எலிக்காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இரண்டு மரணங்கள் சம்பவித்துள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாண மாவட்டத்திலே எலிக்காய்ச்சல் நோய் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் என 202 நோயாளர்களின் தகவல்கள் எமக்கு கிடைக்கப்பெற்றது. இவற்றிலே 94 பேருக்கு இந்த எலிக்காய்ச்சல இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 10 நோயாளர்கள் எலிக்காய்ச்சல் நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றார்கள். இவர்களில் ஏழு பேர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையிலும், மூன்று பேர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும் இவ்வாறு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மூன்று பேர் எலிக்கய்ச்சல் நோய் என்ற சந்தேகத்துடன் புதிதாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஜனவரி 2ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இரண்டு இறப்புகள் எலிக்காய்ச்சல் நோய் காரணமாக ஏற்பட்டுள்ளது.

இதில் ஒருவர் யாழ்ப்பாணம் மாவட்டத்தை சேர்ந்தவர். மற்றவர் கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்தவர். அந்தவகையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் எலி காய்ச்சல் காரணமாக இதுவரை எட்டு இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஜனவரி 2-ம் திகதி ஏற்பட்ட இறப்பில், கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள துன்னாலை கிராமத்தை சேர்ந்த 23 வயதுடைய ஆண் ஒருவர் ஆவார்.

இவருக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் இவர் உடனடியாக வைத்தியசாலைக்கு செல்லவில்லை. மருந்தகங்களிலும், தனியார் வைத்தியசாலைகளிலும் சிகிச்சை பெற்றுள்ளார்.

பின்னர் நோய் முற்றிய நிலையில் ஐந்து அல்லது ஆறு நாட்களுக்கு பின்னர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் அங்கிருந்து உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அத்துடன் நாங்கள் அவரது பகுதியில் வழங்கிய தடுப்பு மருந்தை இவர் துரதிஷ்டவசமாக பெற்றுக் கொள்ளவில்லை. விவசாயிகள், கடல் நீரில் மீன் பிடிக்க செல்பவர்கள் மற்றும் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அந்த தடுப்பு மருந்தை, உங்களது சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுக்கு சென்று அந்த தடுப்பு மருந்து பெற்றுக் கொள்ளுங்கள்.

பெரும்பாலான இறப்புக்கள் தாமதமாக சிகிச்சைக்கு வந்த காரணத்தினாலேயே சம்பவித்துள்ளது. பின்னர் நாங்கள் ஏற்படுத்திய விழிப்புணர்வுக்கு அமைவாக மக்கள் காய்ச்சல் ஏற்பட்டபோது உடனடியாக சிகிச்சையை பெற்றுக் கொண்ட நிலையில் அவர்களது உயிரை காப்பாற்றகூடியவாறு இருந்தது.

இந்த காலப்பகுதியில் டெங்கு நோய் மற்றும் எலி காய்ச்சலின் தாக்கம் காணப்படுகின்றது. எனவே ஒருநாள் காய்ச்சலாக இருந்தாலும் தாமதிக்காமல் அருகில் உள்ள அரச வைத்தியசாலைக்கு செல்லுங்கள்.

மேலும் எலி காய்ச்சலானது கால்நடைகளில் இருந்து பரவுகின்றதா என்பது தொடர்பான பகுப்பாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு கொண்டிருக்கின்றன. அநேகமாக அதன் பெறுபேறுகள் அடுத்த வாரத்தில் வெளிவரக்கூடிய சந்தர்ப்பம் உள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version