அமெரிக்காவில் 30க்கும் மேற்பட்ட மாநிலங்களில் 6 கோடி பேர் கடுமையான பனிப்பொழிவு மற்றும் குளிரினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஏழு மாநிலங்களுக்கு அவரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

பல பகுதிகளில் மழை, பனி, பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பொழிந்த வண்ணம் உள்ளது.

ஆர்கன்சாஸ் மற்றும் டெக்சாஸ் போன்ற பிற மாநிலங்கள் சூறாவளி கண்காணிப்பில் உள்ளன.

ஆயிரக்கணக்கான விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன, பல பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதோடு, வீதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை கன்சாஸ் மற்றும் மிசோரி ஆகிய பகுதிகள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு சில இடங்களில் சுமார் ஒரு அடிக்கு (30 செமீ) பனி பொழிந்து காணப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, கன்சாஸ் மற்றும் மிசோரி, கென்டக்கி, வேர்ஜீனியா, மேற்கு வேர்ஜீனியா, ஆர்கன்சாஸ் மற்றும் நியூ ஜெர்சி ஆகிய பகுதிகளுக்கு அவரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை காலை வேர்ஜீனியா, மேரிலாந்து, வொஷிங்டன் டிசி மற்றும் டெலாவேர் ஆகிய பகுதிகளுடன் கிழக்கு கடற்கரையை நோக்கி புயல் நகரத் தொடங்கியுள்ளது.

கிழக்கு நோக்கி நகரும் புயல்

அமெரிக்காவின் மத்தியப் பகுதியில் தொடங்கிய இந்த புயல் அடுத்த ஓரிரு நாட்களில் கிழக்கு நோக்கி நகரும் என்று தேசிய வானிலை சேவை (NWS) தெரிவித்துள்ளது.

2011-ஆம் ஆண்டுக்குப் பிறகு, மிகவும் குளிரான ஒரு ஜனவரி மாதத்தை அமெரிக்கா எதிர்கொள்ள இது வழிவகுக்கும் என்று ‘அக்யூவெதர்’ முன்னறிவிப்பாளர் டான் டிபோட்வின் கூறினார்.

“மிகவும் குறைவான வெப்பநிலை, ஒரு வாரத்திற்கு நீடிக்கக்கூடும்” என்று அவர் கூறினார்.

இந்த பனிப்புயலுக்கு காரணமான துருவச் சுழல் (Polar Vertex), பொதுவாக வட துருவத்தைச் சுற்றியே இருக்கும். ஆனால் அது நகர்ந்து விரிவடையவும் கூடும். அவ்வாறு நகர்வதால், தெற்கு பகுதிகளில் வழக்கத்தை விட மிகக் குறைவான வெப்பநிலை நிலவும்.

சனிக்கிழமை (ஜனவரி 4) மாலை பனிப்புயல் தாக்கத் தொடங்குவதற்கு முன்பாகவே, சமீப நாட்களாக துருவ சுழல் அமெரிக்காவில் விரிவடைந்து வந்தது.

இது வரும் நாட்களில் கிழக்கு நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அமெரிக்காவில் மோசமான பனிப்பொழிவு மற்றும் பூஜ்ஜியத்திற்கும் குறைவான வெப்பநிலை நிலவக்கூடும்.

கடுமையான பனிப்பொழிவு காரணமாக சாலைகளில் பயணிப்பதை முடிந்தளவு தவிர்க்குமாறும், அமெரிக்காவின் வழக்கமான திங்கட்கிழமை காலை போல இருக்காது என்றும் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2011-ஆம் ஆண்டு ஜனவரியில், சராசரி வெப்பநிலை -1 செல்ஸியஸாக இருந்தது. அந்த ஆண்டிற்குப் பிறகு இந்த வருடம்தான், மிகவும் குளிரான ஒரு ஜனவரி மாதத்தை அமெரிக்கா எதிர்கொள்ளவிருக்கிறது.

2011-ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் பல பனிப்புயல்கள் வடகிழக்கு அமெரிக்காவைத் தாக்கின, இதனால் நியூயார்க் நகரம் போன்ற பகுதிகளில் வரலாறு காணாத பனிப்பொழிவு இருந்தது.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து

பனிப்புயல் காரணமாக அமெரிக்கன் ஏர்லைன்ஸ், 46 விமான நிலையங்களுக்கு பயண எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது.

கான்சஸ் மற்றும் மிசௌரி முதல் பென்சில்வேனியா மற்றும் நியூ ஜெர்சி வரை பல மாநிலங்களில் உள்ள விமான நிலையங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டிக்கெட் மாற்றத்திற்கான நிபந்தனைகளின் முழு பட்டியலையும் விமான நிறுவனம் வெளியிட்டுள்ளது.

கண்காணிப்பு வலைத்தளமான ஃப்ளைட்அவேர் படி, 2,000 க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகியுள்ளன. அமெரிக்காவிற்கு உள்ளே வரக்கூடிய மற்றும் வெளியே செல்லக்கூடிய 1,500 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கான்சஸ் நகர சர்வதேச விமான நிலையம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது, அங்கிருந்து புறப்படக்கூடிய 86% விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Share.
Leave A Reply

Exit mobile version