தும் தெரிய வந்துள்ளது. அந்த வாக்குமூலங்களின் அடிப்படையில் ஞானசேகரனின் மற்ற தொடர்புகளும் போலீசாரால் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

ஞானசேகரனுக்கு ரகசிய தோழி ஒருவர் இருப்பது தெரிய வந்தது. அவரையும் தனிப்படை போலீசார் தங்களது விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர்.

ஞானசேகரனின் செல்போனில் ஏராளமான தனித்தனி போல்டர்கள் இருப்பதை சைபர் கிரைம் போலீசார் கண்டறிந்துள்ளனர்.

அந்த ரகசிய போல்டர்களையும் சைபர் கிரைம் போலீசார் கண்டறிந்து அதில் உள்ள காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.”,

Share.
Leave A Reply

Exit mobile version